பாரதியார் 140வது பிறந்த நாள் தமிழகத்தின் தலைசிறந்த நாள்

 பாரதியார் 140வது பிறந்த நாள் தமிழகத்தின் தலைசிறந்த நாள்

பாரதியார் தான் வாழ்ந்து முடித்த முப்பத்தொன்பது ஆண்டுகளில் அடிமைத் தளத்தில் இருந்து பாரத நாடு விடுதலைப் பெற்று சுதந்திரக் காற்றினை அந்நாட்டு மக்கள் சுவாசித்திட வேண்டும் என்ற தாகம் கொண்டவர்.

அந்தச் சுதந்திர தாகத்திலிருந்து தனது வாழ்க்கையினை ஒரு பொருட்டாகக் கருதாமல் நாட்டு விடுதலையே தன் உயிர்மூச்சு எனப் பல இன்னல்களுக்கும் இடையில் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சியில் அவலங்களை மக்களிடம் எடுத்தியம்பினார்.

நாட்டு விடுதலைக்கு அம்மக்களை இட்டுச் சென்று சுதந்திரக் காற்றினைப் பெற்றுத்தர விழைந்து அடிமைத்தளத்தினின்றே ‘சுதந்திரப் பள்ளு’ பாடி தனது வாழ்வே தேசிய விடுதலைக்குத்தான் என வீரமுரசு கொட்டினார். அம்மாமனிதனின் முழுமையான அரசியல் வாழ்க்கை வரலாறு இன்றும் அமையப்பெறவில்லை.

பாரதியின் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டு ஆயிரக்கணக்கான நூல்கள் வெளிவந்திருந்தாலும் ‘பாரதியின் அரசியல் வாழ்க்கை’ வரலாற்றினை ஒரு சில பாரதி ஆய்வாளர்கள் மட்டுமே பல ஆண்டுகள் ஆய்வு செய்து நூலாக்கத்தினைக் கண்டுள்ளனர்.

பாரதியின் அரசியல் வாழ்க்கை வரலாற்றில் இன்னும் எண்ணற்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்படுதல் வேண்டும். பாரதியின் அரசியல் வாழ்க்கை வரலாற்றில் பாரதியின் பிற துறை ஈடுபாடுகள் சற்று குறைவாகவே காணப்படுகிறது. ஏனெனில் பாரதி ஒரு பன்முகப் படைப்பாளி. பாரதி சுதேசியாக மட்டுமே தனது வாழ்க்கையினை முடித்துக்கொள்ளவில்லை. அவர் ஒரு மிகச் சிறந்த தேசப் பற்றாளர், தேசக்கவி, வாழ்வியல் சிந்தனையாளர், இதழாளர், கட்டுரையாளர், சிறுகதை ஆசிரியர் என பல பரிமாணங்களில் தனது குறுகிய கால வாழ்வினை அர்த்தமுள்ள வாழ்க்கையாகக் கொண்டிருந்து அவற்றைச் செயல் வடிவமாக்கி காட்டியவர்.

“பாரதி எனும் மானுடர் இந்தியத் திருநாட்டினைத் தவிர்த்து வேறு தேசத்தில் பிறந்திருப்பாரே யானால் அங்கு அவருக்கு ஏற்பட்டிருக்கும் சிறப்பு தனித்தன்மை கொண்டு விளங்கியிருக்கும்” என்று தீரர் சத்தியமூர்த்தி 1928ஆம் ஆண்டு பாரதியின் தேசபக்திப் பாடல்களைத் தடை செய்தபோது மாகாண சட்டப் பேரவையில் கொதித்தெழுந்து பேசினார்.

“அவர் எந்தச் சுதந்திர நாட்டில் பிறந்திருந்தாலும் ஏன், இந்தியா தவிர உலகில் எந்தத் தேசத்தில் பிறந்திருந்தாலும் அவரை அந்நாட்டின் ஆஸ்தான கவியாக்கி இருப்பார்கள். மக்களின் மனதில் எழும் உணர்ச்சிகளைப் பிரதிபலிக்க அறிந்த எந்த அரசும் பாரதிக்குப் பார் போற்றும் பட்டங்களையும் கௌரவங்களையும் வழங்கிப் பெருமை சேர்த்திருக்கும். அவர்தம் தமது நாட்டிலேயே தலையாய மதிப்பு பெற்றோருள் ஒருவராக வாழ்ந்திருப்பார்” என சத்தியமூர்த்தி பேசினார். தமிழ் மொழிக்கு என்றும் அழியாத உயிர் அளித்த பாரதி, சமூகத்தில் பல்துறைகளிலும் தமது சிந்தனாசக்தியை செலுத்தி அவற்றைக் குறித்துப் பாடியும் வசனமாக எழுதியும் உள்ளார்.

பாரதி என்றும் தம் பாடல்கள் மூலம் தினம் தினம் பிறபெடுத்துக் கொண்டிருப்பார்.

வாழ்க பாரதி, வளர்க அவர் தொண்டு.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...