23rd October 2021
  • தொடர்
  • பேய் ரெஸ்டாரெண்ட் – 13 | முகில் தினகரன்

பேய் ரெஸ்டாரெண்ட் – 13 | முகில் தினகரன்

3 weeks ago
475
  • தொடர்
  • பேய் ரெஸ்டாரெண்ட் – 13 | முகில் தினகரன்

சரியாக மூன்று தினங்களுக்குப் பிறகு, ஊரிலிருந்து திரும்பினான் சிவா. வந்ததிலிருந்தே அவன் முகம் சரியில்லை. எதையோ பறி கொடுத்தவன் போலிருந்தான். யாரிடமும் சரியாக முகம் கொடுத்துப் பேசவில்லை.

இரண்டு தினங்கள் அவனை எந்த தொந்தரவும் பண்ணாமல் விட்டு விட்ட குணா, அன்று காலை நேரத்தில் மெல்லப் பேச்சுக் கொடுத்தான்.

“சிவாண்ணே!…ஊரில் என்ன நடந்தது?…ஏன் இப்படியிருக்கீங்க?”

பதிலே பேசவில்லை சிவா.

வைத்த கண் வாங்காமல் சிவாவையா பார்த்துக் கொண்டிருந்த குணா, “என்னண்ணே…நீங்க இப்படி இருக்க மாட்டீங்களே?…ஏன்..என்னாச்சு?ன்னு சொல்லுங்கண்ணே” மறுபடியும் குடைந்தான்,.

அவனை எரித்து விடுவது போல் பார்த்து விட்டு அங்கிருந்து நகரப் போனவனை, ஓடிப் போய்த் தடுத்தான் குள்ள குணா.

அப்போதுதான் அது நடந்தது.

தன் புறங்கையை அந்த குணாவை நோக்கி ஆவேசமாய் சிவா வீச, தெறித்துப் போய் விழுந்தான் குணா. தான் விழுந்தது கூட அவனுக்கு பெரிதாய் தெரியவில்லை, சிவாவின் கை அவன் மீது துளிக்கூட படவில்லை. “இது என்ன அதிசயமாயிருக்கு?…அவன் கை என் மேல் படவேயில்லை…அவன் வேகமாய் வீசியதில் “உஷ்ஷ்ஷ்”ன்னு காத்துதான் என் மேல் பட்டிச்சு…அதுக்கே நான் பத்தடி தள்ளிப் போய் விழுந்திருக்கேன்…கடவுளே!…சிவாவுக்கு என்னாச்சு?…எங்கிருந்து இந்த அசுர பலம் வந்திச்சு?”

தெறித்துப் போய் விழுந்தவனைத் திரும்பிக் கூடப் பார்க்காமல் தன் வழியே நடந்த சிவாவின் முதுகிற்குப் பின்னால் வந்து நின்ற குணா… “அண்ணே ஒரு வாரமா நம்ம நிகழ்ச்சி நடக்கலை…வாஷ் பேசின் பக்கம் கை கழுவ வர்ற கஸ்டமர்ஸெல்லாம் ஆசையோடு தேடிட்டு…ஏமாந்து போறாங்க!…அதனால இன்னிக்கு நாம ஆரம்பிச்சிடலாம் அண்ணே” என்றான் சன்னக் குரலில்.

“ம்” என்று உறுமலோடு சொல்லி விட்டு நகர்ந்தான் சிவா.

சொன்னது போலவே சரியாக எட்டரை மணிக்கு, பாதி எரிந்த சவம் போன்றதொரு தோற்றத்தில் வாஷ்பேசின் அருகே, சிவா வழக்கம் போல் காத்திருக்க, குள்ள குணா சிறுமி மேக்கப்பில் சற்றுத் தள்ளி நின்றிருந்தான்.

ரெஸ்டாரெண்டிற்குள் கொஞ்சம் கொஞ்சமாய் கூட்டம் வரத் தொடங்கியதும், காட்சிகளும் துவங்கின. எலும்புக் கூடு சப்ளையர்களும், பிசாசு உருவ ஊழியர்களும், ரத்தக் காட்டேரி கேஷியர்களும் தங்கள் பணியைச் சிறப்பாகச் செய்து வரும் கஸ்டமர்களை மகிழச் செய்து கொண்டிருந்தனர்..

வழக்கம் போல் எலும்புக் கூட்டின் தலை கழன்று விழுவதும், அந்தரத்தில் ரத்தச் சொட்டுடன் கை பறப்பதும் பிசகின்றி நடந்தேற ரெஸ்டாரெண்ட் களை கட்டியது.

பலராலும் விரும்பப்படும் நிகழ்ச்சியான சிவாவின் நிகழ்ச்சியை எதிர்பார்த்துக் கொண்டே ஒரு கும்பல் கை கழுவ வாஷ் பேஸின் அருகே வந்தது.

காத்திருந்த சிவா, அடித் தொண்டையில் கத்திக் கொண்டே ஓடிச் சென்று சிறுமி தோற்றத்திலிருந்த குள்ள குணாவின் கழுத்தைக் கடிக்கப் போனான்.

அப்போதுதான் குள்ள குணாவிற்கு உறைத்தது. “அடடா…சிவப்புச் சாயம் நிரப்பி வெச்ச பிளாஸ்டிக் கவரை எடுக்க மறந்திட்டோமே?…இப்ப என்ன பண்றது சிவா கழுத்தைக் கடிக்கற மாதிரி ஆக்ஷன் பண்ணும் போது நான் அதைப் பிதுக்கினால்தான் ரத்தம் வரும்?”

ஆனால், அவனைப் பீதியுறச் செய்யும் விதமாய் சிவா அவன் கழுத்தை உண்மையாகவே ஆழக் கடிக்க,

நிஜக் குருதி பீச்சியடித்தது.

அதைக் கண்ட கும்பல் அதை போலி ரத்தம் என்றெண்ணி கை தட்டி ரசித்தது.

கடிபட்ட கழுத்தைப் பிடித்துக் கொண்டு வலியால் துடித்தான் குள்ள குணா.

அதை அவனது சிறந்த நடிப்பென்று கருதி, “ப்பா…செமையா நடைக்கிறான்ப்பா….உள்ளார இருக்கற ஆளு” பாராட்டிச் சென்றது அந்தக் கூட்டம்.

கூட்டம் நகர்ந்ததும், அவசரமாய் எழுந்து சமையல் கூடத்தினுள் புகுந்து அங்கிருந்த வாஷ் பேஸினில் கழுத்தைக் கழுவி விட்டுப் பார்த்தான் குள்ள குணா. ஐந்து பற்கள் ஆழப் பதிந்து பெரிய காயத்தை ஏற்படுத்தியிருந்தன.

நேரே சிவாவிடம் வந்த குணா, “அண்ணே…நான் என்ன தப்புண்ணே பண்ணினேன்?…ஏண்ணே இப்படிப் பண்ணுனீங்க?” கழுத்தைக் காட்டிக் கேட்டான்.

அவனைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை சிவா.

“இதைப் போய் நான் ஆனந்தராஜ் சார் கிட்டே கம்ப்ளைண்ட் பண்ணப் போறேன்” கோபமாய்ச் சொல்லிப் பார்த்தான். அப்போதும் சிவா அசையவில்லை.

சில நிமிட யோசனைக்குப் பின், “இல்லைண்ணே…கம்ப்ளைண்ட் குடுக்கலைண்ணே!…இத்தனை நாளு அண்ணன் தம்பியா பழகிட்டோம்…அந்தப் பழக்கத்துக்காக நான் உங்க மேலே கம்ப்ளைண்ட் குடுக்கலை!…ஆனா ஒரு விஷயத்தை நீங்க என் கிட்டே சொல்லியே ஆகணும்ண்ணே!…சொல்லுங்க உங்க என்ன பிரச்சினை?…ஊர்ல என்ன நடந்திச்சு?” உண்மையான அக்கறையோடு கேட்டான்.

சிவாவிடமிருந்து பதில் இல்லை.

வேகமாய் சிவாவின் அருகில் சென்று அவன் முதுகைத் தட்டினான் குள்ள குணா, திரும்பிப் பார்த்த சிவா முகத்தில் இரண்டு கண்கள் இருந்தன. ஆனால், கருவிழி மட்டும் வெளுத்துப் போயிருந்தது.

அரண்டு போன குள்ள குணா, உடனே சுதாரித்துக் கொண்டு, “என்னண்ணே?…புது ஹாரர் ஐட்டமா?” சந்தோஷமாய்க் கேட்டான்.

“த…ள்…ளி…ப் போ…டா…” கர்ண கடூரக் குரலில் சிங்கம் கர்ஜிப்பது போல் சிவா சொல்ல, அது நாள் வரையில் அப்படியொரு வெளிப்பாட்டை அவனிடம் கண்டிராத குள்ள குணா உண்மையிலேயே மிரண்டு போனான்.

“அ….ண்….ணே?”

ஒரே தள்ளாய் அவனைக் கீழே தள்ளி விட்டு, தன் ஒப்பனை அறை நோக்கி “விடு…விடு”வென்று நடந்தான் சிவா.

போகும் அவனையே பரிதாபமாய்ப் பார்த்தான் குணா. “என்னாச்சு இவனுக்கு?…ஏன் இப்படியெல்லாம் நடந்துக்கறான்?”

*****

இரவு. ரெஸ்டாரெண்ட் மூடிய பிறகு முதல் தளத்திலிருந்த தன் அறைக்குள் வந்தான் திருமுருகன்.

அவன் வந்த சில நிமிடங்களிலேயே சங்கீதாவின் ஆவியும் உள்ளே வந்தது.

“என்ன ஆவி மேடம்….காலையிலிருந்து ஆளே கண்ணில் படலை…என்னாச்சு…உங்க ஆவியுலகத்துல ஏதாச்சும் கல்ச்சுரல் புரோக்ராமா?” சிரிப்புடன் கேட்டவன், ஆவியின் முகத்தைப் பார்த்ததும் தன் சிரிப்பை “பொசுக்”கென்று நிறுத்திக் கொண்டான்.

வழக்கமாய் தெளிவாகவும், களையாகவும் இருக்கும் சங்கீதாவின் ஆவி முகம் இன்று கலவர முகமாயிருந்தது.

அடிக்கடி திரும்பித் திரும்பி ஜன்னல் வழியே வெளியே பார்த்துக் கொண்டேயிருந்தது.

“என்ன சங்கீதா…ஏன் ஒரு மாதிரி பரபரப்பாய் இருக்கே?…எனி பிராப்ளம்?” கேட்டான்.

“இந்தக் கட்டிடத்துக்குள்ளே இன்னொரு துர் ஆவி புகுந்திருக்கு” அவள் ஆவி சொல்ல,

“வாட்?..துர் ஆவியா?…அப்படின்னா….?” புருவங்களை நெரித்துக் கொண்டு கேட்டான்.

“பொதுவாகவே துர் மரணம் அடைந்த மனிதர்களின் ஆவிகளெல்லாம் ரத்த வெறியுடன்தான் அலைந்து கொண்டிருக்கும்!….அவைகள் மனித உயிர்களுக்கு தீங்கு விளைவிப்பதையே தங்களுடைய முழு நேர வேலையாய் செய்து கொண்டிருக்கும்!…”

“அப்ப நீ கூட துர் மரணம்தானே?…நீ நல்லவளாய் இருக்கியே…எப்படி?”

“சரியாக் கேட்டிங்க…வாழும் காலத்தில் நான் கடவுள் பக்தி அதிகம் உள்ளவளாய் இருந்தேன்…அதனாலேயே நான் துர் மரணமடைந்தும் எனக்குள் தீய எண்ணங்கள் தோன்றவில்லை” ஆவி சொல்ல

“அதானே பார்த்தேன்…நீ என் செல்லக் குட்டியல்லவா?” சொல்லிக் கொண்டே அவள் கன்னத்தைக் கிள்ளினான். ஆனால் கன்னம்தான் கைக்கு அகப்படவில்லை. வெறும் காற்றில் ஒரு கிள்ளல் வீணானது.

“அந்த துர் ஆவி இங்கே யாருடைய உடம்பிற்குள்ளேயோ இருக்கு…ஆனா அது யாருன்னுதான் தெரியலை” என்று சங்கீதாவின் ஆவி சொல்ல,

“உனக்கும் கூடவா தெரியலை?…அன்னிக்கு இங்கிருந்தே அந்த சங்கரன் சுந்தராபுரத்துல ஒளிச்சு வெச்சிருந்த நகைகளைக் கண்டு பிடிச்சே?…இதைக் கண்டுபிடிக்க முடியலையா?” திருமுருகன் கேட்க,

“ம்ம்ம்…அதுதான் எனக்கும் புரியலை!…துர் ஆவி இருப்பதை என் உள்ளுணர்வு சொல்லுது…ஆனா அதுக்கும் கூட அது யார் உடம்பில் இருக்கு?ன்னு சொல்லத் தெரியலை!….”

“அதுதான் ஏன்?னு கேட்கறேன் சங்கீதாம்மா” திருமுருகன் கொஞ்சினான்.

“ஏன் சொல்ல முடியலைன்னா…ஒரு ஆவி ஒருத்தர் உடம்பிற்குள்ளே புகுந்ததுன்னா…அப்ப அந்த உடம்புக்குள் ரெண்டு ஆத்மா இருக்கும்…ரெட்டைக் குரல்ல பேசும்…ரெண்டு விதமான அங்க அசைவுகளைக் காட்டும்!…ஆனா இந்த துர் ஆவி இங்க இருக்கற யாரு ஒருத்தர் உடம்புல புகுந்திருக்குன்னு தெரியலை!…ஏன்னா…அவங்க ரெண்டு குரல்ல பேசி…ரெண்டு விதமா நடந்துக்கணும்…அப்படி யாருமே இங்கே இல்லையே!…எனக்கு ஒரு சந்தேகம் என்னன்னா?” சொல்லி விட்டு சங்கீதாவின் ஆவி கண்களை மூடிக் கொண்டு யோசிக்க,

“சொல்லுடா…என்ன சந்தேகம்”

“வந்து…வந்து…பயந்திடக் கூடாது!…” கைகளை ஆட்டிச் சொன்னது ஆவி.

“நீ என் கூட இருக்கும் போது எனக்கென்ன பயம் சங்கீதா?”

“இங்க செத்துப் போன ஒருத்தர்…உயிரோட நடமாடிட்டிருக்கார்” கண்களைப் பெரிதாக்கிக் கொண்டு சங்கீதாவின் ஆவி சொல்ல,

“என்னது…செத்து போன ஒருத்தன் உயிரோட நடமாடிட்டிருக்கானா?…அட தேவுடா…இதென்னடாது…படு பயங்கரமாயிருக்கு?”

“நீங்க பயப்படாதீங்க…அவன் கிட்டேயிருந்து உங்களைக் காப்பாத்த நானிருக்கேன்”

“பாரு சங்கீதா பயத்துல உடம்பெல்லாம் நடுங்குது…நீ வந்து என்னைக் கட்டிப் பிடிச்சுக்கிட்டா பயம் போயிடும்” சொல்லி விட்டு இரு கைகளையும் அவன் நீட்ட,

சோகமானது ஆவியின் முகம், “அந்தக் குடுப்பினைதான் நம்ம ரெண்டு பேருக்குமே இல்லாமப் போயிடுச்சே?”

“த பாரு சங்கீதா…தொட்டு உரசி…சரசம் பண்ணினாத்தான் சுகமா?…தொடாமலே…உன் உருவம் மிதக்கும் வெற்றிட்த்தைக் கட்டிப் பிடித்தே நான் சுகம் காணுவேன் தெரியுமா?” திருமுருகன் கண்ணடித்துச் சொல்ல,

அவன் ஆசையைத் தீர்க்கும் வீதமாய் சங்கீதாவின் ஆவி உருவம் திருமுருகனைக் கட்டிக் கொண்டது.

தனியாய் நின்று கண்டு, கண்களை மூடி, வெற்றிடத்தைக் கட்டிக் கொண்டு, இன்பத்தில் முனகும் அவனை ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டே சென்ற செக்யூரிட்டி, “இவன் என்ன லூஸா?…இல்லை….மெண்டலா?…இப்படியெல்லாம் காற்றைக் கட்டுப் பிடித்துக் கொண்டு என்னமோ பேரழகியைக் கட்டிப் பிடிச்ச மாதிரி கண்ணை மூடிக்கிட்டு அனுபவிக்கறானே?…யப்பா…எதுக்கும் இவன் கிட்டே கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருக்கணும்டா சாமீ” தனக்குள் சொல்லிக் கொண்டே சென்றான்.

சற்று தூரம் சென்ற பின் அந்த செக்யூரிட்டி கண்களுக்கு ஒரு கரிய உருவம் காம்பௌண்டு சுவரோரம் நடந்து செல்வது தெரிய, வேகமாய் நடந்து தன் கையிலிருந்த டார்ச் லைட் ஒளியை அந்த உருவத்தின் மீது பீச்ச,

“ர்ர்ர்ர்ரூரூரூரூரூம்ம்ம்ம்” என்ற அதி பயங்கர கத்தலோடு அந்த உருவம் திரும்பிப் பார்க்க, அதன் முகத்தைப் பார்த்த செக்யூரிட்டி, வெலவெலத்துப் போனான்.

முகத்தில் கரு விழியில்லாத வெள்ளைக் கண்கள், பெரிய மூக்கு, வாயிலிருந்து பாம்பின் நாக்கு போல் நீண்ட நாக்கு வெளியே நீட்டிக் கொண்டிருக்க,

“பே….பே…பேய்ய்ய்ய்ய்” என்று கத்திக் கொண்டு தன் கையிலிருந்த டார்ச் லைட்டை வீசியெறிந்தபடி ஓடினான்.

சிறிது தூரம் சென்ற பின் அது தன்னைத் துரத்திக் கொண்டு வருகிறதா என்பதை அறியும் விதத்தில் தலையைத் திருப்பிப் பார்த்தான் செக்யூரிட்டி.

அந்த உருவம் காணாமல் போயிருந்தது.

லேசான தைரியம் வந்து விட, நின்று கூர்ந்து பார்த்தான். “என்னது…எங்கே போச்சு?”

அப்போது அவன் தோளில் அந்தக் கை விழ,

சப்த நாடியும் ஒடுங்கிப் போனது அவனுக்கு. தலையைத் திருப்பாமலேயே “யா…ரு…யாரு” தந்தியடிக்கும் குரலில் கேட்டான்.

“என்ன செக்யூரிட்டி இந்த நேரத்துல இங்க நின்னுட்டிருக்கீங்க?” என்ற குரல் கேட்க, “இது யாரோட குரல் புதுசாயிருக்கே?” யோசித்தவாறே திரும்பினான் செக்யூரிட்டி.

சிவா நின்றிருந்தான் கையில் சிகரெட்டுடன்.

“சிவா தம்பி!…நீங்களா இப்ப பேசினீங்க?” செக்யூரிட்டி கேட்டான்.

“ஆமாம்”

“இல்லையே…இது உங்க குரல் மாதிரி இல்லையே?” செக்யூரிட்டி சிவாவின் முகத்தைக் கூர்ந்து பார்த்தபடி சொல்ல,

“உனக்கு வயசாயிடுச்சு…அதான் குரல் கூட மறந்து போச்சு” என்றான் சிவா.

குனிந்து அவன் கையிலிருந்த சிகரெட்டைப் பார்த்த செக்யூரிட்டி, “இதென்ன தம்பி புதுப் பழக்கம்?…நீங்கதான் சிகரெட்…தண்ணி…எந்தப் பழக்கமும் இல்லாதவராயிற்றே?” மீண்டும் செக்யூரிட்டி குடைந்தான்.

“த பாரு பெருசு…உனக்கு இப்ப என்ன வேணும்?…எதுக்கு இந்த நேரத்துல இங்க உலாத்தறே?” கோபமானான் சிவா.

“நல்லாக் கேட்டீங்க தம்பி!…நான் செக்யூரிட்டி…அரை மணி நேரத்துக்கு ஒரு தரம் இப்படி ரவுண்ட்ஸ் வர்றதுக்குத்தான் எனக்கு சம்பளம் குடுக்கறாங்க” என்றான் செக்யூரிட்டி.

“அப்ப போக வேண்டியதுதானே?….”

“போயிட்டுத்தான் இருந்தேன்…அந்த இடத்துல ஒரு கருப்பு உருவம் போயிட்டிருந்திச்சு…பக்கத்துல போய்ப் பார்த்தேன்…நடு…நடு…ங்கிட்டேன்” என்றான் செக்யூரிட்டி.

“ப்ச்….”என்று அலட்சியம் காட்டினான் சிவா.

“தம்பி…சொன்னா நம்ப மாட்டீங்க! …அந்த உருவத்துக்கு முகத்தில் கரு விழியில்லாத வெள்ளைக் கண்கள், பெரிய மூக்கு, வாயிலிருந்து பாம்பின் நாக்கு போல் நீண்ட நாக்கு வெளியே நீட்டிக் கொண்டிருக்க” விழியிரண்டையும் பெரிதாக்கிக் கொண்டு அந்த செக்யூரிட்டி சொல்ல,

“ஹா….ஹா…ஹா…”என்று அந்த இடமே அதிரும் வகையில் சிரித்தான் சிவா.

“என்ன தம்பி சிரிக்கறீங்க?”

“பெருசு…நீ சொன்னதைக் கேட்டா சிரிப்புத்தான் வருது…சின்ன வயசுல நெறைய திகில் படம் பார்ப்பியா பெருசு…அப்படிப் பார்த்தாத்தான் இப்படியெல்லாம் மனப் பிரமை தோன்றும்” என்றான் சிவா.

“அடப் போப்பா..நான் பயந்து போய்க் கிடக்கேன் நீ என்னமோ நக்கல் பண்றியே?” என்ற செக்யூரிட்டி, சட்டென்று சிவா பக்கம் திரும்பி, “தம்பி..நீங்க இந்த இடத்துல எத்தனை நேரமா நிக்கறீங்க?” கேட்டான்.

“ம்..பத்து நிமிஷமா நிக்கறேன்…ஏன்?”

“அப்படின்னா நிச்சயம் நீங்களும் அதைப் பார்த்திருக்கணுமே?”

“இல்லையே…அது எங்க போச்சு?” சிவா கேட்டான்.

“நீங்க தங்கியிருக்கற இடத்துக்குத்தான் போச்சு…எதுக்கும் பத்திரமா இருங்க” என்று சொல்லி விட்டு செக்யூரிட்டி நகர,

“பெருசு…”சிவா அழைத்தான்.

“என்ன தம்பி” கேட்டவாறே திரும்பிய செக்யூரிட்டியின் கழுத்தைப் பற்றித் தன் அருகில் இழுத்த சிவா, அவர் எதிர்பாராத விநாடியில், கழுத்தை ஆழமாய்க் கடித்து ரத்தத்தை உறிஞ்ச ஆரம்பித்தான்.

சன்னக் குரலில் வினோதமாய்க் கத்திய செக்யூரிட்டி சில வினாடிகளிலேயே சவமாய்ச் சரிந்தார்.

கையிலிருந்த சிகரெட் துண்டை வீசியெறிவது போல் அந்த செக்யூரிட்டி உடலை வீசியெறிந்து விட்டு நடந்தான் சிவா.

– தொடரும்…

< பன்னிரண்டாம் பாகம் | பதிநான்காம் பாகம் >

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

October 2021
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031