எ.வீ.ரோ.உ.வீ.ஜ. | 5 | இந்துமதி
அன்று காலை ஆறு மணிக்கெல்லாம் எழுந்து கீழே இறங்கி வந்த மதுவைப் பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டாள் ருக்மிணியம்மாள். அவன் அத்தனை சீக்கிரம் எழுந்து அந்த அம்மாள் பார்த்ததே இல்லை. தினமும் அவனை எழுப்புவதற்கு சிரமப்படுவாள். மாடிப்படியருகில் நின்று குரல் கொடுத்துச் சலித்துப் போவாள்.
“மது… மணி ஏழாச்சுப்பா…”
“எட்டரையாகப் போறது. எழுந்திருப்பா…” என்று அரை மணி நேரத்திற்கு ஒரு முறை கத்தி ஓய்ந்து போவாள். மாடியேற முடியாததால் அவனை எழுப்புவது பெரும்பாடாகப் போகும். அவனும் அத்தனை சுலபத்தில் எழுந்துவிடமாட்டான்.
“இதோம்மா…” என்பான்.
“இன்னும் ஐந்தே நிமிஷத்தில் எழுந்துடறேம்மா…”
இப்படிக் கெஞ்சி ஒன்பது மணி வரை தூங்கி அதன்பின் பரபரத்து அவசரமாகக் குளித்து, அவசரமாகச் சாப்பிட்டு, அவசரமாக ஓடுவான். அப்படிப்பட்டவன் ஆறு மணிக்கெல்லாம் எழுந்து, அதுவும் யாரும் எழுப்பாமல் எழுந்து கீழே இறங்கி வந்தது அவளை ஆச்சரியப்படுத்திற்று. தன் ஆச்சரியத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் கேட்டும் விட்டாள்.
“என்னப்பா… இன்னிக்குப் புதுக் கட்டிடம் எதுக்காவது பூஜை போடறியா என்ன…? இத்தனை சீக்கிரம் எழுந்துட்ட..?” என்றவள் தனக்குள் சொல்லிக்கொள்கிற மாதிரி தொடர்ந்தாள், “இருக்காதே… இன்னிக்கு சனிக்கிழமையாச்சே… அதுவும் மார்கழி மாசம். பூமி பூஜை எதுவும் செய்ய மாட்டாயே…”
“பூஜையல்லாம் ஒண்ணுமில்லேம்மா…. நான் மகாபலிபுரம் போறேன்.”
“என்னப்பா விசேஷம்? அங்க ஏதாவது நிலம் வாங்கறியா..?”
“ம்ஹூம். இல்லம்மா…” என்றவன் ஒரு வினாடி யோசித்தான். அம்மாவிடம் எல்லாவற்றையும் சொல்லிவிடலாமா என்று நினைத்தான். ஷைலஜாவைப் பற்றி, அவளது வீட்டைப் பற்றி, அவளைக் காதலிப்பது பற்றி…..
அம்மாவிற்கு நிச்சயமாக ஷைலஜாவைப் பிடிக்கும். அவளது அமைதியான, அடக்கமான அழகு பிடிக்கும். எளிமை பிடிக்கும். மென்மையான பேச்சு பிடிக்கும். மருண்ட பார்வை பிடிக்கும். வெள்ளை வெளேர் என்று பளிங்குச் சிலை போன்ற கவர்ச்சிகரமான பெண்ணில்லை ஷைலஜா. கதைகளில் வருகின்ற கதாநாயகிகளைப் போன்று தந்த பொம்மையில்லை. மருட்டுகிற அழகில்லை, மாநிறமான அழகு. அமைதியான, அடக்கமான அழகு – குடும்பத்திற்கு ஏற்ற அழகு. அதனால் அவளை ஏற்றுக் கொள்வதில் அம்மாவிற்கு எந்தவிதத் தயக்கமும் இருக்காது. சங்கடம் இருக்காது.
“என்ன மது பேசாமல் இருக்க….? நிஜமாகவே நிலம் தான் வாங்கப் போறியா..?” சட்டென்று அவனைக் கலைத்தாள் அம்மா.
“இல்லம்மா…” என்று மீண்டும் தலையாட்டியவன், ஷைலஜாவைப் பற்றி அப்போது சொல்ல வேண்டாம் என்கிற முடிவிற்கு வந்தான். சொன்னால் நேரமாகும். அம்மா கேள்வி மேல் கேள்வி கேட்பாள். ஆதி முதல் விவரம் கேட்பாள். அப்போதே அவளைப் பார்க்க வேண்டுமென்பாள். அது ஷைலஜாவிற்குத் தொந்தரவாக முடியும். அவள் சொன்ன மாதிரி அவளது படிப்பு முடிகிற வரை காத்திருக்க வேண்டியது தான். வேறு வழி இல்லை.
அந்த முடிவில் மெல்ல நிமிர்ந்து அம்மாவைப் பார்த்தான்.
“நிலம் வாங்கப் போகலைம்மா. கொஞ்சம் ரிலாக்ஸ்ஸாக இருக்கலாம்னு ஒரு பிரெண்ட் கூடப் போறேன்.”
“பிரெண்டுன்னா… ஆணா, பெண்ணா” அம்மா சிரித்துக் கொண்டே கேட்டாள்.
“பிரெண்டுன்னா பிரெண்டுதாம்மா…” என்று அவனும் சிரித்தான்.
“காபி தாம்மா. குடிச்சிட்டு, குளிச்சு, டிரஸ் பண்ணிட்டு கிளம்பணும். ஒன்பது மணிக்கெல்லாம் காலேஜ் வாசல்ல இருக்கணும்.”
“காலேஜ் வாசலா….?”
“ஆ…. அது வந்து ஸ்டெல்லா மாரிஸ் வாசலம்மா, அவன் அண்ணா நகர்லேருந்து வரணும். இங்கே வந்து இங்கிருந்து திரும்பிப் போய் நேரமாகும்னு ஸ்டெல்லா மாரீஸ் வாசல்ல நிக்கறதாகச் சொல்லியிருக்கேன். அவன் என்னை பிக் அப் பண்ணிக்குவான்.”
“அப்படின்னா உன் கார்ல போகலையா..?”
“ம்ஹும். என் காரை சோழா ஓட்டல்ல விட்டு பூட்டிட்டுப் போகப்போறேன்.”
பேசிக்கொண்டே காப்பி குடித்து முடித்தான். மீண்டும் மாடிக்கு ஓடினான். ஷைலஜாவுடன் மகாபலிபுரம்! மனது துள்ளியது. சொல்ல முடியாத சந்தோஷத்தில் மிதந்தது. ஷேவ் பண்ணி, குளித்து, தலைவாரிக் கொண்ட போதெல்லாம் ஷைலஜா… ஷைலஜா… ஷைலஜா…
அலமாரியைத் திறந்து எந்த டிரஸ் போட்டுக் கொள்ளலாமென்று ஒரு வினாடி யோசித்தான். இன்று முழுவதும் அவளுக்குப் பிடித்த அத்தனையும் செய்து விடுகிற முடிவில் இருந்தான். அடிக்கடி போட்டுக்கொள்கிற, அவளுக்கு மிகப் பிடித்தமான சாக்லெட் நிறத்தில் மெலிதாய் சந்தன வர்ண கோடுகள் போட்ட சட்டையும், அதே சாக்லெட் நிற பாண்ட்டும் தேர்ந்தெடுத்தான். ‘எம்’ என்று காப்பிப் பொடி வர்ணத்தில் எம்ப்ராய்டரி செய்த ஸோடியாக் கைக்குட்டையை எடுத்துக் கொண்டான். இனிமேல் ‘எஸ்’ என்று எம்ப்ராய்டரி செய்த கைக்குட்டை வாங்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டான். ஜோவான் செண்ட்டை முகம், மார்பு, காதுகளின் பின்புறம் என்று தெனித்துக் கொண்டான்.
ஜோவான், ஷைலஜாவிற்கு மிகவும் பிடித்தமான செண்ட். அவனிடமிருந்த எட்டு செண்டுகளில் அவளுக்கு ஜோவான் தான் பிடிக்கும். காரில் உட்கார்ந்து கடல் அலைகளை ரசிக்கும் போது கழுத்திற்குக் கீழே முகத்தைக் கொண்டு வந்து ஷைலஜா ‘தம்’ பிடிப்பாள்.
“அப்பா…என்ன வாசனை…” என்று மறுபடியும் மூச்சை உள்ளுக்கு இழுப்பாள்.
“காதுகளுக்குப் பின்னாலும் இதே வாசனை தானா..?” என்று கேட்பாள்.
“ஆமாம். மார்புலகூட போட்டுண்டிருக்கேன். முகர்ந்து பாரேன்….” என்று குறும்பாகக் கேட்பான் அவன். அவளது கழுத்தை வளைத்துத் தன் மார்பிற்காக முகத்தை இழுப்பான்.
“சீ… என்ன நீங்க… பொது இடம். பப்ளிக் பிளேஸ்…. பக்கத்துக் கார்ல இருக்கிறவங்கள்ளாம் பார்க்கமாட்டாங்க..? என்ன அவசரம்..? கல்யாணம் வரை காத்திருக்கக் கூடாதா..?” ஷைலஜா பயத்திலும், கோபத்திலும் முகம் சிவப்பாள்.
“ஷைலு டியர்… கல்யாணம் வரை நான் தான் காத்துண்டிருப்பேன். இந்த செண்ட் வாசனை காத்துண்டிருக்காது. என் கிட்ட இருக்கிற பாட்டில் கூடக் காலியாகிவிடும். அதனால் இன்னிக்கே முகர்ந்து பார்த்துடு…” என்பான்.
“ஐய…. வேணாம்…” வெட்கத்தோடு சிணுங்குவாள் அவள்.
“சரி… வேணாம். முகத்தை என் மார்புல வச்சிக்கக் கஷ்டமாக இருந்தால் கையையாவது வச்சிக்க. தடவிக் கொடு…” என்று அவளது கையை இழுத்துத் தன் மார்பில் பதித்துக் கொள்வான்.
அவள் அவனது மார்பின் ரோமங்களில் விரல்களைப் படர விட்டு மெல்ல வருடி, தடவிக் கொடுக்கிற போது பெண் ஸ்பரிசம் பட்டதில் உடல் குறுகுறுத்து மடல்கள் சிவக்கும். இதயம் படபடக்கும். இன்னும் கொஞ்சம் தடவிக் கொடுக்கமாட்டாளா, கை மெல்ல கீழே இறங்காதா என்று உணர்வுகள் தவிக்கும்.
அதையெல்லாம் நினைத்துக் கொண்டே மார்பில் ஜோவானை அள்ளித் தெளித்துக் கொண்டான். இன்று அவளோடு கொஞ்சம் விளையாடிப் பார்க்க வேண்டும். கொஞ்சம் என்ன… நிறையவே விளையாட வேண்டும் என்று அவனது குறும்பு மனம் எண்ணியது. காதுக்குக் கீழே ஒரு செண்ட், கை மணிக்கட்டுகளில் இன்னொரு செண்ட், கழுத்துக்குப் பின்னால் வேறொரு செண்ட் என்று எட்டு வகை செண்டுகளையும் வெவ்வேறு இடங்களில் தடவிக் கொண்டான்.
‘இன்று ஷைலுவை அஷ்டாவதானியாக்க வேண்டும். அத்தனை இடங்களையும் அவள் ஸ்பரிசிக்க வேண்டும். அவளது ஸ்பரிசம் பட்டு தன் உடம்பு குறுகுறுக்க வேண்டும். மனது இன்னும் இன்னும் என்று ஏங்க வேண்டும். இன்று அவளது கை இல்லை. முகத்தை இழுத்து ஒவ்வொரு இடமாக முகரச் செய்ய வேண்டும். கன்னங்கள் மார்பில் உராய, உதடுகள் வண்டியின் வேகத்தில் உடம்போடு உரசினால்…அது போனஸ், இலவச இதழ் இணைப்பு…’
அந்த இதழுக்காக மனம் பரபரத்ததில் அவனும் பரபரத்தான். மாடியிலிருந்தே படி வரை வந்து கீழே குனிந்து ஹாலை எட்டிப் பார்த்துக் கத்தினான்.
“அம்மா… டிபன் ரெடியா…?”
“இதோ… ஒரே நிமிஷம்ப்பா… இட்லி ரெடி. சமோஸாவும் ரெடியாயிடும்.”
ஜல்லிக் கரண்டியால் எண்ணெயில் மிதந்து கொண்டிருந்த சமோஸாவை வெளியில் எடுத்து சம்புடத்தில் போட்ட ருக்மிணியம்மாள் நினைத்துக் கொண்டாள்.
அதன் பொன்னிறம் மதுவுக்குப் பிடிக்கும். ஆர்க்கிடெக்ட் ஆனதால் அவனுக்கு எல்லாமே அழகாக இருக்க வேண்டும். அழகாகத் தெரிய வேண்டும். சாப்பாட்டில்கூட ருசியை விட பார்வைக்கு அழகைத்தான் அவன் முதலில் பார்ப்பான்.
“இந்த காரட் சீவலின் ஆரஞ்சு கலரும் கீரையின் வெளிர் பச்சையும் ரொம்ப நல்ல காம்பினேஷன் இல்லம்மா…?”
அதை நினைத்துக் கொண்டே அந்த அம்மாள் மேஜை மீது கொண்டு வந்து வைத்தபோது ரேபான் கூலிங்கிளாஸும், மைனர் சங்கிலியும், அவன் நிறத்திற்குப் பொருத்தமான சாக்லெட் வர்ண பாண்ட்டும், ஷர்ட்டுமாக இந்த சினிமாக் கதாநாயகர்களைப் போன்று அவன் இறங்கி வருவதைப் பார்த்து அம்மா அயர்ந்து போனாள்.
“ஏம்ப்பா… நீ மகாபலிபுரம் போறியா இல்லைன்னால் பொண்னு பார்க்கப் போறியா..?” என்று விளையாட்டாகக் கண் சிமிட்டினாள்.
“பொண்ணெல்லாம் பார்த்தாச்சும்மா…” என்று அவனும் விளையாட்டு மாதிரி சொல்லிச் சிரித்தான்.
“ஓஹோ… அம்மாவுக்குக் கஷ்டம் வேணாம்னு நீயே பார்த்துட்டியா… யாரு பொண்ணு..?”
“வந்து சொல்றேன். இப்போ – முதல்ல டிபன் கொடும்மா. எட்டே முக்காலுக்காவது கிளம்பினால் தான் அங்கே ஒன்பதுக்கு இருக்க முடியும். ஏற்கெனவே மணி எட்டரை ஆயிடுத்து.”
மடமடவென்று சாப்பிட்டு முடித்து, அத்தனை அவசரத்திலும் சமோசாவின் அழகையும், வர்ணத்தையும் புகழ்ந்து விட்டு திடீரென்று ஞாபகத்திற்கு வந்தவனாக மீண்டும் மாடிக்கு ஓடினான்.
“என்னப்பா…?”
“ஸ்விம்மிங் ஸுட்டை மறந்துட்டேம்மா. மகாபலிபுரம் போய் கடல்ல ஸ்விம் பண்ணலேன்னால் எப்படி…?” கேட்டுக் கொண்டே ஒரு பையில் டவலையும், நீச்சல் உடையையும் போட்டு தோளில் மாட்டிக் கொண்டு கீழே இறங்கினான். மணி எட்டே முக்கால் ஆகியிருந்தது.
“வரேம்மா…”
அடுத்த நிமிடம் அசாத்திய வேகம் பிடித்து அவனது சிவப்பு மாருதி பீச் ரோட் நோக்கிப் பறந்தது.
ஷைலஜா போனபோது மணி எட்டே கால். அப்போது தான் சித்ரா குளித்து விட்டு வந்திருந்தாள். ரொம்ப நிதானமாக அவளைப் பார்த்து ஹாய் சொன்னாள்.
“என்னப்பா இது… இப்பதான் குளிச்சுட்டே வரியா..?” கேட்டபோதே ஷைலஜாவிற்குக் குரல் அடைக்கத் தொடங்கிற்று.
‘இவள் எப்போது டிரஸ் பண்ணி எப்போது புறப்படுவது..? மது காத்துக் கொண்டிருப்பாரே…’ மனது பரபரக்கத் துவங்கிற்று. உடல் நரம்புகளில் புது ரத்தம் பாய்ந்தது. ஆனால் மிக நிதானமாகக் கட்டிலில் எடுத்துப் போட்டிருந்த பத்துப் பனிரெண்டு புடவைகளில் எதை எடுத்துக் கொள்ளலாம் என்கிற ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த சித்ரா சொன்னாள்.
“பேபி… கூல் யார்… என்ன ஆயிடுச்சுன்னு இப்போ இப்படி அவசரப்படற?”
“ஏய்… என்னடி இது..? மணி எட்டு இருபதுடி. ஒன்பது மணிக்கெல்லாம் மது காலேஜ் வாசல்ல காத்துண்டிருப்பார்டி…”
“இருக்கட்டும். கொஞ்ச நேரம் காத்துக்கிட்டிருந்தால் ஒண்ணும் குடி முழுகிப் போயிடாது.”
சித்ரா புடவைகளை ஒதுக்கி சுடிதார், சல்வார் கம்மீஸ்களில் தேட ஷைலஜா கெஞ்ச ஆரம்பித்தாள்.
“ப்ளீஸ், வேணாம்டி. அவருக்குக் கார்கூட இல்லைடி. நம்ம கார்னு சொன்னதால் அவர் கார்ல வந்திருக்க மாட்டார்டி. ஆட்டோவில் வந்து இறங்கிக் கால்கடுக்க
நிக்கணும்டி…”
“நிக்கட்டும். காதல்னா சும்மாவா….? கல்லும், முள்ளும், கரடு முரடும் திறைஞ்சது தான் காதல் பாதைன்னு நீ படிச்சதில்லையா…?”
ஷைலஜாவிற்கு அப்படியே அவள் கழுத்தை நெறிக்க வேண்டும் என்று தோன்றியது. அவளது முகத்தில் தெறித்த ஆத்திரத்தைப் பார்த்த சித்ரா சொன்னாள்.
“டேக்இட் ஈஸி ஷைலு…உனக்கு சைக்காலஜி தெரியலை. ஆம்பிளைன்றது யாருன்னு புரியலை. அவங்க இழுக்கிற இழுப்புக்கெல்லாம் போகக் கூடாதுடி. ஒன்பது மணின்னு சொன்னால் காக்கவச்சு, அவங்க இதயத் துடிப்பை அதிகமாக்கி, ஏங்கவச்சு நாம் ஒன்பதரைக்கு நிதானமாகப் போகணும்.”
“ஏய் வேணாம்டி… மதுவுக்குக் காத்திருக்கப் பிடிக்காதுடி… கோவிச்சுண்டு போனாலும் போயிடுவார்டி…”
“போகட்டும். அப்படிப் போனால் யாருக்கு நஷ்டம்னு நாமும் திரும்பி வந்துடலாம்…” என்றவள் மஜந்தா நிற உடை ஒன்றைத் தேர்ந்தெடுத்து அணிந்து கொண்டாள். தலைவாரி, செண்ட் அடித்து, முகத்திற்குப் பவுடர் பூசி கண்ணாடி பார்த்துக் கொண்டே விரல் நகங்களைக் கடித்துக் கொண்டிருந்த ஷைலஜாவின் பக்கம் திரும்பினாள்.
“என்ன பொட்டு வச்சுக்கலாம் ஷைலு…? மஜந்தா கலர் ஸ்டிக்கர் பொட்டே வச்சுக்கட்டுமா..?”
“மண்ணாங்கட்டி! பொட்டு வச்சுக்கிறது ஒரு பெரிய பிரச்சினையாடி.. வேணும்னே இதை அயோத்யா பிரச்சினையாக்கற நீ… இந்த நேரத்துல ஏண்டி எல்.கே.அத்வானியா மாறுற…? நான் நரசிம்மராவ் மா திரிதவிக்கிறது புரியல…?”
“நரசிம்மராவ் மாதிரி அமைதியா விஷயங்களை எடுத்துக்க உனக்குத் தெரியலை… ஏண்டி இப்படித் தவிக்கிற? எத்தனை நாள் மதுவுக்காக நீ பஸ் ஸ்டாப்பிலும், பீச்சுலயும் காத்துக்கிட்டு நிற்கலை..? இன்னிக்கு ஒரு நாள் அவரைக் காக்க வச்சால் ஒண்ணும் குடி முழுகிப் போயிடாது. வா…டிபன் சாப்பிட்டுவிட்டு கிளம்பலாம்…”
ஒரு வழியாக அலங்காரத்தை முடித்து டிபன் சாப்பிட்டுவிட்டு சித்ரா கிளம்பியபோது மணி ஒன்பதரை. அதற்குள் ஷைலஜாவின் பாதி விரல்கள் அழகாய் அருமையாய் வளர்ந்திருந்த நகங்களில் கொஞ்சம் இழந்தன.
ஒன்பதரை வரை காத்திருந்த மது பொறுமையிழந்து, வியர்வையில் சட்டை நனைவதில் எரிச்சலடைந்து காரை ஸ்டார்ட் செய்தான்.
‘என்ன ஆயிற்று இவளுக்கு… ஏன் இன்னும் வரவில்லை…..? ஒருவேளை வீட்டில் விட மறுத்து விட்டார்களோ..?’
என்ன செய்வதென்று புரியாமல் கடைசியாக ஒருமுறை ரியர்வ்யூ மிர்ரரில் பார்த்தபோது அவன் காருக்குப் பின்னால் கருத்த சாம்பல் மாருதி 1000 ஒன்று வந்து நின்றது.