வாகினி – 27| மோ. ரவிந்தர்

 வாகினி – 27| மோ. ரவிந்தர்

தனது கோபத்தை எல்லாம் ஒரேடியாக ‘ஒரே அடியாக’த் தனஞ்செழியன், நல்லதம்பி மீது காட்டிவிட்டு வீடு வந்து சேர்ந்தார் சதாசிவம்.

கஸ்தூரியும், மூன்று பிள்ளைகளும் பாயில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர்.

தனது கோபத்தினால் இரண்டு பேரை கொலை செய்து விட்டோமே என்ற உணர்ச்சி சோகம் சதாசிவம் மனதின் ஒரு ஓரத்தில் இருந்தாலும், தனது மனைவியைத் தவறாக நினைத்து விட்டோமே? என்ற குற்ற உணர்ச்சி உறங்கிக் கொண்டிருந்த கஸ்தூரியின் முகத்தைப் பார்த்துவுடன் விழிகளில் இரண்டிலும் தாரை தாரையாகக் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

சில்வண்டுகளின் சத்தங்கள் இந்த இரவு நேரத்தில் வெளியில் ரம்மியமாகக் கேட்டுக்கொண்டிருந்தது. இருட்டின் ஜாலம் வண்ணக்கோலமாக அரங்கேறிக்கொண்டிருந்தது.

சதாசிவம் மனதின் ஓரத்தில் அந்தச் சில்வண்டு சத்தத்தைப் போல் ஒரு பெரும்பாரம் குடைந்து கொண்டிருந்தது.

கஸ்தூரி, அழுது புலம்பி கலைந்த காட்சியாய் பெரும் அசதியில் உறங்கிக் கொண்டிருந்தாள். எல்லாம் கோபதாபத்தையும் ஒரே அடியில் முடித்துவிட்டேன் என்று எண்ணியவாறு அவளருகே வந்தார்.

உறங்கிக்கொண்டிருந்த கஸ்தூரியின் முகம் சதாசிவதிடம் ‘என்ன நீங்க இப்படித் தவறாக நினைச்சுட்டிங்க ? உங்கள் மனைவியை நீங்களே இப்படி நினைக்கலாமா, நான் தவறு செய்வேனா?’ என்று கேள்வி கேட்பதைப் போல் இருந்தது.

‘என்ன மன்னிச்சிடு கஸ்தூரி, உன்ன நான் இப்படி தப்ப நினைத்திருக்கக் கூடாது. எல்லாம் ஆண்களுக்கும் இருக்கும் புத்தி எனக்கும் இருந்திருக்கு. வாய் வார்த்தையாகப் பெண் சுதந்திரம் என்று பேசிவிட்டு நானே இப்படி ஒரு எண்ணத்தை மனதுக்குள் புதைத்து இருக்கிறேன், இது தப்புதான். இத்தன வருஷ வாழ்க்கையில இணைந்திருந்த அன்பை ஒரே நொடியில் தகர்த்திருக்கேன். இது என் அவசர புத்தி.

உன்னத் தீண்ட நினைத்தவர்களை இடம் தெரியாம புதைச்சிட்டேன் எனக்கு அது போதும். இந்த உலகத்தில் இனி நீ நிம்மதியாக வாழலாம்.

நமது பிள்ளைகளை எப்படியாவது ஒரு நல்ல நிலைக்குக் கொண்டு வந்துடு கஸ்தூரி… கஸ்தூரி…’ என்று விம்மிக்கொண்டே பாயில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த குழந்தைகளைத் திரும்பிப் பார்த்தார், சதாசிவம்.

கள்ளம் கபடம் அறியாத பிள்ளைகள் மூவரும் நாளை என்ன நடக்கப் போகிறது என்று தெரியாத வண்ணப் புன்னகையுடன் படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர்.

கைக்குழந்தையான பாபுவை இரு கைகளால் கண்ணில் உதிரம் கொட்ட பாயிலிருந்து தூக்கி அணைத்தார்.

“மகனே! நீ தான் இந்த வீட்டுக்கு அடுத்தத் தலைமகன். உனது அக்கா இருவரையும் கரை சேர்க்க வேண்டியது உனது பொறுப்பு. எந்த ஒரு சூழ்நிலையிலும் என் இரண்டு மகள்களை நீ கைவிட்டு விடாதே ! அவர்களுக்கு உன்னை விட்டால் இந்த உலகத்தில் யாரும் துணை இல்ல” என்று கூறிக்கொண்டு பாபுவின் கன்னத்தில் தனது முத்தங்களைப் பதித்தார், சதாசிவம்.

உலகம் அறியாத பிஞ்சு குழந்தை உறக்கத்தில் எதையோ நினைத்துச் சிரிக்கத் தொடங்கியது.

வாகினிக்குப் பக்கத்தில் உறங்கிக்கொண்டிருந்த வனிதா விளையாட்டுக் கலைப்பில் புரண்டு படுத்தாள். பாபுவை கையில் வைத்துக்கொண்டு பெண் பிள்ளைகள் உறங்கிக் கொண்டிருந்த இடத்தில் பெரும் துயரத்தோடு அப்படியே மண்டியிட்டார்.

“இரண்டு பொம்பள பிள்ளைகள் எனக்கு இருந்தும். உங்களுக்கு எதுவும் சேர்த்து வைக்காத பாவி ஆயிட்டேன். பிள்ளைகளா, உங்க அப்பனே மன்னிச்சிடுங்க. உங்கப்பன் ஒரு ஊதாரி? தனக்கு எதுவும் சேர்த்து வைக்கலை தான் பிள்ளைகளுக்காகவும் எதுவும் சேர்த்து வைக்கல. இந்தப் பொல்லாத உலகத்திலே எப்படி வாழப் போறீங்களோ?” என்று கூறி தனது தலையில் அடித்து அழுதுக்கொண்டு ஒரு கையால் வனிதாவின் தலையை வருடினார், சதாசிவம்.

தனது தந்தை பாசமாகத் தலையைக் கோதுவதுக்கூடத் தெரியாமல் வனிதா மீண்டும் வேறு பக்கமாகப் புரண்டு படுத்தாள்.

வாகினி, தன்னுடைய தந்தையிடம் எப்போதும் பேசுவதைப் போல் கனவிலும் முணுமுணுக்க தொடங்கினாள்.

“அப்பா, நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க ! நம்ம எல்லாத்துக்கும் ஒரு விடிவு காலம் வரும். இன்னும் கொஞ்ச நாள்ல நீங்க பணக்கார மாறிடுவீங்க நாம எல்லாம் கார்… பங்களான்னு இருப்போம். அப்போ, அம்மா உங்க கிட்ட சண்டையெல்லாம் போட மாட்டாங்க” என்று மகள் முணுமுணுத்தது சதாசிவம் காதில் மெல்ல விழுந்தது.

அவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. தன் மகள் வாகினியை கட்டிப்பிடித்து ஆயிரம் முத்தங்களால் அவள் கன்னத்தை நனைத்தார். ஆனால், அவர் கன்னத்தில் வழிந்த கண்ணீர் அந்த ஆனந்தத்தை எல்லாம் முறியடித்தது.

“உலகம் இதுதான் என்று அறியாத என் குழந்தைகள், என் அப்பா இந்த உலகத்தை ஜெயித்து விடுவார் என்று நம்பிட்டு இருக்காங்களே இதற்கு நான் என்ன செய்யப் போகிறேன், கடவுளே ! என்று புலம்பிக்கொண்டே வாகினி கேள்விக்கு எந்தப் பதிலும் சொல்ல முடியாமல்.

தனது குழந்தையின் கனவுகளை நிறைவேத்த முடியவில்லை? என்ற பெரும் கோபம் தீரும் வரையும் தன் தலையில் அடித்துக் கொண்டே, குழந்தை பாபுவை, வனிதா பக்கத்தில் கிடத்திவிட்டு. எழுந்து அழுது புலம்பிக் கொண்டே தினசரி படுத்துறங்கும் கட்டிலுக்குப் போய் சேர்ந்தார், சதாசிவம்.

தொடரும்…

< இருபத்தி ஆறாம் பாகம் | இருபத்தி எட்டாம் பாகம் >

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...