கவிஞர் பிறைசூடன் திரைப்பாடலில் தனி இடம் பிடித்தவர்
சிறந்த ஆன்மிகவாதியும், இலக்கியவாதியாகவும் நடிகராகவும், வசன கர்த்தாவாகவும் திகழ்ந்த திரைப்படப் பாடலாசிரியர் பிறைசூடன் திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் பிறந்தவர். சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் இன்று (8-10-2021) காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகினரும் இலக்கியத்துறையினரும் என பலரும் இரங்கல் தெரிவித் துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தில் 1956ம் ஆண்டு பிப்ரவரி 06ம் தேதி பிறந்தவர் பிறைசூடன். தனது பள்ளிப் பருவத்திலேயே கவியரங்கம், பட்டி மன்றம் என்று தனது பேச்சுத் திறமையை இயல்பாகவே வளர்த்துக் கொண்டவர். தனக்குள் உள்ள கவிதை புனையும் திறமையைக் கொண்டு சினிமாவில் நுழைய முற்பட்டு பல போராட்டங்களுக்குப் பின், 1984ல் இயக்குநர் ஆர்.சி.சக்தி இயக்கத்தில் ‘சிறை’ என்ற படத்தில் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் முதன்முதலாகப் பாடல் எழுதும் வாய்ப் பைப் பெற்றார். “ராசாத்தி ரோசாப் பூவே வெட்கம் வெட்கம் ஏனோ இன்னும்” என்ற பாடல்தான் இவர் எழுதிய முதல் பாடல்.
கவிஞர் பிறைசூடன் ஏறக்குறைய 400 திரைப்படங்களில் 1500க்கும் அதிகமான பாடல்கள் எழுதியிருக்கின்றார். இது தவிர 5000 பக்திப் பாடல் களும் எழுதியுள்ளார். இவருக்கு மனைவியும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் செயலாளராகவும் இருந்தவர் பிறைசூடன்.
‘குரோதம்-2’, மற்றும் தெலுங்கிலிருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்து வெளிவந்த படங்களான ‘சத்திரிய தர்மம்’, ‘சங்கர்’, ‘ஸ்ரீராம ராஜ்ஜியம்’ போன்ற படங்களுக்கு வசனகர்த்தாகவும் பணிபுரிந்திருக்கின்றார். ‘சதுரங்க வேட்டை’, ‘புகழ்’ ஆகிய படங்களின் மூலம் தன்னை ஒரு நடிகராகவும் காட்டிக் கொண்டவர் பிறைசூடன்.
‘விழுதுகள்’, ‘மங்கை’, ‘பல்லாங்குழி’, ‘மாயா மச்சீந்திரா’, ‘ஆனந்தம்’, ‘அக்னி பிரவேசம்’, ‘ரேகா ஐ.பி.எஸ்’, ‘அவளுக்கென்று ஓர் மனம்’ மற்றும் ‘உயிரின் நிறம் ஊதா’ போன்ற தொலைக்காட்சித் தொடர்களுக்கும் பாடல்கள் எழுதியுள்ளார்.
‘தாயம்’, ‘என் ராசாவின் மனசிலே’ படத்திற்காகத் தமிழக அரசின் விருது பெற்றுள்ளார். தென்னிந்தியத் திரைப்படக் கலைஞர்கள் சங்கத்தின் கலைச்செல்வம் விருதையும் பெற்றவர்.
எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, தேவா, ஏ.ஆர்.ரஹ்மான், சௌந்தர்யன் உள்ளிட்ட இசைப்பாளர்களுடன் பணியாற்றியவர் பிறைசூடன்.
“மற்றவர்களிடம் அன்பாக இருப்பதுதான் ஆன்மிகம். அன்பைத் தவிர வேறு எதுவும் பெரிதில்லை என்பதைத்தான் எல்லா மதங்களும் வலியுறுத்துகின்றன.”
“தலை நிறைய ஜடாமுடியை வளர்த்துக்கிட்டு, ருத்திராட்சக் கொட்டை மாலையை போட்டுக்கிட்டு, நெற்றி நிறைய விபூதியைப் பூசிக்கிட்டு `அடுத்தவன் வாழக்கூடாது’ன்னு பூஜை பண்ணினா பலிக்குமா? நிச்சயம் பலிக்காது போன்ற வசனங்களை எழுதியவர்.
வைகாசி பொறந்தாச்சி படத்தில் நடந்தால் இரண்டடி, கேப்டன் பிரபாகரன் படத்தில் ஆட்டமா தேரோட்டமா, சைலன்ஸ் காதல் செய்யும் நேரமிது.. கேளடி கண்மணி, இதயம், பணக்காரன், அமரன், உள்ளிட்ட படங்களுக்குப் பாடல்களை எழுதியுள்ளார்.
ஏழு சகோதரர்கள், இரண்டு சகோதரிகளைக் கொண்ட கவிஞர் பிறை சூடனின் சகோதரர்களில் ஒருவர் பிரபல சினிமா ஒளிப்பதிவாளர் ஆர்.மதி. இவரது மகன் கே.ஆர்.கவின் சிவாவும் திரைப்பட இசையமைப்பாளர். தனது தொழிலில் சற்றும் சமரசம் செய்து கொள்ளாதவர் பிறைசூடன். இசை யமைப்பாளர் இளையராஜாவின் இசையமைப்பில் நூற்றுக்கணக்கான படங் களுக்கு எண்ணற்ற இனிமையான பாடல்களைத் தந்து ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றார்.
“நல்ல பாட்டை மட்டுமே எழுதுவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு எழுதிக்கொண்டிருக்கும் என் ஊர்க்காரர் – உடன்பிறப்பு” என தலைவர் கலைஞரால் புகழப்பட்டவர்; திருவாரூர் மண்ணிலிருந்து புறப்பட்டுத் திரையிசையில் தனக்கெனத் தனியிடம் பிடித்த கவிஞர், கலைமாமணி பிறைசூடன் மறைவு அதிர்ச்சியளிக்கிறது” என்று முதலமைச்சர் ஸ்டாலின் ட்வீட் செய்து இரங்கலைத் தெரிவித்துக்கொண்டார்.
அவர் மறையலாம். ஆனால் அவர் கவி வரிகள் அவர் வடிவத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும்.