வரலாற்றில் இன்று – 29.11.2020 சர்வதேச பாலஸ்தீன மக்கள் ஒற்றுமை தினம்

சர்வதேச பாலஸ்தீன மக்கள் ஒற்றுமை தினம் நவம்பர் 29ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஐ.நா. பொதுச்சபை பாலஸ்தீனத்தில் அமைதி மற்றும் மக்களின் உரிமையைப் பாதுகாக்க பலமுறை முயன்றது. இருப்பினும் பிரச்சனை தீர்க்க முடியாமல் போனது. எனவே பாலஸ்தீன மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி ஒற்றுமையைக் கொண்டுவர 1979ஆம் ஆண்டு இத்தினம் அறிவிக்கப்பட்டது.

என்.எஸ்.கிருஷ்ணன்

தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் 1908ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் தேதி நாகர்கோவிலில் பிறந்தார்.

இவர் ஒரு நாடக கொட்டகையில் சோளப்பொரி, கடலை மிட்டாய், முறுக்கு ஆகியவற்றை விற்பனை செய்து வந்தார். அப்பொழுது நாடகத்தின் மீது அதிக ஈர்ப்பு ஏற்பட்டது. மகனின் ஆர்வத்தைக் கண்ட இவருடைய தந்தை இவரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் சேர்த்துவிட்டார். இவர் பல நாடக கம்பெனிகளில் பணியாற்றினார்.

இவர் பல நாடகங்களை எழுதி இயற்றியுள்ளார். இவர் திரையுலகில் கொடிகட்டிப் பறந்தபோதும் நாடகம் மீதுள்ள ஈர்ப்பு இவருக்கு குறையவில்லை. இவரது திரையுலக வாழ்வைத் தொடங்கிவைத்த படம் ‘சதிலீலாவதி’. சார்லி சாப்ளினுடன் ஒப்பிட்டுப் பேசியதற்கு,’சாப்ளினை ஆயிரம் துண்டு போட்டாலும் அதில் ஒரு துண்டுக்குகூட நான் ஈடாக மாட்டேன்’ என்று தன்னடக்கத்துடன் கூறினார்.

குறுகிய காலத்தில் சுமார் 150 திரைப்படங்களில் நடித்தவர். 1947ஆம் ஆண்டு சென்னை திருவல்லிக்கேணி நடராஜா கல்விக் கழகம் சார்பில் இவருக்கு ‘கலைவாணர்’ பட்டம் வழங்கப்பட்டது. நகைச்சுவையில் புரட்சியை ஏற்படுத்திய கலைவாணர் 1957ஆம் ஆண்டு மறைந்தார்.

தக்கர் பாபா

தாழ்த்தப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்காக வாழ்க்கையை அர்ப்பணித்த அம்ரித்லால் விதல்தாஸ் தக்கர் பாபா 1869ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் தேதி குஜராத் மாநிலம் பாவ்நகரில் பிறந்தார்.

இவர் ஷோலாப்பூர், பாவ்நகர், போர்பந்தர் உள்ளிட்ட இடங்களில் ரயில்வே பொறியாளராக 10 ஆண்டுகள் பணியாற்றினார். பின்பு இவர் 3 ஆண்டு ஒப்பந்தத்தில் 1900ஆம் ஆண்டு உகாண்டா நாட்டுக்கு சென்றார்.

பின்பு தாயகம் திரும்பியதும், சாங்லி நகரில் ரயில்வே தலைமைப் பொறியாளர் வேலை கிடைத்தது. அப்போது கோபாலகிருஷ்ண கோகலே மூலம் மகாத்மா காந்தியின் அறிமுகமும் கிடைத்தது. தாழ்த்தப்பட்ட தொழிலாளர்களின் விடிவெள்ளியாக இருந்து அவர்களது குழந்தைகளுக்காக பள்ளிக்கூடம் தொடங்கினார்.

தாழ்த்தப்பட்ட, ஆதிவாசி மக்களுக்காக பாபா சேவையாற்றியதுபோல என்னால்கூட தொண்டு செய்ய முடியவில்லை. பாபாவைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது என்று நெகிழ்ச்சியுடன் கூறினார் காந்திஜி.

தீண்டாமையை ஒழிக்க வாழ்நாள் முழுவதும் அயராது பாடுபட்ட தக்கர் பாபா 1951ஆம் ஆண்டு மறைந்தார்.

முக்கிய நிகழ்வுகள்

1993ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் தேதி இந்திய தொழிலதிபர் ஜே.ஆர்.டி.டாடா மறைந்தார்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...