வரலாற்றில் இன்று – 16.06.2021 கருமுத்து தியாகராஜன்
கலைத்தந்தை என்று போற்றப்பட்ட கருமுத்து தியாகராஜன் செட்டியார் 1893ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் தேதி சிவகங்கை மாவட்டத்தில் பிறந்தார்.
இவர் இலங்கையில் கொழும்பு புனித தோமையர் கல்லூரியில் கல்வி கற்றார். இலங்கையின் மலையக தோட்டத் தொழிலாளர் நலன்களுக்காக அங்கு பத்திரிக்கை ஒன்றையும் தொடங்கி நடத்தினார்.
இந்தியா திரும்பிய தியாகராஜன் மதுரையில் மீனாட்சி மில் என்ற தொழில் நிறுவனத்தை நிறுவினார். நூல் ஆலையும், நெசவு ஆலையும் அமைத்தார். தொடர்ந்து பல ஊர்களில் நூற்பு ஆலைகளை நிறுவினார்.
இவர் தமிழ்மீது தனி ஆர்வம் காட்டி வந்தார். இளம்வயதிலேயே புத்தகம் படிப்பதிலும் தமிழ் இலக்கண, இலக்கியங்களிலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். இதன் காரணமாக தூய தமிழில் தமிழ்நாடு என்னும் நாளிதழை பல ஆண்டுகள் நடத்தி வந்தார்.
கலைத்தந்தை, வள்ளல், தொழில் மேதை என்றெல்லாம் போற்றப்பட்டவரான கருமுத்து தியாகராஜன் செட்டியார் 1974ஆம் ஆண்டு மறைந்தார்.
சித்தரஞ்சன் தாஸ்
இன்று இவரின் நினைவு தினம்..!
‘தேசபந்து’ (தேசத்தின் நண்பன்) என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவர் சித்தரஞ்சன் தாஸ், 1870ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி வங்காளத்தில் பிறந்தார்.
1894ஆம் ஆண்டு கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பணியைத் தொடங்கினார். பிறகு, 1917ஆம் ஆண்டிலிருந்து 1925ஆம் ஆண்டு வரை தீவிர அரசியலில் ஈடுபட்டார். இவரது அரசியல் ஞானத்தாலும், பேச்சுத் திறமையாலும் இவர் இந்திய தேசிய காங்கிரஸில் முக்கியமான நபராக உயர்ந்தார்.
பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர். புகழ்பெற்ற வழக்கறிஞராக இருந்தபோதும் சுதந்திரப் போராட்டத்திற்காக தனது தொழிலை தியாகம் செய்தார்.
தன் ஈகை குணத்தால் ஏழையான இந்த வள்ளல், 1925ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் தேதி டார்ஜிலிங்கில் தனது 54வது வயதில் மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
1963ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் தேதி உலகின் முதலாவது பெண் விண்வெளி வீரரான ரஷ்யாவின் வலன்டீனா டெரெஷ்கோவா, வஸ்தோக் 6 விண்கலத்தில் பயணமானார்.
2012ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் தேதி சென்சூ விண்வெளி திட்டத்தின் ஒன்பதாவது விண் பயணத்தில் பயணித்த முதல் சீனப் பெண் என்ற பெருமையை லியு யங் பெற்றார்.