உனக்கு நீயே நிகரானவன்

 உனக்கு நீயே நிகரானவன்

இளமைக் காலத்தில் நாடக நடிகராக இருந்து பின் திரைத் துறையில் கால்பதித்த எம்.ஜி.ஆர். அதிலும் உச்சம் தொட்டார். திரைத் துறையில் இருந்தபோதே மக்களுக்குச் சேவை செய்யவேண்டும் என்ற எண்ணத் தில் அரசியலில் கால் பதித்த அவர், தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாகப் பின்னாளில் உருவாகினார். அண்ணாவின் மறைவிற்குப் பின் தி.மு.க.வின் செயல்பாடுகளில் ஏற்பட்ட கருத்து மோதலினால் அதிலிருந்து நீக்கப்பட்டு பின் அ.தி.மு.க. எனும் கட்சியைத் தொடங்கினார். மக்களின் செல்வாக்கினால் தமிழக முதலமைச்சராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தன் வாழ்வில் யாரும் வெல்லமுடியாத சரித்திர நாயகனாகவும் திகழ்ந்தார். திரைத்துறை, அரசியல் இரண்டி லும் அவரின் புகழ் உச்சத்திலே இருந்தது.

எத்தனையோ மாலைகள், பாராட்டுகளை அவர் பெற்றிருந்தாலும் இதற்காக அவர் அனுபவித்த கஷ்டங்களும், சோதனைகளும் ஏராளம்.

இராமச்சந்திரன் இலங்கையின் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டியில் மருதூர் கோபாலமேன னுக்கும் சத்தியபாமாவுக்கும் மகனாகப் பிறந்தார். அவருடைய தந்தை மருதூர் கோபாலமேனன் வக்கீலாக கேரளாவில் பணிபுரிந்தார். தந்தையின் மறைவுக்குப் பின்னர் தமிழ்நாட்டின் கும்பகோணத் தில் எம்.ஜி.ஆர். குடியேறினார். குடும்ப சூழ்நிலைகளின் காரணமாக படிப்பைத் தொடர முடியாததால் எம்ஜிஆர் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார்.

இவருடன் அண்ணன் சக்ரபாணியும் நாடகத்தில் நடித்தார். நாடகத் துறையில் நன்கு அனுபவமான நிலைமையில் திரைப்படத் துறைக்குச் சென்றார். திரைப்படத் துறையில் தனது அயராத உழைப்புக் காரணமாக மிகவும் கஷ்டப்பட்டு முன்னேறி முதன்மை நடிகரானார். இவரது நடிப்பு பெரும் எண்ணிகையிலான மக்களைக் கவர்ந்தது. எம்.ஜி.ஆர். திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளருமாவார். காந்திய கொள்கை களால் உந்தப்பட்டு, இவர் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார்.

எம்.ஜி.ஆருக்கு மூன்று மனைவிகள். முதலில் தங்கமணியை மணந்தார். பிரசவத்திற்காகத் தாய் ஊருக்கு சென்ற தங்கமணிக்கு குழந்தை இறந்தே பிறந்தது. அதன்பின் தங்கமணியும் உடல்நலக் குறைவினால் இறந்தார். அதன் பிறகு சதானந்தவதியை மணந்தார் எம்.ஜி.ஆர். இருவருக்கும் குழந்தைகள் இல்லை. பின்னர் சதானந்தவதி நோய்க் காரணமாக இறந்தார். இதற்கிடையே ஜானகி அம்மையாரை திரைப்படத்தில் கதாநாயகியாகச் சந்தித்தார். மூன்று படங்கள்தான் ஜானகியுடன் நடித்திருந்தாலும் காதல் பிறந்தது. எனவே ஜானகிதன் கணவரிடம் விவாகரத்து பெற்றுக் கொண்டார். ஜானகி அம்மையாருக்கு மகன் ஒருவனும் இருந்தான். இருந்தும் எம்.ஜி.ஆர். ஜானகியைக் காதலித்து மணந்துக்கொண்டார். மூன்று திருமணங்கள் என்றாலும் எம்.ஜி.ஆருக்கு குழந்தைகள் இல்லை.

லதா ராஜேந்திரன், ராதா கோபாலகிருஷ்ணன், கீதா மதுமோகன், ஜானகி சிவராமன் ஆகியோர் எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள்கள் ஆவார்கள். விஜயன் என்பர் வளர்ப்பு மகனாவார்.

எம்.ஜி.ஆர் எத்தனையோ குழந்தைகளுக்குப் பாதுகாவலராக இருந்து படிக்கவைத்தார். அதில் முக்கியமான இரண்டு பேர், அரசியலைக் கலக்கிய துரைமுருகன். சினிமாவில் வலம் வந்த கோவை சரளா.

எம்.ஜி.ஆர் ராஜா-ராணி என்ற பெயர்களுடைய இரண்டு சிங்கங்களை வளர்த்தார். ராணி சிங்கம் இறந்துவிட ராஜா சிங்கமும் உடல் தளர்ந்திருந்தது. அது தனியாக இருக்க வேண்டாமென வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு அளித்தார். நெடுநாட்கள் வாழ்ந்த ராஜா மறைந்தபோது, அதன் உடலைத் தகுந்த ஆவணத்துடன் பெற்று, பாடம் செய்து தன் தி.நகர் வீட்டில் வைத்துக் கொண்டார்.

சிங்கங்களைத் தவிர எம்.ஜி.ஆர் தனது வீடு அமைந்திருந்த ராமாவரம் தோட்டத்தில் ஆடு, மாடு, கோழி, நாயுடன் ஒரு கரடியும் வளர்த்தார். இவற்றைக் கவனிக்க தனி மருத்துவரைப் பணியமர்த்தி யிருந்தார்.

சிறு குட்டியாக எம்.ஜி.ஆரிடம் இருந்த கரடி வளர்ந்ததும் மருத்துவரின் உதவியுடன் மூக்கில் சங்கிலி இணைக்க ஏதுவாக துளையிட முயன்ற போது எதிர்பாராதவிதமாக இறந்துவிட்டது.

1936ல் சதிலீலாவதி என்னும் திரைப்படத்தில் முதலில் நடித்திருந்தும், 1947ல் அவர் நடித்த ராஜகுமாரி படம் வெளிவரும்வரை அதிகம் புகழ் கிடைக்கவில்லை. தொடர்ந்து வந்த அடுத்த 25 ஆண்டுகள், தமிழ் திரைப்பட உலகில் மிக முக்கியமானவர்களில் ஒருவராக விளங்கினார். இவருடைய சக நடிகர்களுள் ஒருவரான எம்.ஆர்.ராதாவினால் சுடப்பட்டுத் தெளிவாகப் பேசும் திறனை இழந்தபோதும் அவருடைய நட்சத்திர வலிமை குறையவேயில்லை.

இச்சம்பவத்திற்குப் பின்னார் முதன்முதலாக வெளிவந்த திரைப்படம் காவல்காரன். இது மாபெரும் வெற்றிப் படமாகவும், திரையுலகில் அவரது ஆளுமையை மீண்டும் நிலைநிறுத்தும் நிகழ்வாகவும் அமைந்தது. 1971ஆம் ஆண்டின் அகில இந்திய சிறந்த நடிகராக, எம்.ஜி. ஆரை மத்திய அரசு தேர்வு செய்து, “பாரத்” விருதை வழங்கியது. இது சத்யா மூவிஸ் தயாரிப்பான ‘ரிக்ஷாகாரன்’ படத்தில் நடித்ததற்காகக் கிடைத்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 12 தியேட்டர்களில் 100 நாட்கள் முதல் 150 நாட்கள் வரை ஓடி, வசூலைக் குவித்தது படம்.

அவர் நடித்துக் கடைசியாக வெளிவந்த திரைப்படம் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன். தனது திரைப்பட நிறுவனத்தின் கீழ் எம்.ஜி.ஆர். மூன்று படங்களைத் தயாரித்தார்: நாடோடி மன்னன், அடிமைப் பெண் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன். நாடோடி மன்னன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய திரைப்படங்களை அவரே இயக்கினார்.

எம்.ஜி.ஆர் மற்றும் எஸ்.எஸ்.ஆர் 1962-ல் நடந்த தி.மு.க கூட்டத்தில் இவர் ஒரு மலையாளியாக இருந்தும், ஒரு முன்னணித் தமிழ்த் தேசியவாதியாகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய உறுப்பினராகவும் திகழ்ந்தார். அக்கட்சியின் பொருளாளராகவும் நீண்ட காலம் பணியாற்றினார். கருணாநிதியுடன் நட்பாக இருந்தார். சி. என். அண்ணாத்துரையின் மறைவுக்குப் பின், மு. கருணாநிதி முதலமைச்சரானதைத் தொடர்ந்து இடம்பெற்ற சம்பவங்களால் ஏற்பட்ட முரண்பாடு கள் எம்.ஜி.ஆர் கட்சியை விட்டு வெளியேறினார்.

1972-இல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியொன்றை அவர் ஆரம்பித்தார். பின்பு அக்கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்ககழமாக மாறியது. முதன்முதலாக போட்டியிட்ட திண்டுக்கல் பகுதியில் பெரும் வெற்றி பெற்றது.

திரைப்படங்களின் மூலம் அவரடைந்த புகழும், அவருடைய வசீகர மான தோற்றமும், சமூகத் தொண்டனாகவும், ஏழைகள் தோழனாகவும், கொடையாளியாகவும், வீரனாகவும் நடித்ததன் மூலம் பெற்றுக் கொண்ட நற்பெயரும், அவர் மிக விரைவில் மக்களாதரவைப் பெற உதவின.

1977ல் நடைபெற்ற தேர்தலில் பெரும் வெற்றி பெற்றுத் தமிழ்நாட்டின் முதலமைச்சரானார். 1984ல் கடுமையாக நோய்வாய்ப்பட்டும், தமிழக அரசியல் வரலாற்றில் தேர்தல் பிரசாரத்திற்கே வராமல் முதலமைச்சர் ஆன ஒரே முதல்வரானார் எம்.ஜி.ஆர். 1984ல் இவரது ஆட்சிக்காலத்தில் மதுவிலக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

1987 வரை 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக முதலமைச்சர் பதவியை வகித்துப் பதவியிலிருக்கும் போதே காலமானார். மறைவிற்குப் பின் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

இவரது கட்சி 1988-ல் பிரிந்து 1989-ல் இணைந்தது. 1991 முதல் 1996 வரையிலும், 2001 முதல் 2006 வரையிலும் 2011 முதல் இன்று வரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் ஆட்சி அமைத் திருக்கிறது.

இவர் கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் திராவிடக் கட்சியில் இருந்தபோதிலும் தமிழ்நாட்டில் பலர் இவரைக் கடவுள் போலவே போற்றினார்கள். இவர் இறந்து 22 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்றும் இவருக்காகவே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற் றக்கழகத்துக்கு வாக்களிப்பவர்கள் தமிழ் நாட்டில் உள்ளனர். இது அவருக்கு மக்கள் மத்தியிலிருந்த பெரும் செல்வாக்கைக் காட்டுகிறது.

சினிமாவில் பெரிய இடத்திற்கு வருவதற்கு முன்னால் கூட, அவரின் வள்ளல் பண்பு தொடர்ந்து கொண்டேதான் இருந்தது. குறிப்பாக அந்த காலத்தில் ஓரளவுக்குப் பெரிய பணமாகப் பார்க்கப்படும் பத்து ரூபாய் நோட்டுத் தாள்களைத் தனது கை சட்டையின் மடிப்பில் எம்.ஜி.ஆர் வைத்துக் கொள்வாராம். எளியவர்கள், ஏழைகள் யாரையாவது அவர் பார்த்துவிட்டால், உடனடியாக பத்து ரூபாய் தாள்களில் ஒன்றை கொடுத்துவிட்டு வந்துவிடுவாராம்.

தனது வாழ்நாள் முழுவதும் எம்.ஜி.ஆர் எவ்வளவோ பேருக்கு உதவிகள் செய்திருக்கிறார். ஆனால் அது குறித்து அவர் வெளிக்காட்டிக் கொண்டதில்லை. அப்படி ஒருவேளை அவர் உதவி செய்த நபர்களை கணக்கில் கொண்டால், அது பல்லாயிரத்தைத் தாண்டும் என்கின்றனர் எம்.ஜி.ஆர் ரசிகர்கள்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...