எ.வீ.ரோ.உ.வீ.ஜ. | 8 | இந்துமதி

 எ.வீ.ரோ.உ.வீ.ஜ. | 8 | இந்துமதி

8

ந்தத் தனியார் விருந்தினர் மாளிகையின், மர நிழலில் காரை நிறுத்தினாள் சித்ரா. ‘அப்பாடா…’ என்று கீழே இறங்கினாள். ஒரு முறை கைகளை மடக்கி தலைக்கு நேராக உயர்த்தி குனிந்து பாதம் தொட்டாள். அதைப் பார்த்த மது மென்மையான குரலில் கேட்டான்.“அவ்வளவு தூரம் காரை ஓட்டிக்கிட்டு வந்தது கஷ்டமாக இருக்கு இல்ல… அதுக்குத்தான் நான் ஓட்றேன்னு சொன்னேன்…”
அவனது அந்தக் கரிசனத்தைத் தாங்க முடியாத ஷைலஜா படபடத்தாள்,
“அவதானே பிடிவாதம் பிடிச்சு ஓட்டிக்கிட்டு வந்தா. அப்போ பட வேண்டியது தான்.”
சித்ரா சிரித்தாள்.
“நான் இப்போ கஷ்டம்னே சொல்லலையே. எனக்காக நீங்க ரெண்டு பேரும் ஏன் சண்டை போட்டுக்கறீங்க….?”
“நாங்க ஒண்ணும் சண்டை போடலை. போடவும் மாட்டோம்.”
அவர்கள் பேச்சில் கலந்து கொள்ளாமல் சுற்றிலும் தெரிந்த மோனமான அழகில் பார்வை பதிய நின்றிருந்த மது திரும்பி அவர்களைப் பார்த்தான். புருவங்கள் மெலிதாகச் சுருங்கின.
“நீங்க ரெண்டு பேரும் உயிர்த் தோழிகள்னு சொல்லிக்கறீங்க. ஆனால் எப்போ பார்த்தாலும் எதுக்காக இப்படி எலியும் பூனையுமாக சண்டை போட்டுக்கறீங்க…”

‘உங்களுக்காகத்தான்’ என்று சொல்ல நினைத்ததை இருவருமே நுனி நாக்கோடு நிறுத்திக் கொண்டனர். ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“ஓ… கமான், என்ன விஷயம்..?”
“ஒண்ணுமில்லை மிஸ்டர் மது. பிரெண்ட்ஸ்னா இப்படித்தான். சில சமயம் எலி, பூனையாக நிற்போம். மறு நிமிஷமே தோள் மேல கை போட்டுக்குவோம். இதெல்லாம் நல்ல நட்புக்கு சகஜம். சரி வாங்க, உள்ள போவோம். இங்கேயே நின்னு ஏன் பேசிக்கிட்டிருக்கணும்…?”
“ஓ.கே…” என்று நகர முற்பட்ட மதுவை ஷைலஜாவின் குரல் நிறுத்திற்று.
“ஒரு நிமிஷம் மது. உள்ளே போறதுக்கு முன்னால்சித்ராவோட அப்பாவும், அவருடைய கேர்ள் பிரென்ட் கமலாவும் இருக்காங்களான்னு பார்த்துட்டு வந்துடுங்க. தட் வில் பி பெட்டர்.”
சடாரென்று ஷைலஜாவை ஏறிட்ட மதுவின் முகத்தில் கோபம் தெரிந்தது. இங்கிதமற்ற பேச்சா அல்லது விஷமத் தனமான பேச்சா என்பது புரியாமல் தடுமாறினான். ‘என்ன ஷைலு இது… ஏன் அனாவஸ்யமாக அந்தப் பெண்ணின் மனசை நோக அடிக்கிறாய்..?’ என்று கேட்க வேண்டும் போலிருந்தது. கேட்டால் ஒருவேளை ஷைலஜா இன்னமும் சித்ராவின் மனது நோகும்படி பேசவும் கூடும் என்கிற பயத்தில் பேசாமல் இருந்தான். ஆனாலும் அவனுக்குக் கஷ்டமாக இருந்தது. சித்ராவின் முகத்தைப் பார்க்கத் தயக்கமாக இருந்தது. மிக மெதுவாகத் திரும்பி அவளைப் பார்த்தபோது அவனது எதிர்பார்ப்பிற்கு மாறாக அவள் முகம் புன்சிரிப்போடு இருந்தது.
“ரொம்ப கரெக்ட். ஆனால் நீ போயிடாதே ஷைலு. அப்புறம் அவர் கமலாவை விட்டுட்டு உன்னைப் பிடிச்சுண்டுவார். ‘ஹி ஈஸ் ய டேன்ஜ்ஜரஸ் ஓல்டு மேன். உன்னை மாதிரி அழகா, இளமையா, தகதகன்னு தேஜஸா இருந்தாப் போதும். மகாபலிபுரமோ, மன்ஹாட்டனோ மன்மதன் கிட்டே லீஸ் எடுத்துடுவார்.”
சித்ராவின் சரளமும், இறுக்கத்தைக் குறைத்த விதமும் மதுவின் மனதைத் தொட்டது. ‘என்ன பெண் இவள்’ என்கிற ஆச்சரியத்தோடு அவளைப் பார்த்தான். ஒரு வினாடி பார்த்துக் கொண்டே இருந்த போது முகத்தில் ஏதோ ஊறுகிற மாதிரி தோன்ற திரும்பினான். ஷைலஜாவின் கண்கள் அவனது முகபாவத்தை மிகத் துல்லியமாகக் கவனித்துக் கொண்டிருந்தது. சட்டென்று சித்ராவின் மீதிருந்த எண்ணத்தைத் திருப்பியவனாகச் சொன்னான்.
“டோண்ட் ஒர்ரி… கெஸ்ட் ஹவுஸின் ரூம் சாவி என் கிட்டதான் இருக்கு. அதனால் தைரியமாக உள்ளே போகலாம் வாங்க…”
அறைக் கதவைத் திறந்ததும் குப்பென்று லெமன் ஸ்ப்ரே வாசனை அவர்களை அனைத்தது. கண்களுக்கு இதமான இனம் வைலட் வர்ண கம்பள விரிப்பு பாதங்களை முத்தமிட்டது. ஏதோ ஒரு தேவதை தன் உள்ளங் கைகளை விரித்து அதில் அவர்களின் பாதங்களை ஏந்திக் கொள்வது போன்ற பிரமை ஏற்பட்டது.
‘பூமியில் இருக்கும்போதே விண்ணில் பறக்க வேண்டுமென்றால் இங்கே வர வேண்டும். அதுவும் மதுவோடு வரவேண்டும்’ ஷைலஜா நினைத்துக் கொண்டாள்.
“வாடி, கெஸ்ட் ஹவுஸ் முழுசையும் சுற்றிப் பார்க்கலாம். வாங்க மிஸ்டர் மது…”

கலங்கரை விளக்கின் வெளிச்சமாக அவர்களின் பார்வை அறையை வட்டமிட்டன, பளிச்சென்ற படுக்கை விரிப்பு. அதில் பூத்திருந்த சின்னச் சின்ன இளம் சிவப்பு ரோஜாக்கள், நிஜமான ரோஜாக்களை முழுசாகத் தூவின
மாதிரி. முட்கள் குத்துமா எனத் தொட்டுப் பார்க்க வைத்தன. அதற்கும் உள்ளே போனால் அதே இளம் சிவப்பு குளியல் அறை. இளம் சிவப்பு குளிக்கும் தொட்டி. இளம் சிவப்பு சலவைக் கற்கள், இளம் சிவப்பு வாஷ்பேஸின், கண்ணாடி ஓர சட்டம், மிதியடி, குளியல் தொட்டியை மறைக்கும் பிளாஸ்டிக் ஸ்க்ரீன், ஸ்க்ரீனின் வளையங்கள் எல்லாமே இளம் சிவப்பு. பவுடர் டப்பா, சோப்பு, டவல் கூட ரோஜா வர்ணம். ஒவ்வொன்றாகப் பார்க்கப் பார்க்க கண்கள் அந்த அழகின் இதத்திலும். மென்மையிலும் விரிந்தன. நெஞ்சை நீவின மாதிரி
சுகத்தைத் தந்தது.
“இந்த பாத்ரூமை கட்டியது யார் தெரியுமா ஷைலு..?” -மது கேட்டான்.
“இது என்ன தாஜ்மஹாலா… ஷாஜஹான்னு
சொல்ல. யாரோ ஒரு மேஸ்திரி கட்டியிருப்பார்” -ஷைலஜாவிற்கு பதிலாக சித்ரா பதில் சொன்னாள்.
“இவள் சரியான ஜடம், ரசனையற்ற மடம். காலேஜ் வாசல்ல குல்மொஹரும் சரக்கொன்றையும் பெட்ஷீட் விரித்திருக்கும். நான் பார்த்துக்கிட்டு நின்றால் இவள் சிரிப்பாள். பூவை பார்த்துண்டு நிற்க ஆரம்பிச்சுட்டியான்னு அலட்சியமாகப் போவாள். ‘உன் கண்ணுல இந்த மஞ்சள் பெட்ஷீட் படலையான்னு’ கேட்டால் ‘என் கண்ணுக்கு பெட்ஷ்ட எல்லாம் ராத்திரிதான் படும். குளிர்கிறபோது தான் படும்’னுவாள். அவ்வளவு ரசனை! இவ கிட்ட
போய் கேட்டால் இந்த பதில் வராமல் வேற என்ன வரும்…?”
ஷைலஜா நிஜம் சொன்னாலும் அந்த நேரத்திற்கு அது சற்று மிகைப்படுத்தப்பட்ட நிஜமாக தொனித்தது. எதற்கும் லட்சியம் பண்ணாத சித்ராவின் மனதில்கூட சுருக்கென்று தைத்தது. சிரிப்பும், கிண்டலும், கேலியுமாக இருந்த முகம் வாடிற்று. பேச்சு முதல் முறையாகத்
தழைந்து வந்தது.

“ஏய்… இல்லடி. அது தினமும் பார்த்துப் பார்த்து பழக்கப்பட்ட அழகுன்றதால் அதுல மனசு பதியலை. இது அப்படி இல்லைடி.”

“ஓஹோ… அப்படின்னால் புற அழகு… புதுசாகப் பார்க்கிற விஷயம்னால் மனசு பதியும், ரசிச்ச முடியும்னு சொல்ல வரியா..?”

“எக்ஸாட்லி… நானும் ரசிக்க ஆரம்பிச்சிருக்கிறதை நினைச்சு சந்தோஷப்படேன்….
“குட்… அப்படின்னால் இந்த பாத்ரூமைக் கட்டியது யாராக இருக்கும்னு சொல்லுங்க பார்க்கலாம்” பேச்சை மெல்ல திசை திருப்பினான் மது.
“நீங்களா…?” ஷைலஜா கேட்டாள்.
“ம்ஹும். கொஞ்சம் யோசிச்சுப் பாரேன்…”
“நான் சொல்லட்டுமா…?”
“சொல்லுங்க..”
“மணிரத்னம். சரியா…?”
“ரொம்ப கரெக்ட். இதைக் கட்டினவர் நினைவெல்லாம் ரோஜா மலர்ந்திருக்கணும் இல்லையா…?”
“அறுவை… ஜோக்குனு எண்ணமா… இல்ல புத்திசாலிங்கிற நினைப்பா… பிளேடை இந்த பாத்ரூமிலேயே வச்சிட்டு வாங்க ரெண்டு பேரும். நான் மாடிக்குப் போறேன்.”
இரண்டிரண்டு படிகளாகத் தாவி ஏறினாள் ஷைலஜா. சித்ராவும், மதுவும் கூடப் போனார்கள். மாடியிலும் விசாலமான படுக்கை அறை. அதை ஒட்டி அழகான
பால்கனி.
அங்கு போய் நின்றார்கள். தூரத்துக் கடலும், அலைகளின் சுருளலும், தொடுவானமும், மணற்பரப்பும், சவுக்கு மரங்களும் அவற்றைத் தொட்ட காற்றில் சங்கீதமும் ரம்மியமாக இருந்தன. இயற்கையின் அந்த மோனம்,
தவம் எதையும் கலைக்கப் பிடிக்காதவர்களாக சிறிது நேரம் பேசாமல் நின்று கொண்டிருந்தார்கள். பின்னர் அந்த மௌனத்தைக் கலைத்து மதுவைப் பார்த்துக் கேட்டாள் சித்ரா.
“அங்கே போய் கடல்ல குளிக்கலாமா…?”
“கடல்ல நீந்தணும்னு தான் நான் என் ஸ்விம்மிங் சூட்டைக் கொண்டு வந்திருக்கேன். உங்களுக்கு நீச்சல் தெரியுமா…?”

“ம்ஹும், தெரியாது.”
“இவ்வளவு மார்டனாக இருக்கிற நீங்க ஏன் நீந்தக் கற்றுக்கலை…?”
“நீங்க கற்றுத் தரீங்களா… கற்றுக்கறேன்.”
“ஐ டோண்ட் மைண்ட், ஆனால் இங்கேயா கடல்லயா..?”
“ஒய் நாட்… இன்னிக்கே இங்கேயே ஆரம்பிக்கலாமே…?”
“ஸ்விம்மிங் டிரஸ் வேண்டாமா..?”
“நல்ல காலம், புடவை கட்டாமல் சுடிதார் போட்டுட்டு வந்திருக்கேன், இது போறாதா…?”
“லெட் அஸ் ட்ரை… நீயும் கற்றுக்கறியா ஷைலு…?”
“அது ஒன்னுதான் பாக்கி….” என்று வெடித்தாள் ஷைலஜா.
“வேணாம். நீ கத்துக்க வேணாம். கரையில் நின்னு வேடிக்கை பாரு…”
“இல்ல. நானும் கூட வரேன்…” என்று புறப்பட்டாள் ஷைலஜா.
‘நீச்சல் கத்துக்கணுமாம் நீச்சல்…. அதுக்கு மது தானா கிடைச்சார். கற்றுத்தர ஆளில்லை…. தூண்டில் வீசிப் பார்க்கறா. மது ஜாக்கிரதையாக இருங்க. மாட்டிக்காதீங்க.’
மது நீச்சல் உடைக்கு மாறினான், நைலான்அரை நிக்கர், வெற்று மார்பு, வெள்ளைவெளேரென்ற உடம்பு. கால்களிலும், மார்பிலும் கருகருவென்ற ரோமங்கள். ரோமானியர்களை நினைவு படுத்தினான்.
“போகலாமா..?”
மூவரும் விருந்தினர் மாளிகையை விட்டு கடலுக்குப் போனார்கள். ஓடி வருகின்ற அலைகளுக்கடியில் மணலில் பாதங்களைப் புதைத்துக் கொண்டு நின்ற போது நிஜமாகவே தங்களை மறந்தார்கள், குழந்தைகளாக மாறிப்
போனார்கள். பெரிய அலை சீறிக் கொண்டு வந்த போது சித்ராவும், ஷைலஜாவும் கரையை நோக்கி ஓடினார்கள். ஏற்றம் குறைந்து திரும்பும் அலைகளுடன் கடலுக்குள் திரும்பினார்கள். அதைப் பார்த்த மது சிரித்தான்.
“ஐயோ இவ்வளவுதானா உங்க தைரியம்….. ஏன் சித்ரா… ஷைலஜாதான் பயந்தாங்கொள்ளி. நீங்க கூடவா…?”
“எனக்கென்ன பயம்… அவள் தனியாக இருப்பாளேன்னு கூடப் போனேன். நானா பயப்படற ஆள்…? இப்போ பாருங்க…”
நல்ல பாம்பு படம் எடுக்கிற மாதிரி, ஐந்து தலை நாகம் மாதிரி பெரிதான அலை ஒன்று ஏறி ஆர்ப்பரித்துக் கொண்டு வர அதில் தன் தைரியத்தைக் காட்டிக் கொள்ள நின்றாள் சித்ரா. அலை அவளது மார்பைத் தாக்கி முகத்தை நெருங்கினதும் தாங்க இயலாதவளாக “மதூ..” என்று கத்தினாள். கால்களைக் கட்டி இழுத்துக் கொண்டு போகிறமாதிரி உணர்ந்தாள்.
அவள் நிலைதடுமாறிச் சரிவதை உணர்ந்த மது வினாடி நேரத்தில் ஓடி வந்து அவளைக் காப்பாற்றும் பொருட்டு இறுகக் கட்டிக் கொண்டான். மார்பு மார்பில் பதிய, முகம் தோளில் சரிய, இடுப்பை அணைத்திருந்த கைகளில் குபீரென்று சூடு பரவ…
மனம் தடுமாறினான் மது. ஒரு பெண்ணின் முழு ஸ்பரிசத்தை முதல் முறையாக அறிந்த அவனது உடல் கடலின் அத்தனை குளிர்ச்சியிலும் வெப்பம் கண்டது.
அதே வெப்பம் மனம் முழுதும் பரவத் தொடங்க, அவனையும் மீறி அவனது கைகள் சித்ராவின் இடுப்பை இறக்கியது.
அவனது உடலோடு மேலும் ஒட்டிக் கொண்ட சித்ரா மெலிதான குரலில் சொன்னாள்.
“மது… மது…ஐ… ஐ லவ்யூ…”
அலைகளுக்கிடையில் நடந்த அந்த மாற்றத்தை அறியாத ஷைலஜா கரையில் இருந்தவாறு குரல் கொடுத்தாள்.
“என்ன ஆச்சு…?”
அதற்கு பதில் சொல்கிற வகையில் சித்ராவைத் தோளில் சரித்து மது தூக்கிக் கொண்டுவர மனம் பதறினாள் ஷைலஜா.
‘மீன் தூண்டிலில் மாட்டிக் கொண்டு விட்டதா…..’ கேள்விக்கு பதில் தெரியாமல் திண்டாடினாள்.

-தொடரும்…

ganesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...