தமிழக முதல்வருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நன்றி!
ஏழை எளிய மக்கள் மட்டுமே பயன்பெறும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளை சென்னையில் பெறுவோர் செலுத்தும் பங்களிப்புத் தொகையை ரூ. 1.5 லட்சம் முதல் 6.48 லட்சம் வரை நிர்ணயித்து கடந்த அஇஅதிமுக ஆட்சி அரசாணை வெளியிட்டிருந்தது. மேலும், அந்த தொகையை செலுத்தினால் மட்டுமே குடியிருப்புகளில் குடியேற முடியும் என்கிற நிபந்தனைகளையையும் விதித்திருந்தது. இதனால் ஒதுக்கீடு செய்யப்பட்ட குடியிருப்புகளில் குடியறே முடியாமல் ஏழை, எளிய மக்கள் அகதிகளை போல தெருக்களிலும், சுகாதாரமற்ற பகுதிகளிலும் தங்கியிருக்க வேண்டிய அவல நிலையில் தள்ளப்பட்டிருந்தார்கள். கடந்த அஇஅதிமுக ஆட்சியில் பலமுறை அமைச்சர்களையும், அதிகாரிகளையும் சந்தித்து முறையிட்ட பிறகும் எந்த மாற்றமும் செய்வதற்கு முன்வரவில்லை. இந்த நிலையில் அந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்தி வந்தது.
சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் மற்றும் கவுதமபுரத்தில் ஒதுக்கப்பட்ட குடியிருப்புகளில் குடியேறுவதற்கும் இந்த அரசாணை தடையாக இருந்தது. இதேபோன்று இதர பகுதிகளிலும் இந்த தொகை கட்டமுடியாததால் ஒதுக்கீடு செய்யப்பட்ட பிறகும் அந்த குடியிருப்புகளில் மக்கள் குடியேற முடியாத நிலை இருந்தது.
இந்த நிலையில், ஏழை, எளிய மக்களை கசக்கி பிழியும் வகையில் அஇஅதிமுக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டுமென்றும், மக்கள் நலன் சார்ந்து திட்டங்களை தீட்ட வேண்டு மென்றும் தொடர்ச்சியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இயக்கங்களையும், போராட்டங்களையும் நடத்தி வந்தது. திமுக அரசின் அமைச்சர்களையும், அதிகாரிகளையும் சந்தித்து முறையீடு செய்திருந்தது.
இந்நிலையில், தமிழக அரசு 22.12.2021 தேதியிட்டு ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன்படி சென்னையில் ரூ. 1.5 லட்சம் முதல் ரூ. 6.48 லட்சம் வரை பங்களிப்பு தொகையாக குடியேறுவோர் கட்ட வேண்டியதை குறைத்தும், இதர பகுதிகளுக்கான பங்களிப்பு தொகையினை குறைத்தும், அந்த தொகையை 20 ஆண்டுகள் வரையிலும் நீண்ட கால சுலப தவணைகளில் கட்டவும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் நகர்ப்புறங் களில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளால் பயன்பெறும் ஏழை, எளிய மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியளிக்கும் செய்தியாகும்.
தமிழக அரசின் ஏழை, எளிய மக்களின் நலன் சார்ந்த இந்த உத்தரவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு மனதார வரவேற்கிறது. தமிழ்நாடு அரசுக்கும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
கே.பாலகிருஷ்ணன், மாநில செயலாளர்