நடிப்பில் தனி முத்திரை பதித்த நாகேஷ்

 நடிப்பில் தனி முத்திரை பதித்த நாகேஷ்

உடல்மொழி நடிப்பில் தனி முத்திரை பதித்தவர் நாகேஷ்

தமிழ் சினிமா நகைச்சுவையில் தனி முத்திரை பதித்தவர் நடிகர் நாகேஷ். அவரது மாஸ்டர் பீஸ் படங்கள் ஒன்றல்ல பல. குறிப்பாக, நீர்க்குமிழி, திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள், சர்வர் சுந்தரம், எதிர்நீச்சல், பிற்காலத்தில் வில்லனாக அபூர்வ சகோதரர்கள் வரை தன் தனி நடிப்பால் நீண்ட நெடிய நாட்கள் தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த நட்சத்திரம் நாகேஷ். அவரின் 89வது பிறந்த நாள் இன்று.

நாகேஷ் வாய்ப்பு தேடும்போது நாகேஷின் திறமை உணர்ந்த ஒருவர் நாகேஷை ‘பராசக்தி’ படத்தின் இயக்குநர் கிருஷ்ணன் பஞ்சு விடம் அழைத்துக்கொண்டு செல்கிறார். அப்போது கிருஷ்ணன் பஞ்சு சட்டை பட்டனைக் கழற்றி விட்டுக்கொண்டு இருந்தார். அழைத்துக் கொண்டு சென்ற நபர் நாகேஷை கிருஷ்ணன் பஞ்சுவிடம் அறிமுகப் படுத்தும்போது நாகேஷ் டேபிளின் கீழே எதையோ தேடிக்கொண் டிருந்தார். கிருஷ்ணன்பஞ்சுவும் நண்பரும் அவரையே பார்த்துக்கொண் டிருந்தனர். என்ன ஏதென்று விசாரித்தார்கள். “இல்லை. சாரோட சட்டை பட்டன்கள் எங்கே என்று தேடிக்கொண்டிருந்தேன்” என்று நாகேஷ் கூறியதும் அங்கிருந்த அனைவரும் சிரித்துவிட்டனர். காரணம் கிருஷ்ணன்பஞ்சு எப்போதும் சட்டையின் பட்டன்களைப் போடாமல் படப்பிடிப்பில் அமர்ந்திருப்பார். பிறகு அவருக்கு வாய்ப்பு வழங்கப் பட்டது என்று செய்தி மிகச் சுவாரசியமானது. நடிகர்கள் உருவாக்கப்படு வதில்லை. உருவாகிறார்கள்.

நடிப்புக்கு உடல்வாகு, உடல் தகுதி, முகவெட்டு, நிறம், தனித் திறன்கள் என எதுவும் தேவையில்லை. நடிப்புக்கலையை முகபாவங் களோடு ஒரு சாதாரண மனிதன் தோன்றத்தில் அந்த கேரடக்ராகவே மாறினால் போதும் என்கிற ஜனரஞ்சக நடிகர் நாகேஷ்.

முகத்தில் இருந்த அம்மைத் தழும்புகள் நாகேஷின் முன்னேற்றத்திற்கு பாதகமாக இருந்தாலும், பாதகத்தையே படிக்கட்டு களாக்கி விறுவிறுவென முன்னேறினார்.

நகைச்சுவை நடிப்புதான் மிகவும் கடினமானது. அதில் அனாயச மாகத் திறம்படச் செய்தவர் நாகேஷ். தமிழ்த் திரையில் பலவிதமான திறமைகளுடன் உள்ள நடிகர்கள் உள்ளார்கள். குறிப்பாக, பாடி லாங்வேஜ், டயலாக் டெலிவரி, வாய்ஸ் மாடுலேஷன், ஐடியா ஜோக்குகளின் மூலம் சிலர் தனித்தனி திறமை படைத்தவர்கள் உண்டு. அதில் நாகேஷ் உடல்மொழியில், டயலாக் டெலிவரியில், பாடி லாங் வேஜ், வாய்ஸ் மாடுலேஷன் போன்ற அனைத்துத் தன்மைகளிலும் சிறந்த விளங்கியவர். அவருக்கு நிகர் அவரேதான். திருவிளையாடல் படத்தில் தருமியாக வரும் நாகேஷ் புலவராக வரும் சிவாஜியிடம் பேசும் காட்சியில் நாகேஷே தனிப்பட்டு தெரிவார்.

தில்லானா மோகனாம்பாள் படத்தில் நாகேஷ் இல்லாமல் அந்தப் படமே நகராது என்கிற நிலைதான். தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன், ஜெயசங்கர், ரவிச்சந்திரன் என்ற அன்றைய பிரபல கதா நாயகர்கள் அனைவருடனும் படம் முழுக்க வரும் கதாபாத்திரங்களில் நடித்த நாகேஷ் 30 ஆண்டுகள் காமெடியன், ஹீரோ, வில்லன், குணச் சித்திர கதாப்பாத்திரம் என காலம் முழுக்க மக்களை மகிழ்ச்சிப்படுத்தி கொண்டேயிருந்தார். இவ்வளவு சாதித்துள்ள நாகேசுக்குப் பெரிய விருதுகள் எதுவும் கிடைக்கவில்லை என்பது மிகவும் வருத்தமான விஷயம்.

நாகேஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட நாகேஷ் கன்னடப் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். தமிழ்நாடு, தாராபுரம் பகுதியில் கன்னட மாதவர்கள் வாழும் கொழிஞ்சிவாடி என்ற ஊரில் பிறந்தார். கிருஷ்ணன் ராவ்-ருக்மணி அம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந் தார். இவர் தந்தை கிருஷ்ணன் ராவ் கர்நாடகாவில் அரிசிக்கரே என்ற ஊரில் உள்ள ரயில் நிலையத்தில் அதிகாரியாகப் பணியாற்றிவந்தார்.

தாராபுரத்தில் தனது பத்தாம் வகுப்பு படிப்பை முடித்துக்கொண்டு கோவை பி.எஸ்.ஜி. கலைக் கல்லூரியில் சேர்ந்து படித்தார். இவர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது அம்மை நோய் வந்ததால் அவரது முகத்தில் தழும்புகள் உண்டானது. பின்பு நாகேஷ் கோவையில் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, தனது தந்தை பணியாற்றிய ரயில்வே இலாக்காவில் திருப்பூர் ரயில் நிலையத்தில் எழுத்தாளராகப் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்ததால் சிறிது காலம் திரைக்குச் செல்லும் காலம் வரை அங்கு பணியாற்றிவந்தார்.

சிறுவயதில் இருந்தே நடிப்பின் மீது பற்றுக்கொண்ட நாகேஷ் அமெச்சூர் நாடகங்களில் நடித்து வந்தார். மணியன் எழுதிய ‘டாக்டர் நிர்மலா’ நாடகத்தில், ‘தை தண்டபாணி’ என்ற பாத்திரத்தில் தை, தை என்று நோயாளியாய் மேடையில் குதித்ததால், ‘தை நாகேஷ்’ என்ற பெயரும் ஏற்பட்டது.

ஈரோடு அருகிலுள்ள தாராபுரத்தைச் சொந்த ஊராகக் கொண்ட நாகேஷ் 1933-ம் ஆண்டு பிறந்தார். இளம் வயதிலேயே நாகேஷை நாடகம் ஆட்கொண்டது. பெரும் போராட்டங்களுக்குப் பின் ‘தாமரைக் குளம்’ என்ற படத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். அடுத்து ஸ்ரீதரின் ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படம் மூலம் நகைச்சுவை நடிகர் ஆனார்.

அதைத் தொடர்ந்து வந்த ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் செல்லப்பா கதாபாத்திரம் மூலம் காமெடி நடிப்பிற்கென தனியொரு பாணியை அறிமுகப்படுத்தினார். குறிப்பாய், பாலையாவிடம் கதை சொல்லும் காட்சிகள் எல்லா காலகட்டத்திலும் ரசிக்கக் கூடியவை.

காதலிக்க நேரமில்லை கொடுத்த வெற்றியால் அடுத்தடுத்து வாய்ப்புகள் நாகேஷை நாடி வந்தன. தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக உருவெடுத்தார் நாகேஷ். சர்வர் சுந்தரம் திரைப்படத்தில் நாகேஷ் வெளிப்படுத்திய நடிப்பு, அழுத்தமான ஒரு இடத்தை தமிழ் திரையுலகில் அவருக்குப் பெற்றுத் தந்தது.

வயோதிகம் சூழ்ந்தபோதும் தன் நடிப்பில் குறைவு ஏற்படாமல் பார்த்துக் கொண்டார் நாகேஷ். அதனால், ரஜினி கமல் என அடுத்த தலைமுறை சூப்பர் ஸ்டார் நடிகர்களின் படங்களிலும் சூப்பர் நடிகராக வலம் வர முடிந்தது.

நாகேஷ் கதாநாயகனாக நடித்த நீர்க்குமிழி மிகப்பெரிய வெற்றி யைப் பெற்றதுடன் சிறந்த நடிப்புத் திறமை கொண்டவர் நாகேஷ் என்பதை ரசிகர்களுக்கு உணர்த்தியது. தேன்கிண்ணம், நவக்கிரகம், எதிர் நீச்சல், நீர்க்குமிழி, யாருக்காக அழுதான், அனுபவி ராஜா அனுபவி போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

நாகேஷ் தமிழ்ப் படங்கள் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 1000 திரைப்படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். இவரின் நகைச்சுவை பாணி ஹாலிவுட் நடிகர் ஜெர்ரி லூயிஸின் பாணியை ஒத்திருக்கும்.

கமல்ஹாசன் தயாரித்த அபூர்வ சகோதரர்கள் படத்தில் கொடும் வில்லனாகவும் இவர் தோன்றினார். அதற்குப் பின் கமல்ஹாசனின் பல படங்களில் நாகேஷ் நடித்தார். மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும், அவ்வை சண்முகி, பஞ்சதந்திரம் போன்ற படங்களில் நடித்துள்ளார். கமலின் ‘தசாவதாரம்’ திரைப்படம்தான், நாகேஷுக்கு கடைசி திரைப்படம். தமிழ்த்திரை உலகம் உள்ளளவும் நாகேஷ் நடிப்பு உயிர்ப்புடன் இருக்கும்.

கமலகண்ணன்

2 Comments

  • நாகேஷ் பற்றிய கட்டுரை மிக எளிமையாகவும் யதார்த்தமாகவும் இருந்தது.மகிழ்ச்சி

  • One n only Nagesh.

    தமிழ் சினிமாவிற்குக் கிடைத்த ரத்தினங்களில் ஒருவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...