பேய் ரெஸ்டாரெண்ட் – 12 | முகில் தினகரன்

 பேய் ரெஸ்டாரெண்ட் – 12 | முகில் தினகரன்

பேய் ரெஸ்டாரெண்ட் அந்த மாலை நேரத்தில் அதிக பட்ச கூட்டத்தால் திணறிக் கொண்டிருந்தது.

“காட்டுக்குள்ளே பாட்டுச் சொல்லும் கன்னிப் பெண்ணும் நீதானா?…கிட்டே வந்து கொஞ்சச் சொல்லும்…சின்னப் பூவும் நீதானா?” பாடல் உச்சஸ்தாயில் ஒலித்துக் கொண்டிருந்தது.

பாதி எரிந்த சவம் போலத் தோற்றமளிக்கும் ஃபுல் ஸைஸ் ரப்பர் மாஸ்கினுள் இருந்து கொண்டு, வாஷ்பேஸின் அருகே மறைந்து நின்ற சிவா, கஸ்டமர்கள் கை கழுவ வரும் போது, திடீரென்று வெளிப்பட்டு, அவர்கள் எதிரிலேயே அங்கு நின்று கொண்டிருக்கும் சிறுமியை வெறியோடு இழுத்து, கழுத்தைக் கடிப்பது போல் நடித்தான். “வீல்”என்று கத்திக் கொண்டு அந்தச் சிறுமி, தன் கையில் மறைத்து வைத்திருந்த சிகப்பு நிற திரவத்தை சிறுமி தன் கழுத்தில் பூசிக் கொண்டு ரத்த வெள்ளத்தில் துடித்தாள்.

கஸ்டமர்கள் மிரண்டு அலறிக் கொண்டு ஓட சிரித்துக் கொண்டே அந்த மாஸ்கினுள்ளிருந்து வெளிப்பட்டான் சிவா. அதே நேரம், குழந்தை உருவ மாஸ்கினுள் மறைந்திருந்த குள்ளச் சிறுவனும் வெளியே வந்து சிரித்தான்.

அது ஒரு ஹாரர் ஷோ என்பதைப் புரிந்து கொண்ட மக்கள் கை தட்டியபடியே நகர்ந்தனர்.

ரெஸ்டாரெண்டின் ஆரம்ப காலத்தில் எல்லோராலும் பாராட்டப்பட்டு, அதிக மதிப்பெண்ணில் “பெஸ்ட் ஹாரர் ஈவெண்ட்டர்” என்ற பட்டம் பெற்று, மெடலும்….ரொக்கப் பரிசும் வாங்கியவன் அந்த சிவா. சொந்த ஊர் திருச்சி பக்கத்துல ஏதோ கிராமம். கூட இருக்கும் குள்ளனையும் அவன்தான் தன் ஊரிலிருந்து பிடித்து வந்திருந்தான்.

அடுத்த ஷோவுக்காக மீண்டும் அந்த பாதி எரிந்த சவம் போன்று தோற்றமளிக்கும் ஃபுல் சைஸ் மாஸ்கை அணிய தன் அறைக்குச் சென்ற சிவாவின் மொபைல் ஒலிக்க, எடுத்துப் பார்த்தான் ஊரிலிருந்து அவன் அண்ணன் அழைத்திருந்தார்.

“அண்ணே…சொல்லுங்கண்ணே” என்றான்.

“டேய் சிவா…நீ உடனே கிளம்பி வர முடியுமா?” அண்ணன் குரலில் ஒரு வித பதட்டம்.

“என்னண்ணே?…என்ன விஷயம்?”

“நம்ம பங்காளி சுடலை…நாளைக்கு வில்லங்க நெலத்துல ஏர் ஓட்டறனாம்” என்றார் சிவாவின் அண்ணன்.

“அதெப்படி?…கேஸ் கோர்ட்டுல இருக்கும் போது அவன் எப்படி நெலத்துல ஏர் ஓட்டுவான்?” கோபமாய்க் கேட்டான் சிவா.

“அதுக்குத்தான் உன்னைய வரச் சொல்றேன்” அண்ணன்காரன் ஆணித்தரமாய்ச் சொல்ல,

“சரி…நான் இன்னிக்கு ராத்திரியே கிளம்பி வர்றேன்…காத்தால அஞ்சு…அஞ்சரைக்கெல்லாம் வந்திடுவேன்” என்றான் சிவா.

அவன் இணைப்பைக் கட் செய்ததும் குள்ள குணா கேட்டான், “என்ன சிவா?…என்ன பிரச்சினை?”

“எங்களுக்கும்…எங்க பங்காளி ஒருத்தருக்கும் ஒரு நிலத்தகராறு இருக்கு!…அந்த வழக்கு கோர்ட்டுல இருக்கு…ஆனா அந்தப் பங்காளிபயல்…நாளைக்கு அந்த வில்லங்கம் இருக்கற நெலத்துல ஏர் ஓட்டப் போறானாம்” கோபமாய்ச் சொன்னான் சிவா.

“அது தப்பாச்சே?”

“உனக்குத் தெரியுது…அந்த பங்காளிப்பயலுக்குத் தெரியலையே!”

“சரி இப்ப என்ன பண்ணப் போறே?” குள்ள குணா கேட்க,

“ஆனந்தராஜ் சார் கிட்டே சொல்லிட்டு இப்பவே கிளம்பப் போறேன்…லேட் நைட் பஸ்ஸைப் பிடிச்சாத்தான் காலைல நேரத்துல ஊர் போய்ச் சேர முடியும்” என்றான் சிவா.

“ஆனந்தராஜ் சார் இல்லை!…எங்கியோ வெளிய போயிருக்கார்”

“வேற யாரு இருக்கா?”

“விஜயசந்தர் சாரும்…திருமுருகன் சாரும் இருக்காங்க!” என்றான் குள்ள குணா

“ஓ.கே…அவங்க கிட்டே சொல்லிட்டுக் கிளம்பறேன்” தன்னுடைய மேக்கப்பையெல்லாம் மாற்றிக் கொண்டு, சாதாரண உடையணிந்து விஜயசந்தர் அறையை நோக்கி நடந்தான் சிவா.

“அண்ணா…நான் வேணா கூட ஊருக்கு வரவா?”குள்ள குணா கேட்க,

இட, வலமாய்த் தலையசைத்தபடி சென்றான் சிவா.

விஜயசந்தருடன் திருமுருகனும் இருக்க, இருவரிடமும் சொல்லிக் கொண்டு வெளியேறினான் சிவா.

அப்போது திருமுருகன் காதருகே வந்த சங்கீதாவின் ஆவி, “ஒரு கணக்கு முடியப் போகுது” என்றது. சட்டென்று திரும்பி, “ச்சூ…கொஞ்சம் அமைதியாயிருக்கியா?” அதட்டினான்.

அவன் வெற்றிட்த்தைப் பார்த்துப் பேசுவதைக் கண்ட விஜயசந்தர், “டேய்…என்னாச்சு…மறுபடியும்…அந்த பெட்டிக்கடை ரஞ்சிதாவா?” சிரித்தபடி கேட்டான்.

“இது ரஞ்சிதா இல்லை…சங்கீதா” என்றான் திருமுருகன்.

புருவங்களை நெரித்துக் கொண்டு திருமுருகனைப் பார்த்த விஜயசந்தர், “என்னடா..புதுசு…புதுசா ஏதேதோ சொல்றியே?…ஆர் யூ ஆல் ரைட்?” கேட்க,

“விஜய்…ஒரு முக்கியமான விஷயத்தை உன் கிட்டே சொல்லணும்!…உனக்கு கொஞ்சம் அதிர்ச்சியாகவும்…பயமாகவும்தான் இருக்கும்…வேற வழியில்லை…சொல்லித்தான் ஆகணும்…”என்ற திருமுருகன் தன் பக்கத்தில் நிற்கும் சங்கீதாவின் ஆவியைப் பார்த்து, “இவர்கிட்டேயும் சொல்லிடறேன்” என்றான்.

மறுபடியும் அவன் வெற்றிடத்தைப் பார்த்துப் பேசுவதைக் கண்ட விஜயசந்தர், தன் இருக்கையிலிருந்து எழுந்து அவனருகே வந்து தேடினான். “டேய் முருகா…யார் கிட்டே பேசறே?”

“அதான் சொன்னேனே?…சங்கீதா”

“சங்கீதாவா?..எந்த சங்கீதா?” சுற்றும்முற்றும் பார்த்தபடியே கேட்டான் விஜயசந்தர்.

“நானும் நீயும் போய்…கிணத்துக்கடவுல எனக்காக ஒரு பெண்ணைப் பார்த்திட்டு வந்தோமே?…அதாண்டா தமிழ் வாத்தியார் பொண்ணு?” முருகன் ஞாபகமூட்ட,

கீழுதட்டைக் கடித்துக் கொண்டு யோசித்த விஜய், “டேய்…அந்தப் பொண்ணுதான் சூஸைட் பண்ணிக்கிச்சே?” குரலைத் தாழ்த்திக் கொண்டு சொன்னான் விஜய்.

“ஆமாம்…அந்தப் பொண்ணோட ஆவிதான் இங்க வந்திருக்கு!…இதோ இங்க நிக்குது” என்று ஜன்னலோரம் கை காட்டினான் முருகன்.

விழிகளைப் பெரிதாக்கிக் கொண்டு அந்த இடத்தைப் பார்த்த விஜய்யின் உடல் நடுங்கியது. “என்னடா…அங்க யாரையும் காணோம்?”

“உன் கண்ணுக்குத் தெரிய வாய்ப்பில்லை ராஜா”

“அப்ப…உன் கண்ணுக்கு மட்டும்…எப்படி?” நடுங்கும் குரலில் கேட்டான் விஜய்.

“அது ஒரு பெரிய கதை” என்று ஆரம்பித்து ஆனந்தராஜிடம் நேற்று வாசித்த சங்கீதாவின் தற்கொலை அத்தியாயத்தை விஜயசந்தரிடமும் வாசித்தான்.

முழுவதையும் கேட்டு முடித்த விஜய், “டேய்…நீ சொல்றதெல்லாம் நெஜமாடா?…உண்மையிலேயே சங்கீதாவின் ஆவி அந்த ஜன்னலோரம் நிக்குதாடா?” ஜன்னலைப் பார்த்துக் கொண்டே கேட்டான்.

“யெஸ்!…அது மட்டுமில்லை…இப்ப நான் சொன்ன ஃப்ளாஷ்பேக் கதையைக் கேட்டுட்டு கண்ணீர் வடிக்குது”

“ஆவி கூட அழுமா?” விஜயசந்தர் கேட்க,

“பெண்ணின் ஆவிதானே?…அழத்தான் செய்யும்” சிரித்தான் முருகன்.

மெல்ல நடந்து திருமுருகன் அருகில் வந்த விஜயசந்தர், “டேய்…இந்த ஆவியால…நமக்கு…ஒண்ணும்…ஆபத்தில்லையே?” அச்சக் குரலில் கேட்டான்.

“ஆபத்தா?…சங்கீதா நமக்கும்…நம்ம பேய் ரெஸ்டாரெண்ட்டுக்கும் உதவத்தான் இங்க இருக்கா?….இந்த பில்டிங் கன்ஸ்ட்ரக்ஷன்ல இருக்கும் போது…இது மேலிருந்துதான் விழுந்து தற்கொலை பண்ணியிருக்கா…அதனால இங்கதான் தங்கியிருக்கா…நானும்…இனிமேல் இங்கேதான் தங்கப் போறேன்…ஆனந்தராஜ் கிட்டே சொல்லிட்டேன்” என்று முருகன் மகிழ்ச்சியோடு சொல்ல,
“வீட்ல…அம்மா?”

“அவங்க சேலம் அண்ணா வீட்டுக்குப் போயாச்சு…ஆறு மாசம் கழிச்சுத்தான் வருவாங்க” என்றான் திருமுருகன்.

“என்னமோ…பார்த்து பத்திரமா இருடா” ஜன்னல் பக்கம் பார்த்துக் கொண்டே சொன்னான் விஜய்.
****
இரவு பதினோரு மணி,

ரெஸ்டாரெண்ட் குளோஸ் செய்யப்பட்டதும் பணியாட்கள் அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட தரைத் தளத்திற்கு உறங்கச் சென்ற பின், ஆனந்தராஜும், விஜயசந்தரும் கல்லா கணக்குகளைப் பார்த்து மறுநாள் வங்கியில் செலுத்த வேண்டிய தொகையை மட்டும் எடுத்துக் கொண்டு ஒரே காரில் கிளம்பினர்.

காரை நோக்கி நடந்த ஆனந்தராஜ் திரும்பி, திருமுருகனைப் பார்த்து, “நீ…..வரலையா?”…என்று ஆரம்பித்து, “ஓ…ஸாரி….நீதான் இங்கியே தங்கப் போறியல்ல?” என்று சொல்லி விட்டு “டாட்டா” காட்டி விட்டுச் சென்றான்.

காரில் போகும் போது விஜயசந்தர் கேட்டான். “திருமுருகன் உன் கிட்டே அந்த சங்கீதா ஆவி பத்திய விஷயங்களை சொன்னானா?”

“ஆமாம்…சொன்னான்…” பார்வையை சாலையிலிருந்து விலக்கி விஜய்யைப் பார்த்துச் சொன்னான் ஆனந்தராஜ்.

“அதையெல்லாம் நீ நம்பறியா?…நிஜமாவே ஒரு ஆவி அவன் கூட இருக்கா?”

“ம்ம்ம்….ஆரம்பத்துல நானும் நம்பலை….ஆனா…அந்த சங்கரன் விஷயத்துல “அந்த ஆவிதான் களவு போன நகைகள் இருக்குமிடத்தை தனக்குச் சொல்லுச்சு!”ன்னு முருகன் சொல்றான்!…உண்மையில் அது மட்டும் உதவலேன்னா…நம்ம் ரெஸ்டாரெண்ட் பேரே கெட்டுப் போயிருக்கும்!….” என்றான் ஆனந்தராஜ்.

சில நிமிடங்கள் அமைதியாயிருந்த விஜயசந்தர், “ஒரு வித்தியாசத்துக்காக “பேய் ரெஸ்டாரெண்ட்”ன்னு பேர் வெச்சோம்….உண்மையிலேயே பேய் வந்திடுச்சு” என்றவன், “சரி…அதை விடு…இப்ப அந்த ஆவி நம்ம ரெஸ்டாரெண்ட்டுலதான் இருக்கு!…நாம பாட்டுக்கு திருமுருகனை தனியா அங்க விட்டுட்டு வந்திட்டோம்…அவனுக்கு ஒண்ணும் ஆயிடாதே?” தன் சந்தேகத்தைக் கேட்டான்.

“நிச்சயம் ஆகாது!…ஏன்னா…அந்த ஆவி அவனுக்கு உதவி செய்யவே கூட இருக்கு!…உண்மையைச் சொல்லணும்!ன்னா…அந்த ஆவி அவனைக் காதலிக்குது…அவனும் அந்த ஆவியைக் காதலிக்கிறான்” என்று ஆனந்தராஜ் சொல்ல,

“ஹக்”கென்று அதிர்ந்த விஜயசந்தர். “என்னப்பா சொல்றே?…ஆவி கூட காதலா?…ஹய்யோ…ஒண்ணுமே புரியலை…உலகத்திலே…” பாடினான்.

அதே நேரம், பேய் ரெஸ்டாரெண்டின் கெஸ்ட் ரூமில், படுக்கையில் படுத்தவாறே, மொபைல் போனை நோண்டிக் கொண்டிருந்தான் திருமுருகன்.

அவனருகில் வந்து நின்றது சங்கீதாவின் ஆவி.

நீண்ட நேரம் காத்திருந்தும் அவன் தன் பக்கம் திரும்பாததில் கோபமுற்ற ஆவி, அவன் கையிலிருந்த மொபைலைப் பிடுங்கி அவனுக்கு எட்டாத உயரத்தில் அந்தரத்தில் தொங்க விட்டது.

கடுப்பான திருமுருகன் தன் கண்களுக்கு மட்டும் தெரியும் சங்கீதாவின் உருவத்தை அடித்தான். அந்த உருவத்திற்குள் அவன் கை புகுந்து வெளியே வந்ததே தவிர அடியே விழவில்லை.

உயரத்தில் தொங்கும் மொபைலை எடுக்க அவன் குதித்தான். அது அவன் கைக்கு எட்டவேயில்லை.

“ஏய் சங்கீதா…ஒழுங்கா மொபைலை எடுத்துக் குடுத்துடு…” கத்தலாய் மிரட்டினான்.

“இல்லேன்னா…என்ன பண்ணுவே?” ஆவி கேட்க,

அப்போது கதவு தட்டப்பட்டது.

“இரு உன்னை வந்து கவனிச்சுக்கறேன்” கத்தி விட்டுப் போய்க் கதவைத் திறந்தான்.

செக்யூரிட்டி நின்றிருந்தான்.

“என்னப்பா…என்ன வேணும்?” திருமுருகன் கேட்டான்.

“ஒண்ணுமில்லைங்க அய்யா…வழக்கமா அரை மணி நேரத்துக்கு ஒரு தரம் ரெஸ்டாரெண்ட்டுல ஒவ்வொரு மாடிக்கும் ரவுண்ட்ஸ் வருவேன்…அப்படி இங்க வந்தப்ப உங்க ரூம்ல நீங்க கத்திப் பேசிட்டிருக்கற குரல் கேட்டிச்சு…!…அவங்க ஆனந்த் சாரும், விஜய் சாரும் அப்பவே போயிட்டாங்களே?…வேற யாரு இங்க பேசறது?ன்னு பார்க்கத் தட்டினேனுங்க அய்யா”

செக்யூரிட்டி சொன்னது முருகனுக்கு கோபத்தை தந்தாலும்…அவன் தன்னுடைய டியூட்டியில் மிகச் சரியாக இருக்கிறான்…என்பதைப் புரிந்து கொண்டு, “ஒருத்தரும் இல்லை…டி.வி.ல சத்தம்” என்றான்.

“சரிங்கய்யா” என்று அவன் வாய் சொன்னாலும், அதை நம்பாமல் அவனுடைய கண்கள் உள்ளே தேடின.

“யோவ்…அதான் உள்ளே யாருமில்லை!ன்னு சொல்றேனல்ல?…அப்புறம் என்ன எட்டிப் பார்க்கறே?” கோபமாய்க் கேட்டான் முருகன்.

“ஸாரிங்க” என்று சொன்னவனின் முகத்தில் அறைவது கதவைச் சாத்தினான் முருகன்.

“என் மேல் இருக்கற கோபத்தை ஏன் அவன் மேல் காட்டறீங்க?” ஆவி கேட்க,

“த பாரு சங்கீதா…ஒழுங்கா மொபைலைக் குடுத்து…இல்லேன்னா…உன்னைய….”

“என்னைய….?”

“இதோ இந்தக் கட்டில் மேலே தூக்கிப் போட்டு….”

“தூக்கிப் போட்டு….?” சிரித்தபடி கேட்டது ஆவி.

“தாலி கட்டாமலே…தாம்பத்யம் பண்ணிடுவேன்” என்று அவன் சொன்னதும், சட்டென்று கண் கலங்கிய ஆவி, அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்த மொபைலை அவன் கையில் விழ வைத்து விட்டு உடனே மறைந்தது.

“ஏய்…ஏய்…சங்கீதா?…ஏன் மறைஞ்சிட்டே?…என் மேல் கோபமா?…நான் ஏதாச்சும் தப்பா சொல்லிட்டேனா?” நாலு பக்கமும் திரும்பித் திரும்பிச் சொன்னான்.

“நீங்க தப்பா எதுவும் சொல்லலை…சரியாய்த்தான் சொன்னீங்க…ஆனா உங்களோட அந்த ஆசையை நிறைவேற்றி வைக்க இந்த ஆவி உருவத்தால் முடியாதே?ன்னு நெனச்சுத்தான் நான் கவலையாயிட்டேன்!…அதான் உங்க மூஞ்சில முழிக்க அருகதை இல்லாம மறைஞ்சிட்டேன்” அவள் குரல் மட்டும் எங்கிருந்தோ கரகரத்துக் கேட்டது.

“அதெல்லாம் ஒண்ணுமில்லை…நீ மொதல்ல நேர்ல வா” என்றான் முருகன்.

“திட்டுவீங்களா?” ஆவி கேட்டது.

“திட்ட மாட்டேன்…அதுக்கு பதிலா ஒரு பரிசு குடுப்பேன்”

“என்ன பரிசு?” ஆர்வமாய்க் கேட்டது சங்கீதாவின் ஆவி.

“மொதல்ல நேர்ல வா…” என்றான் முருகன்.

அடுத்த நிமிடமே சங்கீதாவின் உருவம் அவன் கண்களுக்குத் தெரிய, நேரே அதனருகே சென்று அதன் உதட்டில் ஒரு “இச்” பதித்தான்.

நிஜத்தில் அவன் முத்தமிட்டது வெறும் காற்றில்தான். ஆனால், நேரிலேயே அவளை முத்தமிட்டதைப் போன்ற இன்பத்தை எய்தினான்.

ஆவியும் அப்படியே.

(தொடரும்)

< பதிணொன்றாம் பகுதி | பதிமூன்றாம் பாகம் >

கமலகண்ணன்

1 Comment

  • ♥️♥️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...