தர்க்கசாஸ்திரம் ஜோதிடர் ஏற்படுத்திய திகில்! – 8 | ஆரூர் தமிழ்நாடன்
பிரமச்சரியம் சரியா?
சொன்னதுபோலவே பத்து நிமிடத்தில் திரும்பிய அறிவானந்தர் “இங்க தங்கியிருக்கும் அன்பர் ஒருவர், குளியலறையில் வழுக்கி விழுந்துட்டார். முதல் உதவி சிகிச்சைக்குப் பின் அவரை மருத்துவமனைக்கு அனுப்பிவச்சிட்டு வந்தேன். காக்கவச்சதுக்கு வருந்தறேன்” என்றார் அகிலாவிடம்.
“அய்யோ, அதுதான் பிரதானப் பணி. அப்புறம் என்னிடம் ரெடிமேடான கேள்விகள் எதுவும் இல்லை. உங்களையும் உங்க கோட்பாட்டையும் தெரிஞ்சிக்கனும். அதுதான் என் நோக்கம். முதல்ல புரிதல் தொடர்பான ஒரு கேள்வி” என்றாள் அகிலா.
”கேளுங்க அகிலா”
”உலகத்தில் பெரும்பாலானோருக்கு எழுந்த மிகத் தொன்மையான கேள்வியிலிருந்தே ஆரம்பிக்கிறேன். கடவுள் உண்டா? இல்லையா” என்றாள் அகிலா.
அறிவானந்தரோ கொஞ்சம் கூடத் தயக்கம் இல்லாமல் “தெரியவில்லை” என்றார்.
இந்த பதிலைக் கேட்டு திகைத்துப்போன அகிலா…
“இந்த பதிலை உங்களிடமிருந்து நான் எதிர்பார்க்கவில்லை. நீங்க ஒரு ஆன்மீகவாதியாக மக்கள் மத்தியில் அறிமுகமாகியிருக்கீங்க. அறவழிச்சாலை என்ற பெயரில் ஆசிரமம் நடத்தறீங்க. உங்களைச் சுற்றி உங்க பக்தர்கள் மொய்க்கிறாங்க. நன்கொடைகளை வாரிக் கொடுக்கறாங்க. நீங்களும் மக்கள் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை வைத்து, வசதியா ஏகபோகமா வாழறீங்க. அருளுரைகள் வழங்கறீங்க. அப்படிப்பட்ட நீங்க கடவுள் இருக்கரான்னு தெரியலை என்பது எந்த விதத்தில் சரியானது?” என படபடவெனப் பொரிந்தாள் அகிலா.
அப்போதும் புன்னகை மலர அமர்ந்திருந்த அறிவானந்தர்….
“அகிலா. என் வாழ்வில் எந்த திரைமறைவுப் பகுதியும் இல்லை. நான் கடவுளைப் பிரச்சாரம் பண்ணுகிற ஆள் அல்ல. நான் வலியுறுத்துவது அறநெறிகளைத்தான்.
நான் அறநெறிகளைப் போதிப்பதை மற்றவர்கள் ஆன்மீகம் என்று எடுத்துக்கொண்டால் அதிலும் தவறு இருப்பதாகத் தெரியவில்லை. ஆன்மீகம் பிறந்ததன் நோக்கமே மனிதர்களை ஒழுங்கு படுத்தி சரியான வழியில் அழைத்துசெல்வதுதான். நான் மட்டுமல்ல; கடவுள் உண்டா என்ற கேள்விக்கு எந்த முனிவனும் விடை கண்டதாகத் தெரியவில்லை. எனவே இப்படியொரு பதிலைத் தருவதற்கு நான் கூச்சப்படவில்லை. நம்மை மீறிய இயற்கை சக்திதான் இந்த உலகத்தை இயக்குகிறது.
இது உண்மை. இதை விஞ்ஞானிகள் இயற்கை என்கிறார்கள். நமது முன்னோர்கள் அதைக் கடவுள், இறைவன், ஆண்டவன் என்கிறார்கள். “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினைமின் நாடாது நமனே”-என ஆறாம் நூற்றண்டில் வாழ்ந்த திருமூலர் தனது திருமந்திரத்தில் சொல்கிறார்.
மனித குலம் ஒன்று; அவர்களை இயக்கும் இறை ஒன்று என்பது அவரது சித்தாந்தம். ஆனால் இவருக்கு முன்னும் பின்னும் இருந்தவர்கள்…. இருப்பவர்கள்…
இந்திரன், வருணன், முருகன், மாயோன், கொற்றவை என்று தொடங்கி பன்முக தெய்வ வடிவங்களை உருவாக்கிக்கொண்டு வழிபடுகின்றனர். இதேபோல் ஒவ்வொரு மதத்தினரும் ஒவ்வொரு கடவுளை வணங்குகின்றனர். ஆனால் கடவுள் வழிபாட்டின் பிரதானமாக எல்லோரிடமும் எல்லா மத்தினரிடமும் இருப்பது அன்பும் அறனும்தான்.
ஏசு பிரானாக இருந்தாலும் நபி பெருமானாக இருந்தாலும் புனித புத்தராக இருந்தாலும் அவர்கள் போதித்தது அன்பையும் ஞானத்தையும்தான். இவைதான் உலகை ஒழுங்கு படுத்தி துப்புரவாக்கும்.
இன்னும் விரிவாக கடவுள் கோட்பாடுகள் குறித்து நிறைய ஆற அமர பேசலாம். எடுத்த எடுப்பிலேயே இது தொடர்பாக எனக்குத் தெரிந்த விசயங்களை நான் விவரித்தால்…. உங்களுக்குத் தூக்கம்தான் வரும்” என்று வாய்விட்டு சிரித்த அறிவானந்தர்…
“அடுத்து என்னைப் பற்றி சில விசயங்களைக் கேட்டீர்கள்.. அதற்கு இப்போது பதில் தருகிறேன். மீண்டும் சொல்கிறேன். நான் கடவுளின் பிரச்சாரகன் இல்லை. அதேபோல் என்னைச் சுற்றி இருப்பவர்களும் என்னைத் தேடி வருபவர்களும் என் பக்தர்கள் அல்ல; என் மீது அன்பு செலுத்தும் அன்பர்கள். அவர்கள் என்னை நம்புகிறார்கள், விரும்புகிறார்கள் என்பதை விட நான் எடுத்து வைக்கும் எண்ணங்களையும் சிந்தனைகளையும் போதனைகளையும் நம்புகிறார்கள்..
விரும்புகிறார்கள் என்பதுதான் சரி.. அவர்கள் வாரிக் கொடுக்கும் பணம், அறவழிச்சாலை அறக்கட்டளையில்தான் சேர்கிறது. எனக்கென்று தனிக் கணக்கோ சேமிப்போ இல்லை. அறக்கட்டளையை ஒன்பது அன்பர்கள் கொண்ட குழுதான் நிர்வகிக்கிறது. அந்த ஒன்பது பேரில் நான் இல்லை. எனக்கென்று தனிப்பட்ட சுக போகங்கள், வசதிகள் என்று எதுவும் இல்லை. இங்கு எல்லோருக்கும் தயாராகும் உணவே எனக்கும்.
இங்கு எல்லோரும் அணியும் உடையே எனக்கும். இங்கு எல்லோருக்கும் தரப்படுகிற அறையே எனக்கும். இன்னும் சொல்லப்போனால் நான் என் அறைக் கட்டிலைக் கூட அதிகம் பயன்படுத்துவதில்லை. கட்டாந்தரைத் தூக்கம்தான் எனக்குச் சுகம். என்னைப் பற்றி இதற்கு மேல் நான் சொல்வது கூட ஒருவித சுய புகழ்ச்சியாகிவிடும். என்னை என் தராசில் எடைபோடுவது சரியல்லை.
இங்கிருக்கும் மற்ற அன்பர்களின் தராசின் மூலம் எடைபோட்டுக் கொள்ளுங்கள். அழுக்குப் படாத மனதோடும் உடலோடும் புத்தியோடும் வாழவேண்டும் என்பதே என்விருப்பம்.” என நீண்ட விளக்கம் கொடுத்த அறிவானந்தர்…
“மற்றவர்களுக்கு இருக்கும் சுதந்திரம்தான் எனக்கும். நான் இந்த அறவழிச் சாலையின் ஓட்டுநர்தானே தவிர உரிமையாளன் இல்லை. இப்படி எதுவும் இல்லாமல் இருப்பது ஒருவகை சுயநலம். இது உங்களுக்குத் தெரியுமா அகிலா?” என்றார் அறிவானந்தர்.
“வரவு செலவுச் சிக்கலில் சிக்கிக்கொண்டு பேரைக் கெடுத்துக்கொள்ளக் கூடாது என்ற ஜாக்கிரதை உணர்சியோடு இருக்கிறீர்கள் போலிருக்கிறது. உங்களின் மற்ற அன்பர்கள் மட்டும் இதே சிக்கலில் சிக்குவதற்கான வாய்ப்பை உருவாக்கலாமா?” என்றாள் அகிலா.
“இங்கு எந்த வரவு செலவுச் சிக்கலுக்கும் வேலை இல்லை. ஏனென்றால் அறக்கட்டளையை நிர்வகிக்கும் ஒன்பது அன்பர்களும் நேர்த்தியானவர்கள். அறக்கட்டளையின் எந்தக் கணக்கையும் எந்த நேரத்திலும் அறவழிச்சாலை அன்பர்கள் பார்க்கவும் ஏற்பாடு செயப்பட்டிருக்கிறது. எல்லாமே இங்கு திறந்த புத்தகம்தான்.
எனவே கணக்கு வழக்கு சிக்கல் குறித்து எங்களில் யாருக்கும் பயமில்லை. அதே சமயம், நான் எதிலும் என்னைப் பிணைத்துக்கொள்ளாமல்.. எதுவுமில்லாமல் இருப்பதில் ஒருவித சுகத்தை நான் உணருகிறேன். வள்ளுவப்புலவர் சொன்னதுபோல் பற்றற்ற தன்மை மீது எற்பட்ட பற்று இது. இதன் சுகமே அலாதி. அறக்கட்டளை நிர்வாக அன்பர்களுக்கோ, அதை திருத்தமாக நிர்வகிப்பதில் அலாதி சுகம். நாங்கள் சுதந்திரமும் சுகமும் நிம்மதியும் ததும்பும் உலகத்தில் எங்களைப் பிரஜைகளாக்கிக் கொண்டிருக்கிறோம்” என்றார் நிம்மதியும் பூரிப்புமாக.
“சரி. பிறப்பின் நோக்கம் என்ன?” – கையை மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டு கேட்டாள் அகிலா.
“எந்த நோக்கத்தையும் கருதி நமது பிறப்பு நிகழ்வதில்லை. பிறந்துவிட்டதால்தான் சில நோக்கங்களை அவரவரும் உருவாக்கிகொள்கிறோம்”
“பிரம்மச்சரியம் சரியா?”
“ஆணையும் பெண்ணையும் பிரமச்சரியத்திற்காக இயற்கை படைக்கவில்லை. ஆணுக்குப் பெண்ணும் பெண்ணுக்கு ஆணும் மிகமிக அவசியம். ஆணின் சரிபாதி வாழ்க்கை பெண்ணிடமும் பெண்ணின் சரிபாதி வாழ்க்கை ஆணிடமும் உள்ளது. எனவே இருவரும் இணையும் போதுதான் வாழ்க்கை முழுமையடையும். ஆணும் பெண்ணும் வெவ்வேறு திசைகளில் விலகி நடக்கத் தேவையில்லை. அவர்கள் கைகோர்த்தபடி சேர்ந்து ஒரே திசையில் நடக்கப்பிறந்தவர்கள். வாழ்க்கை வீதியில் மேற்கொள்ளப்படும் தனிப்பயணம் விரயப் பயணம் என்பது என் எண்ணம்” என்றார் அறிவானந்தர்.
“அப்படியென்றால் முனிவர்களும் ஞானிகளும் பிரமச்சரியத்தைக் கடைபிடித்தது தவறா?”
“முனிவரையும் ஞானிகளையும் நாம் பார்த்திருக்கிறோம். ரிஷிகளுக்கு துணையாக ரிஷிபத்தினிகள் இருந்திருக்கிறார்கள். முனிவர்களும் பெண்களுடன் வாழ்ந்திருக்கிறார்கள். காதலும் காமமும் தங்களைக் கரைத்துவிடுமோ என பயந்த ஒருசிலர் வேண்டுமானால் தனித்தீவாக வாழ்ந்திருக்கலாம். காமத்தின் பிடியில் சிக்கி சின்னாபின்னப்பட்ட சிலர், ஞானத்தின் பின் சுய ஆற்றாமையின் காரணமாக சேலை கட்டிவந்ததொரு மாயப்பிசாசு என விரக்தி வேதம் பாடியிருக்கலாம்.
இயற்கை இல்லறம் என்ற அழகிய வரத்தை மனிதர்களுக்குக் கொடுத்திருக்கிறது. அந்த வரத்தை ஆண்கள் பெண்கள் மூலமும் பெண்கள் ஆண்கள் மூலமும்தான் பெறமுடியும். நமது முன்னோர்கள் பிரமச்சரியமே சரி என்று நினைத்திருந்தால், நமது கடவுள்களுக்கு வாழ்க்கைத் துணைகளை ஏற்படுத்தியிருப்பார்களா? கோயில்களில் ஆண், பெண் சங்கதிகளை சிற்பமாக வைத்திருப்பார்களா? வள்ளுவர் உள்ளிட்ட நமது ஞானிகள் இல்வழ்க்கையைக் கூட அறதர்மமாகப் பார்த்தார்கள். இல்லத்தில் நிகழ்த்துகிற அறம் இல்லறம். எனவே இதுதான் பிரமச்சரியம் குறித்த உங்கள் கேள்விக்கான என் பதில்” என்றார் மிருதுவான புன்னகையோடு. அதில் கள்ளமோ கபடமோ தென்படவில்லை.
“உங்கள் அறவழிச்சாலையில் இளைஞர்களும் இளம்பெண்களும் இருக்கிறார்களே. அவர்கள் பிரமச்சரியத்தைக் கடைபிடிக்கவில்லையா? என்றாள் அகிலா.
“திருமணமானவர்கள் இல்லறத்தில் இருந்தபடியே அறவழிச்சாலைப் பணிகளைத் தொடர்கிறார்கள். இங்கிருக்கும் பலருக்கும் அவர்கள் குடும்பத்தினர் மூலமே திருமணம் நடந்திருக்கிறது. திருமணமாகாதவர்கள் அனைவருக்கும் அவரவர் குடும்பம் தீர்மானிக்கிறபடி திருமணம் நடக்கும். யாரையும் நாங்கள், பிரமச்சரியம் என்கிற தனிப் பயணத்துக்கு அனுமதிப்பதில்லை. திருமணம் வேண்டாம் என்று அடம்பிடிக்கும் அன்பர்களுக்கும் கூட திருமண பந்தத்தின் அவசியம் இங்கு போதிக்கப்பட்டிருக்கிறது”
“ஆசிரமத்தில் இருப்பவர்கள் காதலித்தால்..?”என்று கொக்கி போட்டாள் அகிலா.
“இங்கு வருகிற இளைஞ, இளைஞிகள் காதலிக்கும் நோக்கத்தோடு
வருவதில்லை.அவர்கள் அப்படியொரு எண்ணத்துக்கு தாமாக வந்தால் யாரும் குறுக்கே நிற்பதில்லை. அவர்கள் குடும்பத்தினருக்கு எடுத்துச் சொல்லி, அந்தக் கதைக்கு சுபம் போட்டுவிடுவோம். இதையெல்லாம் கேட்டுவிட்டு… இதுதான் எங்கள் வேலை என்று கருதவேண்டாம். வாழ்க்கையின் பிரதானப் பகுதிகளில் ஒரு பகுதி மட்டும்தான் இல்லறம்” -என்ற அறிவானந்தர்
“உணவு நேரம் வந்துவிட்டது. எனவே முதலில் அந்தக் கடமையை முடிப்போம்” என எழ… விருந்துக் கூடத்துக்கு அவர்களோடு நடந்தாள் அகிலா.
அவள் மனதில் “என்ன எதிலும் பிடிகொடுக்காமல் அவர் போக்கில் போய்க்கொண்டிருக்கிறார். இவரைக் கேள்விகளால் எப்படியாவது மடக்கவேண்டும். தான் முழுமையில்லை என்பதை அவருக்கு உணர்த்தவேண்டும். போராட்ட உலகத்தில் தனது வெற்று போதனைகள் வேலைக்காகாது என்பதை அவர் உணரும்படி செய்யவேண்டும்.” என்ற எண்ணம் ஓடியது.
(தொடரும்)
| அத்தியாயம் – 1 | அத்தியாயம் – 2 | அத்தியாயம் – 3 | அத்தியாயம் – 4 | அத்தியாயம் – 5 | அத்தியாயம் – 6 | அத்தியாயம் – 7 | அத்தியாயம் – 8 | அத்தியாயம் – 9 | அத்தியாயம் – 10 |