ஜான் பென்னிகுவிக் – முல்லைப் பெரியாறு அணை

சூரரைப் போற்று…

தமிழக மலைப்பகுதிகளில் உருவாகி,கேரளா மலைப்பகுதியில் கிழக்கு நோக்கி ஓடி, வீணாகக் கடலில் கலந்து கொண்டிருந்த ஒரு ஆறு தான் முல்லை ஆறு.அப்படி வீணாக கடலில் கலந்த தண்ணீரை மேற்கு நோக்கி,அதாவது தமிழகத்தை நோக்கி திருப்பினால்,வறட்சியின் கோரப்பிடியில் சிக்கிக் கொண்டிருந்த ஐந்து மாவட்டங்கள் வளம் பெறும் என்பதற்காக 300 ஆண்டுகளுக்கு முன்னர் அன்றைய சேதுபதி மன்னர்கள் காலத்திலும்,அதற்கு அடுத்து வந்த பிரிட்டிஷ் அரசாலும்,கிழக்கு நோக்கி செல்லும் முல்லை ஆற்றின் போக்கை தடுத்து அதை மேற்கு நோக்கி,தமிழ்நாட்டை நோக்கித் திருப்ப ஒரு திட்டம் போடப்பட்டது.

அருமையான அந்தத் திட்டம், திட்டம் என்றளவிலேயே காகிதத்திலேயே நின்றுவிட்டது.காரணம்,அந்தத் திட்டத்தில் இருந்த மிகக் கடினமான சவால்கள்.எந்த விதமான வசதிகளும் இல்லாத,முறையான பாதை கூட இல்லாத அடர்த்தியான வனப்பகுதி,வன விலங்குகள்,மலேரியா போன்ற கொள்ளை நோய்களைப் பரப்பும் கொசுக்கள்,அட்டைப் பூச்சிகள்…. என நீண்ட சவால்களுக்குப் பயந்து அந்த அணை கட்டும் திட்டத்தில் எந்தப் பொறியாளருமே ஆர்வம் காட்டவில்லை.இப்படியான ஒரு சூழ்நிலையில் சவால்களை உடைத்து அணையை சாத்தியமாக்கும் ஒரு சாகசக்காரனை பிரிட்டீஷ் அரசு வலை வீசித் தேடிக் கொண்டிருந்தது.1885 களில் சென்னை மாகாணத்தில் ஓரிடத்தில் கிரிக்கெட் போட்டி நடத்திக் கொண்டிருந்த “அவரின்” காலில் வந்து அந்த வலை வந்து விழுந்தது.

To,
Mr.”கர்னல் ஜான் பென்னி குவிக்” என்று தொடங்கிய அந்த கடிதம்,”மிஸ்ட்டர்,ஜான்,மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில்,ஒரு அணையைக் கட்ட பிரிட்டிஷ் அரசு முடிவு செய்துள்ளது.அதை நீங்கள் தான் செய்ய வேண்டும்.உடனடியாக மதுரைக்கு வரவும்.. “–அவரது கைகளுக்குக் கிடைத்தது.கிரிக்கெட் பேட்டை கீழே வைத்துவிட்டு இன்ஜீனியரிங் டிராப்ட்டரை கையில் எடுத்துக் கொண்டு மதுரைக்கு கிளம்பினார் பென்னி குவிக்.

அவரிடம் அணை கட்டும் திட்டத்திற்கான வரைவு உட்பட பல விவரங்கள் தரப்பட்டது.1887 ல் அணை கட்டும் பணி தொடங்கியது.தொடங்கியது என்ற இந்த வார்த்தையை எளிதாக வாசிப்பதைப் போல இருக்கவில்லை அந்தப் பணி.எந்தவொரு பொருள் தேவைப்பட்டாலும்,அந்த சிறியதோ,பெரிதோ,அது மதுரையில் இருந்து தான் வர வேண்டும்.

கடுமையான காட்டுப் பகுதியின் வழியாக,வர பல நாட்களாகும்.இப்படியான சூழ்நிலையில் அணை கட்டும் பணி தொடங்கியது.எக்காரணம் கொண்டும் அணை கட்டும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களைத் துன்புறுத்தக் கூடாது.அவர்களுக்கு நியாயமான சம்பளம் வழங்க வேண்டும்.நமக்கு இருக்கிறதோ இல்லையோ,தொழிலாளர்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும்….என்பன போன்றவைகளில்,தான் கட்டப் போகும் அணையை விட உறுதியாக இருந்தார்,பென்னி குவிக்.அணை கட்டும் பணியும் வேகமாக வளர்ந்தது.பாதி அணை கட்டி முடிவடைந்த நிலையில் காட்டில் கடுமையான மழை வெளுத்தெடுத்தது.

அந்த மழையில் பாதி கட்டப்பட்ட அணை உடைந்து,வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.சர்வ நாசம்.மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டும்.மனம் தளரவில்லை பென்னி குவிக்.மீண்டும் தொடங்கினார்.ஓரளவு வளர்ந்த நிலையில் இருந்த அணைக்கான சவால்,இம்முறை வன விலங்குகள் வடிவத்தில் வந்தது.மிகப் பெரும் யானைக் கூட்டம் வந்து அணையை முட்டி,மோதி,உடைத்துச் சிதைத்துப் போட்டன.இரண்டாவது முறையாக துவங்கிய இடத்திலேயே பூஜ்ஜியத்தில் வந்து நின்றார் பென்னிகுவிக்.மூன்றாம் முறை பணியைத் தொடங்கலாம் என்று நினைத்த பென்னி குவிக்கின் படைகளை மலேரியா தாக்கியது.

இப்படி தொடர்ச்சியான துன்பங்களைப் பார்த்த பிரிட்டீஷ் அரசு,அணை கட்டும் பணியை நிறுத்தி விடலாம் என்று முடிவு செய்து பென்னி குவிக்கை திரும்ப அழைத்தது.சென்னையில் வைத்து நடந்த பிரிட்டீஷ் அதிகாரிகள் கூட்டத்தில் பென்னி குவிக்கிடம் அணை கட்டும் பணியை அப்படியே நிறுத்திவிட்டு,நீங்கள் வடஇந்தியாவில் பணிக்குச் செல்லுங்கள் என்ற உத்திரவு தரப்பட்டது.ஆனால் அந்த உத்திரவை பென்னி குவிக் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

“நான் இந்த பூமிக்கு வருவது ஒரு முறை மட்டுமே.ஆகையால் நான் வந்து சென்றதன் அடையாளமாக மக்களுக்கு ஏதேனும் செய்ய நினைக்கிறேன்.அந்த அணை கட்டப்பட்டால்,அதனால் பல லட்சக்கணக்கான நிலங்கள் பாசன வசதி பெறும்.லட்சக்கணக்கான மக்களின் குடிநீர் தேவை பூர்த்தியாகும்.எனவே நான் என் சொந்தத் பணத்தில் அணையைக் கட்டப் போகிறேன்…”–என்று கூறிவிட்டு வெளியேறினார்.

வெளியே வந்தவர்,உடனடியாக தன் சொந்த நாடான இங்கிலாந்துக்கு-அயர்லாந்துக்கு கப்பலேறினார்.அங்கு சென்று தனக்கு சொந்தமானது என்றிருந்த சகலத்தையும் விற்றார்.எதையும் விடவில்லை.தன் பாட்டனார் தனக்குத் தந்த வீட்டையும் விற்றார்.ஓரளவிற்குப் பணம் கிடைத்தது.எடுத்துக் கொண்டு மதுரைக்கு வந்தார்.

மீண்டும் அணையைக் கட்டும் பணியைத் தொடங்கினார்.இம்முறை இயற்கை ஒத்துழைத்தது.அணை வேகமாக வளர்ந்தது.கடல் மட்டத்தில் இருந்து 2980 அடிகள் உயரத்தில்,அடர்ந்த காட்டின் நடுவே,முல்லை என்ற ஒரு காட்டாற்றின் போக்கை மாற்றியவாறு,146 அடிகள் கொள்ளளவுடன்,1895 ல் முல்லைப் பெரியாறு அணை கம்பீரமாக எழுந்து நின்றது.ஒரு பொறியாளன் என்ற முறையில்,பொறியாளர் கர்னல் ஜான் பென்னி குவிக் அவர்களுக்கு,179 வது பிறந்தநாள் வாழ்த்துகள்.. அவரது சேவையை போற்றுவோம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!