ஸ்டீவ் ஜாப்ஸ் | இன்று நினைவு நாள்…
56 வயதில் புற்றுநோயால் மறைந்த ஆப்பிள் நிறுவனத்தின் அதிபர் ஸ்டீவ் ஜாப்ஸ் தன் மரணப் படுக்கையிலிருந்து பேசியது இது.
இதன் ஆங்கில எழுத்துப் பதிவை வாசிக்கும்போது அத்தனை வலிமையாக இருக்கும். பல விஷயங்கள் நம் மனதிலும், முகத்திலும் அறையும்.
ஆங்கிலம் தெரிந்தவர்கள் அப்படியேப் படிக்கலாம். வீடியோப் பதிவைப் பார்க்கலாம்.
ஆங்கிலம் தெரியாதவர்களுக்காக மட்டும் அவர் பேசியதிலிருந்து சில முக்கியமான பாய்ண்ட்ஸ் மட்டும் தருகிறேன்.
- ஒரு நோயாளியாக படுக்கையிலிருந்து என் மொத்த வாழக்கையையும் நினைக்கும்போது..நான் அடைந்த பெயரும், புகழும், செல்வமும் அர்த்தமற்றதென்று உணர்கிறேன்.
- உங்களுக்காக வேறு ஒருவரை காரோட்டச் சொல்ல முடியும். உங்களுக்காக வேறு ஒருவரை பொருளீட்டவும் சொல்ல முடியும். ஆனால் உங்களுக்காக உங்கள் நோயை வேறு ஒருவரை அனுபவிக்கச் செய்ய முடியாது.
- தொலைந்து போகும் எந்தப் பொருளையும் மீண்டும் அடைய முடியும் – வாழ்க்கையைத் தவிர!
- இப்போது நீங்கள் எந்த உயரத்தில் இருந்தாலும்.. அதெல்லாம் முக்கியமில்லை. உங்கள் வாழ்க்கைத் துணை, குடும்பம், நண்பர்கள் இவர்களின் அன்பு மட்டுமே உங்கள் ஒரே சொத்து!
- விலை உயர்ந்த வாட்ச், கார், வீடு, மது தரும் அதே மகிழ்ச்சியை விலை குறைந்தவையும் தருமென்பது போகப் போகத்தான் புரியும். பொருள் சார்ந்த வாழ்க்கையால் உள் மனதில் மகிழ்ச்சியைத் தர முடியாது.
- கீழே விழுந்துகொண்டிருக்கும் விமானத்தில் பயணிக்கும்போது நீங்கள் முதல் வகுப்பில் இருந்தாலென்ன, சாதாரண வகுப்பில் இருந்தாலென்ன.. இரண்டும் ஒன்றுதானே?
- உங்கள் குழந்தையை பணக்காரனாய் வளர்வதெப்படி என்று சொல்லி வளர்க்காதீர்கள். மகிழ்ச்சியாய் இருப்பதெப்படி என்று மட்டும் சொல்லிக் கொடுத்து வளருங்கள். அவர்களுக்குத் தெரிய வேண்டியது பொருள்களின் மதிப்புதானே ஒழிய.. விலை அல்ல!
- மருந்து சாப்பிடும் அளவுக்கு உணவு சாப்பிடுங்கள். அல்லது உணவு சாப்பிடும் அளவிற்கு மருந்து சாப்பிட வேண்டி வரும்.
- மனிதனாக இருப்பதற்கும் மனிதநேயத்துடன் இருப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. வெகு சிலருக்கே இது புரிகிறது.
- பிறக்கும்போதும், இறக்கும்போதும் உங்களை நேசிப்பார்கள். நடுவிலும் நேசிப்பதும், நேசிக்காமலிருப்பதும் உங்கள் கையில்தான் இருக்கிறது.
முடிவெடுத்தல் நலம்
1.பணம் இருப்பவர்கள் மனம் மாறினால் அவரவர்களால் இயன்றவரை மக்களின் பசியைப் போக்கலாம்.
- பதவியில் இருப்பவர்கள் மனம் மாறினால் மக்களுக்கான உன்னதமான செயல்களைச் செய்யலாம். முடிவுகள் எடுக்கலாம். மதுக்கடைகளை நிரந்தரமாக மூடுவது உள்பட!
- ஆட்சியிலிருப்பவர்களுக்கு பல நடைமுறைக் காரணங்களால் அதைச் செய்ய முடியவில்லை என்றால்.
- அந்த நடைமுறைக் காரணங்களை அறத்துடனும், விவேகததுடனும் சந்திக்கும் திறனுடன் ஒருவர் அதிகாரத்திற்கு வரலாம். அந்த நாற்காலி யாருக்கும் நிரந்தரமானதில்லையே..