பத்துமலை பந்தம் | 24 | காலச்சக்கரம் நரசிம்மா

 பத்துமலை பந்தம் | 24 | காலச்சக்கரம் நரசிம்மா

24. முக்கோண மலை

கோலாலம்பூரின் சைனா டவுன் பகுதியில் நுழைவதற்கு முன்பே காட்டுப்பாதையில் வலது புறம் திரும்பினால் குகன்மணியின் எஸ்டேட் வந்துவிடும். சைனா டவுன் செல்லும் பாதையில் இருந்து பார்த்தால், வெறும் காடுகள் மட்டுமே இருப்பது போன்று தோன்றும். ஆனால் எஸ்டேட் பாதை இறங்கி சென்று பிரமாண்ட குகன்மணியின் மாளிகையின் முன்பு முடிவடையும்.

குகன்மணி யார்..? அவன் நோக்கம் என்ன..? எதற்காக அவன் தன்னையே சுற்றி வருகிறான்..? –போன்ற கேள்விகளுக்கு விடை காண, ஏதோ அசட்டு துணிச்சலில் புறப்பட்டு வந்திருந்தாள் மயூரி. ஆனால் அவனது எஸ்டேட்டினுள் நுழைந்ததும், அவளையும் அறியாமல், இதயத்தில் கலக்கம் ஏற்பட்டது.

ஒருவேளை, குகன்மணி பெரிய மாபியா கும்பலைச் சேர்ந்தவனாக இருக்கக் கூடுமோ..? அவனிடம் பெரிய ‘நெட்ஒர்க்’ இருக்கக் கூடுமோ..? இவர்கள் சென்னை ஈசிஆர் பண்ணை வீட்டில் பேசியதை எல்லாம்கூட அப்படியே ஒப்புவிக்கிறானே..! விமானத்தில் இவளது மடியில் கிடந்த சுவடியை எதிர்பார்த்தது போன்று பேசுகிறானே..! ஆனால் இவள் கனவில் கண்ட அந்த பறக்கும் சித்தரின் உருவத்தையும் அப்படியே வர்ணிக்கிறானே..! இது எப்படி சாத்தியம்..? அவன் கூறியது போன்று, இவள் கனவில் கண்ட அந்த சித்தரும், வாயில் சூயிங்கம்-மை மெல்வது போன்று எதையோ அடக்கிக்கொண்டு இருந்தாரே..!

யோசித்தபடி குகன்மணியின் பின்பாக நடந்தாள் மயூரி..! நடக்கும்போதே அவளையும் அறியாமல் அவளது கண்கள் அவனை அளந்தன. நிச்சயம் ஆறடி உயரம் இருப்பான். அடர்த்தியான அவனது முடி பிடரியில் வழிந்து சுருண்டு, அவன் ஒரு யானையைப் போன்று நடக்க, அவை கடலின் அலைகள் கரையில் உருளுவது போல அவனது சட்டையில் புரண்டன. ஆகாயமும், கடலும் பரந்து விரிந்து தொலைதூரத்தில் தொடுவது போன்று, அவனது விரிந்த மார்பும், பரந்த முதுகும் இரு குன்றங்களாகத் தோளில் குவிந்திருந்தன.

சீராக அடியெடுத்து அவன் நடக்கும் போது, பட்டத்து யானையின் மீது இருக்கும் அம்பாரி அசைவது போன்று, அவனது தலை அசைந்தது. எந்த ஒரு பெண்ணிற்கும் காதல் எண்ணங்களைத் தோற்றுவிக்கும் கம்பீரம் அவனிடம் நிறைய இருந்தாலும், அவன் மர்மம் நிறைந்தவன் என்கிற நினைப்பு, அவ்வப்போது எச்சரிக்கை மணியை ஒலித்து, அவளிடம் அவனைப் பற்றிய காதல் எண்ணங்களுக்குத் தடை விதித்தது.

பெண்கள்தான் ஆண்களை வீழ்த்த காதல் அஸ்திரங்களை வீசுவார்கள். ஆண்கள் அங்ஙனம் செய்ய மாட்டார்கள் என்றுதான் மயூரி படித்திருக்கிறாள். ஆனால் பெண்கள் அஸ்திரங்களை வீசினால்தான் ஆண்கள் வசப்படுவார்கள். ஆனால் ஆண்கள் சற்று நெருக்கம் காட்டினாலே போதும், பெண்கள் வசப்படுவார்கள் என்று மனோதத்துவ டாக்டர் ஒருவர் எழுதிய நூலில் படுத்திருந்தாள். சகுந்தலை-துஷ்யந்தன் காலத்தில் இருந்தே பெண்கள்தான் துன்பப்படுகிறார்கள். “நான் அப்படிப்பட்ட பலவீனமானவன் இல்லை. காதல் போன்ற விவகாரங்களில் எந்த நாளிலும் சிக்க மாட்டேன்” –என்றுதான் எச்சரிக்கையுடன் இருந்தாள் மயூரி. குகன் மணி விஷயத்திலும், அதீத எச்சரிக்கையைக் கடைபிடிக்க வேண்டும். நிச்சயம் இவளது குடும்பத்தைக் கட்டுப்படுத்த, இவளிடம் காதல் நாடகம் ஆட நினைப்பான்.

அவனது முதுகை வெறித்துப் பார்த்தபடி அவள் இப்படி யோசித்துக் கொண்டே நடக்க, கர்லாக்கட்டையைப் போன்ற அவனது உறுதியான வலது கரம், தோளின் வழியாக உயர்ந்து வந்து, அவனது பிடரி முடியை கோதியது. அவன் கையிலிருந்த வேல் வடிவ மோதிரத்தில் மின்னிய வைரம் அப்போது டாலடிக்க, அந்த ஒளிக்கீற்று தன்னைப் பார்த்துச் சிரிப்பது போன்று மயூரிக்கு தோன்றியது.

“குனோங்..!” — வெண்கல மணியாக ஒலித்தது, குகன் மணியின் குரல்.

உடனே வெள்ளாடையும், பனாமா தொப்பியும் அணிந்திருந்த சிப்பந்தி ஒருவன் வந்து நின்றான்.

“குனோங்..! உன் மனைவி குமுதினி எங்கே..?” –குகன் கேட்டான்.

“தோட்டத்தில் இருக்கா..! இதோ கூப்பிடுறேன்..!” –என்ற குனோங், தன்னிடம் இருந்த போனை எடுத்து, அதில் மெசேஜ் ஒன்றை அனுப்பினான்.

சற்று நேரத்திற்கெல்லாம் சிரித்த முகத்துடன், நெற்றியில் பெரிய திலகத்துடன், வந்து நின்றாள் குமுதினி.

“மயூரி..! குனோங்-தான் என்னோட மாளிகையின் நிர்வாகி. குமுதினி அவன் மனைவி. போன தடவை நீ விருந்துக்கு வந்த போது இவங்க பிள்ளைகளைப் பார்க்க சென்னைக்குப் போயிருந்தாங்க. குனோங் மலாய்காரர். குமுதினி பழனியைச் சேர்ந்தவ. ரெண்டு பேரும் என்கிட்டே வேலைக்கு வந்து காதலிச்சு கல்யாணம் பண்ணிகிட்டாங்க. அவங்க குழந்தைகள் ரெண்டு பேரும், சென்னையில படிக்கிறாங்க.”

குமுதினி, மயூரியை சினேகத்துடன் பார்த்து கையைக் கூப்பினாள் .

“நீங்க சென்னையா..?” –குமுதினி கேட்டவுடன், மயூரியை முந்திக்கொண்டு பதில் தந்தான் குகன்மணி.

“அவங்க பள்ளங்கியைச் சேர்ந்தவங்க..!” –என்று குகன் கூறியவுடன், குமுதினியின் கண்கள் வியப்பால் விரிய, அவளது கைகள் இரண்டும் அவளது முகவாயில் பதிந்தன.

“அடடா முக்கோண மலை..!” –பரவசத்துடன் கூறினாள் குமுதினி.

மயூரி வியப்புடன் அவளை பார்த்தாள். இலங்கை திரிகோணமலையைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறாள். அதென்ன முக்கோண மலை..?

குமுதினி சிலிர்ப்புடன் தொடர்ந்தாள்.

“பழனியாண்டவா..! இதென்ன ஆச்சரியம்..! குகன் ஐயா பத்துமலையைச் சேர்ந்தவர். நான் பழனி மலையைச் சேர்ந்தவ..! மேடம் பள்ளங்கி மலையைச் சேர்ந்தவங்க..! மூணு பேருமே போகர் நவபாஷாண சிலைகளை வடிவமைச்சு, பிரதிஷ்டை செஞ்ச மூணு மலையைச் சேர்ந்தவர்களா இருக்கோம், பார்த்தீங்களா..? நவபாஷாண முக்கோணம்ன்னு இந்த மூணு மலைகளை என்னோட அப்பா சொல்லுவாரு.” –குமுதினி கூறினாள்.

வேறு ஒரு சமயமாக இருந்தால், குமுதினி கூறியதைக் கேட்டு மயூரி ஆச்சரியப்பட்டு இருப்பாள். இதையும் முருகனின் லீலையாகவே நினைத்திருப்பாள். ஆனால் குமுதினியின் வசனம் கூட, குகன்மணியின் லீலைகளில் ஒன்றாக இருக்குமோ என்று தான் அப்போதைக்கு அவளுக்கு தோன்றியது. உண்மையில் அவள் பழனியை சேர்ந்தவளோ, இல்லை பழவந்தாங்கலை சேர்ந்தவளோ.? யாருக்குத் தெரியும்..! இந்த வசனத்தை மயூரியைக் கவர்வதற்காக, குகன்மணி எழுதிக்கொடுத்து அவள் பேசிக்கொண்டிருக்கலாம்.

குமுதினியின் பேச்சு தன்னைப் பாதிக்கவில்லை என்பது போன்று அவள் முகத்தில் வெறுமையை காட்ட, குகன்மணி பேச்சை மாற்றினான்.

“குமுதினி..! அவங்க பத்து மலையில தரிசனம் செய்வதற்காக வந்திருக்காங்க. என்னோட நண்பரோட பெண்..! நாளைக்கு விடியற்காலையில், நாங்க ரெண்டு பேரும் பத்து மலைக்குப் போறோம்..! அவங்களை நம்ம விருந்தினர் அறையில தங்க வை. அவங்களுக்கு தேவையானவற்றைக் கொடு..!” –குகன்மணி கூறிவிட்டு, மாடிப்படிகளில் ஏறி, தனது அறையை நோக்கி நடந்தான்.

மயூரி அதிர்ச்சியுடன் நின்றாள். பத்து மலை தரிசனத்திற்கு வருவதாக இவள் குகன்மணியிடம் கூறவே இல்லையே. அவனாக எப்படி இவளுக்கும் சேர்த்து புரோகிராம் போடலாம்..? ஒரு வேளை, இவளை அங்கே தங்க வைப்பதற்கு ஒரு காரணம் தேவை என்பதால் குமுதினியிடம் அவ்வாறு கூறினானோ ?

குனோங் நெருங்கி வந்து மயூரிக்கு ஒரு ஸலாம் வைத்தான்.

“மேடம்..! இதுவரையில் எங்க முதலாளி எந்த ஒரு பெண்ணையும் விருந்தினரா மாளிகையில தங்க வச்சதே இல்லை. அவங்க உறவுகாரங்களுக்கு கூட, கோலாலம்பூர்ல தான் ரூம் போடுவார். அவருக்கு நெருங்கிய தாய் மாமன் போன வாரம் வந்தாரு. அவரைக் கூட, இங்கே தங்க வைக்கலை. முதன் முறையா, உங்களுக்காக விருந்தினர் அறையைத் திறந்து வைக்க சொல்றாருன்னா விசேஷம் தான்.” –குனோங் சொல்ல, குமுதினி அவனை அடக்கினாள்.

“சும்மா இரு..! முதலாளி தான் சொன்னாரு இல்லே. அவங்க பத்து மலை தரிசனத்திற்காக வந்திருக்காங்கன்னு. உன்னோட கற்பனைக் குதிரையை ஓட விடாதே. நீங்க தப்பா நினைக்காதீங்க மேடம், இதுக்கு காதல் ஜோடிகளை சேர்ப்பதே வேலை. என்னையும் விரட்டி விரட்டித்தான் காதலிச்சு மடக்கினாரூ..! என் பிள்ளைங்க கூட கேலி செய்யும். இந்த சப்பை மூக்கனை எப்படி கல்யாணம் கட்டிக்கிட்டேன்னு..! நல்லவேளையா, என் பிள்ளைகளுக்கு என்னை போல மூக்கு, முழி ரெண்டுமே கண்ணுக்கு அழகா இருக்கும்..!”

குமுதினி பேசியபடி மாடிக்கு செல்ல, அவளைப் பின்தொடர்ந்தாள், மயூரி.

“உங்க குழந்தைங்க சென்னையில் எங்கே படிக்கிறாங்க.?” –மயூரி கேட்டாள்.

“ரெண்டு பேருமே இந்த வருஷம்தான் படிப்பை முடிச்சாங்க. பிள்ளை, கிராபிக் டிசைனிங் முடிச்சான். பெண் பி. எஸ் சி விஸ்காம் படிச்சா. ரெண்டு பேருக்கும் முதலாளியே எஸ்டேட் ல வேலை போட்டு தரேன்னு சொல்லியிருக்காரு. ரெண்டு பெரும் கொஞ்ச நாளைக்கு வாழ்க்கையை என்ஜாய் பண்ணட்டும்ன்னு முதலாளி சொல்லிட்டதால, இன்னும் சென்னையிலேதான் இருக்காங்க. பையனுக்கு சினிமாவுல சேரணும்னு ஆசை. பெண்ணுக்கும் விமானப் பணிப்பெண் ஆகணும்னு ஆசை.” –குமுதினி பேசிக்கொண்டே, ஒரு பெரிய அறைக் கதவைத் திறந்தாள்.

அறையா அது..? ஒரு கட்சியின் பொதுக் குழுவையே அங்கே கூட்டலாம் போல விஸ்தாரமாக இருந்தது. அறையின் மையத்தில் ஒரு திட்டு. அதில் விதானத்துடன் கூடிய படுக்கை. சுற்றி கலைப்பொருட்கள். பெயிண்டிங்குகள் என்று அமர்க்களமாக அந்த அறை அலங்கரிக்கப்பட்டிருந்தது. தரையில் நடந்தால் அழுக்காகி விடுமோ என்ற அச்சம் ஏற்படும் வகையில், வெண்மையை வாரி வழங்கிய பளிங்குக் கற்கள், நிலத்தில் பதிக்கப்பட்டிருந்தன.

இவள் தங்கிய ஹோட்டல் அறை கூட இவ்வளவு கலைநயத்துடன் அமைக்கப்பட்டிருக்கவில்லை.

“உங்கள் பையைக் கொடுங்க மேடம்..!” –என்று அதைப் பலவந்தமாகப் பிடுங்கிய குமுதினி, ‘இப்படிப்பட்ட பையைப் போய் இந்த அறையில் வைக்க வேண்டியிருக்கிறதே’ –என்பது போன்று ஒருமுறை அதைப் பார்த்துவிட்டு, பிறகு அந்தப் பையை கப்போர்டில் வைத்து கதவை மூடினாள்.

“எது வேண்டுமானாலும் என்னைக் கேளுங்க..!” –குமுதினி ஏசியை ஆன் செய்தபடி கூறினாள்.

“தேவைப்பட்டா கேட்கிறேன், குமுதினி..! ரொம்ப தாங்க்ஸ். உங்க பெயர் ரொம்ப அழகா இருக்கு..!” –மயூரி சொல்ல, குமுதினி பளீரென்று சிரித்தாள்.

“எங்க அப்பா வச்ச பேரு..! என் குழந்தைகளுக்கு அய்யாவோட அம்மாதான் பெயர் வச்சாங்க. அந்த பெயர்களும் அழகா இருக்கும்..!” –குமுதினி கூறினாள்.

“அப்படியா..! உங்க பிள்ளைங்களுக்கு என்ன பெயர்..?” –மயூரி கேட்டாள்.

“மூத்தவன் பையன், பெயர் சுபாகர்..! இளையவ பொண்ணு, பெயர் போதினி..!” — குமுதினி கூற, மயூரியின் வாய் அதிர்ச்சியில் பிளந்தது.

தற்செயலாக அவள் அந்த பிரம்மாண்டக் கட்டிலில் அமர்ந்தாளா, அல்லது அவள் கால்கள் துணியாக மாறி, அவளைச் சுமக்கும் வலுவை இழந்ததால், கட்டிலில் சரிந்திருந்தாளா என்பதை மயூரியாலேயே யூகிக்க இயலவில்லை.

ஆக…

இவளது யூகம் சரிதான்..! ஒரு சிலந்தி, வலையைப் பின்னுவது போன்று குகன்மணி இவளையும் இவள் குடும்பத்தையும் சுற்றி சதி வலையைப் பின்னிக் கொண்டிருக்கிறான். படித்துக்கொண்டு பார்ட் டைமாக வேலை பார்க்கும் மாணவர்கள் என்று சொல்லித்தான், ‘மலர் ஹோம் சர்வீஸ்’ நிறுவனம் இவளிடம் கூறி போதினியையும், சுபாகரையும் அனுப்பியிருந்தது. இப்போதுதான் தெரிகிறது.! அனைத்தையும் குகன்மணி அழகாகத் திட்டமிட்டுச் செயலாற்றி வருகிறான்.

அந்த மெத்தென்ற படுக்கை மயூரியை அம்புப் படுக்கையாக உறுத்தத் தொடங்கியது.

சிலந்தியின் வலையில் சிக்கிய ஈயாக தன்னை நினைத்துப் பார்த்தாள், மயூரி.

-தொடரும்…

ganesh

2 Comments

  • ♥️♥️♥️

  • Super

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...