புதிய நாடாளுமன்ற கட்டிடம்.. பிரதமர் மோடி தந்த சர்ப்ரைஸ்.
புதிய நாடாளுமன்ற கட்டிடம்.. திடீரென இரவில் வந்து பிரதமர் மோடி தந்த சர்ப்ரைஸ்.. திகைத்த ஊழியர்கள்
டெல்லி: புது டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிட கட்டுமான பணி நடைபெறும் இடத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 8,45 மணிக்கு திடீரென வருகை தந்தார். சுமார் ஒரு மணி நேரம் வரை கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தை ஆய்வு செய்த பிரதமர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
டெல்லியில் உள்ள நாடாளுமன்ற கட்டிடம் 93 ஆண்டுகள் பழமையானது. இந்தியாவின் வரலாற்றுச் சின்னங்களில் நாடாளுமன்றமும் ஒன்று. இந்தக் கட்டிடத்தை இடிக்காமல் அதனையொட்டிபுதிய நாடாளுமன்றம் கட்டப்பட்டு வருகிறது.
இதற்காக சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை மத்திய அரசு உருவாக்கி பணிகளை தொடங்கி உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்றக் கட்டிடம், மத்திய தலைமைச் செயலகம் ஆகியவை கட்டப்படுகின்றன.
1224 உறுப்பினர்கள்
தற்போதைய நாடாளுமன்றத்தில் லோக்சபாவில் 543 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 245 உறுப்பினர்களும் அமருகிற வகையில் இருக்கை வசதிகள் உள்ளன. புதிய நாடாளுமன்ற கட்டிடம், எதிர்காலத்தில் இரு அவைகளையும் விரிவாக்கம் செய்ய வசதியாக மக்களவையில் 888 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 384 உறுப்பினர்களும் அமரத்தக்க வகையில் கட்டப்படுகிறது. புதிய கட்டிடத்தில், நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் 1,224 உறுப்பினர்கள் பங்கேற்க முடியும்.
எப்படி அமைகிறது
64 ஆயிரத்து 500 சதுரமீட்டர் பரப்பில் உருவாகும் புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திட்டத்தின் மதிப்பு ரூ.971 கோடியாகும். 21 மாதங்களில் அதாவது 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் 75-வது சுதந்திர தினம் கொண்டாடுவதற்குள் கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டு உள்ளது,. முக்கோண வடிவத்தில் 42 மீட்டர் உயரம் கொண்ட புதிய கட்டிடத்தில் தரைத்தளம் மற்றும் 3 தளங்கள் கட்டப்படுகிறது.
இந்திய ஜனநாயகம்
நாடாளுமன்ற கட்டிடத்தில் இந்திய ஜனநாயகத்தின் பெருமையை உலகுக்கு எடுத்துக்காட்டுகிற வகையில் பெரிய அரங்கம் ஒன்று அரசியல் சாசன அரங்கம் என்ற பெயரில் அமைய உள்ளது. நூலகம், கட்சி அலுவலகங்கள், பல்வேறு நிலைக்குழு அலுவலகங்கள், உணவு உண்ணும் அரங்குகள், வாகன நிறுத்துமிடங்கள் என ஏராளமான வசதிகளுடன் அமைக்கப்படுகிறது.
மத்திய அரசு விருப்பம்
நிலநடுக்கத்தால் பாதிக்காத அளவுக்கு வலிமையுடன் தொழில் நுட்பங்களுடன் புதிய கட்டிடம் அமைக்கப்பட்டு வருகிறது. 2022-ம் ஆண்டு, இந்திய சுதந்திரத்தின் 75-ம் ஆண்டு கொண்டாட்ட அமர்வினை புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடத்துவதற்கு மத்திய அரசு விரும்புவதால் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடம், இந்திய கலாசாரத்தின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்க உள்ளது. அண்மையில் பன்முகத்தன்மை தான் இந்தியாவின் அடையாளம் என்று ஐநா சபையில் பிரதமர் மோடி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பணிகள் விறுவிறு
புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கான பூமி பூஜை கடந்த டிசம்பர் மாதம் 10ம்தேதி தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி பூமி பூஜையில் பங்கேற்று அடிக்கால் நாட்டினார். அதன்பின்னர் பணிகள் தொடங்கியது. புதிய நாடாளுமன்ற கட்டிடப் பணிகள், இரவு பகலாக முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதன் கட்டுமானப்பணியில் 2 ஆயிரம் பேர் நேரடியாகவும் 9 ஆயிரம் பேர் மறைமுகமாக ஈடுபடுகிறார்கள்.
திடீர் வருகை
இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து இன்று காலை இந்தியா திரும்பிய பிரதமர் நரேந்திர மோடி, புது டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிட கட்டுமான பணி நடைபெறும் இடத்திற்கு இன்று இரவு 8,45 மணிக்கு திடீரென வருகை தந்தார். சுமார் ஒரு மணி நேரம் வரை கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தை ஆய்வு செய்த பிரதமர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். பிரதமர் மோடி திடீரென வருகை தந்தது அங்கு பணியில் இருந்த தொழிலாளர்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது.