பேய் ரெஸ்டாரெண்ட் – 18 | முகில் தினகரன்

 பேய் ரெஸ்டாரெண்ட் – 18 | முகில் தினகரன்

வேறொரு அறையிலிருந்து சி.சி.டி.வி.காமிரா மானிட்டரில் அதைப் பார்த்துக் கொண்டிருந்த கோவிந்தன் நிலை கொள்ளாமல் தவித்தான். “போச்சு…போச்சு…அங்க ரெண்டு உசுரு போகப் போகுது”

சிவாவும், சுடலையும் அருகருகே வந்ததும், வேகம் குறைந்து ஒருவரையொருவர் முறைத்துப் பார்த்தபடி நின்றனர்.

இருவருக்குள்ளும் இரண்டு ஆன்மாக்களும் மாறி மாறி உச்சம் பெற்றுக் கொண்டிருந்ததால், திடீரென்று ஆக்ரோஷமாய்த் தாக்கிக் கொண்டும், திடீரென தாக்குதலை நிறுத்தி விட்டு, எதிரில் நிற்கும் தன் உருவத்தை வியப்பாய்ப் பார்ப்பதுமாய் இருந்தனர் அவர்களிருவரும்.

ஒரு கட்டத்தில் இருவரும் ஒருவர் குரல்வளையை ஒருவர் வெறித்தனமாய் அழுத்திக் கொல்ல முயல்கையில்…

மானிட்டரில் அதைப் பார்த்துக் கொண்டிருந்த கோவிந்தன் இரு உள்ளங்கையையும் கன்னத்தில் வைத்துக் கொண்டு நடுங்கினான். “அய்யோ….உடனே போய்த் தடுக்கலேன்னா…நிச்சயம் ரெண்டு பேரும் செத்திடுவாங்க”

“கோவிந்தன் கொஞ்சம் அமைதியாயிருங்க…நாம எடுத்திருக்கும் ரிஸ்க்கே இதுதான்!…இருவரும் சாகும் நிலைக்குச் செல்லும் அந்த விநாடியில்தான் அந்தந்த ஆன்மாக்கள் அந்தந்த உடலுக்குள் இறுக்கமாய் அமரும்…” திருமுருகன் விளக்கினான்.

“ஒருவேளை ரெண்டு பேருமே செத்திட்டா….”தலையைச் சாய்த்துக் கொண்டு கேட்டான் கோவிந்தன்.

“அப்படியொண்ணு நடந்திடக் கூடாது!ன்னு ஆண்டவனை வேண்டிக்குவோம்” என்று திருமுருகன் சொல்லும் போது,

கான்ஃப்ரன்ஸ் அறையில் அந்த இருவரும் உயிரற்ற சடலமாய் ஆளுக்கொரு மூலையில் “பொத்”தென்று விழுந்தனர்.

மானிட்டரில் அதைப் பார்த்துக் கொண்டிருந்த நால்வர் முகத்திலும் ஈயாடவில்லை.

“பாத்தீங்களா?…நான் சொன்னபடிதான் ஆச்சு…ரெண்டு பேரும் செத்திட்டாங்க” குதித்தான் கோவிந்தன்.

“வெய்ட்…வெய்ட்…நாம அங்க போய்ப் பார்ப்போம்” சொல்லியவாறே முன்னே நடந்தான் திருமுருகன்.

அவனைத் தொடர்ந்தனர் ஆனந்தராஜும், விஜய்சந்தரும், கோவிந்தனும்.

கான்ஃப்ரென்ஸ் அறைக் கதவை “திக்…திக்”கென்று அதிரும் நெஞ்சோடு திறந்தான் திருமுருகன்.

அடி மேல் அடி வைத்து நால்வரும் அறைக்குள் நுழைந்தனர்.

கோவிந்தன் நேரே சிவா அருகே சென்று, தரையில் அமர்ந்து, தாறுமாறாய்க் கிடந்தவனின் கன்னத்தைத் தட்டி உசுப்பினான். “டேய்…சிவா!…சிவா”

அதே போல் திருமுருகன் சுடலையின் அருகில் சென்றமர்ந்து அவனை உசுப்பினான்.

இருவரிடமும் சிறிது கூடச் சலனமில்லை.

நால்வரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

கோவிந்தன் கண்களில் கண்ணீர்.

அதுவரையில் அமைதியாயிருந்த ஆனந்தராஜ் பேசினான், “முருகா மூச்சிருக்கா?ன்னு பாரு”

தரையில் கிடந்த சுடலையின் மூக்கருகே விரலைக் கொண்டு போன திருமுருகனின் முகத்தில் பிரகாசம். “மூச்சிருக்கு…மூச்சிருக்கு”

“அப்ப உடனே ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகலாமா?” பரபரப்பானான் கோவிந்தன்.

“அவசியமில்லை…எங்க ரெஸ்டாரெண்ட்டிலேயே டாக்டர் இருக்கார்…குட்டியா ஒரு கிளினிக்கும் இருக்கு” என்ற ஆனந்தராஜ் உடனே மொபைலை எடுத்து கேஷியருக்கு கால் செய்து, “கேஷியர்….உடனே ரெண்டு ஸ்ட்ரக்சரை எடுத்துக்கிட்டு கிளினிக் ஆட்களை கான்ஃப்ரன்ஸ் ரூமுக்கு வரச் சொல்லுங்க” என்று சொல்ல,

“என்ன சார்?…என்னாச்சு?”

“அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம்…மொதல்ல ஸ்ட்ரக்சரை அனுப்புப்பா”

——————–

கிளினிக்.

சிவா மற்றும் சுடலைக்கு உடனடியாக முதலுதவி செய்த டாக்டர் பிரசாத், “சார்…எந்த பயமுமில்லை….ரெண்டு பேருக்குமே சுய நினைவு வந்திடுச்சு…” என்று சொல்ல,

“தேங்க் யூ டாக்டர்” என்றபடி எல்லோரும் அவர்களைப் பார்க்க அறைக்குள் சென்றனர்.

சிவா அருகில் சென்ற கோவிந்தனைப் பார்த்து அவன் , “அண்ணா….நீங்க எப்படி இங்கே?” என்று கேட்க,

“அப்பாடா…சிவாவுக்குள்ளார சிவாவோட ஆன்மாவே தங்கிடுச்சு” நிம்மதியானான் கோவிந்தன்.

மெல்லக் கண் விழித்த சுடலை, தன் படுக்கையில் எழுந்தமர்ந்து, கோவிந்தனையும், சிவாவையும் குழப்பமாய்ப் பார்க்க,அவனருகே சென்ற திருமுருகன், “ஹலோ மிஸ்டர் சுடலை…எப்படியிருக்கீங்க?” என்று இயல்பாய்க் கேட்டான்..

“நீங்கெல்லாம் யாரு?…இது எந்த இடம்?…” விபரம் புரியாமல் அந்த சுடலை விழிக்க,

“நீங்க இன்னிக்கு ஒருநாள் நல்லா ரெஸ்ட் எடுங்க…நாளைக்கு காலைல உங்களுக்கு எல்லா விபரங்களையும் நானே சொல்றேன்” என்றான் திருமுருகன்.

அன்று இரவு, சங்கீதாவின் ஆவியை வரவழைத்துப் பேசினான் திருமுருகன். “சங்கீதா நீ சொன்ன மாதிரியே…அந்த சிவாவையும்…சுடலையையும் சந்திக்க வெச்சு சண்டை போட வெச்சோம்…ரிசல்ட் பாசிட்டிவ்!…ரெண்டு பேருக்குமே எந்த ஆபத்தும் இல்லை!…”

திருமுருகன் அந்த சந்தோஷமான செய்தியைச் சொல்லியும், ஆவி முகத்தில் எந்த வித மாற்றமுமில்லை. வேறு ஏதோவொரு யோசனையில் ஆழமாய் மூழ்கியிருப்பதாய்ப்பட்டது திருமுருகனுக்கு.

“சங்கீதா…சங்கீதா” மெல்ல அழைத்தான்.

நிதானமாய்த் திரும்பிய சங்கீதாவின் ஆவி, திருமுருகனையே உற்றுப் பார்த்து விட்டுக் கேட்டது. “அவங்க ரெண்டு பேரும் சுயநினைவுக்குத் திரும்பியதோட பிரச்சினை முடிஞ்சிடுச்சு!ன்னு நீங்க நெனைக்கறீங்க!…அப்படித்தானே?”

“ஆமாம்…அவ்வளவுதானே?”

“இல்லை…பிரச்சினை இன்னும் தீரலை!…அப்படியே…இருக்கு!…அதுவும் இங்கேயே இருக்கு” என்றது சங்கீதாவின் ஆவி.

“என்னம்மா சொல்றே நீ?” நடுங்கும் குரலில் கேட்டான் திருமுருகன்.

“இப்ப…அவங்க ரெண்டு பேர் ஆவியும் துர்ஆவியா இல்லாம நல்ல ஆவிகளாய் இருந்ததினாலதான்…ஒரு கட்டத்துல ஆன்மா மாற்றம் ஏற்பட்டும்…இன்னொரு கட்டத்துல தனக்கான சரீரத்தோடு இணைந்தன!…”

“சரி…”

“அப்ப அந்த செக்யூரிட்டியைக் கொன்னது எந்த ஆவி?” கொக்கிக் கேள்வியைப் போட்டது சங்கீதாவின் ஆவி.

“அது…அது…வந்து…”பதில் சொல்ல முடியாமல் திருமுருகன் திணற,

“நான் அன்று சொன்ன அந்த துர்ஆவி இன்னும் இங்கேதான் இருக்கு!…அது சிவா உடம்பிலும் இல்லை…அந்த சுடலை உடம்பிலும் இல்லை!…வேற யாரோ ஒருத்தர் உடம்புல இருக்கு”

“அய்யோ…மறுபடியும் முதல் புரோட்டாவிலிருந்து தொடங்கணுமா?” பயந்தான் திருமுருகன்.

“கவலைப்படாதீங்க!…நாளைக்கே நல்ல விடிவு பிறக்கும்” நம்பிக்கையோடு சொன்னவளுக்கு ஒரு ஃப்ளையிங் கிஸ்ஸைப் பரிசளித்தான் முருகன். கையில் பிடி படாத ஆவிக் காதலிக்கு இங்கிலீஸ் கிஸ்ஸா தர முடியும்?…

——————–

முந்தின நாள் இரவில், சங்கீதாவின் ஆவி கேட்ட அதே கொக்கிக் கேள்வியை தன் நண்பர்கள் ஆனந்தராஜ் மற்றும் விஜயசந்தரிடம் கேட்டான் திருமுருகன்.

“ஏண்டா…இத்தனை நாளா நாம எல்லோரும் சிவா உடம்புக்குள்ளாரதான் துர்ஆவி இருக்கு!ன்னு நெனச்சிட்டிருந்தோம்!…அது தப்பாம்!…சிவா உடம்புக்குள்ளார புகுந்திருந்தது அவனோட பங்காளியான சுடலையின் நல்ல ஆவிதானாம்!…அதனாலதான்…ஈஸியா மறுபடியும் ஆவி மாற்றம் ஆயிடுச்சாம்!…” திருமுருகன் ஆரம்பித்தான்.

“சரி…”

“சங்கீதா என்ன சொல்றான்னா…இங்க வேற யாரோ ஒருத்தர் உடம்புல துர்ஆவி இன்னும் இருந்திட்டிருக்காம்!….”

“அடக் கஷ்ட காலமே!…எந்த நேரத்துல பேய் ரெஸ்டாரெண்ட்ன்னு பேர் வெச்சோமே தெரியலை…நிஜப் பேய்களெல்லாம் வந்து ஏகமாய்க் குடியேறிட்டுதுக!…போற போக்கைப் பார்த்தா “பேய் ரெஸ்டாரெண்ட்” க்கு பதிலா “பேய் அப்பார்ட்மெண்ட்” ன்னு வெச்சிடலாம் போலிருக்கே?” அங்கலாய்த்தான் ஆனந்தராஜ்.

“கவலைப்படாதே ஆனந்த்…அது யார்?னு கண்டுபிடிக்கறதுக்கு..சங்கீதாவே ஒரு ஐடியாவும் சொல்லிக் குடுத்திருக்கா…” என்று திருமுருகன் சொன்னதும்,

“அப்பாடா” என்று நெஞ்சில் கையை வைத்துச் சொன்ன ஆனந்தராஜ், “சொல்லு முருகா…என்ன வழி அது?” கேட்டான்.

“ம்…பொதுவா அந்த மாதிரி துர்ஆவிகள்…தங்களோட துஷ்டத்தனமான வேலைகளைச் செய்ய….ராத்திரி பனிரெண்டு மணிக்கு மேலேதான் அந்த நபர் உருவத்துல வெளிய உலாத்துங்களாம்!…அப்படி அது உலாத்துற நேரத்துல நம்மள்ல யாராவது ஒருத்தர் ஒளிஞ்சிருந்து அவனைப் பின் தொடர்ந்து சென்று, அவன் மேலே அம்மனைக் குளிப்பாட்டிய புனித நீரைத் தெளிச்சா…அவனுக்குள்ளார இருக்கற துர்ஆவி…தீர்த்தத்தோட உஷ்ணம் தாங்காம அலறிக்கிட்டு வெளியேறி பக்கத்தில் இருக்கற ஏதாவதொரு கிணற்றுக்குள் தஞ்சமாகுமாம்!…அந்தச் சமயத்துல அந்தக் கிணற்றை மூடிட்டா…அது அப்படியே மண்ணோடு மண்ணாய்ப் புதைஞ்சு போயிடுமாம்!…இதெல்லாம் சங்கீதா ஆவி சொன்ன விஷயங்கள்”

“எல்லாம் சரி…யார் அந்த வேலையைச் செய்யறது?” விஜயசந்தர் கேட்க,

“நம்ம மூணு பேர்ல யாராவது ஒருத்தர்தான் செய்யணும்!…ஏன்னா…இது ஒரு ரகசியமான விஷயம்…இதுக்கு வேற ஆளை எங்கேஜ் பண்ணினா…அது நம்ம ரெஸ்டாரெண்டுக்குத்தான் கெட்ட பேரு” என்றான் திருமுருகன்.

“அபப்…நீயே செஞ்சிடு முருகா!…ஏன்னா…நீதான்…ஆவி கூடவெல்லாம் பேசிப் பழகிட்டிருக்கே!…நாங்க ரெண்டு பேருக்கும் இட்லி ஆவி வந்தாலே நடுங்கிப் போயிடுவோம்!” என்றான் ஆனந்தராஜ்.

“ஓ.கே….நானே அந்த ரிஸ்க்கையும் எடுக்கறேன்….எது நடந்தாலும் என் சங்கீதாவோட ஆவி என்னைக் காப்பாத்தும்ங்கற நம்பிக்கை எனக்கிருக்கு”

“எப்போ…நீ அதை செய்யப் போறே?” விஜய்சந்தர் கேட்டான்.

“நாள் கடத்த வேண்டாம்!…இன்னிக்கே…இன்னிக்கு ராத்திரியே பண்ணிடறேன்!” என்றான் முருகன்.

“டேய்…முருகா…ஜாக்கிரதைடா”

“ஹும்…..எவ்வளவோ பண்ணிட்டேன்…இதைப் பண்ண மாட்டேனா?” சிரித்துக் கொண்டே சொன்னான் முருகன்.

“அதுக்கு முன்னாடி…நமக்கு இன்னொரு முக்கியமான வேலை இருக்கு” என்றான் ஆனந்தராஜ்.

“என்னது?” தலையைச் சாய்த்துக் கொண்டு கேட்டான் விஜயசந்தர்.

“நல்லவிதமா ஒரு பஞ்சாயத்து பண்ணி…அந்த சுடலைக்கும்…நம்ம சிவா பிரதர்ஸுக்கும் நடுவில் இருக்கற பகையை இல்லாமப் பண்ணனும்”

“பண்ணிடுவோம்” என்று திருமுருகனும், விஜயசந்தரும் ஒரே குரலில் சொல்ல,

மூவரும் அவர்கள் இருப்பிடத்தை நோக்கிச் சென்றனர்.

சிவாவும், அவன் அண்ணன் கோவிந்தனும் ஒரு புறம், “கடு…கடு”முகத்தோடு இருப்பார்கள், அதே போல் அந்த சுடலையும் இன்னொரு புறம் இவர்களைப் பார்த்து உள்ளூர கறுவிக் கொண்டிருப்பான், என்கிற எண்ணத்தோடு அந்த அறைக்குள் நுழைந்த ஆனந்தராஜும், அவன் பார்ட்னர்ஸும் பிரமித்துப் போயினர்.

அங்கே, அந்த மூன்று பேரும் ஒன்றாக அமர்ந்து மிகவும் சந்தோஷமாய் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர்.

“ஆஹா…இதென்னடா அதிசயமாயிருக்கு?…ஒருத்தனையொருத்தன் வெட்டிக்கிட்டு…சவக்குழிக்குள் போய் மீண்டு வந்த பங்காளிகள் இருவரும் இப்ப கொஞ்சிக்கறாங்களே?….”

“என்ன சிவா…என்னாச்சு உங்க பங்காளிச் சண்டை?….”கேட்டவாறே உள்ளே நுழைந்தான் திருமுருகன்.

“ஒரு ஏக்கர் பூமிக்காகத்தானே வெட்டிக்கிட்டீங்க?…இப்ப என்ன முடிவு பண்ணியிருக்கீங்க?” ஆனந்தராஜ் கேட்டான்.

“ஹி…ஹி…அதை நான் என் பங்காளி கோவிந்தனுக்கே விட்டுக் கொடுக்கறதா முடிவு பண்ணிட்டேன்” என்றான் சுடலை.

“அடடே…இது பெரிய விஷயமாச்சே?” திருமுருகன் சொல்ல,

“சார்…எங்க அப்பத்தா அடிக்கடி ஒண்ணு சொல்லுவாங்க… “பிரச்சினைகளை தூரத்தில் வெச்சுப் பாரு…நிம்மதி பக்கத்திலேயே இருக்கும்”ன்னு…நான் இப்ப அந்த நிலப் பிரச்சினையை தூரத்துல வீசிட்டேன்…இப்ப நிம்மதி எனக்குப் பக்கத்திலேயே இருக்கு!…அதே மாதிரி நான் பிடிவாத குணத்தை விட்டேன்…எனக்குப் பிடிச்சவங்க என் பக்கத்துல வந்துட்டாங்க” என்றான் சுடலை.

வெளிப் பார்வைக்கு ஒரு போக்கிரி போல் தோற்றமளிக்கும் அந்த சுடலையின் வார்த்தைகளில் இருந்த யதார்த்த உண்மை அவர்களை வியக்க வைத்தது.

“உங்க மூணு பேரையும் பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமாயிருக்குப்பா” என்றான் திருமுருகன்.

அன்று மாலை கோவிந்தனும், சுடலையும் தங்கள் ஊரை நோக்கிப் பயணமாயினர்.

மூன்று நாட்களுக்கு முன், இதே சுடலையை சிவாவாக அழைத்து வந்த கோவிந்தன், இன்று சுடலையாகவே திருப்பிக் கூட்டிச் சென்றான்.

——————–

இரவு, பதினோரு மணி.

ரெஸ்டாரெண்ட் குளோஸ் செய்யப்பட்டதும், பணியாட்கள் தங்கள் விடுதியை நோக்கிச் சென்றது விட, ஆனந்தராஜும், விஜயசந்தரும் திருமுருகனிடம் வந்தனர்.

“முருகா…இன்னிக்கே அந்த ரிஸ்க்கை எடுக்கணுமா?…ஒரு நாலஞ்சு நாள் கழிச்சு எடுத்தா என்ன?” ஆனந்தராஜ் கேட்க,

“அது செரி…ஏற்கனவே ஒரு செக்யூரிட்டி உயிர் போயிடுச்சு…நாம டிலே பண்ணினா…அடுத்தொரு உசுரும் போயிடும்…அதனால…இன்னிக்கே முடிச்சிட்டு…நாளையிலிருந்து நிம்மதியா இருப்போம்” என்றான் திருமுருகன்.

சிறிய யோசனைக்குப் பின், “சரி…எதுக்கு கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இரு!…உனக்கு ஏதாவது ஆபத்து வர்ற மாதிரி இருந்தா…உடனே உன் முயற்சியைக் கை விட்டுட்டு நீ தப்பிக்கற வழியைப் பார்…என்ன?” ஆனந்தராஜ் சொல்ல,

அவனுக்குத் தன் மீதுள்ள அன்பை எண்ணி நெகிழ்ந்து, “சரிடா” என்றான்.

“அம்மன் தீர்த்தம்…?” ஆனந்தராஜ் ஞாபகமூட்ட,

“அதெல்லாம் ஈவினிங் நானே நேர்ல போய் வாங்கிட்டு வந்திட்டேன்”

எல்லோரும் சென்றதும், இரண்டாவது தளத்திலிருந்த தனது அறையில் சுவர்க் கடிகாரத்தையே பார்த்தபடி அமர்ந்திருந்தான் திருமுருகன்.

டிஜிட்டல் கடிகாரம் 11.50 என்றது.

வெளியே போவதற்கு முன் சங்கீதா ஆவியிடம் பேசி விடலாம் என்றெண்ணி நினைவுகளைக் குவித்து அவளை அழைத்தான்.

எப்போதுமே அழைத்த மறு விநாடியே வந்து நிற்கும் ஆவி, இன்று நீண்ட நேரமாகியும் வராது போக, “என்னாச்சு?…எப்பவும் உடனே வருவா…இன்னிக்கு இவ்வளவு நேரமாகியும் வரலையே!…ஏன்?”

11.55

“இன்னும் அஞ்சு நிமிஷம்தான் இருக்கு…”என்று தனக்குள் சொல்லிக் கொண்டு மறுபடியும் முயற்சித்தான்.

ஆவி வரவில்லை. அம்மன் கோயில் தீர்த்தம் இருக்கும் அந்த அறைக்குள் ஆவி நுழையாது என்பது ஏனோ திருமுருகனுக்கு அப்போது புரியவில்லை.

11.57.

“சரி…இதுக்கு மேலே வெய்ட் பண்ணிட்டிருந்தா அங்கே அந்த துர்ஆவி தன் ஆட்டத்தை ஆரம்பிச்சிடும்…அதுக்கு முன்னாடி போய் அதைத் தடுக்கணும்!”

கிளம்பினான்.
வெளியே கனமான இருட்டுப் போர்வைக்குள் அந்த ஏரியா அமிழ்ந்திருந்தது.

ரெஸ்டாரெண்டிற்குப் பின்புறமிருந்த நந்தவனத்தை நோக்கி திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டே நடந்தான் திருமுருகன்.

பொள்ளாச்சி ரோட்டில் லாரிகள் ஓடும் சத்தம் பெரிதாய்க் கேட்டது.

எங்கோ ஒரு ஆந்தை கர்ணகடூரமாய் அலறியது.

ரெஸ்டாரெண்ட் பணியாட்கள் தங்குமிடத்தில் மயான அமைதி.

அறுந்து விழும் நட்சத்திரமொன்று வானத்திலிருந்து “சர்”ரென இறங்கி பூமியை நோக்கி வந்து திடீரென பெரிய தீப்பிழம்பை ஏற்படுத்தி விட்டு அமைதியானது.

சிறிது தூரம் வந்ததும், அங்கிருந்த ஒரு பெரிய மரத்தின் பின்னால் ஒளிந்து கொண்டான் திருமுருகன்.

அவன் எட்டிப் பிடிக்கும் தூரத்தில் சுற்றிலும் புதர் மண்டிய அந்தக் கிணறு “ஆ”வென்று வாயைத் திறந்தபடி படுத்துக் கிடந்தது.

காத்திருந்தான் திருமுருகன்.

தூரத்தில் அசைவு தெரிய, பார்வையைக் கூராக்கினான்.

உயரம் குறைந்த ஒரு உருவம் இருட்டில் நடந்து வந்து கொண்டிருந்தது.

– தொடரும்…

< பதினேழாம் பாகம் | பத்தொன்பதாம் பாகம் >

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...