வரலாற்றில் இன்று – 15.01.2021 இந்திய ராணுவ தினம்
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15ஆம் தேதி இந்திய ராணுவ தினமாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த நாளை ராணுவ தினமாகத் தேர்ந்தெடுத்ததற்கு காரணம், இந்தியாவின் முதல் ராணுவ தளபதியாக ஜெனரல் கே.எம்.கரியப்பா (K.M.Cariappa) 1949ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதிதான் பதவி ஏற்றார். அதற்கு முன்பு வரை பிரிட்டிஷ்காரர்களே தளபதிகளாக இருந்து வந்தார்கள். இவர் ராணுவ வாழ்க்கையில் தனது இறுதி மூச்சு வரை நாட்டிற்காக தன்னலமற்ற சேவை புரிந்தவர்.
மார்ட்டின் லூதர் கிங்
அமெரிக்காவில் அடிமை முறையையும், நிற வேறுபாட்டையும் ஒழிக்க முதன் முதலாகக் குரல் கொடுத்த மார்ட்டின் லூதர் கிங் 1929ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி அமெரிக்காவில் அட்லாண்டா நகரில் பிறந்தார்.
இவர் காந்திய வழியில் வன்முறையற்ற அறப்போராட்டங்களை நடத்தியதால், அமெரிக்க முற்போக்கு வரலாற்றில் ஒரு தேசிய சின்னமாகக் கருதப்படுகிறார்.
1964ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு மார்டின் லூதர் கிங்குக்கு வழங்கப்பட்டது. உலகம் முழுவதும் புகழ்பெற்ற மார்டின் லூதர் கிங் 1968ஆம் ஆண்டு மறைந்தார்.
எட்வர்டு டெல்லர்
ஹைட்ரஜன் குண்டின் தந்தை என்று அழைக்கப்படும் அமெரிக்க இயற்பியல் ஆராய்ச்சியாளர் எட்வர்டு டெல்லர் 1908ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டில் பிறந்தார்.
இவர் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்று, டென்மார்க்கு சென்று விஞ்ஞானி நீல்ஸ் போரிடம் அணுவியல் குறித்து கற்றார். இவர் விஞ்ஞான மேதை ஜார்ஜ் காமோவுடன் இணைந்து அணுக்கரு இயற்பியல், தெர்மோ நியூக்ளியர் இயக்கங்கள் பற்றி பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.
இவரது முக்கிய பங்களிப்புடன் தயாரிக்கப்பட்ட ஹைட்ரஜன் குண்டு 1952ஆம் ஆண்டு பசிபிக் கடல் பகுதியில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. இவர் கௌரவம் வாய்ந்த பிரசிடென்ட் மெடல் ஆஃப் ஃப்ரீடம் உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.
இறுதிவரை பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுவந்த எட்வர்டு டெல்லர் 2003ஆம் ஆண்டு மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
2001ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி விக்கிப்பீடியா துவங்கப்பட்டது.
1998ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி முன்னாள் இந்தியப் பிரதமர் குல்சாரிலால் நந்தா மறைந்தார்.
1981ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி தமிழறிஞர் தேவநேயப் பாவாணர் மறைந்தார்.