விலகாத வெள்ளித் திரை – 10 | லதா சரவணன்

 விலகாத வெள்ளித் திரை – 10 | லதா சரவணன்

மறுநாள் விருந்தில் வழக்கத்திற்கு மாறாக வேணியை அருகிலேயே நிறுத்திக் கொண்டார், ஒருவேளை என்னைப் பற்றி கண்ணன் அன்னையிடம் சொல்லியிருப்பாரோ இருக்கலாம் இத்தனை நாள் இல்லாத வாஞ்சையுடன் வேணியை அழைத்தார் கண்ணனின் அம்மா.

“இந்தம்மா குங்குமம் எடுத்துக்கோ!” தலையினைக் கோதி பூச்சரத்தை சூடிவிட்டவர். “வேணிம்மா நான் உன்னை என் மகளா நினைக்கிறேன். நல்ல பொண்ணும்மா நீ ஆனா இடம் மாறிப் பொறந்திட்டே. இங்கன பாரு வயசுப்பிள்ளைங்களை தகுந்த துணை இல்லாம வெளியே தெருவ அனுப்ப மாட்டோம் இந்த ஊருலே, என்னதான் திரையிலே நடிச்சாலும் சினிமாகாரங்க வீட்டிலே சம்பந்தம் பண்றது கஷ்டம்மா, உங்களை எட்ட நின்னுதான் ரசிக்க முடியும். நேத்து நீயும் என் மகனும் பேசிக்கிட்டு இருந்ததைக் கேட்டேன் தாயீ !”

“அவன்தான் வெவரம் கெட்ட பய சின்னப்பிள்ளையில் இருந்து அவனுக்கு சினிமான்னா உசுரு அதனால ஏற்பட்ட மயக்கமா கூட இருக்கும். அதை நீ பயன்படுத்திகிட்டே?!”

“அம்மா…!”

“இரும்மா நான் இன்னும் பேசி முடிக்கலை அவனுக்கு புத்தி மழுங்கிப் போச்சு வெள்ளைத் தோலைப் போட்டுகிட்டு அவன் முண்ணாடி நின்னா அவன் என்ன நினைப்பான். நலிஞ்சுப் போன என் குடும்பத்தோட ஒரே வாசரிசும்மா அவன் தனக்குன்னு இதுவரையில் எதுக்கும் ஆசைப்பட்டது இல்லை. அவனுக்குப் பிறகு ஒரு தங்கச்சி இன்னைக்கோ நாளைக்கோன்னு கிடக்கா, வேத்து ஜாதி, சினிமாக்கரியைக் கட்டிகிட்டா எப்படி அவளுக்கு ஒரு நல்லது நடக்கும். எல்லாத்தையும் விட பிறப்பு தப்பா நினைக்காதே வேணி உன்னைக் கஷ்டப்படுத்தனுமின்னு நினைக்கலை, என் பையனோட விருப்பம் உன் மேல இருக்குன்னு தெரிஞ்சபிறகு நீ அவனுக்கு சரியான்னு நான் விசாரிக்கணுமே, அதனால உங்க மாமா ராமதுரைக்கிட்ட பேசினப்போதான் இத்தனை விஷயமும் தெரிந்தது. அப்பா யாருன்னே தெரியாத உன்னை…நான் எப்படிம்மா ?”

இந்த வார்த்தையைக் கேட்டவுடனேயே வேணியின் முகம் செத்துவிட்டது.

“உங்க அன்பைப் பிரிக்கணும் என்று நான் நினைக்கலை வேணி அனா ஒத்து வராதுன்னு தெரிந்த பிறகு நான் அதை சீர் செய்வதுதானே நல்லது. தெளிந்த நீரோடையைப் போல இருக்கிற அவனோட வாழ்க்கையிலே தயவுசெய்து குறுக்கிடாதே இதுக்கு மேல எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலைம்மா.?”

வேணி ஆழமாக பெருமூச்சோடும் அடக்க முடியாத கண்ணீரோடும், “என்னால உங்களுக்கோ குடும்பத்திற்கோ எந்த பிரச்சனையும் வராது நன்றிம்மா, நான் போய் எல்லாத்தையும் எடுத்துவைக்கணும் இந்த ஊரில் எதையும் விட்டுட்டுப் போயிடக் கூடாது இல்லைங்களா ?!”

சென்னைக்கு கிளம்புவதற்கான ஏற்பாடு எல்லாரும் தயாராக பெட்டிக்கடையில் நின்று கொண்டு இருக்க அவர்களுக்கான மதிய இரவு உணவை கட்டுசாதமாய் கட்டிக் கொடுத்தார் கண்ணனின் அம்மா பத்மா. பேசாமடந்தையாய் கையே காரியமாய் இருந்தாள் வேணி. எந்தப் பக்கமும் பார்வையை நகர்த்தவில்லை, அழுதுதழுது கண்களில் நீர் கூட வற்றிப் போயிருந்ததோ என்னவோ ? வேணியின் முகத்தைப் பார்க்க அம்மாவிற்கே கொஞ்சம் கஷ்டமாத்தான் இருந்தது. இப்போது இளக்கம் தந்தால் அது தன் மகனுக்கும் தன் குடும்பத்திற்கும் ஆபத்தாகி விடுமேயென்று வேலையை முடித்தார்.

இரண்டு பெண்களுக்கு இடையில் நடந்த எந்தப் பிரச்சனை பற்றிய விடயமும் தெரியாமல் வேணி முகத்திருப்பலைக் கண்டு கண்ணன் தான் தொய்ந்து போயிருந்தான். ரயிலேறும் வரையில் கண்ணனின் பக்கம் திரும்பவே இல்லை தவித்துப் போனவன் அடக்க முடியாமல் அழுதேவிட்டான். மகனின் கவலையை பார்த்து கலங்கினாலும் அவனின் நல்லதற்கு தானே என்று சமாதானப் படுத்திவிட்டு அவர் செல்ல கண்ணன் ஆத்துமேட்டில் தனித்துப் படுத்திருந்தான்.

வேணி ஆரம்பத்தில் பார்த்ததில் இருந்தே அவளைப் பற்றிக் கடைசி பேச்சை வரைக்கும் யோசித்தான். எங்கே தப்பு நடந்தது என்று ? அத்தனை காதலோடு பேசியவளின் பாராமுகத்திற்கு என்ன காரணம். கேள்வியெழுந்தால் தானே பதில் சொல்ல முடியும் கேள்வியே தெரியாமல் தவிக்கிறானே மனம் தவிப்புடன் நாட்களைக் கடத்தினான்.

ஒரு வாரத்திற்கு மேல் கண்ணனால் இருக்க முடியவில்லை எந்த வேலையும் சரிவர செய்ய முடியாமல் தவித்தவன், முதலியாரின் கரும்புத் தோட்டத்திற்கு போயிருந்தபோது சற்றே ஏமாந்திருந்தால் அவனின் கைவிரல்களே போயிருக்கும் அபாயம் இத்தனை நாள் கடிந்து கொள்ளாத முதலியார் கூட “ என்னதாண்டா உன் பிரச்சனை எதையோ பறிகொடுத்தவன் மாதிரியிருக்கே?”

“வேலையிலே கவனம் வேண்டாம் வயசுப் பையன் உனக்கு ஏதாவதுன்னா யாரு உங்கம்மாக்கு பதில் சொல்றது. இராப்பகலா வேலை வேலைன்னு அலைஞ்சா இப்படித்தான் பேசாம இன்னைக்கு ஒருநாள் பொழுது போய் தூங்கு எல்லாம் சரியாயிடும் !” என்று வலுக் கட்டாயமாய் துரத்திவிட்டு இருந்தார். அரைகுறையாய் வேலையில் ஈடுபட்டால் சில நேரம் வேணியின் நினைவினை ஒதுக்கிவிட்டு மூச்சுவிட அவனால் முடிந்தது ஆனால் இப்போது தனிமை சாத்தானின் உலைகளமாய் மாறி அவளைப்பற்றிய நினைவுகளை மேலும் மேலும் கீறி அவனின் வேதனைப் பார்த்து ரசித்துக் கைகொட்டியது. அவனின் மெளன நாடகத்தை கண்டும் காணாமல் இருந்தார் அவனின் தாயார்.

கண்ணன் ஒரு முடிவுடன் நேராய் தனது போதிமரமான வாத்தியாரின் முன் போய் நின்றான். தன் முன் இப்போது வந்து நிற்கும் கண்ணனின் தோற்றம்தான் மாறியிருக்கிறதே தவிர, அவனின் முகம் அன்று செய்வதறியாது நிற்கும் குட்டிக்கண்ணனை நினைவு படுத்தியது ஆசிரியருக்கு. “வாடா கண்ணா நீ இப்போ பெரிய மனுஷனாயிட்டே, ம்..!. நான் எங்கம்மாவைக் காப்பாற்றியேத் தீருவேன்னு அன்னைக்கு பேசியதை நீ சாதிச்சிட்டேடா?!”

“ஸார்…”!

“முழிக்காதேடா விபரமே தெரியாம உன்னைக் குழப்பறேன் நேத்து தான் முதலியாரும் நானும் உங்கம்மாகிட்டே பேசினோம். எல்லாம் உன் கல்யாணத்தைப் பற்றிதான் முதலியார்கிட்டே உன்னைக் கை பிடிச்சிக் கொடுத்ததில் இருந்தே உன்னை அவர் தன் மகனைப் போல நினைச்சிருக்கிறார். அவரு உன்னை தத்துப்பிள்ளையாய் ஸ்ரீகாரம் எடுத்துக்கப்போறாராம். முடிசூட்டப்பட்ட பிறகு என்ன கல்யாணதாரணம் தானே. அவரோட தங்கை மகளையே உனக்கு பேசியிருக்கார். வழக்கம் போல உன்கிட்டே இந்த விஷயத்தை சொல்ற பொறுப்பு எனக்கு வந்திட்டது. ரொம்பவும் சந்தோஷமா இருக்குடா !” வாத்யார் கண்ணனைக் கட்டி உச்சி முகந்தார்.

தான் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைத்து விட்டதே என்று தயக்கமாய், “ அய்யா நானும் உங்ககிட்டே என் கல்யாண விஷயமாத்தான் பேச வந்தேன் !” என வேணியைச் சந்தித்து முதல் அவளின் காரணம் தெரியாத பிரிவினால் அவன் படும் துயரம் வரை எல்லா விஷயத்தையும் வாத்யாரிடம் சொல்லி முடித்தான்

வாத்தியாரின் முகத்தில் கேள்விக்குறி, “நீ ஒரு பொண்ணை நேசித்தானென்றால் நிச்சயம் அந்த நேசம் தவறாய் இருக்காது. ஆனா அந்த பொண்ணு விஷயம் குழப்புதே, நல்லவேளை உன்கிட்டே பொண்ணைக் காட்டி உன் வாயால சம்மதம் சொன்ன பிறகுதான் கல்யாணன்னு முதலியார் சொல்லிட்டார்.”

“அதெல்லாம் நீங்க சொன்ன என் பையன் தட்டமாட்டான்னு சொன்ன உங்கம்மாகிட்டே கூட, காசுபணமோ சொத்தோ இல்லைம்மா கல்யாணம் அவரவர் மனசு சம்பந்தப்பட்ட விஷயம் அதனால் கண்ணனுக்கு முழு சம்மதம் இருக்கணுன்னு சொல்லிட்டார். நல்லவேளை கண்ணா இப்பவே இந்த விஷயத்தை தெரிவிச்சிட்டே காலதாமதம் இல்லாம. முதலியார் நிச்சயம் இதுக்கு மறுப்பு தெரிவிக்க மாட்டார். தன் சொந்த அத்தை மகளை காதலித்தவர்தான் முதலியார், ஆனால் பெயரே தெரியாத ஒரு வியாதியில் திருமணத்திற்கு முன்னரே அந்தக் காதலும் அவரோட காதலியும் தவறியும் போனதால் அவர் கல்யாணமே பண்ணிக்கலை இப்ப உன் காதலைச் சொன்னா கட்டாயம் சரின்னுதான் சொல்லுவார்.!”

“ஸார் இப்பவே போய் அய்யாகிட்டே சொல்லிடலாமா ?”

“அது சரிவருன்னு எனக்குத் தோணுலை, உன் வரையிலே நீ சரி ஆனா அந்த பொண்ணு அதோட கடைசி செய்கை கொஞ்சம் குழப்புதே நான் பட்டணத்தில் வேலையிருக்கு இரண்டு நாள் கண்ணனையும் கூட்டிப்போறேன்னு முதலியார்கிட்டே சொல்றேன் நீயும் உன் அம்மாகிட்டே சொல்லிடு அந்த பொண்ணோட வீடு உனக்குத் தெரியும் இல்லையா ?” நாம நேர போயிடலாம்.

“என் மனசு ரொம்பவும் குழப்பமா இருக்கு அதனால, நான் வேணியைப் பார்க்கும் வரையில் ?!”

“போதும்டா உன் வேணி புராணம் நான் உன் வாத்தியார் போய் பிரயாணத்துக்கு உண்டான வழியைப் பாரு ?!” அவர் விரட்ட, சற்று முன்பு இருந்த கலக்கம் போய் புது தெம்போடு சென்றான் கண்ணன்.

(தொடரும்)

பகுதி – 1 | பகுதி – 2 பகுதி – 3 | பகுதி – 4 | பகுதி – 5 | பகுதி – 6 | பகுதி – 7 | பகுதி – 8 | பகுதி – 9 | பகுதி – 10 |

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...