வாகினி – 7 | மோ. ரவிந்தர்

 வாகினி – 7 | மோ. ரவிந்தர்

சென்னீர் குப்பத்தில் அடித்த மழை ஆவடியையும் விட்டுவைக்காமல் தனது ராஜியத்தை நிலைநாட்டியது. அதனால் இரவுநேரத்தில் அந்த ஊரே அமைதியாகக் காணப்பட்டது.

அந்தத் தெருவீதியின் கம்பத்தில் பொருத்தப்பட்ட மின் விளக்குகளின் வெளிச்சத்தில். அங்கிருந்த வீடுகளின் மேற்கூரைகள் நிழல் ஓவியம் போல் அழகாகக் காட்சி அளித்துக் கொண்டிருந்தது.

இந்த நேரத்தில் மரகதம் வீட்டில் இருந்த வானொலியில் சுமைதாங்கி படத்தில் இருந்து ஒலித்த

“மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல்தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவது இல்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்”
                  – என்ற பாடல் அந்தத் தெரு வீதியை கட்டிப்போட்டது.

மரகதத்தின் கணவர், மூர்த்திக் கட்டில் மீது படுத்துக்கொண்டு ஏக சொர்க்க சிந்தனையில் ஆழ்ந்திருந்தார்.

‘கடவுளே!, ஒரு மனிதனுக்குக் காடு கரை, பணம் பதவி, வீடு மனைவி இதுதான் வாழ்க்கையா?

இந்த உலகத்தில் தனக்குப் பிறகு தன் பெயர்சொல்ல ஒரு குழந்தை வேண்டாமா? ஒரு மனிதனின் வாழ்நாள் சாதனை அவன் வாழ்ந்தான் என்று எப்படிச் சொல்ல முடியும்? எனக்கு ஏன் அந்தச் சாதனையைத் தராமல் இன்னும் இப்படிச் சோதனையாகவே வைத்திருக்கிறாய். உனது எண்ணம் தான் என்ன?.

உறவுமுறை பொறுத்தவரையில், பெறுவதிலும் கொடுப்பதிலும் சொந்தம் முடிந்துவிடுகிறது. தாய் தந்தை, மனைவி இவர்கள் எல்லாம் சொந்தங்கள் என்று சொன்னாலும் கூட என் இறப்புக்கு பிறகு என்னை இந்த உலகிற்கு நிலை நிருத்துபவர்கள் யார்?.

என் பெயரை சொல்ல ஒரு குழந்தை எனக்கு வேண்டும். அதற்காக நான் இன்னும் எவ்வளவுதான் போராட வேண்டும் கடவுளே!, என் மார்பை உதைத்து விளையாட எனக்கு ஒரு குழந்தையைக் கொடு’ என்று புத்திர சோகத்தில் மூழ்கிக் கொண்டிருந்தார், மூர்த்தி.

அப்போது பக்கத்து அறையில் வேலை பார்த்துக்கொண்டிருந்த மரகதம். மூர்த்தி இருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தாள்.

“வேலையிலிருந்து எப்ப வந்திங்க, காப்பிக் கொண்டு வந்து தரவா…?” என்று மூர்த்தியை பார்த்து கேட்டாள்.

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்மா, கொஞ்சம் அசதியா இருந்தது. அதான், படுத்துட்டு இருக்கேன்” என்றார் மூர்த்தி.

மரகதத்திற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை மூர்த்தியின் முகத்தைப் பார்த்தாள். ஏதோ பெரும் சோகத்தில் இருப்பதைப் போல் தோன்றியது அவளுக்கு. சோகம் என்னவென்று தனது பார்வையினாலேயே கேட்டாள், அவள்.

மூர்த்தியும் அந்தக் கேள்வியைப் புரிந்து கொண்டதற்கு இணங்க தானும் ஒரு கேள்வியைக் கேட்டார்.

“மரகதம், சென்னையில ஒரு ஆஸ்பத்திரி இருக்காம். அந்த ஆஸ்பத்திரிக்கு நாம் போனா. நமக்குக் கண்டிப்பாகக் குழந்தை பிறக்குன்னு என்கூட வேலை பார்த்துட்டு இருக்க என்னோடு பிரண்டு ஒருத்தர் சொன்னாரு. நாம ரெண்டு பேருமா அந்த ஆஸ்பத்திரிக்கு போவோமா?” என்று கேள்வி எழுப்பினார்.

என்னதான் பெண்ணாக இருந்தாலும், அவளுக்கும் இந்தப் புத்திர சோகம் ஏக்கம் இருக்காதா என்ன?, பெண்கள் கூடும் சுப நிகழ்ச்சிகளான திருமணச் சீமந்தம் பிறந்தநாள் போன்ற வைபோகம் நிகழ்ச்சிகளில் இவளை போன்ற பெண்களின் நிலைமை பெரும்பாடாகத் தானே இருக்கும். என்ன செய்வது இதையெல்லாம் சமாளிக்கத் தானே வேண்டும்.

சிறிது நேரத்திற்குப் பிறகு. அவள் உதட்டில் இருந்து மெல்ல ஒரு பதில் பிறந்தது.

“சரிங்க, நாம போய்ப் பார்த்துட்டு வரலாம்” என்று சற்று அலுத்துக் கொண்டே கூறினாள்.

அவனுக்குப் புரிந்துவிட்டது. தான் கேட்ட இந்தக் கேள்வியால்தான் இப்போது வருத்தத்தில் இருக்கிறாள் என்று நினைத்துக்கொண்டே.

‘என்ன செய்வது, நம் இல்லற வாழ்வில் உன் இன்பம் துன்பம் இரண்டிற்கும் நான் தானே பொறுப்பு. அதைச் சரி செய்ய வேண்டியது என்னுடைய கடமை தானே’ என்று எண்ணிக்கொண்டே அந்தப் பேச்சை மாற்றினார், மூர்த்தி.

“ஆமா…, மரகதம் காலையில வேலைக்குப் போகும் பொழுது பாபு அழுதுகிட்டு இருந்தானே. அவனோட உடம்புக்கு ஏதாவது பிரச்சனையா என்ன?”

“அதெல்லாம் ஒன்றுமில்லங்க. காலையில் அவன தூக்கிட்டு வரும்போது எதுவும் கொடுக்காமல் தூக்கிட்டு வந்துட்டேன். பையன், பசிநாளா அழுதுட்டு இருந்திருக்கான் போல. பிறகு இட்லி ஊட்டிவிட்டு தூங்க வச்சேன்” என்று பதிலளித்தாள், மரகதம்.

“குழந்தை எப்பவும் அவங்க அம்மா கிட்ட இருந்தா தான் சரியா இருக்கும். நீ வேற எதுவும் கொடுக்காம தூக்கிட்டு வந்துட்டியா, சரிதான். இதையெல்லாம் கவனிக்க மாட்டாயா?” என்றார் மூர்த்தி.

அவளின் புத்திக்கும் தெரிந்துவிட்டது ‘இதற்கு மேல் குழந்தை என்ற பேச்சை எடுத்தால் இங்கு ஏதாவது வாக்குவாதம் கூட நடக்கலாம்’ என்று அவளும் தன் பேச்சை மலுப்பினாள்.

“என்னங்க, நீங்க வந்ததிலிருந்தே எதுவுமே சாப்பிடல கொஞ்சம் காப்பியாவது எடுத்துட்டு வரட்டுமா?”

“ஆமா, கொஞ்ச நேரமாவே எனக்கு லேசா தலை வலிக்கிற மாதிரிதான் இருக்கு. சரி போய்க் கொஞ்சம் சூடா காப்பிக் கொண்டு வா” என்றார், மூர்த்தி.

மரகதமும் சரியென்று கூறிவிட்டு சமையல் அறைக்குள் நுழைந்தாள்.

எற்கனவே மண்ணெண்ணை அடுப்பு மீது பால் காய்ச்சி சூடாக இருந்தது. பக்கத்தில் இருந்து காப்பிப் பவுடர், சக்கரையை எடுத்து அந்தப் பாலில் கலந்தாள்.

 

அதே நேரத்தில், புத்திர சோகம் மீண்டும் அவளைப் பற்றிக் கொண்டது.

அவளுக்கும் தான் குழந்தையைத் தன் மடியில் வைத்து மழலைச் சிரிப்பை கேட்கத்தான் ஆசை?, பெண் என்றாலே அந்த ஆசை பெரிதாக இருக்கத்தானே செய்யும். பிறப்பின் ழுழு முகவரியே குழந்தை தானே. பத்து மாதம் பத்தியம் இருந்து ஓர் உயிர் இரு உயிராய் மாறும் அதிசயம். கருவரை என்னும் கோவிலில் கடவுளை சுமப்பது தானே ஒரு பெண்ணாகப் பிறந்த பெண்மையின் முழு அடையாளம். அதை அவளும் எதிர்பார்க்க மாட்டாளா என்ன?

மூர்த்தி, குழந்தை பேச்சை எடுக்கும்போதெல்லாம் அவளின் கண்களிலும் கானல் நீர் வடியத்தான் செய்கிறது. இருந்தும், காயத்திற்குக் கண்ணீர் மட்டுமே மருந்தல்ல இது முடிவல்ல என்று வந்த கண்ணீரை எல்லாம் மறைத்துக் கொள்வாள், மரகதம்.

உள்ளறையில் மூர்த்தி அமைதியாகப் படுத்துக் கொண்டு வீட்டின் மேல் கூரையைக் கவலையாகப் பார்த்துக் கொண்டிருந்தார்.

“இந்தாங்க இந்தக் காப்பிய குடிங்க” என்று கூறிக்கொண்டே ஆவி பறந்துகொண்டிருந்த காப்பிக் கோப்பையை மூர்த்திக் கையில் கொடுத்தாள், மரகதம்.

அந்தக் காப்பிக் கோப்பையைத் தனது கையில் வாங்கிக் குடித்து முடித்துவிட்டு மரகதத்தைப் பார்த்து நிமிர்ந்தார்.

அவளும், மீண்டும் குழந்தை பேச்சை எடுப்பாரா…? என்ற ஒரு தயக்கத்தில் அவர் முன்னே தயங்கி தயங்கி நின்றாள், மரகதம்

“மரகத…ம்?” என்றார்.

‘மரகதம்’ என்றவுடன் அவளுக்கு நெஞ்சத்தில் மிதமான நிலநடுக்கம் வந்து போனது. அந்த நில அதிர்வுடனே கேட்டாள்.

“சொல்லுங்க?”

“போய்ப் பாபுவை தூக்கிட்டு வாயேன்” என்றார்.

சற்றென்று அவளுக்கு மனநிலை மாறியது. “சரிங்க” என்று கூறிக்கொண்டே புறப்பட்டாள்.

திடீரென, மரகத்திற்கு ஒரு விஷயம் ஞாபகத்திற்கு வந்தது. முன் வைத்த காலை பின் தொடரமுடியாமல் அப்படியே நின்றாள்.

“என்னங்க” திரும்பி மூர்த்தியை மெதுவாக அழைத்தாள்.

“சொல்லு” என்ற வார்த்தை, மெல்லிய குரலில் மூர்த்தி நாவில் எழுந்தது.

“ஒன்னும் இல்லைங்க, அண்ணன் அண்ணிக்கும் அடிக்கடி சண்டை வந்துட்டே இருக்காம். அவங்க ரெண்டு பேரும் சரியாகப் பேசுறது இல்லைன்னு என் காதுக்கு எட்டியது”

“அந்த விஷயம் தான் இந்த ஊருக்கே தெரியுமே. அதுக்கு என்ன இப்ப?” என்று கேள்வி எழுப்பினார், மீண்டும் மூர்த்தி.

“இல்ல, அண்ணனுக்கு ஒரு நல்ல வேலையைப் பார்த்து வையுங்கன்னு நானும் உங்ககிட்ட பலமுறை சொல்லிட்டேன். நீங்க அத காதுலையே போட்டுக்க மாட்டேங்றீங்க. ஒரு நல்ல வேலையைப் பார்த்து வச்சா. அவங்களுக்கு இடையில் நடக்கிற சண்ட ஒரு முடிவுக்கு வரும்” என்றாள்.

“ஆமா மரகதம், எனக்கும் அது ஞாபகத்துல இருக்கு, நானும் பல பேர்கிட்ட சொல்லிதான் வச்சிருக்கேன். கிடைச்சா சொல்றேன்” என்றார்.

“சரிங்க நான் போய்ப் பாபுவ தூக்கிட்டு வரேன்” என்று கூறிவிட்டு புறப்பட்டாள் மரகதம்.

–தொடரும்…

< ஆறாவது பகுதி | எட்டாவது பகுதி >

கமலகண்ணன்

8 Comments

  • Super stores vaaginiyai en kaanavillai epothu varuval?

    • வாகினி கதையின் நாயகி அவளில்லாமல் கதை இருக்குமா வருவாள் அவளுக்காக பெரிய போராட்டம் காத்துக்கொண்டிருக்கிறது

  • அருமையாக உள்ளது தொடர்ந்து நல்ல நல்ல கருத்துக்களை பதிவிடுங்கள்

    • நன்றி தோழரே ! இனி வரும் அத்தியாயங்களில் நீங்கள் எதிர்பார்த்தது அனைத்தும் நடக்கும் தொடர்ந்து படியுங்கள்! இந்த அத்தியாயம் வேறொரு பரிமாணம் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும். நன்றிகள் பல “எண்ணம் போல் வாழ்க்கை”

      மோ. ரவிந்தர்

  • Super arumai

  • மூர்த்தி-மரகதம் வாழ்வில் மழலை வாசம் வீசும் என்று நம்புகிறேன்…. மகிழ்ச்சி.

    • பொறுத்திருந்து பாருங்கள் நண்பரே எல்லோருக்கும் கடவுள் ஒரு கதவை மூடினால் இன்னொரு கதவை கண்டிப்பாக திறப்பார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...