தீபாவளிக்கு ‘அண்ணாத்த’ உடன் மோதும் ‘எனிமி’

விஷால் – ஆர்யா கூட்டணியில் உருவாகியுள்ள அதிரடி ஆக்சன் திரைப்படம் ‘எனிமி’. இந்தப் படத்தை அரிமா நம்பி, இருமுகன், நோட்டா உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்குகிறார். மினி ஸ்டூடியோஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் S வினோத்குமார் தயாரிக்கிறார். கதாநாயகியாக மிர்ணாளினி ரவி நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் பிரகாஷ் ராஜ், மம்தா மோகன்தாஸ், தம்பி ராமையா, கருணாகரன், மாளவிகா அவினாஷ் ஆகியோர் நடிக்கிறார்கள். தமன் பாடல்களுக்கு இசையமைக்கிறார். படத்திற்கான பின்னணி இசையை சாம் C.S. இசையமைக்கிறார் R.D. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். சண்டைக்காட்சிகள் – ரவிவர்மா. படத்தொகுப்பினை ரெய்மான்ட் டெரிக் க்ரஸ்ட்டா மேற்கொள்கிறார். எனிமி படத்தின் டீசர், ட்ரைலர், பாடல்கள் ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் தீபாவளிக்குத் திரைக்கு வருகிறது.

நடிகர் விஷால் பேசியவை,

“நான் முதலில் தயாரிப்பாளர் வினோத்குமார் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். மிகப்பெரிய பலம் அவர்தான். அவர் நினைத்திருந்தால் இப்படத்தை OTTயில் வெளியிட்டு அதிக லாபத்தை பார்த்தீர்களாம். திரையரங்கில் மக்கள் ரசிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக இப்படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்கிறார். இயக்குநர் ஆனந்த் ஷங்கருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆர்யா ஒரு ஜாலியான மனிதர். கடின உழைப்பாளி. படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சியில் ஒரு பாக்ஸர் போல உண்மையாகவே என்னை  அடித்துவிட்டார். அடுத்து அவருடன் நான் எப்போது படம் நடிப்பேன் என ஆவலாக உள்ளேன்” என்றார்.

நடிகர் ஆர்யா பேசியவை,

“இப்படத்தைப் பற்றி என்னிடம் முதலிடம் கூறியவர் விஷால். கதையைக் கேட்கும்படி சொன்னார். நானும் கதையைக் கேட்கிறேன் என்று சொன்னேன். கேட்டவுடன் இரண்டு கதாபாத்திரங்களும் எனக்கு மிகவும் பிடித்துப் போனது. எந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பது  என்று ஒரு குழப்பம் நிலவியது. படத்தில் எனக்காகச் சிறப்பு காட்சிகளும் மாஸ் காட்சிகளும் அதிகமாக  வைக்கச் சொல்லி விஷால் கூறியுள்ளார். வேறு யாரும் இப்படிச் சொல்வார்களா என்று எனக்குத் தெரியவில்லை. நன்றி. க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சிகளை நானும் விஷாலும் பார்த்தோம். இப்படி ஒரு காட்சி இனி எங்களால் மீண்டும் நடிக்க  முடியுமா என்று தெரியவில்லை. அந்த அளவுக்கு பிரம்மாண்டமாக இருக்கிறது. இப்படத்தின் தயாரிப்பாளர் வினோத்குமார் மிகப்பெரிய பலம். இப்படத்தின் காட்சிகள் சிங்கப் பூரில் எடுக்க வேண்டியிருந்தது. கொரோனா காரணமாக எடுக்க முடியவில்லை. அதனால் துபாயில் படத்தை எடுக்க முடிவு செய்தார். துபாயில் எடுத்தால் மூன்று மடங்கு செலவாகும் எனத் தெரிந்தும் எடுக்க முன்வந்தார். தீபாவளிக்கு ரஜினி சாரின் படத்துடன் இப்படம் வெளியாகிறது. கண்டிப்பாக அனைவரும் திரையரங் குகளில் படத்தைப் பாருங்கள்’ என்றார்.

இயக்குனர் ஆனந்த் சங்கர் பேசியவை,

“எனது முந்தைய இரு படங்களைவிட இப்படத்தில் புதிய மாற்றத்தை உணர்வீர்கள். கண்டிப்பாக இந்தப் பாராட்டு ஷான் அவர்களுக்கு  போய்ச் சேரும். நடிகை மிர்ணாளினி ரவி இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். அவர் டிக் டாக் வீடியோக்கள் நிறையவே பார்த்து ரசித்து இருக்கிறோம். அவரால் கண்டிப்பாக நடிக்க முடியும் என்று நம்பி படத்தில் நடிக்க வைத்திருக்கிறோம். இப்படம் சுலபமாகத் தற்போது வெளியேறுவதற்குக் காரணம் தயாரிப்பாளர் வினோத். மிகப் பெரிய சப்போர்ட்டாக இருந்தார். அவர் இல்லை என்றால் இது சாத்தியம் இல்லை. விஷால் சாருக்கு ஆக்சன் அதிக காட்சிகள் வைக்க வேண்டும் என்று பலர் கேட்டுக்கொண்டதால் அவருக்காகச் சில சிறப்பு ஆக் ஷன் காட்சிகளைப் படத்தில் வைத்துள்ளோம். ஆர்யா கடின உழைப்பாளி. மிகவும் எனர்ஜியான நடிகர். இப்படத்தின் ஒளிப்பதிவாளர் RD சார் ஒளிப்பதிவுக்காக  தனி பாராட்டைப் பெறுவார். தீபாவளிக்கு அண்ணாத்த படத்துடன் இப்படம் வெளியாகிறது. கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும் என நம்புகிறோம்” என்றார்.

தயாரிப்பாளர் வினோத்குமார் பேசியவை,

“என் திரையுலக வாழ்க்கையில் நான் தனுஷ் சாருக்கு கடமைப்பட்டுள்ளேன். அவருக்கு எனது முதல் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை நம்பி முழுமையாக ஒரு தயாரிப்பு நிறுவனத்தை ஒப்படைத்தார். அதன் மூலம் 14 படங்களைத்  தயாரித்து, தயாரிப்பு மேற்பார்வை ஆகியவற்றை முழுமையாகக் கற்றுக் கொண்டேன். அடுத்ததாக இப்படத்தில் நாயகனாக நடிக்க ஒப்புக்கொண்ட விஷால், ஆர்யாவுக்கும் இயக்க முன்வந்த ஆனந்த் சங்கருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் அதிக செலவில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கான ரிசல்ட் இப்படத்தின்  வெளியீட்டில் தெரியும் என நினைக்கிறேன். அனைவரது ஆதரவும் தேவை நன்றி.” என்றார்.

நடிகை மிருணாளினி ரவி பேசியவை,

“எனது திரையுலகப் பயணத்தில் தொடக்கக் காலத்திலேயே இப்படி ஒரு மிகப் பெரிய படம் கிடைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. என் மேல் நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்த ஆனந்த் ஷங்கர் அவர்களுக்கும் தயாரிப்பாளர் வினோத்துக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். விஷால் சார் அனுபவம் வாய்ந்த மிகப் பெரிய நடிகர். எனக்குக் கூச்சமாகப் பயமாக தான் இருந்தது. ஆனால் எளிய மனிதரைப் போல் என்னிடம் பழகினார். ஆர்யா சாருடன் இணைந்து நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. எதிர்காலத்தில் நடிப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.  தீபாவளிக்கு இப்படம் வெளியாவது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.” என்றார்

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...