அஷ்ட நாகன் – 7| பெண்ணாகடம் பா. பிரதாப்
-அமானுஷ்ய தொடர்-
உலகிலுள்ள ஒவ்வொரு மனிதனும் செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் எண்ணுகின்றனர்.இதில் தவறொன்றும் இல்லை. ஆனால், நாம் சம்பாதிக்கும் செல்வம் நேர்மையான வழியில் ஈட்டிய செல்வமாக இருக்க வேண்டும். நாம் செய்யும் பாவ-புண்ணியங்கள் நம்மை மட்டுமின்றி, நம் வாரிசுகளையும் நம் சந்ததியினரையும் தொடரும் என்பதை மறக்க வேண்டாம்.ஒரு மனிதன்,தன் இறப்பிற்கு பிறகு எதையும் எடுத்துச் செல்ல போவதில்லை ! அவன் செய்த பாவ-புண்ணியங்கள் மட்டுமே அவன் ஈட்டிய உண்மையான சொத்தாகும்.நம் இன்றைய செயல்களே, நம் நாளைய வாழ்க்கையை நிர்ணயிக்கிறது. அதைப்போல,இந்த ஜென்மத்தில் நாம் செய்யும் பாவ-புண்ணியங்களுக்கு ஏற்பவே நம் அடுத்த ஜென்மம் அமைகிறது.நம் விதியை,நாம் தான் எழுதிக் கொள்கிறோம். நாக வழிபாடு செய்வதன் மூலம் செல்வ வளம் பெருகும். அருகாமையில் பாம்புப் புற்று இருந்தால், செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் புற்றின் மீது மஞ்சள்-குங்குமம் தூவி வழிபட்டாலும் செல்வ செழிப்பு ஏற்படும்.பாம்பு தன் கழுத்தில் மாலையாக விழுவது போல கனவுக் கண்டால் வெகு விரைவில் செல்வந்தன் ஆகும் அதிஷ்ட அமைப்பு ஏற்படும்.
– நாக சாஸ்திர ஏடுகளிலிருந்து.-
கொல்லிமலை !
மாலை நேரம்.
கொல்லிமலையில் உள்ள ‘விமலா’ லாட்ஜில் இரு அறைகள் எடுத்துவிட்டு, தங்கள் பொருட்களையும் அங்கேயே வைத்துவிட்டு; சிறிது நேர ஓய்விற்கு பிறகு நந்தன்,அரவிந்த் மற்றும் யோகினி மூவரும் ‘அறப்பளீஸ்வரர் கோயில்’ நோக்கி செல்ல ஆரம்பித்தனர்.
கொல்லிமலையில் ‘வளப்பூர் நாடு’ என்ற இடத்தில் தான் அறப்பாளீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.
‘அறம் வளர்த்த நாயகி உடனுறை அறப்பாளீஸ்வரர் திருக்கோயில்’ என்ற அறிவிப்பு பலகை அவர்களை வரவேற்றது.
கோயில் நல்ல இயற்கை சூழலில் அமைந்திருந்தது.குளிரான தென்றல் காற்று வீசியது.கோயிலுக்கு வெளியே ஆங்காங்கே சில பூக்கடைகள்,ஹோட்டல் மற்றும் படக்கடைகள் காணப்பட்டன.
அரவிந்துடன் யோகினி பேசிக்கொண்டே வந்தாள்.
நந்தன் சற்று தள்ளி நடந்து வந்துக் கொண்டிருந்தான். ‘கொல்லிமலை எவ்வளவு மாறியிருக்கிறது’ என்று வியப்புடன் சிந்தித்துக் கொண்டிருந்தான் நந்தன்.
“தாயி ! இந்த கோயிலுக்கு புருசன்-பொண்டாட்டியா வர்றவக, சாமிக்கு ‘ஜாதி மல்லி’ பூவை போட்டு கும்பிட்டாக்க சீக்கிரமே நல்ல அழகான குழந்தை பொறக்கும்.இந்தா தாயி…இந்த பூ மாலையை வாங்கிட்டுப் போ” என்றபடி ஒரு ஜாதி மல்லி மாலையும்,அர்ச்சனைத் தட்டையும் நீட்டினாள் பூக்கடைக்காரி.
யோகினி சிரித்துக் கொண்டே “நாங்க புருஷன்-பொண்டாட்டியில்ல ! ஜஸ்ட் ஃப்ரண்ட்ஸ்”என்றாள்.
யோகினியின் பதிலைக் கேட்ட பூக்காரி அசடு வழிந்தாள்.
“மன்னிச்சிடுங்கம்மா… தெரியாமல் சொல்லிட்டேன்.இந்த மாலையையும்,அர்ச்சனை தட்டையும் வாங்கிட்டு போயி சாமி கும்பிடுங்க. அறப்பளீஸ்வரர் அருளால உங்க மனம் போல எல்லாம் நல்லதாகவே நடக்கும்” என்றாள்.
அவள் தன் வியாபரத்திலே குறியாக இருப்பதை உணர்ந்த யோகினி,”மொத்தம் எவ்வளவு சொல்லுமா?” என்றாள்.
“நூத்து இருவது ரூவாம்மா” என்றாள்.
“என்னது,நூத்து இருபது ரூபாயா?” என்ற வாயை பிளந்தான் அரவிந்த்.
நந்தன் நடப்பது அனைத்தையும் மெளனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.
“பூவெல்லாம் விலை ஏறிடிச்சு சார்.உங்களுக்காக வேணும்னா பத்து ரூபாய் குறைச்சிக்கிறேன் ” என்றாள்.
“நானும் கொல்லிமலைக்காரன் தான்.’வாசலூர் பட்டி’ என்றான் அரவிந்த்.
பூக்காரி பேச வார்த்தைகளின்றி பூ மாலையையும், அர்ச்சனைத் தட்டையும் நீட்டினாள்.
அரவிந்த் ஒரு நூறு ரூபாய் தாளை கொடுத்துவிட்டு,பூ மாலையையும் அர்ச்சனைத் தட்டையும் வாங்கி யோகினி கையில் கொடுத்தான்.
மூவரும் கோயிலுக்குள் நுழைந்தனர்.
“நந்தா…ஏன்டா ஒரு மாதிரி இறுக்கமா இருக்க?ரிலாக்ஸா இருடா” என்றான் அரவிந்த்.
“அதெல்லாம் ஒண்ணுமில்ல அரவிந்தா,நம்ம வாழ்க்கை எதை நோக்கி போகுதுன்னே தெரியல.நடராஜன் தாத்தாவோட ஆசைப்படி,அவரோட அஸ்தியை ‘ஆகாய கங்கை’ அருவியில கரைச்சிட்டு,ரெண்டு மூணு நாள் கொல்லிமலையை சுத்திப் பாரத்துட்டு திருச்சிக்கு கிளம்பிடுவோம்.”
“அப்போ,நான் கண்ட பாம்பு கனவு பலிக்காதுன்னு சொல்லவர்றியா?”
“அரவிந்தா ! என்னால இப்ப எந்த முடிவுக்கும் வர முடியில.முதல்ல வந்த வேலையை பார்க்கலாம்” என்றான் நந்தன்.
மூவரும் கோயிலின் கல் மண்டபத்திற்குள் செல்ல ஆரம்பித்தனர்.
“நந்தன் இந்த கோயிலைப் பற்றி உங்களுக்கு தெரிஞ்ச விஷயங்களை சொல்லங்க” என்றாள் யோகினி.
நந்தனும் தனக்கு தெரிந்த தகவல்களை சொல்ல
ஆரம்பித்தான்.
“இந்த கோயில் ஆயிரத்து முந்நூறு வருஷம் பழமையானது.தஞ்சாவூர் பெரியக் கோயிலைக் கட்டின ‘ராஜ ராஜ சோழ’னோட பாட்டி ‘செம்பியன் மாதேவியார்’ இந்த கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செஞ்சிருக்காங்களாம். அந்த செம்பியன் மாதேவியார் வேற யாருமில்லை ! ‘சிவஞான கண்டராதித்த சோழ’னோட மனைவி. அவங்க கோயிலுக்கு நிறைய நன்கொடையும் வழங்கியிருக்காங்க.அதுமட்டுமில்லாமல், ‘பரகேசரி வர்மன்’ அப்படிங்குற சோழ மன்னனும் இந்த கோயிலை மேம்படுத்த பக்கத்துல இருக்குற மூன்று கிராமங்களோட நில வருவாயைப் பயன்படுத்த சொல்லியிருக்கார் ” என்று அறப்பாளீஸ்வரர் கோயிலைப் பற்றி வரலாற்று ரீதியான ஒரு நீண்ட விளக்கத்தை அளித்தான் நந்தன்.
“வாவ் ! நீங்க சொல்ற விஷயம் புதுசாகவும், சுவாரஸ்யமாகவும் இருக்கு.கண்டிப்பா நான் எழுதுற நாவலுக்கு பயன்படும். சோழர்கள் மட்டும் தான் இந்த கோயிலுக்கு இவ்வளவும் செஞ்சாங்களா?”
“சோழர்கள் மட்டுமில்ல, நாயக்க மன்னர்களும் இந்த கோயிலுக்கு நிறைய கொடை வழங்குனதாக கல்வெட்டு சொல்லது. குறிப்பாக, ‘விஸ்வநாத வீரப்பமுத்து வீரப்பநாயக்கர்’ என்ற மன்னர் இந்த கோயிலுக்கு அளவில்லாமல் செஞ்சிருக்கார்.”
“இந்த விஷயமெல்லாம் உனக்கு எப்படிடா தெரியும்?” என்று வியந்து கேட்டான் அரவிந்த்.
“எனக்கு சின்ன வயசாக இருக்கும் போது பலமுறை இந்த கோயிலுக்கு வந்திருக்கேன்.அப்படி இருக்கையில…ஒருநாள் நான் கோயிலுக்கு வந்த சமயத்துல, ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர் கோயில்ல இருக்குற கல்வெட்டை படிச்சிட்டு இருந்தாரு.அவரு மூலமாகத்தான் எனக்கு இந்த தகவல்கள் தெரியும்.”
நந்தா…பரவாயில்லடா ! சின்ன வயசுல நடந்த விஷயத்தை இன்னமும் ஞாபகம் வச்சிருக்க.நீ பெரிய ஆளு தான்” என்று நந்தனை புகழ்ந்தான் அரவிந்த்.
நந்தன், தன் மன இறுக்கத்தை மறந்து சிரிக்க ஆரம்பித்தான்.யோகினியும் உடன் சிரித்தாள்.
“அரவிந்தா ! இந்த கோயிலைப் பற்றி உனக்கு தெரிஞ்ச விஷயத்தை சொல்லுடா ! ” என்று அரவிந்தனை நீட்டினான் நந்தன்.
அரவிந்தனும் ஆர்வத்துடன் கூற ஆரம்பித்தான்.
யோகினி தன் செவிகளை கூர்மையாக்கிக் கொண்டாள்.
“அறப்பளீஸ்வரர் கோயிலைப் பற்றி திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் அருணகிரி நாதர் பாடியிருக்காங்க.பதினெட்டு சித்தர்களும் ‘அறப்பளிஸ்வரரையும் அறம் வளர்த்த நாயகியையும்’ தினமும் சூட்சம ரூபத்தில் வந்து வணங்கிட்டு போறாங்க” என்று இரத்தின சுருக்கமாக கூறினான் அரவிந்த்.
இருவரும் சொன்ன விஷயங்களை வைத்து, நந்தன் எந்த ஒரு விஷயத்தையும் வரலாற்று ரீதியாக அணுகுபவன் என்றும் ! அரவிந்தன் எந்தவொரு விஷயத்தையும் ஆன்மீக ரீதியாக அணுகுபவன் என்று ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்தாள் யோகினி.
பின்னர், கோயிலின் கருவறைக்கு சென்ற மூவரும் சிவாச்சாரியாரிடம் தங்கள் மூவரின் பெயர்,இராசி மற்றும் ஜென்ம நட்சத்திரத்தைக் கூறி அர்ச்சனை செய்து விட்டு ஈசனையும் உண்மையையும் மனதார வேண்டிக் கொண்டனர்.
சிறிது நேரத்திற்கு பிறகு கோயில் சந்நிதியில் அமர்ந்துக் கொண்டு மூவரும் தங்களைப் பற்றிய விஷயங்களை மனம் விட்டு பேசி பகிர்ந்துக் கொண்டனர்.
இதுவரை பெண்கள் வாசமேயின்றி வாழ்ந்து வந்த அரவிந்தனுக்கும் நந்தனுக்கும், யோகினியின் நட்பு ஒரு புத்துணர்ச்சியை கொடுத்தது.
மூவரும் கோயிலை விட்டு வெளியே வந்துக் கொண்டிருந்தனர்.
அப்போது உள்ளூர் வாசிகள் பேசிக்கொண்ட விஷயம் மூவரையும் திக்குமுக்காட வைத்தது.
அது…
கோரக்கர் குகைக்கு செல்லும் வழிக்கு அருகில் ‘ஜந்துத் தலை’ நாகத்தை ‘முருகேசன்’ என்ற மலைப்பளியன் கண்டானாம்.
நம்பினால் நம்புங்கள் !
8 Comments
வாழ்க வளத்துடன் மற்றும் நலத்துடன் மிக சிறப்பு அய்யா வாழ்க வளத்துடன்
மிக்க நன்றி இனிய நண்பரே… மனம் மகிழ்கிறேன்.
Learning a lot through this story
Thanks
Thank you so much friend for your support and feedback.
வாரத்துக்கு வாரம் அமானுஷ்யம் ஆச்சரியங்களும் எதிர்பார்ப்பும் கூடிக்கொண்டே செல்கிறது. தொடர் மிகவும் விறுவிறுப்பாக செல்கிறது . வாழ்த்துக்கள் நண்பரே.
மிக்க மகிழ்ச்சி அன்பு நண்பரே… எல்லாம் ஈசன் செயல் !
வாழ்த்துக்கள் எனதருமை தோழமையே 💐 அறப்பளீஸ்வர் கோயில் வரலாற்றை ஒரளவு தெரிந்து கொண்டேன் அது மட்டுமல்ல அதை பற்றி தேடி படிக்கவும் ஆர்வத்தை தூண்டுகிறது உங்கள் கதை தோழரே..
சோழர் காலத்தில் இந்த கதை ஒரளவு தொடுவதை பார்க்கையில் ஆர்வம் அதிகரிக்கிறது.. நாயகர்கள் அதன் பின்னர் வந்தவர்கள் அந்த கோவிலை எடுத்து நடத்தினார்கள் என்று படிக்கையில் உடல் சிலிர்த்தது சகோ..
அருமையான கதை நகர்கின்றது. வாழ்த்துக்கள் எனதருமை தோழமையே 💐🤝
மிக்க நன்றி நண்பரே