உனை நீங்கியே உயிர் கரைகிறேனே – 16 | சுதா ரவி

 உனை நீங்கியே உயிர் கரைகிறேனே – 16 | சுதா ரவி

மயங்கி விழ ,மணியோ மகளின் முகத்தை பார்க்க முடியாமல் தன் நண்பனின் தோள் சாய்ந்து கதறி விட்டார்.

உத்ராவின் பீகேவோ அவளின் உடலை கண்டு அதிலும் அவள் முகம் மீன்களாலும் நண்டுகளாலும் சிதைக்கப்பட்டிருந்ததை பார்த்து உடைந்து போய் அமர்ந்து விட்டான். இதற்கு தான் என்னையும் அழைத்தாயா, இப்படி விட்டு விட்டு போவாயென்று தெரிந்திருந்தால் நானும் உன்னுடனே வந்திருப்பேனே என்றெண்ணி கண்ணீரை சிந்தினான். உரிமையுடன் தன்னவளின் உடலை வாரி எடுத்து மடியில் வைத்து தன் இழப்பை வெளிபடுத்த வேண்டும் என்று எண்ணியவனுக்கு அது முடியாமல் மெல்ல அங்கிருந்து சென்று ஒரு ஓரமாக மண்ணில் விழுந்து பிரண்டு அழுது தன் சோகத்தை கரைத்துக் கொண்டான்.

மகளின் இறப்பிலும்,அவளின் முகம் சிதைந்து போய் வந்ததிலேயே அதிர்ச்சியில் இருந்த உத்ராவின் பெற்றோர், உத்ராவின் உடலை போஸ்ட்மார்ட்டம் செய்வதை விரும்பாமல் போலீசாரிடம் மன்றாடி கேட்டு அவள் உடலை வாங்கிச் சென்றனர்.போலீசாரும் அது ஒரு விபத்து மட்டுமே என்று எண்ணியதால் அதிகம் வற்புறுத்தாமல் ஒத்துக் கொண்டனர்.

உத்ராவின் வீட்டினர் ஒரு பக்கம் அவளின் இழப்பு நடந்த விதத்தை பற்றி எண்ணி துக்கத்தில் இருக்க அதே நினைவுடன் அவளின் நாயகனும் அன்றைய நினைவில் மனம் குமுற அமர்ந்திருந்தான்…

முகத்தில் தீவீர சிந்தனைக்கான சுருக்கங்களுடன் அறையை சுற்றி சுற்றி நடந்து கொண்டிருந்தான் கார்த்தி. ஹரியின் ஆதாரங்களை பார்த்த பிறகு மனம் குதிரையின் வேகத்துடன் ஓடிக் கொண்டிருந்தது. எப்படி எப்போது செயல்படவேண்டும் என்று சிந்தித்துக் கொண்டிருந்தான். நடந்து கொண்டிருந்த போது ஒரு நிமிடம் நடப்பதும் ஒரு நிமிடம் நின்று

யோசிப்பதுமாக இருந்தான். தாண்டவத்துக்கும் ஆர்ஜேவிற்கும் சந்தேகம் ஏற்படாமல் காய்களை நகர்த்த வேண்டும் அதற்கான வழி முறைகளை சிந்தித்து முடிவெடுத்ததும் உடனே ஆதிக்கு அழைத்தான்.

“சொல்லு கார்த்தி…..”

“ முடிவு பண்ணிட்டேன் ஆதி……….இனி தாமதிக்கிற ஒவ்வொரு நொடியும் என் மனசாட்சியே என்னை கொன்னுடும்.”

“ குட் இப்போ தான் சரியான முடிவுக்கு வந்து இருக்கே…எப்போ, எங்கே இருந்து ஆரம்பிக்க போறோம்.”

“ எனக்கு முதலில் இந்த பொறுக்கிகளை கழட்டி விடனும் ஆனா மொத்தமா முடிக்க வேண்டாம்.”

“ஓகே எப்படி என்னன்னு சொல்லு, அதற்கேற்றார் போல் நான் ஏற்பாடு பண்ணிக்கிறேன்.”

அவன் கேட்டதும் இருவரும் எப்படி வேவு பார்க்கும் ஆட்களை கழட்டி விட வேண்டும் என்று பேசினர். பேசி முடிவெடுத்ததும் , அறையை பூட்டிக் கொண்டு கிளம்பினான்.

தெருவில் இறங்கி நடக்கத் தொடங்கிய நேரம் இளஞ்சாரலுடன் வாடை காற்று வீச அதை அனுபவித்தபடியே மெல்ல நடந்தான்.அவனை பின் தொடர்ந்த இருதரப்பினரும் அவனின் மெத்தனப் போக்கை கண்டு குழம்பி…” இவன் எதுக்கு வந்து இருக்கான்…..உண்மையாவே சுத்தி பார்க்க வந்தவன் மாதிரி தான் இருக்கான்……இவனை போய் ஏன் நம்ம ஐயா கவனிக்க சொன்னாரு…ஒன்னும் புரியலையே” என்று புலம்பிக் கொண்டு தொடர்ந்தனர்.

வழியோரம் கண்ட கடைகளில் எல்லாம் நுழைந்து எல்லா பொருட்களை ஆராய்ந்து பார்த்து விட்டு திரும்பினான். இப்படியே மனம் போன போக்கில் அவன் நடக்க பின் தொடர்ந்தவர்களுக்கோ வெறுத்து போனது. அந்த நேரம் கார்த்தியின் போன் அடிக்க அதை எடுத்து பேசியவன் சற்று பரபரப்பானான்.

தன்னை யாராவது கவனிக்கிறார்களா என்று பார்ப்பது போல் சுற்றிலும் பார்த்துக் கொண்டு வேக வேகமாக நடக்கத் தொடங்கினான்.

அவன் பதட்டமடைந்து வேகமாக செல்லத் தொடங்கியதும் இருதரப்பினரும் அவன் ஏதோ முக்கியமாக செய்ய போகிறான் என்று புரிந்து கொண்டு உஷாராகி தேவையான இடைவெளி விட்டு தொடர்ந்தார்கள்.

ஒரு அரைமணி நேரம் குறுக்கு சந்துகளில் எல்லாம் நுழைந்து ஒரு பெரிய வீதியின் உள்ளே சென்று அங்கிருந்த ஒரு பட்டறையின் முன் சென்று தன்னை யாரும் பார்க்கிறார்களா என்று பார்த்து விட்டு உள்ளே நுழைந்தான். அவன் உள்ளே சென்று ஒரு ஐந்து நிமிடங்கள் கழித்து இருதரப்பினரும் பரபரப்பானார்கள். அவனை தொடர்ந்து எப்படி உள்ளே போவது என்று. ஒரு ஐந்து நிமிடங்கள் முழவதுமாக சென்ற பிறகு மெல்ல ஒருவர் பின் ஒருவராக உள்ளே செல்லத் தொடங்கினர்.

பகல் நேரமாக இருந்தாலும் அந்த பட்டறையில் கரும் இருட்டு சூழ்ந்திருந்தது. அந்த இருளில் எதிரே இருப்பவை எதுவுமே புலப்படாமல் போக நடப்பதே பெரும் பாடாகி போனது. உள்ளே சென்ற இருதரப்பினரும் நாலாபுறங்களிலும் பிரிந்து செல்ல அதை பயன்படுத்திக் கொண்ட கார்த்தியும் ஆதியும் வந்தவர்களை சத்தமில்லாமல் தாக்கி இழுத்து சென்று ஓரிடத்தில் கையை காலை கட்டிப் போட்டனர்.

ஆறு பேரையும் பிடித்ததும் பட்டறையின் ஷட்டரை இழுத்து மூடி விட்டு மெல்லிய மஞ்சள் விளக்கை போட்டான் ஆதி. அந்த வெளிச்சத்தில் தாண்டவம் ஆட்களை தனியாகவும் ஆர்ஜே ஆட்களை தனியாகவும் பிரித்து வைத்தார்கள். ஆர்ஜேவின் ஆட்களின் முன்னே ஒரு நாற்காலியை போட்டு அமர்ந்த ஆதி அவர்களை விசாரிக்க ஆரம்பித்தான்.

அவன் கேட்க கேட்க எந்த பதிலையும் சொல்லாமல் உதட்டில் ஏளனப் புன்னகையோடு அமர்ந்திருந்தார்கள் ஆர்ஜேவின் ஆட்கள். அதை பார்த்து எரிச்சலைடைந்த ஆதி ஒருவனின் முன்னுச்சி முடியை பிடித்து ஒரு உலுக்கு உலுக்கி.” என்ன நக்கலா இருக்கா? என் பொறுமையை ரொம்ப

சோதிக்கிற.ஒழுங்கா நாங்க கேட்கிற கேள்விக்கு பதிலை சொல்லு இல்ல எங்க ட்ரீட்மென்ட்டே வேற மாதிரி இருக்கும்” என்றான்.

“பாசு நாங்க இதுக்கெல்லாம் பயப்பட மாட்டோம்.எங்க கிட்ட உன் பப்பு வேகாது. நாங்க யாரு ஆர்ஜே ஆளுங்க…..எதுக்கும் துணிஞ்சவங்க” என்றான்.

அதுவரை அமைதியாக நின்று பார்த்துக் கொண்டிருந்த கார்த்தி, ஆதியின் தோளில் கையை வைத்து” நீ போ ஆதி நான் பார்த்துக்கிறேன்” என்றான்.

ஆதி எழுந்து நகர்ந்து கொண்டதும் அந்த நாற்காலியில் அமர்ந்த கார்த்தி சிறிது நேரம் தன் முன்னே அமர்ந்திருந்தவர்களின் முகத்தை ஆராய்ந்தான். அதை பார்த்த ஆர்ஜேவின் ஆள்..” என்ன எங்க எல்லோரையும் லவ் பண்ண போறியா இப்படி பார்க்கிற.”

அவன் கேள்விக்கு பதில் சொல்லாமல் ஆதியை பார்த்து “நீ தாண்டவம் ஆட்களை போய் விசாரி நான் இவனுங்களை பார்த்துக்கிறேன்” என்றான் அமைதியாக.

அதை கேட்ட ஆர்ஜேவின் ஆளில் தலைவன் போல் இருந்தவன் சத்தமாக சிரித்து..” ஆமாம் நீ போ , ஏற்கனவே எங்க கிட்ட நிறைய ஆணியை புடுங்கிட்டே…..இப்போ இவரு மிச்சம் இருக்கிற ஆணியை புடுங்க போறாரு” என்றான்.

அவன் அப்படி சொன்னதும் அவனை அடிக்க பாய்ந்த ஆதியை தடுத்த கார்த்தி” ஏன் அவனை அடிக்க போற அவன் நமக்கு நல்லது தான் சொல்லி இருக்கான்…..நீ போய் எனக்கு ஒரு பாக்ஸ் ஆணியும் ஒரு சுத்தியும் கொண்டு வா” என்றான்.

அவன் சொன்னதை கேட்ட ஆதி அதுவரை இருந்த கோபம் எல்லாம் மாறி ஆர்ஜேவின் ஆட்களை பார்த்து” செத்தீங்கடா நீங்க………பேச்சா பேசுறீங்க….இனி இருக்கு கச்சேரி” என்று சொல்லி விட்டு ஆணியை எடுத்து வர சென்றான்.

உள்ளுக்குள் பயம் இருந்தாலும் தெனாவெட்டாக பேசிக் கொண்டிருந்தவன் ஆதி சொன்னதை கேட்டு முகம் மாறுதலடைந்து கார்த்தியை நோக்கினான். அதை பார்த்தவன் நாற்காலியை இழுத்து நெருக்கமாக போட்டுக் கொண்டு அவனருகில் அமர்ந்து அவன் கையை தன் கையில் எடுத்து வைத்துக் கொண்டு மெல்ல தன் விசாரணையை தொடங்கினான்.

“சரி சொல்லு.உங்க பாஸ் ஆர்ஜே தாண்டவத்து கிட்டே இருந்து அடிச்ச சரக்கை எல்லாம் எங்கே வச்சு இருக்கான்?”

கார்த்தியின் முகத்தை நிமிர்ந்து பார்த்தவன்”நீ என்னை கொலையே பண்ணினாலும் என் கிட்டே இருந்து எதையும் தெரிஞ்சுக்க முடியாது” என்றான்.

“ச்சே..ச்சே …கொலை எல்லாம் நான் பண்ண மாட்டேன்.சும்மா சின்ன சின்னதா கொஞ்சம் விளையாடுவேன் அவ்வளவு தான். சரி சொல்லு உங்க பாஸ் வீடு எங்கே இருக்கு?”

காதில் விழாத மாதிரி முகத்தை திருப்பிக் கொண்டு அமர்ந்து கொண்டான்.அதை பார்த்த கார்த்தி” இங்கே .பாரு கடைசியா ரொம்ப பொறுமையா கேட்கிறேன் , இப்போ பதில் சொல்லலேன்னா பின்னாடி வருத்தப்படுவே” என்றான்.

அதன் பிறகும் அவன் திரும்பாது போகவே அவனிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே தன் கையில் இருந்த அவன் கையை எடுத்து மேஜை மேல் வைத்து நன்றாக அழுத்தி பிடித்து கொண்டு அவன் முகத்தை பார்த்தான் . அப்பொழுதும் அவன் திரும்பாது போகவே லேசாக தோள்களை குலுக்கிக் கொண்டு தன் காரியத்தில் மும்மரமாயிருந்தான்.

கார்த்தி விசாரித்துக் கொண்டிருந்தவனின் பின்னே இருந்தவன் அவன் செய்ய போகும் காரியத்தின் வீரியத்தை உணர்ந்து…….” அண்ணே…..அண்ணே …..அவன் கையில பாருங்கண்ணே”……..என்று அலறினான்.

பின்னே இருந்தவனின் அலறலை கேட்டு திரும்பும் முன் சுண்டு விரலின் மீது ஓங்கி ஒரு ஆணியை அடித்திருந்தான். எதிர்பாராமல் விரலில் அடிக்கப்பட்ட ஆணியால் வலியில் துடித்துக் கொண்டிருந்தவனை பார்த்த கார்த்தி”இப்ப சொல்லு…….ஆர்ஜே எங்கே வச்சு இருக்கான் சரக்கை?”என்றான்.

ஆணி அடித்ததில் கொடுத்த மரண வலியில் அதுவரை இருந்த தைரியம் எல்லாம் கரைந்து போக” எனக்கு..தெரி..தெரியாது……நாங்க சொன்ன வேலையை மட்டும் தான் செய்வோம். சரக்கு எங்கே வச்சு இருக்காங்கன்னு தெரியாது” என்றான்.

அவன் உண்மையை தான் சொல்கிறான் என்று அனுபவ அறிவில் புரிந்து கொண்டவன்” வீடு எங்கே இருக்குன்னு தெரியுமா?”

அதற்கு பதில் சொல்லாமல் தன் விரலையே பார்த்துக் கொண்டிருந்தவனை பார்த்து” நான் கேட்கிற கேள்விக்கு பதில் வரலேன்னா எல்லா விரலிலேயும் ஆணியை அடிப்பேன் அப்புறம் நீ சொன்ன மாதிரி ஒண்ணுன்னா எடுப்பேன்.”

கண்களில் வலியும் மிரட்சியும் கலந்த பார்வையுடன்…..” முட்லூர் ரோட்டில் இருக்கு” என்றான்.

அவனிடம் பேசி வேண்டிய தகவல்களை விசாரித்துக் கொண்டவன் ஆதியை கூப்பிட்டு…..” இவனுங்க நம்ம காவலிலேயே இங்கேயே இருக்கட்டும் ஆனா இவனுங்க செல் போன் எல்லாம் ஆன் பண்ணியே இருக்கணும். போன் வந்தவுடனே எடுத்து பேச சொல்லணும் நாம சொல்லிக் குடுத்ததை இவனுங்க சொல்லணும்.”

இருவரும் மேற்கொண்டு செய்ய வேண்டிய வேலைகளை முடிவு செய்து கொண்டு இருக்கும் போது உள்ளூர் காவலர்களில் தாண்டவத்துக்கோ ஆர்ஜேவிற்கோ கைக்கூலியாக இல்லாதவர்கள் உதவிக்கு வந்தனர். அவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு இருவரும் கிளம்பினர்.

வெளியில் வந்து ஒன்றாக நடந்த இருவரின் மனமும் வெவ்வேறு பாதையில் பயணித்தாலும் முடிவு ஒன்றை எண்ணி தான் இருந்தது. ஆதிக்கு கார்த்தியின் மனதில் என்ன இருக்கிறது அவன் எப்படி இந்த நிலையிலும் அமைதியாக இருக்கிறான் என்று எண்ணிக் கொண்டு நடந்தான். வெளிப்பார்வைக்கு அமைதி போல தெரிந்தாலும் எரிமலை போன்று உள்ளுக்குள் கனன்று கொண்டு தான் இருக்கும் என்பதில் ஐயமில்லை என்பதை ஆர்ஜேவின் ஆட்களிடம் அவன் நடந்து கொண்ட முறையை வைத்து புரிந்து கொண்டான்.

தெருமுனை வந்ததும் ஆதியிடம் திரும்பியவன்.” நான் ஆர்ஜே வீட்டை நோட்டம் விட்டுட்டு வரேன். ஆனா அவன் நிச்சயமா சரக்கை அங்கே வச்சு இருப்பான்னு தோனல.வேற எங்கேயாவது தான் வச்சு இருப்பான் எதுக்கும் ஆராய்ஞ்சு பார்த்திடலாமே.”

நிமிர்ந்து அவன் கண்களை பார்த்த ஆதி” அங்கே வச்சு இருப்பான்னு நினைக்கிறியா?”

நீண்ட பெருமூச்சை விட்டு…” தெரியல…ஆதி……..கண்ணை கட்டி காட்டில் விட்ட மாதிரி இருக்கு……எங்கே போய் தேடுவேன்? எங்கேயாவது ஒரு இடத்தில் ஆரம்பிச்சா தான் முடிவு கிடைக்கும். ஆனா என் கையில் கிடைச்சதும் அவனை சும்மா விட மாட்டேன்” என்று கண்களில் கனல் தெறிக்க ஆக்ரோஷத்துடன் கூறினான்.

அவன் அப்படி சொன்னதும் அவனை சமாதானப்படுத்துவது போல் அவன் தோள்களை தட்டி” பிடிச்சிடலாம்……ஆனா நீ கவனமா இரு” என்று சொல்லி விட்டு அங்கிருந்து சென்றான்.

அவன் சென்ற பின் பாரமேறிய மனத்துடன் ஆர்ஜேவின் வீட்டை நோக்கி தன் பயணத்தை தொடர்ந்தான். பேருந்தில் சுமார் முக்கால் மணி நேர பயணத்திற்கு பிறகு முட்லூர் பாதையில் வந்து இறங்கி நடக்க ஆரம்பித்தான். மாலை நேரம் நேரம் வாடை காற்று அடித்தாலும் மனதில் இருந்த புழுக்கத்தின் காரணமாக உடலும் வியர்க்கத் தொடங்கியது

(தொடரும்)

அத்தியாயம் – 1 | அத்தியாயம் – 2 | அத்தியாயம் – 3 | அத்தியாயம் – 4 | அத்தியாயம் – 5 | அத்தியாயம் – 6 | அத்தியாயம் – 7 | அத்தியாயம் – 8 | அத்தியாயம் – 9 | அத்தியாயம் – 10 |அத்தியாயம் – 11 |அத்தியாயம் – 12 | அத்தியாயம் – 13 | அத்தியாயம் – 14 | அத்தியாயம் – 15 | அத்தியாயம் – 16 |

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...