எத்தனை எத்தனை பவுர்ணமிகள் | ப்ரணா
ஓரு சாமானியனின் புத்தக அலமாரி
புத்தக பொன்மொழி:
“மனிதனின் கண்டுபிடிப்புகளில் மிகச்சிறந்தது புத்தகமே ” – ஐன்ஸ்டீன்
எழுத்தாளர்கள் என்பவர்கள் யார்? இதற்கான எளிமையான பதில் எழுத்தை ஆள்பவர்கள் எழுத்தாளர்கள். நீங்கள் வாரப் பத்திரிக்கையோ அல்லது மாத பத்திரிக்கையோ வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களெனில் அதில் துணுக்கு, ஜோக்ஸ், கவிதை, கேள்வி-பதில், சிறுகதை , குறுநாவல், நாவல் என பல படைப்புகளை பார்த்திருப்பீர்கள். அதன் கீழ் பல்வேறு பெயர்களையும் பார்த்திருப்பீர்கள். கடந்த பத்து அல்லது இருபது ஆண்டுகளின் பல்வேறு பத்திரிக்கைகளை எடுத்து வைத்து உற்று கவனித்தால் பல பெயர்கள் அதில் மீண்டும் மீண்டும் வருவதை கவனிக்கலாம்.
இவர்களெல்லாம் யார்? இவர்கள் பின்னணி என்ன? இவர்கள் முழுநேரப் படைப்பாளர்களா? எழுதுவது தான் இவர்களின் முழுநேரப் பணியா? எப்படி இவர்கள் மட்டும் பத்திரிக்கை ஆசிரியர் குழுவை அசர வைக்கும் படைப்புகளோடு வருகிறார்கள்? எங்ஙனம் அந்த பத்திரிக்கையின் வாசக நெஞ்சங்களின் ரசனை நாடியை கணித்தார்கள்? இதனால் இவர்கள் அடைந்த வெகுமதி என்ன? இவற்றால் மற்றவர்களுக்கு கிடைத்த பயனென்ன? என்று பல்வேறு கேள்விகள் முன்பெல்லாம் பதில் இல்லாமலே அலைந்து கொண்டிருந்தன.
அத்தனை கேள்விகளுக்கும் ஒட்டு மொத்த பதிலாக வெளிவந்திருக்கு புத்தகம் தான் வெ.ராம்குமார் அவர்களின் “எழுத்தாள்பவர்கள் ஒரு பார்வை “புத்தகம். இலக்கிய இதழோ, வணிக இதழோ எதுவாயினும் அதில் இடம் பெறும் படைப்புகளுக்கு சொந்தக்காரர்களாய் விளங்கும் எழுத்தாளர்களை குறித்த துரித மற்றும் ஆழ்ந்த அறிமுகம் தனை முன் வைக்கும் புத்தகமே இது.
“தமிழக எழுத்தாளர்கள்” வாட்ஸ் அப் குழுமம் சார்பில் அந்த குழுமத்தில் இடம் பெற்றுள்ள ஏறக்குறைய 100 எழுத்தாளர்களை பற்றிய குறிப்புகளை உள்ளடக்கிய புத்தகமெனினும், பத்திரிக்கையில் நாம் பார்க்கும் 90% சதவிகித நபர்களை பற்றிய தகவல்கள் அடங்கியிருப்பது இந்த நூலின் முக்கியமான தனிச்சிறப்பு. மேலும் அத்தனை படைப்பாளிகளின் புகைப்படத்தையும் மற்றும் தொலைபேசி எண்ணையும் பதிவு செய்திருப்பது மற்றுமொரு சிறப்பு.
ஒவ்வொருவர் பற்றி படிக்கும் போதும் ஆச்சரியமே மேலிடுகிறது. ராணுவத்தில் பணிபுரிந்தவர், தபால் துறையில் இருப்பவர்கள், மருத்துவர், சினிமா இயக்குநனர், ஆசிரியர், கோவில் அர்ச்சகர், மளிகைக்கடை வைத்திருப்பவர், தொழிற்சாலையில் பணிபுரிபவர், சுயதொழில் செய்பவர்கள், அக்கவுண்டண்ட், வங்கி பணியில் இருப்பவர், மத்திய அரசுதுறை உத்தியோகத்தில் இருந்தவர், பத்திரிக்கை ஆசிரியர், பல்கலைக்கழகத்தில் பணிபுரிபவர், FM ரேடியா நடத்துபவர்கள் என ஒவ்வொருவரும் தங்கள் நிதி ஆதாரத்தை வேறு வழியில் நிலைபடுத்திக் கொண்டவர்களே. ஆனால் அத்தனை நபர்களையும் படைப்பாளிகள் என்ற ஒற்றை அடையாளம் ஒன்றிணைக்கின்றது.
இங்கு ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன்.
“ஒரு பத்திரிக்கையில் எனது படைப்பு வந்துள்ளது” என நான் சமூக வலைதளத்தில் பதிவிட்டதும் முன்பெல்லாம் நான் எதிர்கொள்ளும் முதல் கேள்வி, “எவ்வளவு கொடுப்பார்கள்?” என்பதே.
அதற்கான பொது பதிலை இங்கே பதிவிடுகிறேன். “நெறி சார்ந்து இயங்கும் பெரும்பாலான “வணிக” இதழ்கள் அந்தந்த படைப்புக்கேற்ற நிறைவான சன்மானம் தருகின்றது” என்பதே உண்மை. அதை வைத்து ஊரையெல்லாம் விலைக்கு வாங்கமுடியாது. ஆனால் படைப்பு வரும் போது கிடைக்கும் மகிழ்ச்சி கோடி கொடுத்தாலும் கிடைக்காது. நான் வாங்கிய நூற்றுக்கணக்கான புத்தகங்கள் எனது பத்திரிக்கை படைப்புகளுக்கான சன்மானத்தை வைத்தே வாங்கியவை என்பதை மட்டும் இங்கே பதிவு செய்துவிட்டு புத்தகம் குறித்து மேலே தொடர விரும்புகிறேன்.
குறைந்த பட்சம் 100 ஜோக்ஸிருந்து அதிகபட்சம் சில 1000 ஜோக்ஸ் வரை எழுதியவர்களின் சாதனை குறிப்புகளை வாசிக்கும் போது மலைப்பாய் இருக்கிறது. பல நூறு சிறுகதைகள், பல நூறு கவிதைகள், கட்டுரைகள், துணுக்குகள் என பிரசுரம் கண்டவர்கள் மற்றும் ஒரு சிறு இடைவெளிக்குப் பிறகு எழுத வந்து சாதித்தவர்கள் என ஒவ்வொருவர் பற்றிய குறிப்புகளுமே ஒரு உத்வேகத்தையும், உற்சாகத்தையும், உழைப்பின் உயர்வையும் நமக்கு சொல்லாமல் சொல்லிச் செல்கிறது.
ஒவ்வொருவர் குறித்தும் குறிப்புகளை சேகரித்து, அதை வடிவமைத்து, சிறந்த சின்னஞ்சிறிய கட்டுரைகளாக்கிய வெ.ராம்குமார் அவர்கள் நிச்சயம் பாராட்டுகுறியவர்.
இந்த புத்தகத்தின் வடிவமைப்பாளர் திரு.க.கமலகண்ணன் தனது “நட்புரை”யில் இப்படி குறிப்பிடுகிறார்:
“இதற்காக, (வெ.ராம்குமாரும், நானும்) குறைந்தபட்சம் 5 முறையும் அதிகபட்சம் 50 முறையும் தினம் பேசி இருக்கிறோம்” உண்மைதான். இதன் பின்னால் உள்ள மிகப்பெரிய உழைப்பை இந்த புத்தகத்தில் நம்மால் காண முடிகிறது.
பதிப்புரையில் திரு. திருமயம் பெ.பாண்டியன் மற்றும் திரு வைகை.ஆறுமுகம் இவ்வாறு பதிவு செய்கின்றனர்:
“ஒரு லட்டுக்கு பல பூந்திகள் உதவுவது போல இந்த (“தமிழக எழுத்தாளர்கள்” வாட்ஸ் அப்) குழும வளர்ச்சிக்கு பெரிதும் உதவி வரும் நண்பர்கள் பலர். அவர்கள் எல்லோரும் இந்த புத்தகத்தில் இடம் பெற்று இருக்கின்றார்கள்.”
எழுதிக்கொண்டிருந்தேன் ஆனால் இப்பொழுது தொய்வு ஏற்பட்டுள்ளது என்பவர்களும், பத்திரிக்கையில் எழுத வேண்டும் ஆனால் எப்படி துவங்குவது என திகைப்பவர்களும், இவர் ஜோக்கை வாசித்து சிரித்துள்ளேன், சிறுகதை வாசித்து நெகிழ்ந்துள்ளேன் என சொல்பவர்களும், பத்திரிக்கை உலகில் வெற்றிக்கொடி நாட்டிய படைபாளிகள் குறித்து அறிவதற்கும், சாதனையாளர்கள் என்பவர்கள் எங்கோ வானத்திலிருந்து குதிப்பதில்லை சப்தமில்லாமல் நமது பக்கத்து வீட்டில் கூட இருக்கலாம் என்ற பேருண்மையை உணர்வதற்கும் வாசிக்கப்பட வேண்டிய புத்தகம் இந்த எழுத்தாள்பவர்கள் ஒரு பார்வை.
நூல்: எழுத்தாள்பவர்கள் ஒரு பார்வை
ஆசிரியர்: வெ.ராம்குமார்
பிரிவு: கட்டுரைகள்
பக்கங்கள்: 218
விலை: 200
வெளியீடு: மார்ச் 2019
பதிப்பகம்: பாண்டியன் – வைகை பதிப்பகம்
1 Comment
பதிவுக்கு மிக்க நன்றி🙏