எ.வீ.ரோ.உ.வீ.ஜ. |3| இந்துமதி

 எ.வீ.ரோ.உ.வீ.ஜ. |3| இந்துமதி

தொலைபேசி ஒலித்தது. அதுவரை அதன் பக்கத்தில் காத்துக் கொண்டிருந்த ஷைலஜா, படிக்கிற பாவனையில் இருந்த ஷைலஜா, ஒரு வினாடிக்கு முன்தான் பாத்ரூமிற்குள் நுழைந்தாள். கதவை மூடப் போனபோது தொலைபேசி ஒலிக்க ஆரம்பித்தது. பாதி மூடிய கதவை அப்படியே விட்டு விட்டு அவள் ஓடி வந்தபோது அம்மா எடுத்து விட்டாள். ஆனால் அம்மாவின் ஹலோவிற்குப் பதில் இல்லை. தொலைபேசித் தொடர்பு துண்டிக்கப்பட்டுஅம்மா ரிஸீவரை வைத்துவிட்டு இரண்டடிகள் நகர்ந்திருக்க மாட்டாள். மீண்டும் ஒலித்தது. மறுபடியும் அம்மாவே எடுத்தாள். ஷைலஜாவிற்கு மனசு துடித்தது.

‘அம்மா… நீ போயேன். சமையல் கட்டில் வேலை ஏதாவது இருந்தால் பாரேன். டெலிபோன் விவகாரத்தை நான் கவனித்துக் கொள்கிறேனே…!’ என்று கெஞ்ச வேண்டும் போலிருந்தது.

ஆனால் கெஞ்சவில்லை. அம்மா சந்தேகப்பட ஆரம்பித்து விடுவாள் என்று தோன்ற பேசாமல் இருந்தாள்.

அந்த முறையும் யாரும் பேசாது தொடர்பு துண்டிக்கப்பட்டதில் அம்மாவிற்குக் கோபம் வந்தது. வாய் விட்டுத் திட்ட ஆரம்பித்தாள். “கடன்காரக் கட்டைல போறவங்க எந்த வீட்ல வயசுப் பொண்ணுங்க இருக்காங்கன்னு அலையறாங்க. டெலிபோன் இருக்கிற வீட்ல காலேஜ் போற பொண்ணு ஒண்ணு இருந்துடக் கூடாது. உடனே நம்பர் கண்டுபிடிச்சுபோன் பண்ண வேண்டியது. டெலிபோன் காலுக்கு எத்தனை பணம் ஏறினால் என்ன….? இவன்களா சம்பாதிக்கிறான்கள்…? அப்பன்காரங்க கஷ்டப்பட்டு சம்பாதிச்சுக்கிட்டு வந்தால் பிள்ளைங்க இப்படி டெலிபோன் நம்பரைச் சுழற்றியே காசைக் கரியாக்கறாங்க. இவங்க காசைக் கரியாக்கட்டும். எங்க நேரத்தையுமில்ல வீணாக்கறாங்க…”

அம்மா சுறு சுறுவென்று காந்தத் தொடங்கியதில் ஷைலஜாவிற்கு சிரிப்பு வந்தது. அதைப் பார்த்த அவளது அம்மா இன்னமும் கோபப்பட்டாள்.

“நீ ஏண்டி சிரிக்கிறே…?”

“ஏம்மா…. இது ராங்காலாக இருக்கலாம். கனெக்ஷன்சரியாகக் கிடைக்காமல் இருக்கலாம். எதையோ நினைச்சுண்டு ஏம்மா திட்ற…?”

“ஆமாண்டி… ராங்கால்னால் நம்பர் கேட்க மாட்டாங்களா? கனெக்ஷன் சரியாகக் கிடைக்கலேன்னால் அங்கே டி.வி.யோ வீடியோவோ போட்டிருக்காங்களே… அந்த சத்தம் நமக்குக் கேட்குமா….? எலெக்ட்ரானிக் எக்ஸ்சேஞ்ஜ் தப்புன்னால் இதெல்லாம் மட்டும் சரியா தெளிவா கேட்கும், டெலிபோன் பண்ணின ஆளோட குரல் மட்டும் கேட்காது இல்ல…?”

முந்தைய தலைமுறை அம்மாக்களைப் போல் இன்றி இன்றைய தலைமுறை அம்மாக்களும் புத்திசாலிகளாக இருப்பதைத் தன் அம்மாவின் மூலம் உணர்ந்த ஷைலஜா கீழ் உதட்டைக் கடித்துக் கொண்டாள். நாளை மதுவைச் சந்திக்கிற போது தொலைக்காட்சிப் பெட்டியை நிறுத்திவிட்டுப் போன் செய்யச் சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டபோதே மூன்றாம் முறையாகத் தொலை பேசி ஒலிக்கத் துவங்கிற்று.

“எடுக்காத ஷைலஜா. அதே கடங்காரக் கட்டைல போறவனாகத்தான் இருக்கும், என்றாள் அம்மா.

ஷைலஜாவிற்குக் கஷ்டமாக இருந்தது. மது​வை அம்மா ‘கடங்காரக் கட்டைல போறவன்’ என்றது வருத்தத்தை ஏற்படுத்தியது. அதைவிட டெலிபோனை எடுக்க முடியாதது இன்னமும் சங்கடப்படுத்தியது தொலைபேசியும் நிற்காமல் ஒலிக்கவே அம்மாவின் எரிச்சல் அதிகமாயிற்று.

“எடுத்துத் தொலையேண்டி அதை..”

“ஏம்மா.. எடுக்காதன்ற, எடுன்ற… எதைம்மா ​கேட்க..?”

“முதல்ல எடுத்து யாருன்னு கேளு…..”

எடுத்தாள். ‘ஹலோ’ என்றாள்.

”ஹாய் ஷைலு…”

ஷைலஜாவின் இதயம் ஒரு வினாடி துடிப்பதை நிறுத்தியது. ஆனாலும் அம்மா எதிரில் இருப்பது நினைவிற்கு வர, தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு சொன்னாள்.

“ஸாரி, ராங்நம்பர் ப்ளீஸ்…”

ரிசீவ​ரை வைத்துக் கொண்டே அம்மாவின் முகத்தை ஏறிட்டாள்.

“பார்த்தியாம்மா… ஏதேதோ பேசினாயே… கடன்காரக் கட்டைல போறவன் என்றெல்லாம் சொன்னாயே…. கடைசியில் பாவம் ராங் நம்பர்….”

இன்னமும் நம்பிக்கை ஏற்படாத மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு அம்மா பேசினாள்.

“என்ன ராங் நம்பரோ போ…ராங் நம்பர்காரனுக்கும் கூட என் குரல் தெரியாது போல இருக்கு…”

ஏதேதோ முணுமுணுத்துக் கொண்டு விவிலடித்த குக்கரை நிறுத்த அம்மா சமையலறைக்குள் நுழைந்த மறுவினாடி அவள் ரிஸீவரை எடுத்து எண்களைச் சுழற்றிய போது, அம்மா சமையலறையில் இருந்தவாறே எட்டிப் பார்த்துக் கேட்டாள்.

“யாருக்கு போன் பண்ற..?”

அந்தக் கேள்வி ஷைலஜாவிற்கு அநாகரீகமாகப்பட்டது. தேவையில்லாமல் அம்மா கேள்வி கேட்பதாகத் தோன்றியது. அனாவஸ்யமாகத் தன் சுதந்திரத்தில் நுழைகிற
எரிச்சல் வந்தது. அம்மா இப்படித்தான் அடிக்கடி கேள்விகள் கேட்பாள். தொலைபேசியில் பேசினால் யார் என்பாள். ஏதாவது கடிதம் வந்தால் யாரிடமிருந்து என்பாள். ‘பிரெண்ட் வீட்டுக்குப் போறேம்மா…’ என்றால் ‘எந்தபிரெண்ட்… வீடு எங்கே இருக்கு. டெலிபோன் இருந்தால் நம்பரை எழுதி வச்சிட்டுப்போ’ என்றெல்லாம் குறுக்கு விசாரணை செய்வாள்.

இதெல்லாம் ஷைலஜாவிற்குப் பிடிக்காது. முக்கியமாகத் தொலைபேசியில் பேசுகிற போதோ, பேசின பின்னரோ கேட்கப்படுகிற, “யாருடி அது…?” மிகுந்த எரிச்சலைத் தரும். கோபம் வரும். “யாருன்னு சொன்னால் உனக்குப் புரியும்…-” என்று கேட்கலாம் போலிருக்கும். ‘இப்படிக் கேட்பது அநாகரீகமானது’ என்று எடுத்துச் சொல்லத் தோன்றும்.

ஆனால் சொல்ல மாட்டாள். சொல்லவும் முடியாது. சொன்னால் அவ்வளவுதான், அம்மா பிலுபிலுவென்று பிடித்துக் கொள்வாள். அவள் வயதில், தான் எத்தனை ஒடுக்கமாக இருந்தாள் என்பதில் ஆரம்பித்து, அப்பாவை கல்யாணம் பண்ணிக் கொண்டு வந்து மாமியார், நாத்தனார்களிடம் பட்ட கஷ்டத்தில் கொண்டு வந்து முடிப்பாள். இருபத்தைந்து வருடங்கள் பின்னோக்கிப் போகச் சொல்வாள். இந்த இருபத்தைந்து வருடங்களில் உலகம் எவ்வளவு முன்னேறியிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள மாட்டாள்.

ஆகவே அவை அத்தனையும் தவிர்க்க ஷைலஜா ஒரு வார்த்தை பதிலாகச் சொல்வாள்.

“சித்ராவுக்கு…”

சித்ரா என்கிற பெயரில் அம்மா அடங்கிப் போவதை ஷைலஜா புரிந்து கொண்டிருந்தாள். சித்ராவின் பணம் பண்ணுகிற வேலை அது என்பதைத் தெரிந்து கொண்டிருந்தாள். பணம் மட்டுமில்லை, சித்ராவின் பேச்சு, பழக்கம் எல்லாமே அம்மாவை வெகுவாகக் கவர்ந்திருப்பதை உணர்ந்து கொண்டிருந்தாள். “எத்தனை பெரிய இடத்துப் பொண்ணு. ஆனால் துளிக்கூட கர்வமோ, பணக்காரத் திமிரோ இல்லாமல் எப்படிப் பழகுகிறது பாரு…” என்று சொல்லக்கூடச் செய்வாள். தேன்குழல், முறுக்கு, தட்டை என்று எது செய்தாலும் தனியாக எடுத்து டப்பாவில் போட்டு
வைப்பாள்.

“யாருக்கும்மா…?” என்று கேட்டால், “சித்ராவுக்கு…” என்கிற பதில் வரும்.

“ஏம்மா…. சித்ரா இதையெல்லாமா சாப்பிடப் போறா… அவள் வீட்ல கேக், புட்டிங். பாதாம் அல்வான்னு சாப்பிடறவ…” என்றால் அதற்கும் பதில் தயாராக வைத்திருப்பாள்.

“சாப்பிடட்டுமேடி… அதெல்லாம் சாப்பிட்டால் இதைச் சாப்பிடக் கூடாதுன்னு எழுதியா வச்சிருக்கு…? கிருஷ்ணபரமாத்மா, குலேசர் கொண்டு போன அவலைத்தான் ருசிச்சு சாப்பிட்டார் தெரியுமா…?”

அதே போல சித்ராவும் மிக சகஜமாகச் ச​மையல​றை வ​ரை வருவாள்

“இன்னிக்கு என்ன மாமி ச​மைச்சிருக்கீங்க…?” என்று கேட்பாள்.

“வெறும் வத்தக்குழம்பும் சுட்ட அப்பளமும் தாம்மா..” என்றதும் உதட்டைக் குவித்து நாக்கினால் சர்ரென்று இழுப்பாள்.

“உங்க வத்தக் குழம்புக்குத் தனி ருசி மாமி. தட்டு போடுங்க. ஒரு பிடி பிடிக்கலாம்….” என்று தரையில் உட்கார்ந்து விடுவாள். அம்மா போடும் சாதத்தையும், வற்றல் குழம்பையும் கலந்து ருசித்துச் சாப்பிடுவாள்.

“ரொம்ப ஜோராக இருக்கு மாமி, எக்ஸ்ஸலண்ட். இந்த மாதிரி வத்தக் குழம்புக்கு உங்ககிட்ட ஃபைவ் ஸ்டார் ஓட்டல் சமையற்காரங்கள்லாம் பிச்சை வாங்கணும்…” என மனமார, வாயாரப் புகழ்வாள். அதில் அம்மா உச்சி குளிருவாள். சித்ரா போனதும் வார்த்தைகளால் அவளைக் குளிப்பாட்டுவாள்.

“எப்படிப்பட்ட கோடீஸ்வரன் வீட்டுப் பொண்ணு. துளிக்கூட அலட்டிக்காமல் தரையில் உட்கார்ந்து வெறும் வத்தல் குழம்பை ருசிச்சு சாப்பிட்டுப் போறது பாரு.. அவள் நிலைமைக்கு வேற ஒரு பெண்ணானால் இத்தனை நேரம் தலை இடறிப் போயிருக்கும். ஆனால் இந்தப் பொண்ணு என்னமாப் பழகறது…. எத்தனை
பொண்ணு…”

“போறும்மா சித்ரா புராணம்…” இவள் வேண்டுமென்றே சலித்துக்கொள்கிற குரலில் சொல்வாள். அதற்கும் அம்மாவிற்குக் கோபம் வரும்.

“உனக்கேண்டி எரிச்சல் வர்றது… நீயும் என் கை சமையலைத் தினமும் சாப்பிடறியே..ஒரு நாளாவது வாயார இந்த மாதிரி சொல்லியிருக்கியா?” என்று ஆரம்பிப்பாள்.

ஆக மொத்தத்தில் சித்ரா என்கிற மூன்றெழுத்து மந்திரம் அம்மாவின் வாயை அடைக்க உதவுகிற அஸ்திரமாகப் பயன்பட்டது. ஷைலஜாவிற்கு சவுகரியமாக இருந்தது. எதைச் செய்தாலும் சித்ராவின் பெயரைச் சொல்லித் தப்பிக்க முடிந்தது. அதுவும் மதுவின் பரிச்சயம் கிடைத்த பின்பு, அவனைக் காதலிக்க ஆரம்பித்த பின்பு சித்ராவைவிட, அவள் பெயர் மிகவும் உபயோகப்பட்டது.

ஆறு மணியாகி விளக்கு வைத்த பின்னர் வெளியில் கிளம்பினால் அம்மா கேட்கிற “எங்க கிளம்பிட்ட…?”விற்குப் பதில், “சித்ரா வீடு.”

கல்லூரியிலிருந்து மதுவுடன் பீச்சில் போய் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்துவிட்டு நேரம் கழித்து வீட்டிற்கு வரும் நாட்களில், “ஏண்டி லேட்டு….?”

“சித்ராவோட பேசிக்கிட்டிருந்தேம்மா…”

தொலைபேசியில் மதுவுடன் மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருக்கும்போது,

“யார் கிட்டடி இத்தனை நேரம் பேசற..?”

“சித்ராகிட்டேம்மா…”

அந்த பொய்யைத்தான் அப்போதும் சொன்னாள். “சித்ராவுக்கு.” சொல்லிக்கொண்டே மதுவின் எண்களைச் சுழற்றினாள். அவள் கூப்பிடுவாள் என்றே காத்திருந்த மது ரிஸீவரை எடுத்து ‘ஹாய்’ சொன்னான்.

“சித்ரூ -நான் ஷைலு பேசறேன்…” என்றாள்.

“அம்மா இருக்காங்களா…?” திருப்பிக் கேட்டான் அவன்.

“ஆமாம்ப்பா…”

“பேச முடியாதா..?”

“சொல்லுப்பா….”

“மகாபலிபுரம் போகலாமான் கேட்டேனே… நீ பதிலே சொல்லலையே….”

“ம்… போகலாம்.” என்றவள் மெல்ல எட்டி சமையல் அறைக்குள் பார்த்தாள். அம்மாவின் கவனம் தன்மீது இல்லை என்பதைப் புரிந்து கொண்டு குரலைத் தழைத்துச் சொன்னாள்.

“சித்ரா கூட வரேன்னு சொல்லியிருக்கா…”

“சித்ராவா…?”

“ம்…என் பிரெண்டு. எப்பவும் என் கூட இருப்பாளே….”

“வெள்ளையா, உயரமா, அழகா இருப்பாளே, அவளா…?” மது சாதாரணமாகத்தான் கேட்டான். ஆனால் அந்த வெள்ளை, உயரம், அழகு எல்லாமே இவளது நெஞ்சில் சரேலென்று இறங்கின. குரல் மெதுவாக வழுக்கத் தொடங்கிற்று.

“அவளேதான்…”

“ஆர்.கே. இண்டஸ்ட்ரீஸோட பொண்ணு….”

“எஸ்…. அவள் தான்.”

“அவ எதுக்கு….?”

மதுவின் அந்தக் கடைசிக் கேள்வியில் வாடிப் போயிருந்த அவளது முகம் பளீரென்று தன் சுயப்பிரகாசத்திற்கு வந்தது.

“நேர்ல சொல்றேன்…” என்றாள்.

“எப்போ..?”

“இன்னும் அரை மணி நேரத்துல…”

‘‘ எங்கே..?”

“வழக்கமான இடத்துல.”

–தொடரும்…

ganesh

1 Comment

  • ♥️♥️♥️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...