பத்துமலை பந்தம் | 27 | காலசச்சக்கரம் நரசிம்ம

 பத்துமலை பந்தம் | 27 | காலசச்சக்கரம் நரசிம்ம

27. குகன்மணி ஓர் அபாய மணி

ண்டர்வேர்ல்ட் மன்னன் அமீர் அனுப்பிய ஆட்கள், அலட்சியமாக மலேசியன் மில்லினியம் ஹோட்டலினுள் நுழைந்தபோது, ஜெனரல் மேனேஜர் நூர் பாசில் அதிர்ந்து போனார். அவசரமாக தனது அறையில் இருந்து வெளியேறி ரிசப்ஷன் பக்கமாக சென்று, அங்கு பொறுப்பில் இருந்த பமீலாவிடம் கண்ணசைத்தார்.

“ஜாக்கிரதை..! ஆமீர் ஆட்கள் வர்றாங்க. எதுக்கு வர்றாங்கன்னு தெரியலை..! . நல்லபடியாகப் பேசி அனுப்பு. ஹொட்டலையே வெடிகுண்டு வைத்து தகர்க்கக் கூடியவங்க. பாரிஸ் வெடிகுண்டுகளே இவர்களின் கையில் இருக்கு..!”

பமீலா டென்ஷனுடன் அவர்களைப் பார்த்தாலும், முகத்தில் பெரிய புன்னகையைத் தக்க வைத்துக்கொண்டாள். ஆட்களை வழி நடத்தி அழைத்து வந்தவன், அபி என்று செல்லமாக அழைக்கப்பட்ட, ஆப்ரஹாம். அமீருக்கு வலது கை மட்டுமல்ல, மிகவும், பிரியமானவனும் கூட. மீர் நல்ல ரசனை உள்ளவன். அடியாட்களை கூட பேரழகர்களாகத்தான் தேர்ந்தெடுப்பான். ஒவ்வொருவரும், ஜேம்ஸ் பாண்ட் கணக்காக இருந்தாலும், ஒருவனுக்கும், ஈவு இரக்கம் கிடையாது.

இதே ஹோட்டலில் அபி, பால் ரூமில், நடனம் ஆடிக்கொண்டே, தனது ஜோடியை நோக்கி குனிய, அந்தப் பேரழகன் தன்னை முத்தமிடப் போகிறான், என் றுசற்று வயதான பணக்காரியான அவளும் ஆவலுடன் கண்களை மூடி அவன் முத்தத்தை ஏற்பதற்காக நிமிர, திடீரென்று அவள் கழுத்தில் ரத்தம் பிசுபிசுத்தது. அலறிக்கொண்டே சரிந்து நிலத்தில் விழுந்தாள். அபி அவளுடைய குரல்வளையில் மெல்லிய கோலம் ஒன்றை தனது கத்தியால் வரைந்திருந்தான். அதற்குப்பின் அந்தச் செல்வந்தப் பெண்மணியின் எஸ்டேட், அமீரின் ஆஸ்தியோடு இணைக்கப்பட்டது.

தனது பூனைக் கண்களால், குனிந்து அவளது மார்புப் பகுதியை ஏறிட்டான், அபி..!

“சாரி..! அங்கே பார்க்கிறேன்னு தப்பா நினைக்காதே..! உன்னோட பெயர் என்னனு பார்த்தேன். பமீலா…. இஸ் இட்..? நைஸ் நேம்! எனக்கு சில முக்கியத் தகவல்கள் வேணும்! நான் கேட்கிற தகவல்களைக் கொடுத்தேன்னா, உனக்கு நல்லது! இல்லேன்னா, என்னோட நீ பால் டான்ஸ் ஆட வேண்டி இருக்கும்..! என்னோட பால் டான்ஸ் ஆடினவங்களோட கதி என்னங்கிறது உனக்குத் தெரியும்னு நினைக்கிறேன்.” –என்றவுடன், பமீலா அரண்டு போனாள்.

ஆனாலும் முகத்தில் தேங்கியிருந்த புன்னகை மாறாமல் அவனைப் பார்த்தாள்.

“கேளுங்க மிஸ்டர் அபி..! ஜேம்ஸ்பாண்டு மாதிரி பார்க்கறதுக்கு கம்பீரமா, டேஷிங்-கா இருக்கீங்க..! எந்த பொண்ணுதான் நீங்க கேட்கிற கேள்விக்குப் பதில் சொல்லமாட்டா..?”

பமீலாவின் பதில் அபிக்குத் திருப்தி அளித்திருக்க வேண்டும். அவளைப் புன்னகைத்தபடி நோக்கினான்.

“மயூரின்னு ஒரு மலேசியன் ஏர்லைன்ஸ் ஏர் ஹோஸ்டஸ், உங்க ஹோட்டல்ல தங்கியிருக்கா. அவளோட ரூம் நம்பர் வேணும். அதோட அவளோட ரூம்ல என்ன நடந்தாலும், நீங்க கண்டுக்கக் கூடாது. ஒருவேளை, நான் அவளைக் கடத்திட்டு கூட போகலாம். உங்க ஹோட்டல் செக்யூரிட்டிக்காரங்க யாரும் கண்டுக்கக் கூடாது..!நாங்க இங்கே இருக்கறப்ப ஏதாவது பிரச்சனை வந்தது, அப்புறம் உங்க ஹோட்டல் இருக்காது.” –அபி எச்சரிக்க, பமீலா அவனைத் தயக்கத்துடன் பார்த்தாள்.

“நான் எந்த தகவல்களும் சொல்லக்கூடாது. இருந்தாலும், உங்க கிட்டே சொல்றேன். தயவுசெய்து நான் சொன்னதா யாருகிட்டேயும் சொல்ல வேண்டாம். மயூரி எப்பவும் எந்த ஹோட்டல்ல தங்கினாலும், ஆறாம் மாடியில ஆறாம் நம்பர்ல தான் தங்குவா. பீஜிங், கோலாலம்பூர் மில்லினியம் ஹொட்டேல்ல அவளுக்காக சிறப்புச் சலுகையா இதைக் கொடுத்திருக்காங்க. இப்ப அவளுக்கு ரூம் நம்பர் 600 ஒதுக்கப்பட்டு இருக்கும். ஆனால் அவ ரூம்ல இருக்காளா இல்லையா தெரியலை.” –என்றவுடன், அபி, அவளை வெறித்தான்.

“தட் ஈஸ் மை ப்ராப்ளம்..! ரூம் நம்பர் 600 ஸ்பேர் சாவி உங்ககிட்டே இருக்குமே… அதைத் தாங்க..!” –அபி கையை நீட்ட, வேறு வழியின்றி அவள் அந்தச் சாவியை எடுத்து நீட்ட, மயூரி தங்கியிருக்கிற ரூம் 600 சாவியுடன், “தேங்க்ஸ்” என்றபடி, தனது ஆட்களுடன் ஆறாவது மாடிக்கு விரைந்தான்.

அவசரமாக ஏர் ஹோஸ்டஸ் நான்சி அல்புகர்கு தங்கியிருந்த அறை எண் 440ஐ அழைத்தாள்.

“நான்சி..! மயூரி எங்கே..? ஷி ஐஸ் இன் கிரேட் டேஞ்சர்” –பமீலா பதறினாள்.

“அவளை நான் கடைசியா ஏர்போர்ட்ல தான் பார்த்தேன். எங்கே போனான்னு தெரியலை.! போன் செஞ்சு பார்த்தா, மொபைல் அணைச்சிருக்கா..! அவ ரூம்ல இல்லை. அது மட்டும் தெரியும்..!” — நான்சி கூறினாள்.

“நல்லதாப் போச்சு..! அவளுக்கு எப்படியாவது போன் பண்ணி,வார்ன் பண்ணு. அவளைக் கடத்திச் செல்ல அபி வந்திருக்கான். கொஞ்ச நாளைக்கு ஹோட்டல் பக்கமே மயூரியை வரவேண்டாம்னு சொல்லிடு. அவன் ரொம்ப ஆபத்தானவன். அவன் கையில சிக்கினா, நிச்சயம் பெட்டி உள்ள வச்சு புதைச்சுடுவான். உயிரோட இருக்காளான்னு பார்க்கக்கூட அவனுக்கு பொறுமை கிடையாது..!” — பமீலா கூற, நான்சியின் மேனி சில்லிட்டது.

“சொல்றேன்..! நீ அவங்க என்ன பேசிக்கறாங்கனு டிராக் பண்ணு..!” –நான்சி பரபரப்புடன் போனை கட் செய்தாள்.

ஜாடையாக, இன்டெர்காம் போர்டை கவனித்தாள். சரியாக அறை எண் 600 ல் இருந்து கால் ஒன்று செய்யப்பட, சட்டென்று ரிசீவரை எடுத்தாள். பொதுவாக மற்றவர்களுக்கு தெரியாமல் ரகசியமாக உரையாட வேண்டும் என்று அச்சப்படுபவர்கள்தானே, ஹோட்டல் போனில் பேசாமல் செல்போனில் எச்சரிக்கையுடன் பேசுவார்கள்..! அபிக்கு தான் யாரிடமும் பயமில்லையே..! ஹோட்டல் போனில் பேசுவதற்கு ஏன் தயங்க வேண்டும்..? அப்படியே பேச்சு விவகாரமாக மாறினாலும் அதற்காக அவன் கவலைப்படவும் போவதில்லை. அமீரின் வலதுகரம் அபியின் மீது கை வைக்க மலேசியாவில் யாருக்குத் துணிவுண்டு ?

எதிர்பக்கம் அமீர் போனை எடுக்க, அபி பேச தொடங்கினான்.

“அமீர்..! இங்கே பட்சி அறையில இல்லை. ஆனா அவ போட்டோ ஒண்ணு இருக்கு..! ஷி லூக் கார்ஜீயஸ்..! அவசியம் கொலை செய்யப்பட வேண்டியவளா..?” –அபி கேட்க, அமீர் சிரித்தான்.

“மை பாய்..! இது என்னோட ஆசை இல்லே. அவளோட குடும்பத்தோட வேண்டுகோள்..! அவ எப்படி இருந்தா என்ன..? அவ கையில் ரகசியம் ஒண்ணு இருக்கு..! குடும்ப ரகசியம்னு எஸ்பி (சரவணபெருமாள் ) சொல்றான். ஆனால், எதுவா இருந்தாலும் என்கிட்டே கொண்டு வா. நமக்கு ஏதாவது லாபம் இருக்கான்னு பாப்போம். ஒன்னும் இல்லேனா, அவன்கிட்டே அனுப்புவோம்..!” –அமீர் கூறினான்.

“பார்க்கிறேன், அமீர்..! ரூம் முழுவதும் புரட்டி போட்டு பார்த்துட்டு இருக்காங்க பையன்க..! ஒண்ணும் கிடைக்கலேனா, பறவை ஹோட்டலுக்கு வர்றப்ப, அதைத் தூக்கிட்டு வரேன்..!” –என்றபடி போனை வைத்தான், அபி.

பமீலா, உடனே அந்த உரையாடலை நான்சிக்குத் தெரிவிக்க, நான்சி தொடர்ந்து மயூரியின் செல்போனுக்கு முயன்று கொண்டே இருந்தாள்.

சைனா டவுனில் இருந்து மலைப்பிரதேசங்கள் வழியாக பத்து மலையை அடைந்தார்கள் குகன்மணி, மயூரி மற்றும், குமுதினி.

“இதுதான், சுண்ணாம்பு ஆறு. மலாய் மொழியில் ‘சுங்காய் பத்து’னு பெயர்..!” –குமுதினி கூறினாள்.

மயூரி பதில் கூறவில்லை. பத்து மலை முருகனை தரிசிக்கப் போகிறோம் என்கிற ஆவல் இருந்தாலும், தரிசனம் முடித்துவிட்டு, குகன்மணியிடம் இருந்து நழுவி, பஸ் அல்லது ரயில் மூலம், கோலாலம்பூர் சென்றுவிட வேண்டியதுதான். என்ன ஆணவம் இருந்திருந்தால், தனது வீட்டை விட்டு இவளை வெளியே விடப்போவதில்லை –என்று இவள் முன்பாகவே கூறியிருப்பான். இவளுக்கும், குகன்மணிக்கும் ஒரே விமானத்தில் பணியாற்றினோம் என்பதை தவிர, வேறு என்ன தொடர்பு..? அவன் யார் இவளை ஆட்டி வைக்க..?

தொலைவில் பத்து மலை முருகன் தங்க நிறத்தில் ஜொலித்தார்.

குகன்மணி பெருமையுடன் அந்தச் சிலையை மயூரிக்குக் காட்டினான்.

“மயூரி..! முதல் முறையா பத்துமலை முருகனைப் பார்க்கிறே..! 1890-ல தம்புசாமிப் பிள்ளைன்னு ஒருத்தரு கோலாலம்பூரில் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலைக் கட்டினார். 1891-ல பத்துமலை-ல இந்த சிலையைப் பிரதிஷ்டை செஞ்சாரு ! இந்த சிலை 140 அடி..! இந்த சிலையை வடிக்க மூணு வருஷம் ஆச்சு. 1920-ல குகைக் கோயிலுக்கு போக, மரக் கட்டைகளால 272 படிக்கட்டுகள் கட்டப்பட்டன. குகைக் கோயில் 100 மீட்டர் உயரத்தில இருக்கு !. உலகிலேயே உயரமான முருகன் சிலை இதுதான் தெரியுமா ! . இதோட கட்டுமானச் செலவு 25 இலட்சம் மலேசிய ரிங்கிட்.! 2006-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இதுக்குக் கும்பாபிஷேகம் செஞ்சாங்க. அப்ப எனக்கு வயசு 13. இந்தச் சிலைக்கு 15 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான சாமந்திப் பூ மாலை சூட்டப்பட்டது. அந்த மாலை மட்டும் சுமார் ஒரு டன் எடை. அதனால், பளு தூக்கும் இயந்திரத்தை வச்சு முருகனுக்கு மாலை அணிவிக்கப்பட்டது.” –குகன்மணி பெருமையுடன் கூறினான்.

மயூரி, முருகன் சிலையை பரவசத்துடன் பார்த்தாலும், அடிமனதில் குகன்மணியின் வாயால் அவனது பெருமைகளைக் கேட்கிறோமே என்கிற எரிச்சலும் மண்டிக்கிடந்தது. முருகனைப் பற்றி பேசும்போது நன்றாகத்தான் பேசுகிறான். மற்ற சமயங்களில் இவளிடம் இடக்கு மடக்காக பேசும்போதுதான் இவளுக்கு அவன் மீது ஆத்திரம் வருகிறது.

“முதலாளி ரொம்பத் தன்னடக்கமா பேசறாரு. பத்துமலையில நடந்த எல்லா கைங்கர்யத்திலும், முதல்ல நின்னது, இவரோட குடும்பம்தான். அதைச் சொல்ல மாட்டார். ஹெலிகாப்டர் ஒண்ணை வாடகைக்கு எடுத்து இவரு குடும்பம், முருகன் சிலையைச் சுத்தி பறந்து பூவைத் தூவினாங்க. அதுக்கப்புறம்தான், முதலாளிக்கு விமானி ஆகணும்னு ஆசையே வந்தது.” –குமுதினி கூற, முருகனின் சிலையை கண்கள் குளிர கண்டபடி, அவர்களுடன் நடந்தாள், மயூரி.

சரியாக செல்போன் அடிக்க, எடுத்துப் பேசினாள். எதிர்ப்பக்கம் நான்சிதான் கலவரத்துடன் பேசினாள்.

“மயூரி..! வேர் தி ஹெல் யு ஆர்..? இங்கே ஒரே கலாட்டா..! உன்னைத் தேடி அமீரோட ஆளுங்க ஹோட்டலுக்கு வந்திருந்தாங்க. அவங்க பேசறதைப் பார்த்தா உன்னைக் கடத்திக் கொண்டு போக வந்திருக்காங்கன்னு தெரியுது..!” –நான்சி கூற, திகைத்தாள் மயூரி.

“அது யாரு அமீர், அபி..? நான் அவங்களை பத்தி கேள்விப்பட்டதில்லையே!” –மயூரி கூற, அருகே நின்றிருந்த குகன்மணியின் முகம் இறுகியது.

நான்சி தொடர்ந்தாள்.

“அமீர் பயங்கர அண்டர்வேர்ல்ட் டான். அபி அவனோட ரெயிட் ஹாண்ட். கொலை பாதகத்துக்கு அஞ்ச மாட்டான். ஆளு பார்க்க ஷோக்கா இருப்பான். கிட்டே போனா, நீ செத்தே..!” –நான்சியின் குரல் நடுங்கியது.

“அவங்க எதுக்கு என்னைத் தேடறாங்க..?” –மயூரி குழம்பினாள்.

“கந்தசஷ்டி கவசம் கத்துக்கவா தேடப் போறாங்க..? உன்னைக் கொலை செய்யறதுக்குத்தான்..” –நான்சி கூறியதும் அதிர்ந்தாள்.

“கொலையா..? என்னைக் கொலை செஞ்சு அவங்களுக்கு என்ன ஆகப் போறது..?”

”அதைத்தான் நான் ரிசப்ஷனிஸ்ட் பமீலா கிட்டே கேட்டேன். அவள் அமீருக்கும் அபிக்கும் நடந்த உரையாடலையே கேட்டிருக்கா..! அமீர் சொல்றதை பார்த்தா, உன்கிட்டே எதோ ரகசியம் இருக்காம். அதைப் பறிக்கத்தான் உன்னைத் தேடறாங்க. அதுக்கு பிறகு…. எப்படிச் சொல்றதுன்னு தெரியலை…” நான்சி இழுக்க, மயூரி மூச்சை இழுத்துப் பிடித்தாள் .

“தைரியமாச் சொல்லு..!” –மயூரி கூற, நான்சி தொடர்ந்தாள்.

“உன்னைக் கொலை செய்யச் சொல்லி, அமீர் கிட்ட கோரிக்கை விட்டிருக்கிறதே, உன்னோட குடும்பம்தானாம்.” — நான்சி சொல்ல, அந்த அதிர்ச்சியில், அவள் கை விரல்கள் மரத்துப் போய், செல்போன் கீழே விழுந்தது.

‘இப்போ தெரியுதா..? உன்னை என்னோட வீட்டுக் காவலில் இருந்து ஏன் வெளியே விட மாட்டேன்னு சொன்னேன்னு..?’ –என்பது போன்று மயூரியையே வெறித்து பார்த்தான், குகன்மணி.

மயூரியின் கண்கள் அவன் பார்வையில் சிக்கிக்கொண்டன. இவளுக்குப் பிரச்சனை என்று தெரிந்துதான், விமான நிலையத்திற்கே வந்து இவளை அழைத்துச் சென்றிருக்கிறான் குகன்மணி..! இவளைத் தீர்த்துக் கட்ட இவளது குடும்பமே சதி செய்கிறது என்பதை மயூரியால் நம்ப முடியவில்லை. இவளே எதிர்பார்த்திராத அந்தத் விஷயத்தை, முன்பின் இவள் குடும்பத்தினரையே பார்த்திராத குகன்மணி எப்படி யூகித்தான்..?

இவளையே அவன் சுற்றி வருவதற்கு காரணமே இவளை காப்பாற்றதானா..? இருப்பினும், அவன் எதிரே தனது குடும்பத்தினரைத் தானே சந்தேகிக்க கூடாது என்கிற தீர்மானத்துடன் அமைதியாக நின்றாள்.

“குமுதினி..! நீ போய் பூஜை சாமான்களை வாங்கி வா..!” –குகன்மணி கூற, அவள் அகன்றாள்.

“இப்பப் புரியுதா மயூரி நீ எவ்வளவு பெரிய ஆபத்துல இருக்கேன்னு..? அந்தச் சுவடி வாங்கவா நான் உன்னைத் தேடி வந்தேன்..? அந்தச் சுவடில இருக்கிற வாசகங்க முழுக்க எனக்கு தெரியும். உன்னை என்னோட கஸ்டடிக்குக் கொண்டு வரத்தான் அந்தச் சுவடி நாடகம் எல்லாம். விமானத்துல உன் மடியில சுவடியை போட்டது, என்னோட மேனேஜர் தான்.

மூல தலைச்சன் பாலனுக்கு மாங்கனியே காப்பு!

ஜால இடைச்சான் குட்டனுக்கு ஆழ்குழியே காப்பு

கோல கடைச்சன் வித்தனுக்கு சுண்ணமே காப்பு

தகையோன் வந்து நிற்க, மெய்யே காப்பு

இதைத்தானே அந்த ஓலை குறிப்பிடறது..? நான் உனக்கு அனுப்பின ஓலையை என்கிட்டே இருந்து மறைக்க பாவம், நீ ரொம்பவே சிரமப்பட்டிருக்கே..! உன் குடும்பத்தினர் அழிவை நோக்கி வேகமாப் போறாங்க. நவ பாஷாணம் மேல இருக்கிற வெறியில, உன்னைக் காவு கொடுக்கவும் அவங்க தயாராகிட்டாங்க. அந்த அமீர் ரொம்ப பயங்கரமானவன். இன்டர்நேஷனல் அண்டர்வேர்ல்ட் தொடர்பு உள்ளவன். அவன் கொலை செஞ்சா, லோக்கல் போலீஸ்கூடக் கண்டுக்காது. அவன் உன்னைக் குறி வச்சிருக்கான்னா.. நீ கோலாலம்பூர் போகவே கூடாது. இப்போதைக்கு நீ என்னோட கஸ்டடியில் இருக்கிறதுதான் நல்லது.” — குகன்மணி சொன்னான்.

சற்று நேரம் அமைதி காத்த மயூரி, குகன்மணியை கேள்வியுடன் பார்த்தாள்.

“குகன்மணி..! நீங்க ஒரு புரியாத புதிரா இருக்கீங்க..! என்னைப் பத்தி இவ்வளவு அக்கறை எடுத்துக்கறீங்க..! சினிமா ஹீரோக்கள் கூட, வந்தபின் தான் காக்க ஓடிவருவங்க.! நீங்கள் வருமுன்னரே காக்கறீங்களே. எனக்கு ஆபத்துனு உங்களுக்கு எப்படித் தெரியும்..? எனக்கு நீங்க குகன்மணியாத் தெரியலை. அபாய மணியாத்தான் தெரியறீங்க. உண்மையிலேயே நீங்க யாரு..? எதுக்காக என்னைத் துரத்திக்கிட்டு இருக்கீங்க..?” –மயூரி கேட்டாள்.

“உன் கண்ணுக்கு நான் அபாய மணியா தெரியறேன்னு சொல்றே. அபாயத்துல ஒரு கால் எடுத்தால் என்ன கிடைக்குமா, அதை கொடுக்கத்தான் நான் உன்னைத் துரத்திக்கிட்டு இருக்கேன்.” –என்றான், குகன்.

மயூரி இயற்கையிலேயே மிகவும் சாமர்த்தியம் நிறைந்தவள்தான். ஆனால் தனது குடும்பத்தினர் தன்னைத் தீர்த்து கட்டுவதற்கு, மலேசிய கூலிப்படையை அணுகி உள்ளனர் என்கிற அதிர்ச்சியால், சிந்திக்கும் ஆற்றலை இழந்திருந்தாள். சற்றே யோசித்துப் பார்த்திருந்தால், அபாயம் என்கிற சொல்லில் இருந்து காலை நீக்கியிருந்தால், அபயம் என்கிற சொல் வருகிறது என்றும், அதனை அளிக்கத்தான், குகன்மணி தன்னை விரட்டிக்கொண்டிருக்கிறான் என்பதையும் உணர்ந்து கொண்டிருப்பாள்.

–தொடரும்…

ganesh

2 Comments

  • Super

  • ♥️♥️♥️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...