பயணங்கள் தொடர்வதில்லை | 5 | சாய்ரேணு

 பயணங்கள் தொடர்வதில்லை | 5 | சாய்ரேணு

4. சிறுகத்தி

ன்னுடைய வெற்றிலைப் பெட்டியைத் திறந்து, கொட்டைப் பாக்கைச் சிறு கத்தியால் சீவி, சுண்ணாம்பு தடவப்பட்ட துளிர் வெற்றிலையில் அன்புடன் வைத்துக் கொண்டிருந்தார் சுப்பாமணி.

வெளியே ஏதோ சப்தம் கேட்டு ஜன்னல் வழியே பார்வையைப் போட்டவர், அதிர்ந்தார்.

ப்ரிஜேஷின் சட்டை ஒரு பெண்ணின் கைகளில் கொத்தாக மாட்டியிருந்தது. (சட்டைக்குள் ப்ரிஜேஷ் இருந்தான்.)

வெளியே பாய்ந்தார் சுப்பாமணி. கம்பார்ட்மெண்ட்டுக்கு எதிரே அதற்குள் கூடிவிட்ட சிறு கூட்டத்தைப் பிளந்துகொண்டு ப்ரிஜேஷ் அருகில் சென்றார். “என்ன… என்ன பிரச்சனை? எதுவாயிருந்தாலும் பேசித் தீர்த்துக்கலாம்” என்றார் பொதுவாக.

“பேசணுமா? இவனையெல்லாம் போலீசில் ஹாண்ட்-ஓவர் பண்ணணும்” என்றாள் அந்தப் பெண். அவளருகில் இருந்த மற்றொருத்தி இன்னமும் ப்ரிஜேஷின் சட்டையைப் பிடித்திருந்தாள்.

“ப்ளீஸ்! என்னன்னு சொல்லுங்க. இவன் நம்ம பையன் தான். ஏதாவது மிஸ்பிஹேவ் பண்ணிட்டானா…” என்று கேட்பதற்குள் ப்ரிஜேஷ் “என்ன சுப்பாமணி? நான் அப்படியெல்லாம் மிஸ்…பிஹேவ் பண்ணுவேனா சொல்லு?” என்று தடுமாறிக் கொண்டே சொன்னான். அதற்குள் சுப்பாமணி கேபினுள் வைத்திருந்த பாட்டிலில் திரவம் கணிசமாகக் குறைந்திருக்கும் என்று தோன்றியது.

“டேய்!” என்று கையை ஓங்கினாள் அவள்.

“இந்தா! டேய்லாம் சொல்லாத! பாரு சுப்பாமணி, ஒரு பொம்பள, என்ன தைரியம் இருந்தா டேய் போடுவா…” என்று குழறினான் ப்ரிஜேஷ்.

அவர்களைச் சுற்றிய கூட்டம், அங்கிருந்தவர்களின் கோபம் எல்லாம் அதிகமாகிக் கொண்டே போவதை உணர்ந்தாஎ சுப்பாமணி.

“ப்ளீஸ், அவன் சட்டையை விடுங்க. என்ன நடந்ததுன்னு சொல்லுங்க” என்றார் பவ்யமான குரலில்.

அந்தப் பெண் சட்டையை விட்டாள். கூட்டத்திலிருந்து சற்று விலகி நின்றுகொண்டிருந்தவர்களைக் காட்டினாள். “இவங்க ஒரு ஃபாமிலியா ட்ராவல் பண்றாங்க. ஒண்ணா பர்த் கிடைக்கலை போலிருக்கு. டீடீஈ கிட்டப் பேசிட்டிருந்தாங்க. அப்போ இந்த ராஸ்கல் வந்து இதோ இந்தப் பெண்கிட்ட வேண்டாததெல்லாம் பேசறான்” என்றாள்.

“பாவம், பர்த் கிடைக்காம திண்டாடறாங்களேன்னு, அந்த பெண்ணை நம்ம கேபினில் ட்ராவல் பண்ணச் சொன்னேன் சுப்பாமணி! நம்ம கேபினில் ஒரு பர்த் காலிதானே?” என்றான் ப்ரிஜேஷ்.

“ராஸ்கல்! சொல்றதையும் சொல்லிட்டுக் கையைப் பிடிச்சு இழுக்கறான் சார்!” என்றார் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஒருவர்.

அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண், ப்ரிஜேஷால் கலாட்டா செய்யப்பட்டவள், கதறிக் கதறி அழுதுகொண்டிருந்தாள்.

“அவங்க நல்லதுக்குத்தானே சொல்றேன். புரிஞ்சுக்கலேன்னா?” என்றான் ப்ரிஜேஷ்.

“இந்த ரெண்டு பொண்ணுகளும் வந்து இவளை விடுவிச்சிருக்கலேன்னா என்ன ஆகியிருக்கும்? இவளைப் பெத்தவன் சார்! என் கண்ணு முன்னாடியே இழுத்துட்டுப் போறான்! நாங்கல்லாம் எவ்வளவோ போராடியும் விடல. கடைசியில் இவங்க ரெண்டுபேரும் வந்து செருப்பாலயே நாலு விளாசு விளாசினாங்க பாருங்க, என் மனசு குளிர்ந்து போச்சு” என்றார் பெண்ணின் அப்பா.

சுப்பாமணிக்குப் பிரச்சனையின் தீவிரம் புரிந்தது. அந்தக் குடும்பத்திடம் கைகூப்பி மன்னிப்புக் கேட்டு, ப்ரிஜேஷை இழுத்துச் சென்று கேபினில் தள்ளி, ஒரு அட்டெண்டரை அங்கேயே கதவைப் பூட்டிக் கொண்டு இருக்கச் சொல்லிவிட்டு, மீண்டும் கீழே வந்து, குடும்பத்தினர் அத்தனை பேரிடமும் பேசி, ப்ரிஜேஷ் இனிமேல் அவர்களுக்குத் தொந்தரவு தரமாட்டான் என்று உத்தரவாதம் கொடுத்து அவர்களை அவர்கள் கம்பார்ட்மெண்ட்டுக்கு அனுப்புவதற்குள் அவருக்குப் போதும் போதுமென்றாகிவிட்டது.

ப்ரிஜேஷைக் கண்டித்த பெண்கள் இன்னமும் அங்கேயேதான் நின்றுகொண்டிருந்தார்கள். ஸ்டேஷனின் மெர்க்குரி விளக்கு வெளிச்சத்தில் இப்போதுதான் அவர்களைச் சரியாகப் பார்த்தார் சுப்பாமணி.

“அடடே, நீங்களா! சாரி, நான் ரயிலுக்கு வெளியே உங்களுக்காக வெயிட் பண்ணியிருக்கணும். ஒரு நிமிஷம், உட்கார்ந்துட்டுப் போவோம்னு நினைச்சுட்டேன். வாங்க, வாங்க, தர்மா வரலியா?” என்று வரவேற்றார்.

“அதனால என்ன சார்? தர்மா யாரோ ஃப்ரெண்ட் கூடப் பேசிட்டிருக்கான், இப்போ வந்துடுவான்” என்றாள் அவள் உபசாரமாக. அவளுக்கு அருகில் அவள்.

அவள்கள்?

இரு இளம்புயல்கள். நேர்த்தியான, கண்ணியமான உடை.  தன்னம்பிக்கையும் தைரியமும் மிளிரும் தோற்றம். அலைபாயும் பொன்வண்டுக் கண்கள். அவைகளின் கத்திபோன்ற பார்வை.

பெயர்கள்? சொல்லிவிடலாம். இப்போதே இரயில் கிளம்பும் நேரமாகிவிட்டதே!

தன்யா, தர்ஷினி.

*

ரு வாரம் முன்பு.

“கொல்கத்தால இப்போ கோவிட் என்ன பொஸிஷன்ல இருக்கு?” என்று கேட்டாள் தர்ஷினி, சுப்பாமணி அவர்கள் அலுவலகத்தைவிட்டுப் போனதும்.

“என்ன பொஸிஷனா இருந்தாலும், நம்ம பாதுகாப்பு நடவடிக்கைகளை ரிலாக்ஸ் பண்ண முடியாது. இன்னும் கோவிட் நம்ம தேசத்தைவிட்டு முழுசா போகலைன்னு நினைவு வெச்சுக்கணும். இப்போ புது வேரியண்ட் வேற வரதாம்” என்றாள் தன்யா ஸீரியஸாக.

“யெஸ். இப்போ மூன்றாவது அலை வேற வரப் போறதுன்னு சொல்றாங்க. நீ சொல்றது சரிதான். எல்லோருக்கும் பிரச்சனையோட தீவிரம் புரிஞ்சா நல்லது. யாரும் மாஸ்க் கூடச் சரியா போடறதில்லை” என்றாள் தர்ஷினி.

“இதில் கொரோனா பற்றி ஜோக்குகள் வேற அதிகமாயுடுச்சு. என் ஃப்ரெண்ட் கேட்கறா – இப்பல்லாம் முகமூடிக் கொள்ளைக்காரங்களைப் பிடிக்கறது உங்களுக்குக் கஷ்டமாயிருக்குமேன்னு” என்றாள் தன்யா.

மௌனமாக இவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டு வந்த தர்மா சிரித்துவிட்டான். “அதுக்கு நீ என்ன பதில் சொன்ன?” என்று கேட்டான்.

தர்ஷினி “எக்ஸ்க்யூஸ் மீ கய்ஸ்” சொல்லி வெளியேறினாள்.

“எப்போதுமே முகமூடிக்குப் பின்னாடி மறைஞ்சிருக்கற முகத்தைக் கண்டுபிடிக்கறது கஷ்டம்தான்னு சொன்னேன்” என்றாள் தன்யா.

“யூ ஆர் ரைட். முகமூடி போட்டுக்கிட்டுக் குற்றம் பண்ணுகிறவங்களைவிட, குற்றம் பண்ணிட்டு, பொய், சதி, பணம், பெரிய மனிதர்களின் சப்போர்ட் போன்ற முகமூடிகளுக்குப் பின்னால் மறைஞ்சுக்கற குற்றவாளிகள் அதிகம். அவர்களைக் கண்டுபிடிக்கறதும் கஷ்டம்” என்றான் தர்மா.

“அதுக்குத்தானே போலீஸ், டிடக்டிவ்ஸ்னு எல்லோரும் இருக்கோம்” என்றாள் தன்யா.

“உண்மை. ஆனால் முகமூடிகளைக் கிழிக்கறது அத்தனைச் சுலபமில்லை. சட்டப்படி குற்றவாளிகளா இல்லாதவங்களும்கூட ஏதோ ஒரு முகமூடிக்குப் பின்னால் தங்களோட முகத்தை மறைச்சுக்கறாங்க. ஒரு கேஸில் இவங்க எல்லோருடைய உண்மை முகத்தைத் தெரிஞ்சு, அதில் குற்றவாளியோட முகம் எதுன்னு கண்டுபிடிக்கறது எத்தனை கஷ்டம்?”

“கஷ்டம்னு சொல்லாதே, சவால்னு சொல்லு. அந்த சவாலில் ஜெயிச்சுக் காட்டறதுதான் நம்ம மாதிரி துப்பறியறவங்களோட வேலை. விசாரணை, கெட்டிக்காரத்தனமான ஊகங்கள் இப்படிப் பல டூல்ஸை வெச்சு முகமூடிக்குப் பின்னாலிருக்கும் முகங்களைக் கண்டுபிடிக்கறதுதான் நம்ம முன்னாடியிருக்கும் சவால்!”

“விசாரணை ஓகே, ஊகத்தின் மூலம் கண்டுபிடிக்கறது சரியா இருக்குமா? உதாரணத்திற்கு, இங்கே வந்துட்டுப் போனாரே, அவர் பேரென்ன, சுப்ரமணியனா?”

“அஃபீஷியலா சுப்ரமணியன் தான், ஆனா சுப்பாமணின்னுதான் அவரை எல்லோரும் கூப்பிடுவாங்களாம். அது… அவருக்கு ஸூட்டபிளாகவும் இருக்கு!”

“சரி, அவரைப் பற்றி உன் ஊகங்களைச் சொல்லு, பார்க்கலாம்!”

தன்யா எழுந்தாள். உலவிக் கொண்டே ஒரு லெக்சரரைப் போல் பேச ஆரம்பித்தாள்.

“சங்கர் அண்ட் ஸ்ரீனி அஸ்ஸோஸியேட்ஸில் வேலை பார்க்கறதா சொல்றார். ஆனா… அவர்கிட்ட எந்தக் கார்ப்பரேட் லுக்கும் இல்லை. எனக்கு என்ன தோணுதுன்னா, அவர் மேலிடத்தில் யாருக்காவது ரிலேட்டிவ்வா இருக்கணும். கல்யாணங்களில், வேற ஃபங்க்ஷன்களில் இந்த மாதிரி உறவுக்காரர் யாராவது வருவார். பந்தக்கால் நடறதிலிருந்து பொண்ணு-மாப்பிள்ளையை ஹனிமூன் அனுப்பறவரை தானே பொறுப்பெடுத்துக்கிட்டு எல்லா வேலையும் செய்வார். அதுக்குக் கல்யாண வீட்டுக்காரங்க அவருக்கு ‘மரியாதை’ செய்வாங்க. அது கணிசமான பணமா கூட இருக்கும். ஆனா அவரா எதுவும் கேட்க மாட்டார்.

“இந்த மாதிரி மனிதர்களுக்கு, அவங்க பழகற குடும்பங்களோட பல இரகசியங்கள் தெரிஞ்சுடும். அதையெல்லாம் அவங்க யார்கிட்டேயும் வெளியே சொல்ல மாட்டாங்க. ஆனா, இந்தக் குடும்பங்கள் அவங்களுக்கு ஏதாவது பேருக்கு வேலை கொடுப்பாங்க, நல்லா கவனிச்சுடவும் செய்வாங்க.”

“பிளாக்மெயிலா?” என்றான் தர்மா சிரிப்புடன்.

“நாட் ரியலி” என்று தன்யாவும் சிரித்தாள். “இரண்டு பார்ட்டிக்குமே என்ன நடக்குதுன்னு தெரியும், ஆனா அதைப் பிளாக்மெயில்னு ரெண்டு பேருமே நினைக்க மாட்டாங்க. சுப்பாமணி மாதிரி ஆட்கள் அதை உதவின்னு சொல்வாங்க.”

“இன்டரெஸ்ட்டிங்” என்றான் தர்மா.

சரியாக அப்போது உள்ளே நுழைந்த தர்ஷினி “என்ன இன்டரெஸ்ட்டிங்?” என்று கேட்டாள்.

“இவ்வளவு நேரம் சுப்பாமணியைப் பற்றித் தன்னுடைய ஊகங்களைத் தன்யா சொல்லிட்டிருந்தா. போகட்டும், நீ எங்கே போயிருந்த?” என்றான் தர்மா.

“சுப்பாமணியைப் பற்றின டீட்டெயில்ஸ் விசாரிக்கப் போயிருந்தேன். சங்கர் அண்ட் ஸ்ரீனில என்னுடைய ஃப்ரெண்ட் இருக்கா. அவ மூலம் சில விஷயங்கள் தெரிஞ்சுக்கிட்டேன்” என்றாள் தர்ஷினி.

“ஷூட்” என்றான் தர்மா.

“சுப்பாமணி பத்து வருஷமா சங்கர் அண்ட் ஸ்ரீனில இருக்கார். ஆனா அதுக்கு முன்னாடிலேர்ந்தே அவர் அவங்களுக்கு நிறைய ஹெல்ப் பண்ணியிருக்கார் போல. முக்கியமா ஃபங்க்ஷன்ஸ் ஆர்கனைஸ் பண்றதுல…”

தர்மா அதிர்ச்சியுடன் தன்யாவையும் தர்ஷினியையும் மாறி மாறிப் பார்த்தான்.

“எனி ப்ராப்ளம்?” என்று கேட்டாள் தர்ஷினி. அவன் இல்லையென்று தலையாட்டியதும் தொடர்ந்தாள். “இந்தச் சுப்பாமணி ஒரு டைப்பான பர்சன் போலிருக்கு. எல்லோரும் அவர்கிட்ட நல்லா பேசுவாங்க. ஆனா முதுகுக்குப் பின்னாடி முறைப்பாங்க. எல்லோருக்கும் உதவி செய்வாராம், ஆனா யாருக்கும் அவர் மேல நன்றி உண்டே தவிர, அன்பு கிடையாதாம்!”

தர்மா தன்னையறியாமல் கைதட்டினான். “இப்போ புரியுது எனக்கு ஊகத்தோட சக்தி! 100% பக்காவா சொல்லிட்ட! ஹாட்ஸ் ஆஃப் தன்யா!” என்றான்.

தர்ஷினி “எனக்குத் தெரியுமே அவ காலிபர்!” என்றவாறே கைதட்டலில் கலந்துகொண்டாள்.

தன்யா புன்னகைத்தாள்.

“கல்யாணத்துக்கு வர கிஃப்ட்ஸைப் பாதுகாக்கணும். ஒருவேளை ஏதாவது காணாமப் போச்சுன்னா சட்டுன்னு கண்டுபிடிச்சுக் கொடுக்கணும். நாம வேற ஏதாவது வேலை சொன்னாலும் செய்து தரணும். நல்ல திறமையான டிடக்டிவ்ஸ் தெரிஞ்சா சொல்லுங்க” என்று சுப்பாமணி விசாரித்தபோது, அவர் கேட்ட எல்லோரும் சொல்லி வைத்தாற்போல் சிபாரிசு செய்தது: சதுரா டிடக்டிவ் ஏஜன்சி.

“ரெண்டு பொண்ணுங்கதான் டிடக்டிவ்ஸ். தன்யா, தர்ஷினின்னு பேரு. அம்மாடி! துப்பறியும் புலிகள்னா பார்த்துக்கோ! நம்ம மஞ்சள்பை சூப்பர்மார்க்கெட் செயின் ஓனர் மஞ்சுவைக் கொல்ல முயற்சி நடக்கலை? அப்போ அவங்கதான் அவளைக் காப்பாற்றி, குற்றவாளியையும் கண்டுபிடிச்சுக் கொடுத்தாங்க. காணாமப் போனதைக் கண்டுபிடிக்கறதில் எக்ஸ்பர்ட்ஸ்” என்று சிலாகித்தார் சுப்பாமணியின் நண்பர்.

“எல்லாம் சரி, சொன்னதைக் கேட்பாங்களா? டிடக்டிவ்ஸ் எம்ப்ளாய் பண்ணியிருக்கறதே பிள்ளை வீட்டுக்காரங்களுக்குத் தெரியக் கூடாது. பெரிய ஏஜன்சின்னா, அவங்க சொன்னதைத்தான் நாம கேட்கணும்னு அதிகாரம் பண்ணினா? சங்கர் சாருக்கு அதெல்லாம் பிடிக்காது!”

“அதெல்லாம் இல்லை. சில சில்லறை ஊழியர்களைத்தவிர, அவங்க ஏஜன்சியில் மூணே பேர்தான் முக்கியமானவங்க. தன்யா, தர்ஷினி, அப்புறம் அவங்க சீஃப் தர்மா!” என்றவர் தொடர்ந்தார். “தர்மா இருக்கானே, ரொம்ப நல்லவன் சுப்பாமணி. பணிவான, அடக்கமான பர்சனாலிட்டி. வயசில் சின்னவங்கன்னாலும் அறிவுத்திறனால கேஸ் கண்டுபிடிப்பாங்களே தவிர, அடாவடி டைப்பெல்லாம் இல்லை” என்றார் நண்பர்.

“அதான் வேணும். ஆனா… சின்னவங்கன்னு சொல்ற, பொண்ணுங்க வேற… பிரச்சனைன்னு வந்தா சமாளிக்கத் தெரியுமா?” என்ற சுப்பாமணியின் சந்தேகம், இப்போது ப்ரிஜேஷை அவர்கள் வாங்கிய வாங்கிலிருந்து தெளியவில்லை. அவர்களை அவர் முதலில் சந்தித்தபோதே நீங்கிவிட்டது.

ஒருவாரம் முன்பு அவர்களைச் சதுரா துப்பறியும் நிறுவனம் அலுவலகத்தில் சந்தித்தார் சுப்பாமணி. அப்போதே தன்யாவையும் தர்ஷினியையும் தைரியமும், தன்னம்பிக்கையும், கூரிய அறிவும் கொண்டவர்கள் என்றும், எத்தகைய பிரச்சனை வந்தாலும் சமாளிப்பார்கள் என்றும் கணித்துவிட்டார். தர்மாவைப் பற்றி அவருக்கு எந்த அபிப்ராயமும் இல்லை. தேவையுமில்லை என்பது அவர் கணிப்பு.

எனக்காக வேலை செய்யப் போகிறவர்கள் தன்யா, தர்ஷினி. இவன் ஒரு எக்ஸ்ட்ரா-ஃபிட்டிங்.

யாராக இருந்தாலும் ஒரே பார்வையில் எடைபோட்டுவிடுவார் சுப்பாமணி. அது அவருக்கு எத்தனையோ முறை, எத்தனையோ விதங்களில் உதவியிருக்கிறது.

ஒரு முறையைத் தவிர. என்னால் இன்னும் அந்த ஒரு முறை நடந்ததைக் கணிக்க முடியவில்லை.

யார்? யார்?

அதிருக்கட்டும். என்னை ஒரு வேலைக்காரனுக்கும் கீழாக நடத்திய இந்தப் பெரிய குடும்பத்தில் ஒருத்தரையும் நான் சும்மா விடப்போவதில்லை. அவரவர்கள் செய்த தவறுகளுக்குத் தண்டனை அனுபவிக்க வேண்டிய காலம் வந்துவிட்டது.

இத்தனைபேரையும் தண்டிக்க நான் போதும். எனக்குத் துணையோ, பெரிய ஆயுதங்களோ வேண்டாம். சிறு கத்தி போதும்.

அந்தச் சிறு கத்தியின் பெயர்: சதுரா டிடக்டிவ் ஏஜன்சி.

-பய(ண)ம் தொடரும்...

ganesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...