பத்துமலை பந்தம் |22| காலச்சக்கரம் நரசிம்மா

 பத்துமலை பந்தம் |22| காலச்சக்கரம் நரசிம்மா

22. மயூரியைக் காணோம்..!

டியில் கிடந்த ‘கருரார் ஜலத்திரட்டு’ சுவடித் தொகுப்பை வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்தாள், மயூரி. இவள் உறங்கிக்கொண்டிருக்கும்போது இவள் மடியில் யாரோ அதனைப் போட்டு விட்டிருக்க வேண்டும். தான் கண்ட கனவுக்கும், அந்த சுவடிக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கக்கூடுமோ..?

யோசித்தபடியே அவள் அமர்ந்திருக்க, தோழி இமேல்டா அந்தப்பக்கமாக வந்தாள். உறங்காமல் யோசித்தபடி அமர்ந்திருக்கும் மயூரியை வியப்புடன் பார்த்தாள் .

“வாட்ஸ் ராங் ? தூங்காம ஆந்தை மாதிரி முழிச்சுக்கிட்டு இருக்கே..?” — இமேல்டா கேட்க, அவளை அருகே அழைத்து, அருகில் அமர்ந்திருந்த பெண்ணின் உறக்கத்தைக் கலைக்காமல் கிசுகிசுத்தாள்.

“யாரோ நான் தூங்கும்போது என் ஹேண்ட்பேக்ல ஒரு ரகசியத் தகவலை வச்சிருக்காங்க. யாருனு தெரியலை. ஐ ஜஸ்ட் வாண்ட் டு ஃபைண்ட் அவுட். உன்னோட நான் நடந்து வர்ற மாதிரி, யாராவது சந்தேகத்துக்கு இடமளிக்கிறா மாதிரி விமானத்துல இருக்காங்களான்னு பார்க்கணும்.” –மயூரி சொல்ல, தலையசைத்தாள், இமேல்டா.

அவள் பின்பாக இருபுற இருகைகளையும் நோட்டம் விட்டபடி நடைபோட்டாள் இமேல்டா. அனைவருமே ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தார்கள். இந்த மங்கிய ஒளியில் யாரை என்று இவள் சந்தேகிப்பாள்..? இருப்பினும், ஒருமுறைக்கு இருமுறை விமானத்தின் எல்லா இருகைகளையும் சோதித்துவிட்டு, மீண்டும் தனது இருக்கைக்குத் திரும்பி வந்து அவள் அமர, சரியாக, அவள் அமரும்போது, மையத்தில் அமர்ந்திருந்த ஓர் இருக்கையில் அமர்ந்திருந்த வாலிபன் ஒருவன், தனது கண் திரையை நீக்கி மயூரியை உறுத்து பார்த்துவிட்டு, தனது செல்லை எடுத்து யாருக்கோ போன் செய்தான்.

“ஹலோ..! நீங்கள் கொடுத்த பொருள், எங்கு சேர வேண்டுமோ அங்கு சேர்ந்துவிட்டது.” –என்றவுடன், எதிர்ப்புறம், ஒரு நிம்மதி கலந்த பெருமூச்சு ஒன்றை யாரோ வெளியிடுவது கேட்டது.

கரிய சேலையைக் களைந்துவிட்டு, வானம் சிவந்த சேலையைக் கட்டிக்கொண்ட வேளையில், எம் எச் 381 விமானம் கோலாலம்பூர் விமான நிலையத்தில் தரை இறங்கியது.

“என்னோட ஹோட்டலுக்கு தானே வர்றே..? லாபியில எனக்காகக் காத்திரு..! நான், நீ, நான்சி மூணு பேரும் ஒண்ணாப் போயிலடலாம்..!” –இமேல்டா சொல்ல, தலையசைத்தாள்.

மயூரி, லாபிக்குச் சென்று இருக்கை ஒன்றில் அமர்ந்துகொள்ள, லாபி முழுவதும் பயணிகள் அமர்ந்திருந்தனர்.

இமேல்டாவும், நான்சியும், பயணிகள் இறங்கியதும், தங்கள் ரிப்போர்ட்களை கொடுத்துவிட்டு, லாபியை நோக்கி நடந்தனர். அவர்கள் கண்கள் அங்கே காத்திருந்த மயூரியைத் தேடின. வியப்புடன் லாபி முழுவதும், மயூரியைத் தேடினர். மயூரி அங்கே இல்லை.

பாண்டி முத்து, தனது கட்சியின் வட்டச்செயலாளர் காளிராஜனுடன் தேவிபட்டணத்துக்குப் பயணித்துக் கொண்டிருந்தான். காளிராஜனுக்கு அங்கே மருதம்மா என்கிற பிரத்யங்கரா உபாசகி ஒருவளைத் தெரியும். பணம் செய்ய நினைக்கும்,வியாபார உபாசகி இல்லை. பிரத்யங்கரா தேவியின் மீது அதீத பக்தி கொண்டவள். யாருக்கும், குறி சொல்ல மாட்டாள். அவளுக்கு குள்ளன் என்கிற உதவியாளன் ஒருவன் இருந்தான்.

திடீரென்று குள்ளனை அழைத்து, ”நீ போய் மேட்டுத்தெரு கந்தன் கிட்டே, இன்னைக்கு திருநெல்வேலி போக வேண்டாம்ன்னு சொல்லு. அவனுக்கு வழியில ஒரு விபத்து நேரப் போகுது” –என்பாள். குள்ளன் போகும்போது சரியாக கந்தன் திருநெல்வேலிக்கு .புறப்பட்டுக் கொண்டிருப்பான். அவனிடம், குள்ளன், மருதம்மா கூறிய எச்சரிக்கையைப் பற்றி சொல்ல, அவன் அலறியடித்து கொண்டு அவளைத் தேடி வருவான். கந்தன் போக வேண்டிய கார் உண்மையிலேயே விபத்துக்கு உள்ளாகியிருக்கும். தன்னை காப்பாற்றிய மருதம்மாவுக்கு அவன் தனது உடலை செருப்பாகத் தைத்துப் போடுவான். ஆனால் யாரவது அவளிடம் சென்று குறி கேட்டால், “பிரத்யங்கரா என்ன மரத்தடி ஜோசியனா ? நடையை கட்டு.” –என்று சீறுவாள்.

சாலை விரிவாக்கத் திட்டத்தின் கீழ், மருதம்மா வேப்பமரம் ஒன்றின் அடியில் எழுப்பியிருந்த பிரத்யங்கரா ஆலயத்திற்கு ஆபத்து நேர, அவள், குள்ளனை விட்டு காளிராஜனை அழைத்தாள்.

“அடேய் காளிராஜா..! என் ஆத்தா கோவிலைக் காப்பாற்று..! உன்னை மந்திரியாக்கறேன்..!” –என்று சொல்ல, காளிராஜா, அமைச்சரான தனது தொகுதி எம்.எல்.ஏ.வை அணுக, மருதம்மாவின் கோவில் காப்பாற்றப்பட்டது. அந்த நன்றி உணர்ச்சியில்தான், காளிராஜனுக்கு மட்டும் எப்போது சென்றாலும் குறி சொல்லுவாள்.

கண்ணை மூடி தியானத்தில் அமர்ந்திருந்த மருதம்மாவின் முன்பாக காளிராஜனும், பாண்டிமுத்துவும் நிற்க, சட்டென்று தனது சிவந்த கண்களைத் திறந்தாள் மருதம்மா.

“என்னடா காளிராஜா… திடீர் விஜயம்..? ஏதாவது பிரச்சனையா..?” –மருதம்மா, தனது பார்வையால் பாண்டிமுத்துவை ஏறஇறங்கப் பார்த்தாள்.

“ஆத்தா..! இவரு என் நெருங்கிய நண்பர் பாண்டிமுத்து. ஒரு பிரச்சனை விஷயமா உங்களைப் பார்க்க வந்திருக்கார். நான் உனக்கு எப்படியோ, அப்படிதான் இவரும். அவரு முக்கியமான பொருளைத் தேடி வந்திருக்காரு. அந்த பொருள் என்னனு என்கிட்டேயே சொல்லலை. அவருகிட்ட நீயே பேசிக்க..!” — என்று கூறி விட்டு, வெளியேறினான், காளிராஜன்.

பாண்டிமுத்துவை ஏற இறங்க பார்த்தாள். சற்று நேரம் கண்களை மூடித் திறந்தவள், அவனை சினத்துடன் நோக்கினாள்.

“செய்யறது அடாத காரியம்.! எவ்வளவு துணிச்சல் இருந்தா அதைப் பற்றிக் குறி கேட்க வருவே..?” –பொங்கினாள் மருதம்மா.

“தப்புதாம்மா..! ஆனா இப்ப எங்க குடும்பத்து நிலைமை அப்படி..! அந்தப் பொருள் எங்ககிட்டே கிடைச்சே ஆகணும்..! நீங்க மட்டும் எங்களுக்கு உதவி செஞ்சீங்கன்னா, உங்க ப்ரத்யங்கிரா தேவி கோவிலைப் பெரிசாக் கட்டித் தரோம். எங்க செலவுல, உங்களுக்கு ஒரு ஆஸ்ரமக் கட்டடமும் கட்டி தரோம். நீங்களும், பெரிய அளவுல, உங்க ஆலயத்தை நடத்தலாம்.” — பாண்டிமுத்து, அரசியல்வாதியாக வாக்குறுதி கூற, மருதம்மா, அவனை ஆழமாகப் பார்த்தாள் .

“பிள்ளையைப் பிடிக்க போறே..! ஆத்தாக்காரிக்கே லஞ்சம் தர்றியா..? சரி..! உனக்கு இப்ப என்ன வேணும்..?” –மருதம்மா கேட்க, பாண்டிமுத்து சுற்றுமுற்றும் நோக்கிவிட்டு அவளை நோக்கினான்.

“எங்க குடும்பத்துகிட்டே ஒரு சிலை இருந்தது. அது இப்ப தன்னோட வீர்யத்தை இழந்துச்சு. எங்க குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேர் அதுக்கு மாற்றாக ஒரு மூன்றாவது சிலையைத் தேடிகிட்டு இருக்கோம். அந்த மூணாவது சிலை இப்ப எங்கே இருக்குன்னு தெரியணும்.” –என்றவுடன் கண்களை மூடிய, மருதம்மா நீண்ட நேரத்திற்குப் பிறகு கண்களைத் திறந்தாள்.

“உன் பெரு பாண்டிமுத்து தானே..? நான் சொல்றதை கேளு..! உலக சமாச்சாரங்களை பத்தி எவ்வளவு வேணுமினாலும் குறி சொல்லுவேன். ஆனா நீ கேட்கறது பிரபஞ்ச ரகசியம். அதைச் சொல்றதுக்கு யாருக்குமே உரிமையில்லை. ஆனா, ஒரு விஷயம் மட்டும் சொல்லறதுக்கு எனக்கு அனுமதி இருக்கு. உங்க கிட்டே இரண்டாவது சிலை இருக்குது இல்லை… அதோட கீழே தான், மூணாவது சிலை இருக்கிற இடம் குறித்த தகவல் ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது.” — மருதம்மா கூறியதும், உறைந்து போனான் பாண்டிமுத்து.

‘இரண்டாவது சிலை கீழேயே மூன்றாவது சிலை இருக்கும் இடம் பற்றிய ரகசியம் வைக்கப்பட்டிருக்கிறது’ –என்பதை அவன் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. பரபரப்புடன் எழுந்தான்.

“ரொம்ப நன்றி ஆத்தா..! இப்பவே என் அப்பா கிட்டே சொல்லி, உங்க ஆலயத்தை பெரிசா கட்டிக் கொடுக்கிறோம்..!” –பாண்டிமுத்து கூறியதும், அவனை விசித்திரமாகப் பார்த்தாள், மருதம்மா.

“அவசரப்படறியே..! இரண்டாவது சிலைக்குக் கீழே மூன்றாவது சிலை பற்றிய குறிப்பு இருக்குன்னுதானே சொன்னேன்..! ஆனா அது இப்ப இல்லே. அதை யாரோ மிக அண்மையில் எடுத்திருக்காங்க. உன் குடும்பத்தை சேர்ந்த ஒருவர் மூலமா, அந்தத் தகவல் கடல் கடந்து போய்க்கிட்டு இருக்கு.” –என்று மருதம்மா கூறியதும், பாண்டிமுத்து மலைத்தான்.

“என் குடும்ப உறுப்பினரா..? யாராக இருக்கும்..?” –பாண்டிமுத்து தன்னை மறந்து யோசித்துக்கொண்டிருக்க, சரியாக மயூரி கோலாலம்பூர் விமானநிலைய லாபியில் இருந்து காணாமல் போயிருந்தாள்.

–தொடரும்…

ganesh

2 Comments

  • மயூரிதானே அது

  • Very nice

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...