தமிழ்நாட்டில் 9 பேருக்கு டெல்டா ப்ளஸ் வைரஸ் உறுதி
தமிழ்நாட்டில் மொத்தம் ஒன்பது பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், வேக்சின்கள் மூலம் உயிரிழப்பை தடுக்க முடியும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்த 2 மாதங்களாக கொரோனா 2ஆம் அலையால் வைரஸ் பாதிப்பு உச்சத்தில் இருந்தது. அதிலும் கடந்த மே மாதம் தினசரி வைரஸ் பாதிப்பு 35 ஆயிரம் வரை கூட சென்றது.
இதையடுத்து வைரஸ் பரவலைக் கட்டுக்குள் வைக்க மாநிலத்தில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மாநிலத்தில் தொடர்கிறது.
தமிழ்நாட்டில் குறையும் கொரோனா
தமிழ்நாட்டில் நேற்றும் 34ஆவது நாளாக வைரஸ் பரவல் குறைந்துள்ளது. நேற்று மாநிலம் முழுவதும் 6,162 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 155 பேர் உயிரிழந்தனர். வைரஸ் பரவல் குறைந்துள்ள போதிலும், தற்போது நாட்டில் கண்டறியப்பட்டுள்ள புதிய டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் புதிய தலைவலியை உருவாக்கியுள்ளது.
தமிழ்நாட்டில் டெல்டா பிளஸ்
முன்னதாக சென்னையைச் சேர்ந்த ஒருவருக்கு மட்டுமே டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டிருந்ததாகச் சுகாதார துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநிலத்தில் டெல்டா பிளஸ் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளதாகவும் சென்னை, மதுரை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில்
9 பேருக்கு டெல்டா பிளஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
முதல் உயிரிழப்பு
மேலும், அவர்களில் இருவர் நலமாக உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், ஒருவர் ஏற்கனவே கொரோனா பாதிப்பால் உயிரிழந்துவிட்டார் என்றும் அவருடைய பரிசோதனை முடிவிலேயே அவருக்கு டெல்டா பிளஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், டெல்டா பிளஸ் வைரஸ் பரிசோதனை மையம் தமிழகத்தில் அமைக்க மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம் என்றும் டெல்டா பிளஸ் வைரசால் பாதிக்கப்பட்ட நபர்கள் கண்டறியப்பட்டால் அந்த பகுதி நோய் கட்டுப்பாட்டுப் பகுதி ஆக மாற்றப்படும் என்றும் அவர் தெரிவித்தார்