வரலாற்றில் இன்று – 11.03.2021 உலக சிறுநீரக தினம்
ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் இரண்டாம் வியாழக்கிழமை உலக சிறுநீரக தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இத்தினம் 2006ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது. அத்துடன் சிறுநீரக பாதுகாப்பு, சிறுநீரக செயலிழப்பு மற்றும் சிறுநீரகம் தொடர்பான நோய்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
டாக்டர் வி.சாந்தா
பிரபல புற்றுநோய் மருத்துவ நிபுணரும், முன்னாள் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவருமான டாக்டர் வி.சாந்தா 1927ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் தேதி சென்னை மயிலாப்பூரில் பிறந்தார்.
இவர் தனது குருவாக டாக்டர் எஸ்.கிருஷ்ணமூர்த்தியை போற்றுகிறார். 12 படுக்கைகளுடன் மட்டுமே இயங்கிவந்த அடையாறு மருத்துவமனையை தனது குருவுடன் சேர்ந்து தரம்வாய்ந்த, புற்றுநோய் சிகிச்சை மையமாக மாற்றுவதில் பெரும் பங்காற்றினார். இவர் புற்றுநோய் தொடர்பாக தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ளார். மக்சேசே விருது, பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண், நாயுடம்மா நினைவு விருது, ஒளவையார் விருது, அன்னை தெரசா விருது உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.
உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றிருந்தார். நோயாளிகளுக்கு உதவுவதுடன் ஆயிரக்கணக்கான மருத்துவர்களுக்கு வழிகாட்டியாக செயலாற்றி வந்தார். நோயாளிகளின் நம்பிக்கை நாயகி என்று போற்றப்பட்ட டாக்டர் வி.சாந்தா 2021ஆம் ஆண்டு ஜனவரி 09ஆம் தேதி மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
1861ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் தேதி அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தியது.
1983ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் தேதி பாகிஸ்தான் அணு ஆயுத சோதனை நடத்தியது.
1936ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் தேதி ஜெர்மானிய நச்சுயிரியல் வல்லுநர் ஹரால்ட் ஸுர் ஹஸென் பிறந்தார்.
1955ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் தேதி நுண்ணுயிர் கொல்லியான சிதைநொதியைக் கண்டுபிடித்த அலெக்சாண்டர் பிளெமிங் மறைந்தார்.
1967ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் தேதி இந்திய விடுதலைப் போராட்ட வீரர் வெ.அ.சுந்தரம் மறைந்தார்.
2002ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் தேதி ஹெல்ஷ்ரீபர் என்னும் கருவியை கண்டுபிடித்த ருடால்ப் ஹெல் மறைந்தார்.