வரலாற்றில் இன்று – 11.01.2021 தேசிய சாலை பாதுகாப்பு வாரம்

 வரலாற்றில் இன்று – 11.01.2021 தேசிய சாலை பாதுகாப்பு வாரம்

இந்திய அளவில் ஜனவரி 11 முதல் 17ஆம் தேதி வரை தேசிய சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. விபத்துகளைக் குறைப்பது, விபத்துகள் ஏற்படாமல் தவிர்ப்பது மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்தினத்தின் நோக்கமாகும்.

ராகுல் டிராவிட்

இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் 1973ஆம் ஆண்டு ஜனவரி 11ஆம் தேதி மத்தியப் பிரதேசத்திலுள்ள இந்தூரில் பிறந்தார். 1996ஆம் ஆண்டு இந்திய அணி சார்பாக ஆடத் தொடங்கிய இவர், அக்டோபர் 2005ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணித்தலைவராக நியமிக்கப்பட்டார்.

டிராவிட் சிறந்த ஆட்டக்காரர் மற்றும் சிறந்த டெஸ்ட் ஆட்டக்காரர் ஆகிய விருதுகளை தொடக்க ஆண்டிலேயே (2004) வென்றார். இவர் பத்மஸ்ரீ விருது, பத்ம பூஷண் போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார். நீண்ட நேரத்திற்கு நின்று பேட் செய்யக்கூடிய திறனைப்பார்த்து இவரை தி வால் என்று அழைப்பார்கள்.

திருப்பூர் குமரன் – இன்று இவரின் நினைவு தினம்..!

இந்திய விடுதலைப் போராட்ட தியாகி திருப்பூர் குமரன் 1904ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் பிறந்தார். இளம் வயதிலேயே நாட்டுப்பற்று மிக்கவராகத் திகழ்ந்தார் குமரன். விடுதலை வேட்கையால் உந்தப்பட்டு திருப்பூரில் நடந்த அறப்போராட்டங்களில் கலந்து கொண்டார். பின்னர் பல போராட்டங்களுக்கு தலைமையேற்றார்.

1932ஆம் ஆண்டு ஜனவரியில், காந்தியடிகளின் சட்ட மறுப்பு இயக்கத்துக்கு ஆதரவாக தமிழக மண்ணில் போராட்டம் நடந்தது. இதுவே குமரனின் தலையெழுத்தை தீர்மானிக்கும் சரித்திர நிகழ்வாக அமைந்தது.

இப்போராட்டத்தில் காவலர்களால் தாக்கப்பட்டு கையில் இந்திய தேசியக்கொடியை ஏந்தியப்படி மயங்கி விழுந்தார். அதன்பின், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் ஜனவரி 11ஆம் தேதி மறைந்தார். இதனால், இவர் கொடிகாத்த குமரன் என்றும் அழைக்கப்படுகிறார்.

லால் பகதூர் சாஸ்திரி – இன்று இவரின் நினைவு தினம்..!

இந்திய குடியரசின் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி 1904ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள முகல்சராய் என்ற ஊரில் பிறந்தார்.

காந்தியடிகளின் அழைப்பிற்கு இணங்க இவர் தனது படிப்பை நிறுத்திக் கொண்டு நாட்டின் சுதந்திரத்திற்காக போராடினார். இவர் ஒத்துழையாமை இயக்கம், உப்பு சத்தியாக்கிரகம், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கு கொண்டுள்ளார்.

இவர் உள்துறை அமைச்சர், போக்குவரத்து துறை அமைச்சர் போன்ற பல பதவிகளில் திறம்பட செயலாற்றினார். தேசிய பால்பண்ணை வளர்ச்சி துறையை உண்டாக்கி வெண்மைப் புரட்சிக்கான அடித்தளமிட்டார். நேருவின் மறைவுக்குப் பின்னர் இந்தியாவின் பிரதமர் ஆனார்.

எளியவர்களின் தலைவராக திகழ்ந்த இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. வரலாற்று நாயகர் லால் பகதூர் சாஸ்திரி 1966ஆம் ஆண்டு ஜனவரி 11ஆம் தேதி மறைந்தார்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...