ஒமிக்ரான் பரவினால் உயிரிழப்பு அதிகரிக்கும்
ஒமிக்ரான் பரவினால் உயிரிழப்பு அதிகரிக்கும் என்று மக்கள் நல்வாழ்வு துறை முதன்மை செய லாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதிய வகை கொரோனா வைரஸ் இதுவரை தென்ஆப்பிரிக்கா உட்பட 17 நாடுகளில் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், வறட்டு இருமல், இரவில் உடல் வியர்த்தல், உடல் வலி போன்ற சாதாரண அறிகுறிகளே இருக்கின்றன. அதே நேரத்தில் தடுப்பூசி போட்டவர் களைவிட தடுப்பூசி போடாதவர்களுக்கே பாதிப்பு அதிகமாக இருக்கிறது.
இந்தப் புதிய வைரஸ் இந்தியாவுக்குள் பரவிவிடாமல் தடுக்க மத்திய அரசு அனைத்து முன்னெச் சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
இதுகுறித்து தமிழக அரசுக்கும், மத்திய அரசு கடிதம் எழுதி உஷார்படுத்தி உள்ளது. இந்தக் கடிதத்தை அடிப்படையாக வைத்து ‘ஒமிக்ரான்’ வகை கொரோனாவைத் தடுக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வு துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அனைத்து மாவட்ட கலெக்டர்கள், விமான நிலைய இயக்குநர்கள் சென்னை மாநகராட்சி கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
“கொரோனா தற்போது கட்டுக்குள் வந்துவிட்டதாக பலரும் அலட்சியமாக முக கவசம் அணியாமல் செல்வதை பார்க்க முடிகிறது. இது மிகப்பெரிய தவறாகும். எந்த ஒரு வைரசும் நம்மை தாக்காமல் இருக்க வேண்டுமானால் முகக் கவசம்தான் பாதுகாக்கும். எனவே கண்டிப்பாக அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும்.
தற்போது தென்ஆப்பிரிக்காவில் புதியதாக உருமாறி வந்துள்ள ஒமிக்ரான் வைரஸ் பல நாடுகளில் வேகமாக பரவி விட்டது. இன்னும் இந்தியாவிற்குள் நுழையவில்லை.
ஆனாலும் முன் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. ஏனென்றால் அது போன்ற வீரியமிக்க வைரஸ் பரவினால் அதன் எதிர்விளைவுகள் மிக அதிகமான பாதிப்பை ஏற்படுத்தும். அதிக உயிரிழப்புகூட உருவாக்கிவிடும்.
இதைக் கருத்தில்கொண்டு கொரோனா காலத்தில் நாம் மேற்கொண்ட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இப்போதும் ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டும்.
இப்போதுள்ள சூழலில் கொரோனாவுக்குத்தான் தடுப்பூசி உள்ளது. இதில் 2 தவணை தடுப்பூசி போடாதவர்கள் இன்னும் பலர் உள்ளனர். அவர்களையும் கண்டறிந்து தடுப்பூசி போட நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஒரு தவணை தடுப்பூசி போடாதவர்களும் விரைந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். முன்னெச்சரிக்கையாக வெளிநாட்டில் இருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை நடத்தப்படுகிறது.
தென்ஆப்பிரிக்கா, ஐரோப்பா, பிரேசில், வங்காளதேசம், போட்ஸ் வானா, மொரிசீயஸ், ஜிம்பாப்வே, சிங்கப்பூர், இஸ்ரேல் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு வைரஸ் தொற்று இல்லாவிட்டாலும் சொல் லும் அறிவுரை என்னவென்றால், அரசு சொல்லும் வழிமுறைகளை தவறா மல் பின்பற்றுங்கள். கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து சொல்லுங்கள், தனி நபர் இடைவெளி, தனி நபர் சுகாதாரம் ஆகியவற்றை மிகச்சரியாக கடைப் பிடியுங்கள். இதுதான் முக்கியம்.
தற்போது மழை காலமாக இருப்பதால் காய்ச்சிய தண்ணீரை அனைவரும் குடிக்கவேண்டும். வயிற்றுபோக்கு போன்ற உடல் உபாதைகள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்” என்று அவர் கூறினார்.
இதற்கிடையே ஒமிக்ரான் வைரஸ் பரவுதல் தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒமிக்ரான் வைரஸ் நோய் எதிர்ப்புத் திறனிலிருந்து தப்பிக்கும் தன்மை கொண்டதாக இருக்கலாம். மேலும் இதன் பரவுதல் வேகமும் அதிகரிக்கும். எனவே இது அதிகமாகப் பரவ வாய்ப்புள்ளது.
அது எங்கு அதிகமாக பரவுகிறது என்பதன் அடிப்படையில் அதனால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட லாம். ஒமிக்ரானால் உலக அளவில் அதிக ஆபத்து ஏற்பட்டிருப்பது ஆரம்ப கட்ட ஆதாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
அதே நேரத்தில் ஒமிக்ரான் தொடர்பாக இன்னும் முழுமையாக ஆய்வுகள் நடத்தப்படவில்லை. எனவே இதன் பாதிப்பு தொடர்பாக நிச்சயமற்ற அம்சங்கள் இருக்கின்றன. ஏற்கெனவே போடப்பட்டு வரும் தடுப்பூசிகள் ஒமிக்ரானை கட்டுப்படுத்துமா? என்பதைக் கண்டறிய பல வாரங்கள் தேவைப் படும்.
தென் ஆப்பிரிக்காவில் அதிகம் பேருக்கு நோய் தொற்று ஏற்படுவதற்கு ஒமிக்ரான்தான் காரணமா என்று தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வருகின்றன” எனக் கூறப்பட்டுள்ளது.