10,000 மைல் பயணம் – 2| வெ. இறையன்பு IAS

 10,000 மைல் பயணம் – 2| வெ. இறையன்பு IAS

DCIM100MEDIADJI_0002.JPG

  1. பயணப் பயன்கள்

பயணப்படுகிறபோது நம்மையும் அறியாமல் நமக்குள் ரசவாதம் நிகழ்கிறது. சிறிய பயணம் கூட நமக்குள் விரும்பத்தக்க மாற்றங்களைப் பதித்துவிட்டுச் செல்கிறது. கடுமையான பணிகளின் நடுவே தொங்கிப்போகிற கயிற்றுக்கட்டிலா மாறுகிற மனத்தை இழுத்துக்கட்டும் இனிய நிகழ்வு பயணம். தேங்கும்போது குட்டையா இருக்கும் நாம், ஓடும்போது ஓடையாகி சங்கீத சலசலப்புகளை ஏற்படுத்துகிறோம். அயர்ச்சியிலிருந்து விடுபட்டு மலர்ச்சியை நோக்கி அழைத்துச் செல்லுகிற ஊடகமாகப் பயணம் திகழ்கிறது.

இதுவரை பார்த்திராத புதிய இடம் நம் புலன்களைக் கூர்மைப்படுத்துகிறது. நம் கவலைகள் ஆவியாகி நிகழ்காலத்தில் முழுமையாக வாழும் மனநிலை அப்போது ஏற்படுகிறது. கண்டிராத தாவரங்கள், அரியவகைப் பறவைகள், கவர்ந்திழுக்கும் வண்ணத்துப்பூச்சிகள், வித்தியாசமான உணவு வகைகள், வேறுபட்ட உடையலங்காரம் போன்றவை ஒரே உலகத்திற்குள் இருக்கும் வெவ்வேறு உலகங்களை நமக்கு உணர்த்துகின்றன.

நமக்கும், அவர்களுக்கும் இருக்கும் ஒற்றுமையை உணரும்போது மனித நேயம் அதிகரிக்கிறது. வேற்றுமையை உணர்கிறபோது கற்றுக்கொள்ளும் ஆர்வம் ஏற்படுகிறது. நமக்குத் தெரியாத பல உண்மைகள் புலப்படும்போது நம் அறியாமை சுருங்கி, அறிவு விரிவாகிறது. உலகத்தில் அதிகப் படிப்பறிவு உள்ள நாடு அமெரிக்க ஐக்கிய நாடுகள் என்றோ, இங்கிலாந்து என்றோதான் நாம் பெரும்பாலும் நினைத்திருப்போம். ஆனால், உண்மையில் அதிகப் படிப்பறிவு உள்ள நாடு ஐஸ்லாந்துதான். அங்கு அது நூறு விழுக்காடு. ஒவ்வொரு ஐஸ்லாந்துக்காரரும் பள்ளியில் கட்டாயம் படித்திருக்கவேண்டும்.

குறைந்தது மூன்று மொழிகளாவது பேசத் தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு வேலைவாப்பு.

பயணம் முடிந்து திரும்பி வந்தால் பாறாங்கல்லா கனத்த பணி, பஞ்சுப்பொதியா இலகுவாகிறது. உற்சாகம் ஊற்றெடுக்கிறது. காற்று கசங்கிய இடங்களிலிருந்து தூய வாயு கிடைக்கும் புதிய பிரதேசத்திற்குப் பயணப்பட்டதால் நுரையீரல் விரிவடைந்து, உடம்பின் தசைகள் வலுவடைந்து நம்மை புதுப்பிக்க உதவுகின்றன.

இன்று நாம் கண்டுகளிக்கிற பல இடங்கள் நம் முன்னோர்கள் காட்சிப்படுத்தியமையால் உருவானவை. செஞ்சிக் கோட்டை விழுப்புரம் மாவட்டத்தில் ஒதுக்குப்புறமா இருக்கும் போர்க்காலச் சின்னம். அது உருவான வரலாறு சுவையானது.

சோழ மன்னர்களால் கி.பி. 9ஆம் நூற்றாண்டில் சிறிய கோட்டையாக உருவாக்கப்பட்டது. பிறகு 13ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசால் விருத்தி செய்யப்பட்டது. அது நாயக்கர்கள் காலத்தில் செஞ்சி நாயக்கர்களுக்குத் தலைமையிடமாகவும் இருந்து – மராத்தியர்கள் காலத்தில் சிவாஜியின் தலைமையில் 1677ஆம் ஆண்டு பீஜப்பூர் சுல்தான்களிடமிருந்து கைப்பற்றப்பட்டது.

அவுரங்கசீப்பை எதிர்த்துப் போராடிய சிவாஜியின் இரண்டாவது மகன் தப்பியோடி, செஞ்சியில் தங்கி மொகலாயர்களுடன் தொடர்ந்து சண்டையிட்டான். கோட்டையை முற்றுகையிட்ட பிறகும் ஏழு ஆண்டுகள் அதைக் கைப்பற்ற முடியாமல் மொகலாயர்கள் திண்டாடினார்கள். அதைக் கைப்பற்றும்போது சத்ரபதி ராஜாராம் ஏற்கெனவே தப்பியிருந்தார். செஞ்சிக் கோட்டையை யாராலும் துளைக்க முடியாத கோட்டை என்று சத்ரபதி சிவாஜி சிலாகித்திருந்தார். அதை வெள்ளைக்காரர்கள் கிழக்கின் ட்ரா” என்று வருணித்திருந்தார்கள். தேசிங் என்கிற பெயர், தேஜாசிங் என்பதன் மருவிய வடிவமே.

செஞ்சிக்கோட்டைக்குச் செல்லும்வரை அது கற்களால் ஆன கோட்டையாகத்தான் தோன்றும். ஆனால், அங்கு போனபிறகுதான் அது எண்ணற்ற வீரர்களின் தசைகளாலும், ரத்தத்தாலும் தோன்றியது என்பது புரியும்.

பயணம் செல்வதற்குத் துணிவு தேவை. கூச்சமும், தயக்கமும் கொண்டவர்கள் பயணத்தில் தோற்றுப் போவார்கள். கனவுகளைப் பற்றியும், ஆழ்மனத்தைப் பற்றியும் அடுக்கடுக்கா கட்டுரைகள் எழுதிய சிக்மன்ட் பிராட், பயணம் செய்யும்போது எப்போதும் ஒருவரை அழைத்துக் கொண்டுதான் செல்வார். காரணம், கடைசிவரை அவருக்கு ரயில் அட்டவணைகளை எப்படிப் பார்ப்பது என்பது தெரியாது. எந்த ரயில் எப்போது வரும் என்று பார்த்துச் சொல்வதற்காக ஒருவரைத் துணைக்கு அழைத்துச் செல்வது அவருடைய பழக்கம்.

இந்தியாவிற்குப் பயணம் வந்தவர்களால் எண்ணற்ற பயிர் வகைகளும், பழ வகைகளும் அறிமுகப்படுத்தப்பட்டன. இப்ராகிம் லோடியைத் தோற்கடித்த பாபர், இந்தியாவிற்குள் நுழைந்ததும் மிகுந்த வியப்பிற்குள்ளானார். இவ்வளவு செல்வம் படைத்த நாடு, இத்தனை எளிமையாக இருக்கிறதே என்று ஆச்சரியப்பட்டார். எளிய வீடுகள், சாதாரண உணவு போன்றவை மட்டுமே வசதிபடைத்தவர்களுக்கும் பண்பாடாக இருந்தது. அவர் அவசர அவசரமாகப் பல்வேறு உணவு வகைகளையும், பழவகைகளையும், பூங்கா அமைக்கும் முறைகளையும், ஆடம்பர வசதிகளையும் அறிமுகப்படுத்தினார். அப்படி படையெடுப்பால் தலையெடுத்த பல நாகரிகக் கூறுகள் நம் நாட்டில் உள்ளன.

பயணங்களால் பொருள்கள் மட்டுமல்ல; பல சொற்களும் நம் மொழிக்குக் கிடைத்தன. தமிழில் உள்ள சன்னல், சாவி, கிராம்பு, பக்கிரி, சுமார், மேஜை முதலியன பாரசீகச் சொற்சொற்கள். ஆசாமி, இலாகா, கஜானா, காபி, நகல், நாசூக், மாமூல், முன்சீப், வசூல் முதலியன அரேபியச்

சொற்கள். அசல், அந்தஸ்து, அபின், உஷார், கிச்சடி, குமாஸ்தா, குல்லா, ஜமுக்காளம், ஜோடு, தபால், தர்பார், பஞ்சாயத்து, பங்களா, மாகாணம், தொப்பி, மகசூல், மசாலை முதலியன இந்துஸ்தானிச் சொற்கள். கிஸ்தி, பசலி போன்றவை மொகலாயர் காலத்தில் வந்த சொற்கள்.

சில இடங்களுக்குச் சூட்டப்பட்ட பெயர்கள்கூட சில பயணங்களால் ஏற்பட்டவை. அப்படிப்பட்ட ஒரு பயணம்தான் ‘பதேபூர்சிக்ரி’ என்கிற ‘புலந்துதர்வாசா’ உருவாகக் காரணமாக இருந்தது. அக்பர், குக்கிராமமாக இருந்த அந்த ஊருக்கு அங்கிருந்த முனிவரைத் தேடி வந்தார். அவருக்கு ஒரு வாரிசு இல்லையே என்று அந்தத் துறவியிடம் ஆசி பெற வந்தபோது அக்பர் மூன்று நாட்கள் ஆக்ராவிலிருந்து நடந்தே அங்கு வந்ததால், அவருக்கு மூன்று மகன்கள் பிறப்பார்கள் என்று ஆசீர்வதிக்கப்பட்டார்.

சில நாட்களிலேயே அக்பரின் ஒரு ராணிக்குக் கரு உண்டானது. அந்த மகனுக்கு ‘சலீம்’ என்று அந்தத் துறவியின் பெயரே வைக்கப்பட்டது. அவர்தான் பின்னர் ‘ஜஹாங்கீராக’ மாறினார். நன்றியுணர்வுக்காக அக்பர் அந்த ஊரில் ஒரு மிகப்பெரிய மசூதியைக் கட்டினார். பிறகு மிகப் பெரிய நகரையும் உருவாக்கினார். இந்து மற்றும் இஸ்லாம் ஆகிய இரண்டு கட்டடக் கலைகளையும் ஒருங்கிணைத்து அந்த நகரை வடிவமைத்தார். பதினைந்து ஆண்டுகளாக அதுவே தலைநகராக இருந்தது. தண்ணீர் பஞ்சத்தின் காரணமாக 1585ல் தலைநகரை மாற்றவேண்டிய சூழல் உருவானது.

இன்றைய சூழலில், நாம் அதிகம் செல்கிற மலைவாழ் தலங்கள் இங்கிலாந்திலிருந்து வந்த பல ஆட்சியாளர்களால் வளப்படுத்தப்பட்டன. கிழக்குத்தொடர்ச்சி மலையிலிருக்கும் ஏற்காடு, சேலம் மாவட்டத்திற்கு ஆட்சியராக வந்த எம்.டி. காக்பன் என்பவரால்தான் உருவாக்கப்பட்டது. ஏற்காட்டிலிருக்கும் பழமையான கிராஞ்ச் இல்லம் அவரால்தான் கட்டப்பட்டது. இப்படி எல்லாத் தலங்களிலும் பயணங்கள் அழியாத சுவடுகளை ஏற்படுத்தியிருக்கின்றன.

(தொடரும்)

அத்தியாயம்-1 | அத்தியாயம்-2 | 

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...