வரலாற்றில் இன்று – 31.05.2021 சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம்
உலகம் முழுவதும் ஆண்டுதோறும் மே 31ஆம் தேதி சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது.
புகையிலையில் நிக்கோடின் என்ற வேதிப்பொருள் உள்ளது. இதில் புற்றுநோயை உருவாக்கக்கூடிய காரணிகள் உள்ளன. புகையிலையின் தீங்கை மக்களிடம் கொண்டுசெல்வதும், புகையிலையால் ஏற்படும் ஆபத்தையும் அவற்றிலிருந்து விடுபடும் வழிகளையும் எடுத்துரைப்பதே இத்தினத்தின் நோக்கம்.
வால்ட் விட்மன்
அடிமை வியாபாரத்தை எதிர்த்தவரான வசனநடை கவிதையின் தந்தை வால்ட் விட்மன் (Walt Whitman) 1819ஆம் ஆண்டு மே 31ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் மாநிலம் ஹன்டிங்டனில் பிறந்தார்.
இவர் ‘சாங் ஆஃப் மைசெல்ஃப்’ என்ற கவிதை நூலையும், பிராங்க்ளின் இவான்ஸ் என்ற நாவலையும் எழுதியுள்ளார். அடிமைகளுக்கு இழைக்கப்படும்
கொடுமைகளை எதிர்த்து “Free Soil” (சுதந்திர பூமி) என்ற பத்திரிகையைத் தொடங்கினார்.
கருப்பின மக்களை அடிமைத்தனத்தில் இருந்து விடுவிக்க ஆபிரகாம் லிங்கன் எடுத்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து, அமெரிக்க உள்நாட்டுப் போர் தொடங்கியது.
போர் வெற்றி பெற்ற சில நாளில் ஆபிரகாம் லிங்கன் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த மனவேதனையில் விட்மன் எழுதிய ‘ஓ கேப்டன், மை கேப்டன்’ என்ற இரங்கற்பா, படிப்போரை உணர்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது.
பல போராட்டங்களை கடந்து தனக்கான அங்கீகாரத்தைப் பெற்ற புரட்சிக்கவிஞர் வால்ட் விட்மன் 1892ஆம் ஆண்டு மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
1911ஆம் ஆண்டு மே 31ஆம் தேதி டைட்டானிக் கப்பல் வெள்ளோட்டம் (சோதனை) விடப்பட்டது. 1976ஆம் ஆண்டு மே 31ஆம் தேதி மூலக்கூறு உயிரியலின் சிற்பி ஜாக்குவஸ் லூசியன் மோனாட் (Jacques Lucien Monod) மறைந்தார்.