நீயெனதின்னுயிர் – 18 | ஷெண்பா

 நீயெனதின்னுயிர் – 18 | ஷெண்பா

“வைஷும்மா! அப்பா கிளம்பறேன்; வீட்டைத் திறந்து வைக்காதே; அம்மாவை அழைச்சிட்டு ஈவ்னிங் வந்திடுவேன். பத்திரம்!” என்று மகளுக்குச் சொல்லி விட்டு, ஒரு திருமணத்திற்குக் கிளம்பினார் சங்கரன். தந்தையை வழியனுப்பி வைத்துவிட்டு, மீண்டும் படுக்கையில் விழுந்தவளுக்கு உறக்கம்தான் வரவில்லை. அவளது அனுமதியில்லாமல் கண்ணுக்குள்ளேயே நின்று சிரிப்பவனைத் தவிர்க்க, வழி தெரியாமல் திண்டாடினாள் அந்த நங்கை.

தென்றலாக அவனது நினைவுகள் உள்ளத்தில் சாமரம் வீச, மனமோ அவனை அளவுக்கதிகமாக இன்று எதிர்பார்த்தது. காதலின் தாக்கம் விழிகளில் நீராய்ப் பெருகி, கன்னத்தில் வழிந்தது. இத்தனை நாளாய் இல்லாத ஏக்கம்… இன்று ஏன் வந்ததெனப் புரியாமல், கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

நேரமாவதை உணர்ந்து எழுந்து, குளித்து முடித்து விட்டு வந்தாள். காலை உணவை முடிக்கவும், ருத்ரா வேலைக்கு வரவும் சரியாக இருந்தது. இருவரும் சேர்ந்து வீட்டைத் துடைத்து, மதியச் சமையலை முடித்து, ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர். அவளுக்குச் சிறிது நேரம் கணக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தாள் வைஷாலி.

மூன்று மணி வாக்கில் ருத்ராவும் கிளம்பிவிட, வைஷாலிக்கும் உறக்கம் கண்களைத் தழுவ ஹால் சோஃபாவில் படுத்தவள், உடனே உறங்கி விட்டாள். தன்னை மறந்து ஆழ்ந்த உறக்கத்திலிருந்தவள், அழைப்புமணி ஓசை கேட்டதில் திடுக்கிட்டு எழுந்தாள்.

‘இந்த நேரத்தில் யாராக இருக்கும்?’ என்ற யோசனையுடன் முகத்தை அலம்பி, துடைத்துக் கொண்டே கதவைத் திறந்தவள், திகைத்துப் போனாள். அவளது புலன்கள் தங்களது செயலை மறந்துவிட்டதைப் போல, என்ன செய்வதென்று தெரியாமல் நின்றாள்.

தன் முன்னால் சிட்டிகை போட்டபடி, “ஹலோ!” என்று, தன்னைப் பார்த்துச் சிரித்தபடி நின்றிருந்தவனைக் கண்டு, சட்டென்று சுயநினைவிற்கு வந்தாள். அவள் கதவை மூட முற்பட, அவளது செய்கையை உணர்ந்து கொண்டவன், வேகமாகக் கதவை தள்ளிக் கொண்டு வீட்டினுள் நுழைந்தான்.

அவன் தள்ளியதில் தடுமாறி இரண்டடி பின்னால் தள்ளப்பட்டு சுவரில் முட்டி நின்றவள், அவனைச் சுட்டெரிப்பதைப் போலப் பார்த்தாள். அவளது பார்வையைக் கண்டவன், கிண்டலாகச் சிரித்தபடி அவளை நோக்கி முன்னேறினான்.

“கிட்ட வராதே… அங்கேயே நில்லு… கத்தி ஊரைக் கூட்டிடுவேன்” என்றவளின் குரல் ‘ஞஙணநமன’ போட்டது.

“அப்படியா! இதுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன். எத்தனை நாள் எனக்கு ஆட்டம் காட்டின? இன்னைக்கு வசமா மாட்டியிருக்க. வீட்ல யாரும் இல்லைன்னு தெரிஞ்சி தான் வந்திருக்கேன்” என்றவன், அவளது கரத்தை எட்டிப் பிடிக்க முயன்றான்.

அவனது கரங்களில் சிக்காமல் நழுவி ஓடியவள், சோஃபாவின் மீதிருந்த குஷனைத் தூக்கி அவன் மீது எறிந்தாள். இலாவகமாக அதிலிருந்து தப்பியவன், அவளது கரத்தைப் பற்றிச் சுண்டியிழுத்தான். தனது நெஞ்சில் வந்து மோதியவளைத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.

“ஹேய்! விடுடா என்னை… ஃப்ராடு… சீட்டர்…!” என்று அவளது வார்த்தைகள் சூடேற, அதைக் கேட்டு அவனது அணைப்பு மேலும் இறுகியது. “ஹய்யோ! என் டிரெஸ்ஸெல்லாம் கசங்குதுடா… இடியட் ராகவ்…!” என்று சிணுங்கியவள், தன்னிடமிருந்து அவனை பலம் கொண்ட மட்டும் விலக்க முற்பட, இருவரும் தடுமாறி அங்கிருந்த திவானில் விழுந்தனர்.

அவளைப் பார்த்து உல்லாசமாகச் சிரித்தவனை, சரமாரியாகத் தாக்கினாள். அவளது கரங்களைப் பற்றியவன், “ஐ லவ் யூ கண்ணம்மா!” என்றான் காதலுடன்.

இரண்டு ஆண்டுகளாக அடக்கி வைத்திருந்த காதல், கரைபுரண்டு பேரலையாக உருமாற, அவனது கழுத்தை கட்டிக்கொண்டவளுக்குக் கண்ணீர் கரையுடைத்தது.

“வைஷூ! அழாதே…” என்று ஆறுதலாக அவளது தோளைத் தட்டிக் கொடுத்தவனின் கரத்தை, பட்டென்று தட்டிவிட்டாள்.

சில வினாடிகள் கைகளில் முகத்தைப் புதைத்துக் கொண்டு அழுதவள், நிமிர்ந்து ராகவைப் பார்த்தாள். கால் மேல் கால் போட்டுக்கொண்டு அமைதியாக அவளைப் பார்த்தபடியே அமர்ந்திருந்தான். ஆத்திரத்தில் பக்கத்தி லிருந்த திண்டைத் தூக்கி அவன் மீது வீசினாள்.

“ஏய்! எதுக்கு என்னை அடிக்கற…?” என்று முறைத்தான் அவன்.

“என்னடா, இங்க ஒருத்தி அழுதுட்டு இருக்காளே; அவளைச் சமாதானப்படுத்துவோம்னு இல்லாமல், வேடிக்கை பார்த்துட்டு உட்கார்ந்திருந்தா, அடிக்காமல் என்ன செய்வாங்க?”

“இதென்ன வம்பா இருக்கு? சமாதானம் செய்தா தள்ளிவிடுற, எப்படியும் அழுகையை நிறுத்தித்தானே ஆகணும்னு, பேசாமல் இருந்துட்டேன்” என்றான் சாதாரணமாக.

“அதுக்காக? அப்படியே விட்டுடுவியா…? இவ்வளவு தான் உன் ரெண்டு வருஷத்து லவ்வா…?” என்றாள் கோபத்துடன்.

“அதுசரி! அதுக்காக, உனக்குக் கூஜாவா தூக்க முடியும்?” என்றான் கிண்டலாக.

“கூஜாவெல்லாம் தூக்க வேணாம். நல்லதா ஒரு காஃபி போட்டுக் கொடுத்தால் போதும்” என்று குறும்பாகச் சிரித்தாள் வைஷாலி.

“ஆமாமாம். அழுதழுது டயர்டாகிட்ட! கொஞ்சம் காஃபியைக் குடிச்சிட்டு தெம்பா பேசு!” என்றவன் எழுந்து சமையலறைக்குச் சென்றான்.

அடுத்த சில நிமிடங்களில் இருவருக்குமாக கமகமவென்று மணக்கும் காஃபியுடன் ராகவ் வர, “தேங்க்ஸ்!” என்று புன்னகையுடன் வாங்கிக் கொண்டாள்.

“ஊரிலிருந்து வந்து, உனக்கும் சேர்த்து நான் காஃபி போட்டுக் கொடுக்கறேன். இப்போதாவது என் அக்கறையைப் புரிஞ்சிகிட்டா சரி…” என்று பெருமூச்சு விட்டபடி சோஃபாவில் அமர்ந்தான்.

“எங்களுக்கும் தெரியும்… அக்கறை இருப்பதால் தான், அன்னைக்கு ஹாஸ்பிட்டல்ல ராத்திரியெல்லாம் என் கையைப் பிடிச்சிகிட்டு, அய்யோ பாவமா ஒருத்தர் உட்கார்ந்திருந்தார்!” என்று சொல்லிவிட்டு, ஓரக்கண்ணால் அவனைப் பார்த்தாள்.

வியப்புடன் அவளைப் பார்த்தவன், “ஹேய்! இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்?” என்றபடி அவளை நெருங்கி அமர்ந்தான்.

ஆசையுடன் அவனது தோளில் சாய்ந்து கொண்டவள், “எல்லாம் தெரியும்… அன்னைக்கு நீங்க வர்றதுக்குக் கொஞ்ச நேரம் முன்னாலேயே, எனக்கு லேசா மயக்கம் தெளிஞ்சிடுச்சி. ஆனால், கண்ணைத் திறக்க முடியலை. நீங்க என் கையைப் பிடிச்சிகிட்டு கண் கலங்கியதெல்லாம் கனவு போல தெரிஞ்சது. ஆனா, காலையில் நான் எழுந்தப்போ, கட்டில்ல தலைசாய்த்துப் படுத்திருந்த உங்களைப் பார்த்ததும்தான், அதெல்லாம் கனவில்லை… நிஜம்னு புரிஞ்சது!” என்றாள்.

அவளது முகவாயைப் பற்றி உயர்த்தினான். இருவரின் பார்வைச் சங்கமத்தில், சொல்லப்படாத எத்தனையோ செய்திகள் இருவருக்கும் இருந்தன. அவளது செய்கையில் வருந்தி வரவழைத்த போலித்தனத்தை, புன்னகைக்கத் துடித்த அவளது இதழ்கள் காட்டிக்கொடுத்தன. இத்தனை நாட்களாக, தனக்காகக் காத்திருந்தவளின் ஆதங்கம், அவனுக்கும் புரிந்தது.

அந்த நொடியில் அவள் மீதான காதல் பொங்கி வழிய, கனிவும், தாபமும் பொங்க அவளைப் பார்த்தான். அவனது பார்வையால், அவளது உள்ளமெங்கும் பட்டாம்பூச்சிகள் சிறகடிக்க, கன்னங்கள் சூடானது. மெல்ல அவனிடமிருந்து விலக முயன்றவளது தோளை வளைத்து, தன்னருகில் இழுத்துக்கொண்டான்.

அவளது விழிகளைத் தனது பார்வையால் ஊடுரு வினான். ஆசையும், தாபமும் இருவரிடமும் நிறைந்திருந்த போதும்… அந்தத் தனிமையும், நெருக்கமும் அவர்களுக்கு ஒருவித அச்சத்தையும் கொடுத்தது.

தன் மீதிருக்கும் நம்பிக்கையில்… யாரும் ஊரிலில்லாத போதும் அவரது மகளைப் பார்க்க அனுமதித்த, தனது வருங்கால மாமனாரின் நம்பிக்கையைப் பொய்யாக்க அவன் விரும்பவில்லை. மெல்ல அவளை விடுவித்தவன், எழுந்து சற்றுத் தள்ளிச் சென்று தலையைக் கோதியபடி நின்றான். வைஷாலி அமைதியாகத் தன் கைவளையல்களை ஆராய்ந்தபடி அமர்ந்திருந்தாள்.

“வைஷூ! அத்தையும், மாமாவும் வர நேரமிருக்கு… நாம ரெண்டு பேரும் கிளம்பி வெளியே போயிட்டு, அப்படியே டின்னரை முடிச்சிட்டு வந்திடலாமா?” என்று திடீரெனக் கேட்டான்.

“அப்பா, அம்மாவுக்குத் தெரியாமலா?” என்றாள்.

“நான் ஏற்கெனவே மாமாவிடம் பேசிட்டேன்” என்றவனை, அவள் நம்பாமல் பார்ப்பது புரிய, “நம்பலையா? அப்போ, நீயே ஃபோன் செய்து மாமாகிட்ட கேளு!” என்றான் சாதாரணமாக.

அவள் கிண்டலாகச் சிரித்தபடி நிற்க, “அப்போ, நானே ஃபோன் செய்றேன்” என்று தனது மொபைலை எடுத்தான்.

அவனது மொபைலை வேகமாகப் பிடுங்கியவள், “சாருக்கு ரொம்பவே தைரியம் தான்!” என்று சிரித்தாள்.

“எனக்கென்ன பயம்?” என்றவன், அவளது மூக்கைப் பிடித்து இழுத்தான்.

“ஸ்ஸ்…ஆ!” என்றபடி அவனது கரத்தைத் தட்டி விட்டவள், “எங்க அம்மாவைப் பார்த்து பம்மின ஆளை, நாங்களும் பார்த்திருக்கோமாக்கும்!” என்று சொல்லி விட்டு, நாக்கைத் துருத்திக் காட்டிச் சிரித்தாள்.

எதுவும் பேசாமல் அழுத்தமாக அவளைப் பார்த்தான். அதிலிருந்தே அவனைச் சீண்டிவிட்டோம் என்று புரிய, “சாரி ராகவ்!” என்றாள்.

ஆனாலும், அவனது முகம் சற்று இறுக்கமாகவே இருக்க, வைஷாலிக்கு தர்மசங்கடமாகி விட்டது. ‘ஆரம்பத்திலிருந்தே அனைத்தும் அறிந்த தானே, இப்படிப் பேசியிருக்கக் கூடாது’ என்று தன்னையே நொந்து கொண்டாள்.

“ராகவ்!” என்றபடி அவனது கரத்தைப் பற்றினாள். அவளது முகத்திலிருந்த வருத்தத்தைக் கண்டவன், “இட்ஸ் ஓகேம்மா!” என்று முறுவலித்தான். அவனது முறுவலிப்பின் பிரதிபிம்பமாக, அவளது முகமும் மலர்ந்தது.

“வைஷூ! அன்னைக்கு நான் இருந்த நிலை வேற; அப்போ, நான் முடிக்க வேண்டிய சில கடமைகள் இருந்தது. உங்க அம்மா கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல முடியாத நிலையில் இருந்தேன். ஆனால், இன்னைக்கு, எனக்கு வரப்போகும் மனைவியை, ஒரு குறையும் இல்லாமல் சந்தோஷமாக வச்சிக்கத் தேவையான அத்தனைத் தகுதிகளும் அதிகமாகவே இருக்கு.

அவங்க கேட்கும் அத்தனைக் கேள்விகளுக்கும் தேவையான பதிலை, நிமிர்ந்து நின்னு சொல்லும் தைரியம் இப்போ இருக்கு!” என்றவனின் குரலில் தன்னம்பிக்கையும், தைரியமும் நிரம்பியிருந்தன.

வைஷாலியின் முகம் பெருமிதத்தில் மிளிர்ந்தது. அனைத்துமே அவள் அறிந்த விஷயங்கள் தானே. ஆங்காங்கே படித்து முடித்ததும், பெற்றோரின் கஷ்ட நஷ்டங்கள் புரியாமல் ஊதாரித்தனமாக சுற்றிக் கொண்டிருக்கும் இளைய தலைமுறையினருக்கு மத்தியில், ராகவ் வித்தியாசமானவனாக இருந்தான்.

சிறுவயதிலேயே தாயை இழந்து, தந்தையின் வளர்ப்பில் வளர்ந்தவன் அவன். தந்தையின் கஷ்டம் புரிந்து கல்லூரியில் கடைசி வருடத்தை முடித்த கையோடு, ரவீந்தர் குமாரிடம் சாதாரண கிளார்க்காக வேலைக்குச் சேர்ந்தான். அவரிடம் வேலை செய்து கொண்டே, எம்.பி.ஏ. படிப்பையும் முடித்தான். அவனது சுறுசுறுப்பையும், உழைப்பையும் கண்ட ரவீந்தர், தனது மகன் விக்ரமிடம் அவனை நேரடிச் செயலாளராக சேர்த்து விட்டார். இன்று விக்ரமே தனது புதிய கம்பெனிக்கு அவனை பங்குதாரனாக ஆக்க இருப்பதும் அவள் அறிந்ததே.

“ஹலோ மேடம்! ஃபீலிங்க்ஸா? மாமா லைன்ல இருக்காங்க. பேசுங்க!” என்று மொபைலை கொடுத்தான்.

“ஹலோ அப்பா!” என்றாள்.

“என்னம்மா, மாப்பிள்ளை வந்தாச்சா? சந்தோஷமா!” என்ற தந்தையின் குரலில் கேலி தெரிந்தது.

“ம்ம், ஆனால் நீங்க என்னிடம் சொல்லவேயில்ல!” என்று செல்லமாகக் கோபித்துக் கொண்டாள்.

“சரிம்மா! நீ மாப்பிள்ளை கூட வெளியே போயிட்டு, அப்படியே டின்னரை முடிச்சிட்டு வந்திடுங்க. நானும், அம்மாவும் வர எப்படியும் ஒன்பது மணியாகிடும்.”

தயக்கத்துடன், “அம்மா…!” என்று இழுத்தாள் அவள்.

“இன்னைக்கு உனக்கு ஒரு சர்ப்ரைஸ் மாதிரி, உங்க அம்மாவுக்கு ஒரு வெடிகுண்டு!” என்று சொல்லிவிட்டுச் சிரித்த சங்கரன், “அம்மாடி! விஷயம் எப்படியும் வெளியே வந்து தான் ஆகணும். அது இன்னைக்கே வரட்டுமே!” என்று மகளுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு போனை வைத்தார்.

ராகவிடம் விஷயத்தைச் சொல்லிவிட்டு, தயாராகி வருவதற்காக அறைக்குச் சென்றாள். சில நிமிடங்கள் கழித்து வைஷாலி வரும் ஓசை கேட்டு நிமிர்ந்தவன், மஞ்சள் நிறத்தில், பச்சையும், சிகப்புமாகப் பூக்களை அள்ளித் தெளித்தது போன்ற டிசைனர் சுடிதாரில், இறங்கி வந்தவளை இமைக்காமல் பார்த்தான்.

அவனது பார்வையின் வீச்சில் அவளது கன்னக் கதுப்புகள் வெட்கத்தில் சிவக்க, விழிகள் அவன் முகம் பார்க்கும் துணிவில்லாமல், நிலம் நோக்கியது. அவள் மீது கரைபுரண்ட காதலில், அவனது மனக்கட்டுப்பாடு ஆட்டம் காண, அவளது கைகளைப் பற்றி தன்னருகில் இழுத்தான்.

அவனது மூச்சுக் காற்றின் வெப்பம், அவளது மேனியைத் தாக்க, அதைத் தாளாத அவளது பூ உடல் மெல்ல நடுங்கியது. இருவரிடையிலும் ஒரு எதிர்பார்ப்பும், ஏக்கமும் எழுந்தது. பயத்தில் இமைகள் தானாக மூடிக்கொள்ள, உதடுகளைப் பற்களால் அழுந்தக் கடித்தாள்.

அவளது முகத்தை இருகைகளாலும் ஏந்தியவன், “வைஷூ! வித் யுவர் பர்மிஷன்” என்று குழைந்த குரலில் இறைஞ்சினான்.

மூடிய விழிகளுக்குள் அலைபாய்ந்த கருவிழிகளை, இமைகள் மேலும் இறுக்கிக் கொள்ள, அதுவே அவனுக்குத் தேவையான சம்மதத்தைக் கொடுத்து விட்டது. புன்னகையுடன் ஒற்றை விரலால் அவளது இதழ்களைத் தடவி விடுவித்தவன், சற்றும் தாமதிக்காமல் தனது உதடுகளுக்கு இலக்காக்கிக் கொண்டான்.

மனத்திற்குப் பிடித்தவனின் முதல் இதழ் ஸ்பரிசம். அவளது உயிரின் அடி ஆழம் வரை சென்று தாக்கியது. மெல்லத் தன்னை விடுவித்தவனின் நெஞ்சில் தன் முகம் மறைத்துக் கொண்டாள். ஒரே நேரத்தில் அவளைத் துக்கமும், மகிழ்ச்சியும் ஒரு சேர ஆட்கொண்டது.

‘தங்கள் வாழ்க்கையின் முக்கியமான கட்டத்தில் பாதிக் கிணற்றை மட்டுமே தாண்டியிருக்கிறோம்… மீதிக் கிணற்றையும் பத்திரமாகக் கடக்க வேண்டுமே!’ என்ற பயம் நெஞ்சில் எழ, கண்களில் ஈரம் கசிந்தது அவளுக்கு.

அவளது கண்ணீரை உணர்ந்தவன், முகத்தைப் பிடித்து உயர்த்தினான். கண்ணீரைத் துடைத்துவிட்டு, முகத்தில் விழுந்திருந்த முடிக்கற்றைகளை ஒதுக்கி விட்டான். அவளது மனத்தைப் படித்தவன் போல, “வைஷூ! ரிலாக்ஸ். எனக்காகவே காத்திருந்த தேவதை நீ. உன்னை யாருக்காகவும், எதுக்காகவும் விட்டுக் கொடுத்திடமாட்டேன்” என்றான் உறுதியான குரலில்.

“ராகவ்!” என்று தழுதழுத்தவள், அவனை இறுக அணைத்துக் கொண்டாள்.

அவனது கரங்கள், அவளை அணைத்து ஆசுவாசப்படுத்திய போதும், தன் அன்னையை நினைத்துக் கொண்டவளது மனத்தில், கலக்கம் எழத்தான் செய்தது.

(தொடரும்)

அத்தியாயம் – 1 | அத்தியாயம் – 2 | அத்தியாயம் – 3 | அத்தியாயம் – 4 | அத்தியாயம் – 5 | அத்தியாயம் – 6 | அத்தியாயம் – 7 | அத்தியாயம் – 8 | அத்தியாயம் – 9 | அத்தியாயம் – 10 | அத்தியாயம் – 11 |அத்தியாயம் – 12 |அத்தியாயம் – 13 |அத்தியாயம் – 14 | அத்தியாயம் – 15 | அத்தியாயம் – 16 | அத்தியாயம் – 17 |

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...