வாகினி – 6 | மோ. ரவிந்தர்

1 week ago
795

இது ஒரு பொன் மாலைப் பொழுது என்று தான் சொல்ல வேண்டும். வானத்தில் இருந்த கார்மேகங்கள் எல்லாம் ஒன்று கூடி பூமியை நனைத்து விளையாடலாமா, வேண்டாமா என்று கதைப் பேசிக் கொண்டிருந்தன.

அந்த மேகங்களை எல்லாம் வரவேற்பதற்காகச் சென்னீர் குப்பம் சாலையில் அமைந்துள்ள மரம், செடிக்கொடிகள் எல்லாம் காற்றில் நடனமாடி “வருக வருக” என மழையை வரவேற்றது.

அந்தச் சாலை ஓரத்தில் இருந்த ஒரு சில கடைகளில் இருந்த மனிதர்களும் அந்தப் பெரும் மழையைப் பார்த்து ரசிப்பதற்காகக் காத்திருந்தனர்.

சென்னைக்கும் ஆவடிக்கும் பிரதான சாலையாக விளங்கிய இந்தச் சென்னீர் குப்பம் சாலை இயற்கை எழில் பொங்கி நீண்டதோர் பாதையை அமைத்தது. மாலை வேளையில் இந்த மேகங்கலுக்கு ஏற்றார் போல் காற்றும் நான்கு திசைகளில் மாறிமாறி இசை கீதமாக இயங்கத் தொடங்கியது.

மழை வரும் என்று தெரிந்திருந்ததால் இந்தப் பாதையில் மனிதர்களின் கூட்டம் மிகக் குறைவாகத்தான் இருந்தது. ஆனாலும், ஒருசில வண்டிகள் பாதையைக் கடந்து கொண்டிருந்தது.

அந்தப் பெரும் பாதையில் சற்றுத் தொலைவில். ஒரு வெள்ளைநிற அம்பாசிடர் கார் ஒன்று பழுது அடைந்த நிலையில் நிற்க, அதன் ஓட்டுனர் காரின் கீழே அமர்ந்து சக்கரத்தை வண்டியில் பொருத்திக் கொண்டிருந்தார்.

See the source imageகாரின் உரிமையாளரான தனஞ்செழியன். வானத்தையும் எதிரே இருந்த வாகனத்தையும் பெரும் வெறுப்போடு பார்த்துக்கொண்டிருந்தார்.

“என்டா… நல்லதம்பி, காலையில தலைவர் வீட்லிருந்து கிளம்பும் போதே இதையேல்லாம் கவனிக்க மாட்டியா. மேல வானத்த பார், இன்னும் கொஞ்ச நேரத்துல மழை அடி அடின்னு அடிக்கப் போகுதுன்னு நினைக்கிறேன். உன்னோட கவனதினால இப்ப பார் நடுவீதியில நிக்க வேண்டியிருக்கு. இதுல வேற, எப்ப பார்த்தாலும் அண்ணன் எனக்கும் ஏதாவது பதவி வாங்கிக் கொடுங்கன்னு கேட்டுகிட்டே இருக்க…?” என்று வஞ்சித்தார், தனஞ்செழியன்.

தனஞ்செழியனை பற்றிக் கூற வேண்டுமானால். அவர், ஆவடியில் உள்ள கஸ்தூரி வீட்டில் பார்த்த மீனாவின் கணவர் தான் இந்தத் தனஞ்செழியன்.

படிப்புக் கால்நடை மருத்துவர். இரண்டொரு வருடம் திருச்சியில் கால்நடை மருத்துவராகப் பணியில் இருந்தார். அது நாளடைவில் வருமானம் தராத வேலையாகப் போக அந்தத் வேலையை விட்டுவிட்டு. ஆவடியில் சொந்த ஊருக்கே வந்து தமிழ் வெற்றி கழகம் என்னும் கட்சியில் இணைந்து. தற்போது திருவள்ளூர் மாவட்ட தலைவர் பதவியில் நான்கரை ஆண்டுகளாக நிலைத்து வருகிறார்.

இன்று அம்பத்தூர் முதல் திருவள்ளூர் வரை இவர் பெயரை தெரியாதவர்களே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்குக் குறுகிய காலத்தில் மக்களிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டவர். அந்தக் கழகத்தின் தற்போதைய முதன்மைச் பேச்சாளரும் இவரே. அதுமட்டுமில்லாமல், ரியல் எஸ்டேட் தொழிலையும் தனியாகச் செய்து வருகின்றார். அரசியல் அல்லாமல் பொது இடத்திலும் பெண்கள் என்றாலே தனி மரியாதை முக்கியத்துவம் கொடுப்பதில் வித்தகர், இவர்.

“என்னடா தம்பி வேலை முடிஞ்சிதா, இல்லையா?”

“இன்னும், இரண்டு நிமிஷம் தானே முடிஞ்சிடும்” என்று கூறிக்கொண்டே காரின் டயரை வண்டியில் பொருத்தத் தொடங்கினான், நல்ல தம்பி.

தனஞ்செழியன், அப்படிக் கேட்பதற்கும் கார்மேகம் பூமியின் மீது காதல் புரிவதற்கும் சரியாக இருந்தது. கொட்டும் மேகங்கள் எல்லாம் வைரக்கற்களைப் போலப் பூமியில் படபடவென விழுந்து ஆரவாரம் செய்தது. அந்தக் காட்சி பார்ப்பதற்கு மிகவும் அழகானதாகவும் இருந்தது.

அந்தி சாயும் மாலைப் பொழுதில் பருவம் அடைந்த பெண் தனது பட்டாடையில் தங்க ஜரிகை நெய்து, தனது அங்கம் அழகு பெற ஆடை உடுத்தினால் எப்படி இருக்குமோ, அப்படி இருந்தது இந்த அழகு காட்சி.

வானத்தில் பறந்து கொண்டிருந்த பறவை இனங்கள் அந்த நேரத்தில் கூடுகளையும், மரக்கிளையும் அவசர அவசரமாகத் தேடி ஓடின. வானத்து மழை துளிகள் நான்கு திசைகளையும் தன் வசப்படுத்தியது.

சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு சில மனிதர்கள் அந்த மழையில் இருந்து ஒதுங்குவதற்காகப் பல இடங்களைத் தேடி ஓடினார்கள். கண் இமைக்கும் நேரத்தில் இவையெல்லாம் அங்கு அரங்கேறியது.

சாலையில் கீழே அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்த நல்ல தம்பி பழுது பார்க்கும் வேலையை அவசர அவசரமாகச் செய்ய முயற்சித்தான். ஆனாலும், அவனையும் வெகு விரைவாக அரவனைத்துக் அணைத்துக் கொண்டது, அந்தச் சாரல் மழை.

காருக்குப் பக்கத்தில் நின்றிருந்த தனஞ்செழியன் வேகமாகக் கார் கதவை திறந்துகொண்டு கார் சீட்டில் போய் அமர்ந்தார்.

“நல்ல தம்பி, பழுது பிறகு பார்த்துக்கலாம் உள்ளே வாட” என்று அழைத்தார், தனஞ்செழியன்.

அவனும் ‘சரி’ என்று எண்ணிக்கொண்டே கீழே இருந்த பொருளை எல்லாம் அவசரமாகக் கையில் எடுத்துக்கொண்டு காரின் முன் சீட்டில் வந்து அமர்ந்து விட்டு. தனது பேண்ட் பாக்கேட்டிலிருந்து கைக்குட்டையால் தலையைத் துடைத்துக்கொண்டே தனஞ்செழியனிடத்தில் பேசத் தொடங்கினான்.

“அண்ணா… தலைவர பார்த்துட்டு வந்தீங்களே இந்த முறையாவது உங்களுக்கு அந்த எம் எல் ஏ சீட்ட கொடுப்பாங்களா, இல்லையா?” என்றான்.

“அதுல என்னடா உனக்கு இப்ப சந்தேகம். இந்தத் தடவை எனக்குத் தான் எம் எல் ஏ சீட். இங்க இருக்கச் சுற்று வட்டாரத்தில எல்லாம் என்னோட கொடிதானே பறக்குது. இது இன்னும் மேலிடத்துக்குத் தெரியாமலா இருக்கும், நல்ல தம்பி” என்று பதிலளித்தார், தனஞ்செழியன்.

“அண்ணே, எதிர் கட்சில இருக்கிற வெங்கடேசனை எதிர்த்து இந்த முறை எப்படியாச்சும் நாமதான் வெற்றி பெறனும். அதுக்கு ஏதாச்சும் செய்யுங்க அண்ணே…?”

“டேய், அவனுக்கு இந்த ஊர்ல இப்ப டெபாசிட்டே இல்லைன்னு எனக்கு நல்லாவே தெரியும். எனக்கு மட்டும் இந்தத் தடவை சீட்ட மட்டும் கொடுக்கட்டும் அப்புறம் பாரு. நான் என்ன பண்றேன்னு” என்றார், தனஞ்செழியன்.

“அண்ணா எனக்கும்…” என்று பேச்சை இழுத்தான், நல்ல தம்பி.

“சொல்லுடா… உனக்கும்?”

“இல்லண்ணே, எனக்கும் ஏதாவது ஒரு பதவி வாங்கிக் கொடுதீங்கனா, நானும் உங்க தயவுல கொஞ்சம்…!” என்று பேச்சை இழுத்தான் நல்லதம்பி.

“என்னடா, நான் இந்த வட்டத்துக்கே எம் எல் ஏவா இருக்கான்னு வச்சிக்க. நீ மட்டும் என்ன சும்மாவா இருப்பே…! நீயும் தமிழ் வெற்றி கழகத்தோட ஒரு கமிட்டி மெம்பர் தானே!” எனறார், தனஞ்செழியன்.

நல்ல தம்பி, இப்போது சிரித்த சிரிப்பில் முல்லைப் பற்கள் அவனை அறியாமல் வெளியே எட்டிப்பார்த்தது.

“சரிடா, நாளைக்குக் காலையிலே அந்தப் பள்ளிக்கூட ஆண்டு விழா வேற இருக்குல?”

“ஆமாங்க அண்ணே. காலையிலே பத்து மணிக்கு நீங்க அந்த ஆண்டு விழா மேடையில பேசுறீங்க”

“சரி மழை விட்டுதான்னு பார், போகலாம்” என்றார், தனஞ்செழியன்.

“நல்லதம்பி சரிங்க அண்ணா” என்று கூறிவிட்டு கண்ணாடியை திறந்து வானத்தைப் பார்த்தான்.

அந்த அழகான காட்சியை இப்படித் தான் கூறவேண்டும். உதகை மண்டலத்தில் பச்சை பசேலென இருக்கும் நிலப்பரப்பில் அதிகாலை நேரத்தில் பனிமூட்டம் இயற்கை எழிலுடன் காதல் கொள்ளும் காட்சி அது. இங்கேயும், அதுபோலக் காட்சிதான் நல்லதம்பி இருவிழிகள் கண்டது. பார்க்கும் இடமெல்லாம் கார்மேகக் துளிகள் மெல்ல காவியம் பாடி தனது கையெழுத்தைப் போட்டுக் கொண்டிருந்தது.

“அண்ணா…, மழை நின்னுடுச்சி. இரண்டே நிமிஷம் கார சரி பண்ணிட்டுக் கிளம்பிடலாம்” என்று கூறிவிட்டு. காரை சரி செய்வதற்காகக் காரில் இருந்து கீழே இறங்கினான், நல்ல தம்பி.

–தொடரும்…

< ஐந்தாவது பகுதி | ஏழாவது பகுதி >

10 thoughts on “வாகினி – 6 | மோ. ரவிந்தர்

  1. அற்புதமான வர்ணனைகள்…கதை போக்கு சிறப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

June 2021
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930