சிந்தனை கதை…படித்ததில் பிடித்தது
மகிழ்ச்சியுடன் வாழ வழி..!!
முன்னொரு காலத்தில் விவசாயி ஒருவர், தன்னுடைய தோட்டத்தில் தரமான மக்காசோளங்களை விளைவித்துக் கொண்டிருந்தார்.
ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் சிறந்த விளைபொருளுக்கான முதல் பரிசினை, அவ்விவசாயின் தரமான மக்காச்சோளமே தட்டிச் செல்லும்.
அந்த விவசாயின் தரமான மக்காச்சோளத்திற்கு எல்லா இடங்களிலும் நல்ல விலை இருந்தது.
விவசாயின் தரமான மக்காச்சோள விளைவிப்பையும், ஒவ்வொரு ஆண்டும் சிறந்த விளைபொருளுக்கான முதல் பரிசினை அம்மக்காச்சோளம் பெறுவதையும் ஒரு பத்திரிக்கையாளர் கேட்டறிந்தார்.
அவர் விவசாயியைச் சந்தித்து அவருடைய வெற்றிக் காரணமான வேளாண்மை ரகசியத்தை அறிந்து கொள்ள விரும்பினார்.
ஒருநாள் விவசாயியை நேரில் சந்தித்தார் பத்திரிக்கையாளர்.
அவர் விவசாயிடம் “ஐயா, உங்களுடைய வேளாண்மையின் இரகசியம் என்ன?” என்று கேட்டார்.
அதற்கு விவசாயி “நான் என்னுடைய தரமான மக்காச்சோள விதைகளை, அருகில் பயிர் செய்பவர்களுக்கும் தருவேன்.” என்றார்.
அதற்கு பத்திரிக்கையாளர் “நீங்கள் தரமான விதைகளை, உங்களுடைய அருகில் இருப்பவர்களுக்குக் கொடுத்தால்,ன அவர்கள் உங்களை போட்டியில் வென்று விடமாட்டார்களா?” என்று கேட்டார்.
பத்திரிக்கையாளரின் கேள்வியைக் கேட்டதும் விவசாயி சிரித்துக் கொண்டே
“இல்லை; அவ்வாறு நிகழாது. உங்களுக்கு தெரியுமா ? மக்காளச்சோளத்தில் அயல் மகரந்தச்சேர்க்கை மூலம் தான் தரமான மக்காச்சோளங்கள் கிடைக்கும்.
காற்றானது, ஒரு வயலில் உள்ள மக்காச்சோளத்தின் மகரந்தத்தை, மற்றொரு வயலில் உள்ள மக்காச்சோளத்திற்கு கொண்டு சென்று, அயல் மகரந்தச்சேர்க்கை நடைபெற உதவுகிறது.
இதனால் என்னுடைய வயலுக்கு அருகில் உள்ளோர் தரமற்ற மக்காச்சோளத்தைப் பயிர் செய்திருந்தால், அயல் மகரந்தச் சேர்க்கையால் அது என்னுடைய மக்காச்சோளத்தின் தரத்தையும் பாதிக்கும்.
ஆகவே என்னுடைய மக்காச்சோளங்கள் தரமானவைகளாக இருக்க வேண்டுமெனில், என் வயலுக்கு அருகில் பயிர் செய்பவரும் தரமான மக்காச்சோளங்களைப் பயிர் செய்திருக்க வேண்டும்.
அதனால்தான் அருகில் இருப்பவர்களுக்கும், நான் தரமான விதைகளை பயிர் செய்யச் சொல்லிக் கொடுக்கிறேன். இதுவே என்னுடைய வெற்றியின் ரகசியம்.” என்றார்.
விவசாயின் பதிலைக் கேட்டதும், வயதான அவ்விவசாயி வாழ்க்கையைப் புரிந்து வைத்திருப்பதைக் கண்டு, பத்திரிக்கையாளர் ஆச்சரியம் அடைந்தார்.
நன்றாக வாழ என்ன வழி என்பது விவசாயியின் பதிலில் ஒளிந்திருக்கிறது என்பதை உணர வேண்டும்.