எ.வீ.ரோ.உ.வீ.ஜ. | 7 | இந்துமதி

 எ.வீ.ரோ.உ.வீ.ஜ. | 7 | இந்துமதி

7

காபலிபுரம் எல்லையைத் தொட்டதும் காரின் வேகத்தைக் குறைத்த சித்ரா, மதுவைத் திரும்பிப் பார்த்துக் கேட்டாள்,

“இப்போ எங்கே போகப் போறாம்…?”

தனியார் கெஸ்ட் ஹவுஸ் ஒன்றின் பெயரைச் சொன்னான் மது.

“அங்கேயா புக் பண்ணியிருக்கீங்க…?”

சித்ராவின் கண் விரிப்பையும், ஆச்சரியத்தையும் பார்த்த மது சற்று தயங்கினாள்,

“ஏன் கேட்கறீங்க..? கெஸ்ட்ஹவுஸ் வேணாமா..?”

“நோ…நோ… இதுவரை நான் அந்த கெஸ்ட் ஹவுஸுக்குப் போனதே இல்லை. ரொம்ப அழகாக இருக்கும். ரொம்பப் பெரிய பணக்காரங்க, அதாவது கோடீஸ்வரங்க தங்கற இடம், ஒருநாள் வாடகையே மூவாயிரம் ரூபாய்ன்னெல்லாம் கேள்விப்பட்டிருக்கேன்.”

“இதையெல்லாம் யார் உனக்குச் சொன்னாங்க சித்ரா..?” ஷைலஜா கேட்டாள்.

“எங்க அப்பா. அவர் அடிக்கடி போவார். அவருக்கு கமலான்னு ஒரு கேர்ள் பிரெண்ட். அவகூட கிளம்பி வீக் எண்ட்டிற்குப் போய் அங்கதான் தங்கிவிட்டு வருவார்.”

“என்னது…? அப்பாவிற்கு கேர்ள் பிரெண்டா..?” அதிர்ந்து போனாள் ஷைலஜா.

“அதுக்கு ஏண்டி இப்படி அலர்ற…?” அமைதியாகவே கேட்டாள் சித்ரா,

அதுவரை அவர்கள் பேச்சில் தலையிடாமல் இருந்த மது, மெதுவாகக் குறுக்கிட்டான்.

“ஏன் கேர்ள் பிரெண்ட்டுன்னு சொல்றீங்க… பிரெண்டுன்னு அழகாகச் சொல்லலாம் இல்ல…”

“நோ. கேர்ள் பிரெண்ட் தான். வெறும் பிரெண்டாக இருந்தால், கமலான்னு ஒரு பிரெண்டுன்னு சொல்லியிருக்க மாட்டேனா மது… பிரெண்ட்டுன்னு சொல்றதுக்கும் கேர்ள் பிரெண்ட்டுன்னு சொல்றதுக்கும் உள்ள வித்தியாசம் உங்களுக்குப் புரியும்னு நினைக்கிறேன்.”

“எனக்கும் புரியறதுடீ… புரியாமல் இல்லை. ஆனால் இத்தனை சர்வ சாதாரணமாக அப்பாவோட கேர்ள் பிரெண்ட்டுன்னு சொல்ற… அதுதான் ஆச்சரியமா இருக்கு…”

“சாதாரணமாகம் சொல்லாமல் அசாதாரணமாகச் சொல்ல என்ன இருக்கு..? சாதாரணமாகிப் போன விஷயத்தைச் சாதாரணமாகத்தானே சொல்லணும்..?”

“உங்க வீட்ல எல்லாருக்கும் தெரியுமா..?”

“ஓ.எஸ், எங்க வீட்டு நாய்க்குட்டிக்கும் கூடத் தெரியும். கமலா வந்தால் அது மேல விழுந்து புரண்டு செல்லம் கொஞ்சும்.”

“உங்கப்பா மாதிரியா…?” என்று குறும்பாகக் கேட்க நினைத்து, கேட்காமல் சிரித்துக் கொண்டான் மது.

அவனது சிரிப்பை ரிவர் வியூ மிரரில் பார்த்த சித்ராவும் புன்னகையோடு கேட்டாள், “என்ன மது சிரிக்கறீங்க..? எங்கப்பாவும் நாய்க்குட்டியும் ஒண்ணுதான்னு நினைச்சுக்கிட்டீங்களா…?”

தூக்கி வாரிப் போட்டது அவனுக்கு. ‘யம்மாடி…. இந்தப் பெண் ஷைலஜா மாதிரி சாது இல்லை, கம்பி மத்தாப்பு இல்லை. சுறுசுறு வர்த்தி, மனசுக்குள்ள இருப்பதையெல்லாம் கொக்கி போட்டு வெளியில் கொண்டு வந்துவிடுகிறது; எக்ஸ்ரே கூட இல்லை. அதைவிட இன்னும் ஒருபடி மேலே போய் ஸ்கான் பண்ணிப் பார்த்து விடுகிறது. இதனிடம் ஜாக்கிரதையாகப் பழக வேண்டும்…’

மதுசூதனன் நினைத்துக் கொண்டிருக்கும்போதே, சித்ரா மீண்டும் கேட்டாள்.

“என்ன பேசாமல் இருக்கீங்க..? நான் நினைச்சது சரிதானா…?”

“உங்க புத்திசாலித்தனம் என்னைப் பயமுறுத்தறது.”

“ஐயோ.. பயப்படற ஆளைப் பாரு…” என்று வாய்விட்டுச் சிரித்ததும் ஷைலஜா குறுக்கிட்டாள்.

“ம். நாம் இப்போ சீரியஸாப் பேசிக்கிட்டிருக்கோம்டி. இது நடுவுல சிரிப்பு எதுக்கு..?”

“அப்படி என்ன நாம் சீரியஸாப் பேசிக்கிட்டிருந்தோம்..? ஓ… எங்க அப்பாவோட கேர்ள் பிரெண்ட் பத்தியா..? அதுல ஸீரியஸ்நெஸ் என்ன இருக்கு ஷைலு..? எங்கப்பா பெரிய பிசினஸ் மேன். நல்ல இன்டலெக்சுவல. ஹையர் சர்க்கிளோட பழகறவர். அடிக்கடி அமெரிக்கா, ஹீலண்ட், ஜெர்மனி, லண்டன்னு போறவர். அவரோட வேவ் லென்த்துக்கு எங்கம்மா சரிப்பட்டு வரலை. அவருடைய லெவல் ஆஃப் திங்க்கிங் வேற. எங்கம்மாவுடையது வேற. அதனால் அப்பாவுக்கு அவருடைய எண்ணங்களையும், கருத்துக்களையும் பகிர்ந்துக்க ஒரு ஆள் தேவைப்பட்டது. துணை தேவைப்பட்டது. எப்போதுமே ஆப்போஸிட் செக்ஸுக்கு அட்ராக்ஷன் அதிகம். ஆணுக்குப் பெண் கிட்டேயும், பெண்ணுக்கு ஆண் கிட்டேயும் ஏற்படுகிற ஈர்ப்பு அதிகம். இண்டலெக்சுவல் லெவல்லகூட இந்த ஈர்ப்பு ஜெயிக்கிறதைப் பார்க்கலாம். பாலசந்தர் ஒரு படம் எடுத்தாரே சிந்து பைரவின்னு… அதனுடைய சக்ஸஸுக்கு எது காரணம்னு நினைக்கிற?மனுஷனுடைய அடிமனசு. உள்ளுக்குள் ஆழத்தில் கிடக்கிற உணர்வுகள். உதாரணத்துக்கு ஒண்ணு சொல்லட்டுமா..? மது இப்போ உன்னைக் காதலிக்கிறார். உயிருக்கு உயிராக நேசிக்கிறார். கல்யாணமும் பண்ணிக்கப் போறார், இதெல்லாம் நிஜம். வாஸ்தவம். ஆனால் அதே சமயத்துல இவர் இன்னொரு பெண்ணைச் சத்திக்கறார்னு வச்சிக்க. அவளும் ஒரு சிவில் என்ஜினியர், ஆர்க்கிடெக்ட் இல்லைன்னால் அது சம்பந்தமாக ஆர்வம் உள்ளவள். அதுவும் இல்லைன்னால பொதுவாக இவருடைய ரசனையும் அவளுடைய ரசனையும், இவருடைய இன்ட்ரஸ்ட்டும், அவளுடைய இன்ட்ரஸ்ட்டும் ஒண்ணாக இருக்குன்னு வச்சிக்க. அவளும் இவரை மாதிரி வெள்ளை வெளேர்ன்னு பார்க்க அழகா, புத்திசாலியா இவருடைய அழகுக்கு ஏற்ற மாதிரி இருக்கான்னு வச்சிக்க. இவர் அவளால ஈர்க்கப்படுவாரா, மாட்டாரா… இவருடைய மனசு கொஞ்சம் கொஞ்சமா அவள் பக்கம் திரும்புமா, திரும்பாதா..?”

“ஏய்.. என்னடி சொல்ற…?” என்று கோபமும் தவிப்புமாக ஷைலஜா பதற, பதட்டமோ, தவிப்போ, கோபமோ இன்றி புன்னகையோடு குறுக்கிட்டான் மது.

“நாம பேசிட்டிருந்தது உங்க அப்பாவைப் பற்றி. அதுக்கு நடுவுல என்னை என் இழுக்கறீங்க..?”

“வெல், எங்க அப்பாவோட கேர்ள் பிரெண்டைப் பற்றி பேச நாம் இங்க வரல. சந்தோஷமாக இருக்க வந்தோம். இந்த நாளை அழகாக என்ஜாய் பண்ண வந்தோம், அதை விட்டுட்டு எதுக்காக இந்தப் பேச்செல்லாம்..? ஸோ, லெட் அஸ் என்ஜாய் தி டே. அந்த கெஸ்ட் ஹவுஸுக்கு எப்படிப் போகனும்..? சொல்லுங்க மது..”

“ஓகே” என்றவாறு வழிகாட்டினான் மது.

அதற்குப் பின் காருக்குள் யாரும் பேசாத அசாதாரண அமைதி நிலவிற்று. தனித்தனியாக மூன்று பேருமே மூன்றுவித எண்ணங்களில் அமிழ்ந்தனர்.

ஷைலஜா :- ‘எய் சித்ரூ… நீ எதுக்காக அதெல்லாம் பேசினேன்னு தெரியுது. எங்க வர்றேன்னு எனக்குப் புரியுது. மெதுவாகத் தூண்டில் வீசிப் பார்க்கற. உன் தூண்டில்ல மாட்டிக்கிறதுக்கு அவர் ஒன்றும் வாயைத் திறந்து வச்சிட்டிருக்கிற மீன் இல்லை…’

மதுசூதனன்:- ‘இந்த சித்ரா எத்தனை வித்தியாசமான பெண்ணாக இருக்கிறாள்! பரந்த மனதுடன் ஆழமாகச் சிந்திக்கிறாள். எவ்வளவு பெரிய விஷயத்தையும் அதன் போக்கில் சுலபமாக எடுத்துக்கொள்கிறாள். பெரிய குடும்பத்துப் பெண்ணாக இருக்க வேண்டும். பரம்பரைப் பணக்காரர்களாக இருக்க வேண்டும். அதிகம் படித்தவர்களாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட குடும்பத்திலிருந்து வந்த காரணத்தினால் தான் இந்தப் பெண்ணிற்கு இப்படிப்பட்ட மனது வந்திருக்கிறது. இத்தனை தெளிவான எண்ணங்களும், புரிந்துகொள்ளும் தன்மையும் இருக்கிறது. ஒரு சாதாரண நடுத்தர வர்க்கத்துப் பெண்ணாக இருந்தால் இந்த மாதிரி இருந்திருக்கமாட்டாள், பொறாமை, பயம், இயலாமை, துணிவின்மை இத்தனையாலும் அழுத்தப்பட்டிருப்பாள். ஷைலஜா மாதிரி நான்கு பேரின் எட்டு கண்களுக்கும், நாக்கிற்கும் பயந்து செத்துக் கொண்டிருப்பாள். அப்பா, அம்மா, கூடப்பிறந்தவர்கள், வீடு, சுற்றம், தெரு எல்லாருக்கும் அடங்கி, எல்லாவற்றிற்கும் அடங்கி, மனதுகூட சின்னதாகி குறுகிப் போயிருக்கும். சுதந்திரமான ஒரு பெண்ணால்தான், ஆண்களிடம் சகஜமாகத் தோழமை உணர்வுடன் பழக முடிந்த பெண்ணால் தான் இந்த மாதிரி யோசிக்க முடியும். அப்பாவின் கேர்ள் பிரெண்ட் பற்றி வெளியில் சொல்ல முடியும். விவாதிக்க முடியும். இல்லாவிட்டால் அப்பாவைப் பற்றி குறை சொல்லியிருக்கும். குற்றம் பேசியிருக்கும். அந்தப் பெண்ணைத் தூற்றியிருக்கும். தரக்குறைவாகப் பேசியிருக்கும், அழுது, மற்றவர்களின் அனுதாபத்தைப் பெற முயற்சித்திருக்கும். ஒரு சாதாரண குடும்பத்துப் பெண் இதைதான் செய்வாள். ஒரு ஆணோ அல்லது பெண்ணோ குடும்பம், வளர்கின்ற சூழ்நிலை, பழகுகின்ற மனிதர்கள், படிக்கின்ற படிப்பு இவற்றினால் தான் உருவாகிறார்களே தவிர வேறு எதனாலும் இல்லை…’

சித்ரா :- ‘இந்த மது எத்தனை நல்லவராக இருக்கிறார். மென்மையாக இதமாகப் பேசுகிறார். இந்திப் பட ஹீரோ மாதிரி நல்ல நிறமாக அழகாக இருக்கிறார். புடவைக்கு அப்பால் பார்க்கிற பார்வை இல்லாமல் கண்ணியமான மனிதராகத் தெரிகிறார். நிஜமாகவே ஷைலஜா கொடுத்துவைத்தவள் தான்.’

கடைசியாக அவள் ஆழமாகப் பெருமூச்சு விட்டபோது மது சொன்னான்.

“இது தான் கெஸ்ட் ஹவுஸ். உள்ளே போங்கள்…”

–தொடரும்…

ganesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...