இலக்கிய கதை வேறு, அதை சினிமாவாக எடுப்பது வேறு

– இயக்குநர் வஸந்த் எஸ். சாய்

மோ.அருண் வழங்கும் பியூர் சினிமா அமைப்பு சனிக்கிழமை மாலை விருகம்பாக்கத்தில் இயக்குநர் வஸந்த் எஸ். சாய் அவர்களுடன் இளைஞர்கள் கலந்துரையாடல் நடைபெற்றது. நடிகர்கள்  விஜய், அஜித், சூர்யா ஆகி யோரை வைத்து வெற்றிப் படங்களை இயக்கிவர் இயக்குநர் வஸந்த் எஸ். சாய். சமீபத்தில் மணரத்னம் தயாரிப்பில் வெளியான நவரசாவில் வஸந்த் இயக்கிய பாயசம் வரவேற்பைப் பெற்றது. அவருடன் சினிமா அனுபவம், திரைக்கதை குறித்த தொழில்நுட்ப ஐயங்கள், ஓடிடி அனுபவங்கள் என பார்வையாளர்கள் கலந்துரையாடல் நடைபெற்றது. அதன் தொகுப்பு இங்கே.

  • ஒரு முறை சாரு நிவேதிதா சார் ஒண்ணு சொன்னார். எனக்கு ரொம்ப புடிச்சிருந்தது. 17ந்தேதி ஊர்ல இருக்கீங்களா என்று கேட்டார். இருக்கேன்னு சொன்னேன். என் புக் ரிலீஸ் ஆகுது. நீங்க வந்துடுங் கன்னார். கண்டிப்பா வந்திடுறேன்னேன். அப்பறம்தான் எனக்குத் தெரிஞ்சது, நம்மலை நாம எப்படி நினைச்சிக்கிறோம்னு. நான் வந்து புத்தகத்தை வாங்கிக்குவேன், இல்லை வெளியீடுவேன், இல்லைன்னா சிறப்புரையாற்றுவேன் அப்படின்னு. இது எதுவுமே இல்லை. அவர் என்னைக் கூப்பிட்டது. ஆடியன்ஸ்ஸா வந்து பார்க்க. அதை அவர் சொல்லித்தான் எனக்குத் தெரியும். ஆனா அது எனக்கு ரொம்பப் புடிச்சது. அதுக்காகவே நான் போனோன். எப்பப்பாத்தாலும் நாம் என்ன நினைக்கிறோம்னு பார்த்தீங்களா? நாம ஒரு விஷயத்தைப் பண்ணினா நாம அதுல முதன்மையான இடத்துல இருக்கமா என்கிறதைப் பத்தி தான் மனுஷ மனசு ஆசைப்படுது. வேடிக்கையா ஒண்ணு சொல்வாங்க. நீங்க நூறு டான்ஸர்ஸ் ஆடிற நடனம் அமைந்த பாட்டு பார்த்திருப் பீங்க. எப்பவாவது ஒரே ஒரு தடவை அந்த ஒரே ஒரு டான்ஸர்ல ஹீரோயினைவிட அழகான பொண்ணுல இருந்திருப்பா. ஆனா உங்க கண்ணு அந்த ஹீரோயினைத் தாண்டி வேற யாரையுமே பார்த்திருக் காது. அது சென்டர் ஆப் அட்ராக் ஷன்னு பேர். நாம எது செய்தாலும் சென்டர் ஆப் அட்ராக் ஷன் முக்கியமா இருக்குது. எங்க போனாலும் நாமதான் முதல்ல இருப்பமா? இதை நோக்கிதான் நம்ம சிந்தனைகள் இருக்கு. இதெல்லாமல் இருக்கிறதுனாலதான் இதைச் சொல்றேன் இங்க வர்றவங்க எல்லாம் பிலிம்மேக்கராகவே இருக்கணும்றது இல்லை. மிகச் சிறந்த படைப்பாளிகளை உருவாக்கக்கூடியவரா இருக்கிறவங்களா உங்களை நீங்க பார்க்கணும். அதற்கேற்ற மாதிரி உங்களை நீங்க தகுதிப்படுத்திக்கணும்.
  • சினிமா என்பது அந்தக் காலத்தில் எப்படி இருந்தது என்றால்,  ஒரு நாளைக்கு மூன்று காட்சிகள்தான். காலை, மதியம், இரவு காட்சிகள்னு நடைபெற்றது. நான்காவது காட்சிகூட அப்பறம்தான் வந்தது. இந்த மூன்று காட்சிகள் நடந்தபோது படம் பார்க்க டைம்னு ஒண்ணு இருந்தது. அந்த டைம்மை யார் நிர்ணயம் செய்தார்கள். தயாரிப்பாளர், டைரக்டர் முடிவு பண்ணாங்க. உங்க மைன்ட் படம் பார்க்கணும்னா 11.30 – 2 – 6 மணி காட்சிகள்தான் பார்க்கமுடியும்னு செட்டாகிடுச்சு. அப்புறம் இடம். தியேட்டர் தேவைப்பட்டது.. ஆனா இப்ப டைம் தேவையில்லை, இடம் தேவையில்லை. நாங்க உங்க வீட்டுக்கே வந்துட்டோம். என்னோட ‘நவரசா’வை எட்டு எபிஸோடையும் ஒரே நாள்ல ஒடிடியில் போட்டுடறேன். நீங்க டைம் கிடைக்கும்போது உங்க வீட்டிலேயே பார்த்துக்கலாம். அதனால் ரசிகர்கள் பார்வையில் பல மாறுபாடுகள் ஏற்பட்டுவிட்டது.
  • இலக்கியத்திலிருந்து சினிமாவுக்கு கதை எடுக்கும்போது டைரக்டர் என்ன பண்றாங்கன்னு பார்க்கணும். உதிரிப்பூக்கள்னு ஒரு படம் பார்த்திருப்பீங்க. ‘சிற்றன்னை’ன்னு ஒரு நாவலைத் தழுவி எடுக்கப் பட்டது.. நான் அதைத் தேடிப் புடித்து படிச்சேன். சிற்றன்னையைப் படிச்சுட்டு நான் என்ன தேடினேன் கேட்டீங்கன்னா? இதுல எங்க உதிரிப்பூக்கள் இருக்குது. ஆனா மகேந்திரன் சார் சிற்றன்னை கதைக்கு படத்தில் கௌரவம் கொடுத்திருப்பார். அவருக்கு அதில் ஒரு கேரக்டர், சம்பவம் பிடித்திருந்ததுபோல. நான் என்ன சொல்றேன்னா ஒரு கதையைப் படமாக எடுப்பதில் ஆளுக்காளு வேறுபடும். சில பேர் என்ன நினைக்கிறாங்கன்னா… இலக்கியத்தை அப்படியே எடுக்கறதுதான் கரெக்ட்னு நினைக்கிறாங்க. அதை நினைக்கறவங்க பெரும்பாலும் பிலிம்மேக்கரா இருக்கமாட்டாங்க. அவங்க பேஸ்புக்ல எழுதறவங்களா இருப்பாங்க. அவங்கள நான் குறை சொல்லலை. அவங்க என்ன பண்ணுவாங்க. ரெண்டுத்தையும் கையில வைச்சுக்கிட்டு கதைல இது இருக்கு. சினிமாவுல அது இல்லையே. அதான் கதைல இருக்கே அதையே படிங்க. நான் தெளிவா போட்டிருக்கேன். இது என்னோட படம்னு. நீங்க என்ன புரிஞ்சுக்கணும்னா அவரோட கதையை நான் படமா எடுக்கிறேன். எத்தனை பேர் ரோமியோ ஜூலியட் எடுத்திருக் காறங்க. உலகில் எத்தனை கதையைத் திரும்பத் திரும்ப எடுத்திருக் காங்க. எனக்கு ஒரு கதை புடிச்சது அதை நான் எடுத்தேன். அதையே நான் எடுத்தா ஒரு மாதிரி, அவர் எடுத்த ஒரு மாதிரி, இவர் எடுத்தா ஒரு மாதிரி வரும்.
  • நவரசாவில் தி.ஜானகிராமன் கதையில் என்ன வரும்னா. பாயசம் தொடரில் ஒரு வரி வரும். ஜானகிராமன் எழுதியிருக்கிறார். நான் அதை எடுக்கலை. அதை எடுக்காததற்கு காரணத்தைச் சொல்றேன். டெல்லி கணேஷ் சாமநாதன் தன் மனைவிக்கிட்ட பேசுவார் என்ன நீ சுப்புவுக்கு அப்படி சப்போர்ட் பண்றே. நீ பேறதைப் பார்த்தா நீ என் பொண்ணாட்டியா? அவன் பொண்டாட்டியான்னு தெரிலையே? எனக்கு ஜானகிராமனை ரொம்பப் புடிக்கும். இந்த வரியை நான் படத்துல எடுத்திருந்தேனா நீங்க டெல்லி கணேஷ் கேரக்டரை என்ன நினைப் பீங்க. எதை எடுக்கணும், எடுக்கக்கூடாதுன்றது இயக்குநரைப் பொறுத் தது. சில பேர் எடுத்தா அதைக்கூட எடுப்பாங்களா இருக்கலாம். நான் எடுக்கமாட்டேன். நான் இப்படித்தான்.
  • நான் நானா இருக்கிறதுக்கு எவ்வளவு பாலசந்தர் சார் காரணமோ அதற்கு அடுத்து மணிரத்னம் சார் ஒரு காரணம். அவரோட கூடவே இல்லாமலே அவரோட பழகின சந்தர்ப்பங்கள் நேரங்கள் எனக்குக் கிடைச்சது. நான் நானா இருக்க ரொம்ப முக்கியமான காரணம் மணி ரத்னம் சார் காரணம். சினிமாவும் கத்துக்கிட்டிருக்கேன். வாழ்க்கைக்கும் கத்துக்கிட்டிருக்கேன். அவரோட நான் சினிமாவில் முரண்பட்டிருக் கிறேன். ஆனா வாழ்க்கையைப் பொறுத்தவரைக்கும் அவரை அப்படியே எடுத்துக்கிறேன்.
  • முழுக்க முழுக்க சினிமா சம்பத்தப்பட்ட பேச்சாக இல்லாமல் தன்னம்பிக்கை, சுயமுன்னேற்றம், வாழ்க்கை முன்னேற்றம் சம்பந்தப் பட்டதாக, சிறந்த வகுப்பாக இது அமைந்திருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!