ஒயிட் மட்டன் குழம்பு

 ஒயிட் மட்டன் குழம்பு

மேரினேஷன் செய்யத் தேவையானவை : மட்டன் – 1/2 கிலோ சின்னத் துண்டுகளாக வெட்டிய, அதிகம் எலும்பில்லாத (70/30ரேஷியோ) கறியாக வாங்கவும், தயிர் அல்லது ப்ளைன் யோகர்ட் – 50ML எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன், சோம்பு – 1 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

அரைக்க : தேங்காய் – அரை மூடி, முழு முந்திரிப் பருப்பு -12, கசகசா – 1 டேபிள் ஸ்பூன்.

குழம்புக்கு : தயிர் – 2 டேபிள் ஸ்பூன், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1, கீறிய முழு பச்சை மிளகாய் -6, கிராம்பு -3, ஏலக்காய் – 4, பிரியாணி இலை – 1, பட்டை – 1 சிறு துண்டு, இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன், சோம்பு – 1டீஸ்பூன், நெய் – 3 டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை – 1கைப்பிடி, உப்பு – தேவையான அளவு.

செய்முறை : மட்டன் துண்டுகளை தயிர், எலுமிச்சை சாறு, சோம்பு, தேவையான உப்பு போட்டு நன்கு பிசைந்து அதை 20 நிமிடங்கள் ஒரு பாத்திரத்தில் ஊற வைக்கவும். ஃப்ரிட்ஜில் வைத்தால் 15 நிமிடம் போதும் ஃப்ரீசரில் வைக்கக்கூடாது.

அரைக்க கொடுத்துள்ள தேங்காய், முந்திரி, கசகசாஇவற்றை நன்கு மை போல அரைத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு குக்கரில் நெய்விட்டு சூடாக்கி கிராம்பு, பிரியாணி இலை, பட்டை, ஏலக்காய், கிராம்பு, சோம்பு இவற்றை போட்டு நன்கு மணமாக தாளிக்கவும். பிறகு இதில் இஞ்சி பூண்டு விழுது 2 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

பிறகு இதில் வெட்டி வைத்துள்ள வெங்காயம் பச்சை மிளகாய்களைச் சேர்த்து நன்கு மென்மையாகும் படி வதக்கவும், பிறகு இதில் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பிறகு இதில் ஊறிய மட்டனை போட்டு 8நிமிடங்கள் வரை வதக்கவும்.

8 அல்லது 10 நிமிடங்களுக்குப் பின் தேவையான நீர் சேர்த்து குக்கரை மூடி 8 விசில் வரும் வரை வேகவிடவும். பிறகு அடுப்பை அணைத்துவிட்டு குக்கரில் உள்ள பிரஷர் வெயிட்டை மட்டும் லேசாக தூக்கி எல்லா நீராவியையும் வெளியேற்றவும்.

நீராவி சுத்தமாக வெளியேறியதும் குக்கரைத் திறந்து அரைத்து வைத்த தேங்காய் விழுதை குழம்பில் சேர்த்து அடுப்பை குறைவான தீயில் வைத்து 10 முதல் 12 நிமிடங்கள் வரை குழம்பை கொதிக்கவிட்டு பின்பு இறக்கி வைக்கவும்.!

பளீர் வெள்ளை நிறத்தில் கமகம மணத்துடன் ஒயிட் மட்டன் குழம்பு தயார்! வெள்ளை சாதம், இட்லி, தோசை, ஆப்பம், இடியாப்பம், சப்பாத்தி, பூரி, புரோட்டா என அனைத்திற்கும்

ஏற்ற குழம்பு இது! நெய் சோறு (அ) தேங்காய் சாதத்திற்கு இது அமர்க்களமாக இருக்கும். தேங்காய் சேர்த்து இருப்பதால் ஒரே நாளில் சாப்பிட்டு விடுவது நல்லது!

எங்கள் வீட்டில் காலையிலேயே வைத்துவிடுவோம்! காலை சூடான இட்லிக்கும், மதியம் நெய் சோறுக்கும், இரவு சப்பாத்திக்கும் முடிந்துவிடும்! சிலநேரம் மதியமே தீர்ந்திடும்!

ஃபிரிட்ஜில் வைத்து மறுநாள் சாப்பிட்டால் குழம்பு சுவை கொஞ்சம் மாறும் (சிலநேரம் புளிக்கும்) வாய்ப்பு உள்ளது!

விருப்பப்பட்டவர்கள் தக்காளி, கொத்தமல்லி, காலிஃப்ளவர், அவரைக்காய், சுரைக்காய் போன்ற காய்களை குழம்பில் சேர்க்கலாம்.. காலிஃப்ளவர் & சுரைக்காய் தவிர மற்றவை குழம்பின் வெள்ளை நிறத்தை குறைத்துவிடும்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...