வாகினி – 21| மோ. ரவிந்தர்

 வாகினி – 21| மோ. ரவிந்தர்

‘ச்சே, அவசரத்துக்குக் காசு கேட்டா இப்படி எல்லாருமே ஒரேடியா இல்லேன்னு கையை விரிக்கிறாங்களே. வட்டிக்கு தானே கேட்டேன் கொடுக்கக் கூடாதா இந்தப் பாவி மனுசங்க. இதைத் தவிர வேற வழியே காட்டக் கூடாதா கடவுளே ?’ என்ற பெரும் சிந்தனையுடன் வீட்டை கூட்டி பெருக்கி துடைத்துக் சுத்தம் செய்து கொண்டிருந்தாள், கஸ்தூரி.

அந்த நேரம்.

“வீட்டை துடைச்சி மொழுகுற வேலையெல்லாம் காலையிலேயே செய்து இருக்கக் கூடாதா. மனுஷன் வந்தா எங்க உட்கார்றது?” என்ற கேள்வியுடன் வீட்டுக்குள் நுழைந்தார், சதாசிவம்.

“நான் என்ன சாணி போட்டா வீட்டை மொழிகிட்டு இருக்கேன்? ஈரத்துணியில தானே துடைச்சிட்டுருக்கேன் அப்படிக் கட்டில் மேல உக்காருங்க” என்று கூறிவிட்டு தன் வேலையில் நாட்டம் காட்டினாள், கஸ்தூரி.

சரி என்று கட்டில் மீது போய் அமர்ந்தார், சதாசிவம்.

கஸ்தூரி பேச்சை மெதுவாக ஆரம்பித்தாள்.

“உங்க முதலாளி பணத்துக்கு ஏற்பாடு பண்ணித் தராருனு சொல்லிருந்தீங்களே. அது என்ன ஆச்சு?”

“கிட்டத்தட்ட எல்லாம் வேலையும் முடிஞ்சிடுச்சு, ஆனா ?” என்று சட்டென்று பேச்சை நிறுத்தினார்.

“ஆனா, என்ன?”

“பேங்க்ல பணம் தர ஒத்துக்கிட்டாங்க. ஆனா, ரெண்டு பேருடைய ஷுருட்டி தேவையாம். ஒண்ணு எங்க முதலாளி போடறதா சொல்லிட்டாரு. இன்னொருத்தருக்கு தான் என்ன பண்றதுன்னு தெரியாம திரிஞ்சிட்டு இருக்கேன்” என்று தன் வருத்தத்தைத் தெரிவித்தார், சதாசிவம்.

“பார்க்கலாம், எல்லாக் கஷ்டத்திற்கும் ஒரு விடிவு காலம் இருக்காமல் போய் விடும்.” என்று ஒரு பதிலை முன்வைத்தாள், கஸ்தூரி.

“கஸ்தூரி… கஸ்தூரி” என்று பெரும் குரல் கொடுத்துக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தாள், திலகவதி.

மகாலட்சுமியின் தாய் திலகவதி அடுத்தகட்ட பொறுப்பிற்குத் தயாராகிவிட்டாள். காரணம், மகாலட்சுமியை தன் வீட்டு மருமகளாக ஏற்றுக்கொள்ள நாளையே நிச்சயதார்த்தம் செய்து கொள்ளலாம் என்று, நண்பர் ஒருவர் மூலமாகக் கபிலனின் தாய் ரேவதி, திலகவதி வீட்டிற்குத் தூது அனுப்ப அதற்கான அவசர வேலையில் இறங்கினாள், இவள்.

“உள்ளே வாக்கா… என்ன திடீர் விஜயம்?” என்று கஸ்தூரி அழைத்தாள்.

அண்ணி தன் வீட்டுக்குள் நுழைந்ததும் கட்டிலை விட்டு மரியாதை நிமிர்த்தமாக மெல்ல எழுந்தார், சதாசிவம்.

“உட்காருங்க தம்பி, எதுக்கு இப்ப எழுந்துட்டு” என்று கூறிவிட்டு, வந்த விஷயத்தைக் கூறத் தொடங்கினாள். திலகவதி.

“ஒன்னும்மில்ல கஸ்தூரி, நாளைக்கு மகாலட்சுமியை பொண்ணு பார்க்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வீட்டுக்கு வராங்க. முறைக்கு அவர்தான் வந்து உங்கள கூப்பிடனும். அவருக்கு வேலை பளு அதிகமாக இருக்குன்னு என்ன அனுப்பினாரு” என்று கணவன் கோரிக்கையைத் தன் கோரிக்கையாக முன்வைத்தார், திலகவதி.

“அண்ணி, எனக்கு எதுக்கு அழைப்பு எல்லாம். வாடான்னு சொன்னா, நான் வந்து முன்ன நிற்க மாட்டேனா… ?” என்று கூறிவிட்டு…

“ஆமா, மாப்பிள்ளை யார்? எந்த ஊர்?” என்று ஒரு கேள்வி எழுப்பினார், சதாசிவம்.

திலகவதிக்கு சட்டென்று இந்தக் கேள்விக்குப் பதிலை கூற முடியவில்லை நா தயங்கியது. இருந்தும், ‘கத்தரிக்காய் முற்றினால் கடைத் தெருவுக்கு வந்துதானே ஆக வேண்டும்’ என்ற எண்ணத்துடன் நடந்த விஷயத்தை மெதுவாகக் கூறினாள்.

“படிக்கப் போன இடத்தில பாவி மக? அந்த டீச்சர் அம்மா மகன் கபிலனை விரும்பியிருக்கா. ஏன் எதுக்குன்னு கேட்டா? நான் செத்துடுவேன்னு சொல்லி பயமுறுத்துராப்பா” என்று கண்ணைக் கசக்கத் தொடங்கினாள், திலகவதி.

இந்தப் பதிலைக் கேட்டதும் சதாசிவத்திற்குப் பேரதிர்ச்சியாக இருந்தது. நம்ம மகாலட்சுமியா அந்த அளவுக்கு வளர்ந்துட்டா. இவளை என்ன பண்ணலாம்? என்று சதாசிவம் புத்தியில் கோபம் கொப்பளித்தது.

இருந்தும், மனதில் ஒரு நியாயம் உதித்தது. கபிலன் நல்ல பையன். நம்மிடம் மட்டுமில்லாமல் அனைவரிடமும் பண்போடும் பாசத்தோடும் பழகக்கூடியவன். இதுவரையில் எந்த ஒரு வம்பு தும்புக்கும் சென்று பார்த்ததில்லை. உன் வீட்டு மகளை அவனுக்குக் கொடுத்தால் என்ன? என்று ஒரு கேள்வி உதித்தது.

‘அதுவும் சரிதான் நல்ல விஷயத்தைக் கேட்டு நடக்கக் கூடியவர்கள் இந்த உலகத்தில் எத்தனை பேர். அவன் நல்ல பையன்தானே’ என்று நினைத்துக் கொண்டே

“அண்ணி அழாதீங்க அவன் நல்ல பையன். மகாலட்சுமிய நல்லா வச்சு பார்த்துப்பான்” என்று ஒரு நியாயமான பதிலைக் கூறினார், சதாசிவம்.

கஸ்தூரி மூளையில், அவளின் வாழ்க்கையைப் பற்றி எண்ணம் பெரிதாக ஓடிக் கொண்டிருந்ததால். மகாலட்சுமியைப் பற்றிப் பெரிதாகக் காதில் போட்டுக்கொள்ளவில்லை. இப்போ, இவள் திருமணத்திற்கும் சேர்த்து போராட வேண்டுமா? என்ற எண்ணம் மட்டும் மனதுக்குள் ஆழமாக ஓடியது. ஆனால், அதையெல்லாம் மனதோடு வைத்துக்கொண்டு…

“மாப்பிள்ளை வீட்டுக்காரங்க எப்ப வராங்க?” என்று மெல்லிய புன்னகையுடன் கேள்வி எழுப்பினாள்.

“நாளைக்குச் சாயந்தரம் வராங்க கஸ்தூரி. அதுமட்டுமில்ல, நாளைக்குக் காலையில பலகாரம் எல்லாம் செய்ய வேண்டியிருக்கு. நீயும் உதவிக்கு வந்தா எனக்கும் கொஞ்சம் சௌகரியமாக இருக்கும்” என்று ஒரு கோரிக்கையை முன் வைத்தாள், திலகவதி.

“அதுக்கு என்னக்கா இதெல்லாம் நீ சொல்லித்தான் எனக்குத் தெரியனுமா என்ன? கண்டிப்பா வந்துடுறேன்” என்ற ஒரு பதிலைக் கூறிவிட்டு. “சரி மரகதம் சித்திக்கும், சித்தப்பாவுக்கும் சொல்லிட்டீங்களா, இல்லையா?” என்றாள்.

“சொல்லிட்டேன் கஸ்தூரி. ஆனா, அவங்க ரெண்டு பேருமே ஏதோ ஒரு மனக் கவலைல்ல இருக்கா மாதிரி தெரியுது. அது என்னனு தான் தெரியல?” என்று கூறிவிட்டு, அங்கு நடந்த விஷயத்தை நினைக்கத் தொடங்கினாள், திலகவதி.

தங்களுக்கு இனி புத்திர பாக்கியம் கிடைக்காதுன்னு மருத்துவர் அவ்வளவு பெரிய இடியை தலையில் தூக்கிப் போட்டதில் இருந்தே மரகதமும், மூர்த்தியும் பெரும் சோகத்தில் ஆழ்ந்திருந்தனர்.

மரகதம், தனது வீட்டுக்குள் ஒரு ஓரத்தில் அமர்ந்து சத்தமில்லாமல் விம்மி விம்மி அழுது கொண்டிருந்தாள்.

காலத்திற்கும் அழிக்கமுடியாத வேதனை மரகதத்திற்கு வந்துவிட்டது என்ற குற்ற உணர்ச்சியில், பேச முடியாத பிணைக் கைதியாய் நிலைகுலைந்து அமைதியாகக் கட்டில்மீது அமர்ந்திருந்தார், மூர்த்தி.

கடவுள்! எல்லோருக்கும் இன்பத்தை மட்டும் தருவதில்லை. சில நேரத்தில் துன்பத்தையும் தருகிறான். காரணம், நிலையில்லாத மனிதர்கள் ஒரு நிலையோடு தன்னை எப்போதும் நினைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது கடவுளின் எண்ணம். சிலருக்கு மீளமுடியாத சுமைகளையும், சோகத்தையும் தந்து விட்டுச் சிரிப்பதும் அவனுடைய வாடிக்கை.

மூர்த்தி, தன்னை நிலைப்படுத்திக் கொண்டு மரகதத்திற்கு ஆறுதல் கூற தொடங்கினார்.

“மரகதம், இதுக்கு மேல அத பத்தி யோசிக்கிறதுக்கு ஒன்னும் ஆகப் போறது இல்ல. கடவுள் எண்ணம் இதுதான் என்றால் நாம் அத மனப்பூர்வமாக நாம எடுத்துக்கலாம். இப்படி அழுதுட்டே இருந்தா எதுவும் மாறப் போறது இல்ல. எனக்கும் இதுவே ஒரு குற்ற உணர்ச்சியாக இருக்கு, அடுத்து என்ன செய்யலாமுன்னு சொல்லு அது நிச்சயமா நான் செய்கிறேன். அழாத மரகதம்?” என்று மெதுவாகக் கூறினார், மூர்த்தி.

அவள் கண்களிலிருந்து கண்ணீர் கடல் நீராய் பொங்கி கன்னத்திலிருந்து கீழே வழிந்தது. ‘இந்த உலகத்தில் நான் வாழும் வரை என் வாழ்க்கைத் துணை நீங்கள்தான். உங்களை ஏன் நான் தவறாக நினைப்பது? எனக்குத் தாய் என்ற பாசத்தை விடவும், உங்களுக்குக் குழந்தைகள் என்றால் எவ்வளவு பிரியம் என்று எனக்கு நல்லாவே தெரியும். பாவி அந்தக் கடவுள் நமக்கு அதைத் தராமலே போயிட்டானே’ என்ற ஒரு மவுனம் மொழியாக அவள் புத்தியிலிருந்து பிறந்தது.

மரகதத்திற்கு இதற்குமேல் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல், மூர்த்தி அவள் முகத்தையே பெரும் குற்ற உணர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

அந்த நேரம்.

“சித்தி…சித்தி…” என்று கூறிக்கொண்டே திலகவதி வீட்டுக்குள் வர. இருவரும் தனது கண்ணீரைத் துடைத்துக் கொண்டு திலகவதியை “வாம்மா” என்று அழைத்தனர்.

திலகவதிக்கு இவர்களின் முகத்தைக் கண்டதுமே புரிந்துவிட்டது. ஏதோவொரு பிரச்சனை இங்கு ஓடிட்டு இருக்குன்னு.

“என்ன சித்தி ஒரு மாதிரியா இருக்கீங்களே. உடம்பு ஏதும் சரியில்லையா?” எனக்கேட்டாள், திலகவதி.

இவர்களின் சோகம் திலகவதிக்கு நன்றாகத் தெரியும்.

‘குழந்தைக்காகத்தான் இவர்கள் என்னேரமும் பெரும் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். குழந்தைக்காக இவர்கள் போகாத கோயில் இல்லை. செய்யாத பிரார்த்தனைகள், பரிகாரங்கள். எத்தனை மருத்துவர்? எத்தனை கடவுள்? இவர்களுக்கு இன்னும் எத்தனை சோதனைகள் தரப் போகிறார்களோ’ என்று நினைத்துக் கொண்டே வந்த விஷயத்தை மெல்லக் கூறத் தொடங்கினாள், திலகவதி.

“சித்தப்பா நாளைக்குச் சாயந்தரம் மகாலட்சுமியே பொண்ணு பார்க்க வராங்க. நீங்க ரெண்டு பேரும் ஒன்னா நின்னு இந்தக் கல்யாணத்தை நடத்தி வைக்கணும். என்னதான் நாங்க தாய்- தகப்பனாக இருந்தாலும். நீங்க ரெண்டு பேரும் இத்தனை காலமா அவளை வளர்க்கலனா, அவ இந்த அளவுக்கு வளர்ந்திருக்க முடியாது” என்று கண்ணில் பெரும் கண்ணீர் கசிய இருவரிடத்திலும் கூறினாள், திலகவதி.

‘நம்முடைய விஷயத்தில் மகாலட்சுமிக்கு நடக்கவேண்டிய திருமண விஷயத்தை மறந்துட்டோமே’ என்று மூர்த்திச் சற்று வருந்தினார்.

“அதுக்கு என்னம்மா, நாங்க பெற்றெடுத்தால்தான் பிள்ளையா? வாகினி, வனிதாவும் சரி… மகாலட்சுமியும் எங்களுக்கு எப்போதும் பிள்ளைகள் தான். மகா கல்யாணத்திற்கு என்ன வேணும்னு சொல்லு? அடுத்த வினாடியே கொண்டு வரேன். அவளும் என் மகள் தான்?” என்று பெரும் பூரிப்புடன் கூறினார், மூர்த்தி.

அவர் மனம் மட்டுமில்லாமல் மரகதத்தின் மனமும் சற்று நிம்மதி அடைந்தது.

‘குழந்தையில்லாதவர்களுக்கு எல்லாம் பிள்ளையும் ஒன்றுதானே. இப்போ என் அண்ணன் மகள், அடுத்த வாழ்க்கை பயணத்தைத் தொடங்க தயாராக இருக்கிறாள். அவளுக்கு வேண்டியதை செய்வது என்னுடைய கடமை !

“திலகம், நீ எதைப் பற்றியும் கவலைப்படாமல் இரு. மகாலட்சுமி கல்யாணத்தை ஊரே மெச்சும்படி ஜாம் ஜாம் என்று நடத்திடலாம். போற இடத்துல அவ சந்தோஷமாக இருந்தா நமக்கு அது போதாதா?” என்று ஒரு பதிலை முன்வைத்தாள், மரகதம்.

“இல்ல சித்தி, அவங்க நம்மகிட்ட என்ன எதிர்பாக்குறாங்கன்னு இன்னும் தெரியல. அதுக்குள்ள எதுக்கு நாம அதப்பத்தி யோசிக்கணும்?” என்று கூறினாள், திலகவதி.

“ஆமா மாப்பிள்ளை எந்த ஊருமா?” என்ற கேள்வி எழுப்பினார், மூர்த்தி.

“ரேவதி டீச்சர், மகன் கபிலன் தான்…?” என்று சற்று தயங்கிக் கொண்டே மகாலட்சுமியின் காதல் விஷயத்தை மெதுவாகக் கூறி முடித்தாள், திலகவதி.

திலகவதியின் கனவு களைவதை போலிருந்தது.

“அக்கா, என்ன பலமா யோசிச்சிட்டுருக்கீங்க? என்று அந்தக் கனவை கலைத்தாள், கஸ்தூரி.

“என்னக்கா, மரகதம் சித்தி பற்றிக் கேட்டதும் தீவிர யோசனைக்குப் போயிட்டிங்களா என்ன?” என்றாள் கஸ்தூரி.

“ஆமா கஸ்தூரி” என்று கூறிவிட்டு “சரி நீங்க ரெண்டுபேரும் மறக்காம வந்துடுங்க, நான் போய் மத்தவங்களையும் கூப்பிடனும்” என்று கூறிக்கொண்டே அந்த இடத்தை விட்டு மெதுவாக வெளியேறினார், திலகவதி.

ஏற்கனவே, கணவன்-மனைவி இருவரும் மிகப்பெரிய தேடலில் இருக்க. இதில் மகாவின் திருமணம் வேறா? இதற்கும் சேர்த்து என்ன செய்யப்போகிறோம் என்ற பெரும் கேள்வியுடன். ஒருவரின் முகத்தை ஒருவர் பெரும் கேள்வியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

தொடரும்…

< இருபதாம் பாகம்

கமலகண்ணன்

5 Comments

  • அருமையான கதையமைப்பு..

  • மகாலட்சுமி-கபிலன் திருமணம் சிறப்பாக நடக்கும் என்று நம்புகிறேன்…மிக அருமை.

  • உண்மையில் ‘வாகினி’ ஒரு அருமையான கதைக்களம். சினிமாவிற்கு ஒப்பாக தங்கள் கதை நிமிர்ந்து நிற்கிறது. ஒரு அழகான குடும்பம் அதற்குள் ஆயிரம் பிரச்சனைகள். அது இருந்தும் வெற்றியைத் தேட வேண்டும் என்ற முனைப்பு. என்று பல கோணங்களில் இருந்தாலும், இன்று மகாலட்சுமி- கபிலன் நிச்சயதார்த்தத்தில் வந்து நிற்கின்றது. இன்னும் பல கோணங்கள் ‘வாகினி’ செல்வாள் என்று நாங்கள் வாசகர்களாக காத்திருக்கிறோம்.

    அன்புடன்
    மஞ்சுளா

  • நல்ல கதையோட்டம். குடும்பங்களின் எதார்த்த காட்சிகளை நல்லா சொல்லி இருக்கீங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...