நிசப்த சங்கீதம் – 2| ஜீ.ஏ.பிரபா
நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி கன்ணம்மா
தன்னையே சகியென்று சரணமெய்தினேன்.
வசுமதி விமானத்திலிருந்து இறங்கும்போது லேசாக தலை சுற்றுவது போல் உணர்ந்தாள்.
விமான பணிப்பெண் தடுமாறியவளைப் பிடித்துக் கொண்டாள்’
“இட்ஸ் ஓ.கே” மெல்லிய சிரிப்புடன் அவள் கையை விடுவித்துக் கொண்டாள் வசுமதி. எப்போதுமே பிறர் கையைப் பிடித்துச் சார்ந்து வாழ விரும்பியதில்லை வசு.
கீழே விழுந்தாலும் பிறர் கையைப் பிடித்து எழுந்திருக்க விரும்பியதில்லை வசு. அந்த உணர்வுதான் கணவன், வயிற்ற்ல் சுமந்த குழந்தை என்று எல்லோரையும் பிரிந்து வெளி நாடு சென்று இத்தனை வருஷம் வாழ முடிந்திருக்கிறது. ஒரு பெரிய ஐடி கம்பெனியின் சி,இ,ஓ.பல லகரங்களில் சம்பளம். கனடாவில் சொந்த வீடு நகைகள் என்று எல்லாம் இருக்கிறது. வருஷம் ஒரு முறை மற்ற நாடுகளைச் சுற்றிப் பார்க்கச் சென்று விடுவாள். இட்டாலி, வெனிஸ், ஜெர்மன், பிரான்ஸ் என்று அவள் பார்க்காத நாடுகள் இல்லை.
இந்தியா, அதிலும் தமிழ்னாடு அவள் வந்ததில்லை. தனது உறவினர்கள் பார்த்தால் மீண்டும் அழுது வடியும் அந்தக் குடும்ப வாழ்வில் தன்னைக் கொண்டு போய் சேர்த்து விடுவார்கள் என்று நினைத்தாள்.
குடும்பம், குழந்தை என்ற ஒரு வட்டத்துக்குள் சிக்கிக் கொள்ள அவள் விரும்பவில்லை.பறவையாய் சிறகடிக்க வேண்டும், பறந்து, பறந்து உலகம் முழுக்கச் சுற்ற வேண்டும். தன் திறமைகளுக்கு உரிய அங்கீகாரம், மதிப்பு, மரியாதை, கௌரவம், அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்று விரும்பினாள். அதைத் தேடித்தான் அவள் போனது. கிடைத்தது. விரும்பிய வண்ணம் வாழ்ந்தாள். வாழுகிறாள்.
இப்போது சிறிது உடல் நலம் சரியில்லை. தலை சுற்றல், வாந்தி, மொனொபாஸ் ஆரம்பம் என்று நினைத்தாள். அங்கிருந்த நண்பர்கள்தான் வைத்தியம் செய்த் கொள்ள இந்தியா போயிடு. இங்கேன்னா நீ சம்பாதிச்ச சொத்தை எல்லாம் எழுதித் தர வேண்டும் என்றார்கள்.மும்பையில் ஒரு டாக்டர் நண்பர் இருந்தார். அவரிடம் காட்டியபோது, இது கேன்சரின் ஆரம்ப நிலை என்று நினைக்கிறேன். சென்னை போயிடு என்றார்.
வசுமதி பயப்படவில்லை.அவளுக்கு தைரியம் அதிகம். அவளுடை உறவினர் பெண்மணி ஆதரவு இல்லாமல் முதியோர் இல்லத்தில் இருந்தார். அவரைத் தன்னுடன் கூட்டி வந்து வைத்துக் கொண்டு கேன்சருக்கான சிகிச்சையைச் செய்து கொள்ளலாம் என்று நினைத்தாள். அம்மா, அப்பா இல்லை, ஒரே சகோதரி. அவளும் லண்டனில். மற்ற உறவினர்கள் யாரையும் நெருங்க விட்டதில்லை வசு.
எல்லா பெரிய ஹாஸ்பிடலிலும் தன் மெடிகல் ரிபோர்ட்டைக் காட்டி கேட்டு விட்டாள் வசுமதி. எல்லோரும் ஒன்று போல்தான் சொன்னார்கள்.ஆரம்ப நிலைதான். சரியான சிகிச்சை எடுத்தால் பயமில்லை என்றார்கள். சென்னையில் ஒரு வீடு ஏற்பாடு செய்து கொண்டு, உறவினர் பெண்மணியைக் கூட்டி வந்து தன்னுடன் வைத்துக் கொண்டு சிகிச்சையை ஆரம்பித்து விடலாம் என்று வந்து விட்டாள்.
அவள் கம்பெனியே எல்லா ஏற்பாடுகளும் செய்து விட்டது. அவளுக்கு இந்தியாவில் ஒரு பி.ஏ.வும் ஏற்பாடு செய்து கொடுத்து விட்டது.அவளின் திறமை, அறிவு அவளை விட மனதில்லை கம்பெனிக்கு.
அவள் வீட்டின் முன் பகுதியில் அலுவலகம், வைத்தியச் செலவு என்று எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டது கம்பெனி.
வசுமதி தன் பெட்டிகளை எடுத்துக் கொண்டு முன்புறம் வந்தாள்.தன்னை அழைத்துப் போக யாரானும் வந்திருக்கிறார்களா என்று பார்வை தேடியது. தூரத்தில் ஒரு ஜீன்ஸ் போட்ட பெண் வசுமதி என்று தன் பெயர் எழுதிய அட்டையை பிடித்திருப்பதைப் பார்த்து கை ஆட்டினாள்.
“ஹாய் மேம்” என்று ஒடி வந்த அவள் வெண்முயல் குட்டியாய் இருந்தாள். இந்தக் கால நாகரீகமாய் ஜீன்ஸ், இறுக்கிப் பிடிக்கும் டீ ஷர்ட். தோள் வரை புரளும் கூந்தல். கை, கழுத்து, காது என்று எதுவும் இல்லாமல் துடைத்து விட்டது போல் இருந்தாள்.
“ஹாய் மேம்.ஐம் மித்ரா சீனிவாசன். யுவர் பி.ஏ. வெல்கம் டூ சென்னை.”
“வாவ்.ஒரு இளம் பெண்ணை எதிர்பார்த்தால் வெண் முயல் குட்டி வந்து நிற்கிறதே.” வசுமதி பாராட்டில் அவள் முகம் பெருமையாய் மலர்ந்தது.
அவளுடன் இணைந்து நடந்த மித்ரா வசுமதியின் தோளுக்கு இருந்தாள். மித்ராவை விட நிறம் கம்மி என்றாலும் பல வருடங்களாக வெளி நாட்டு வாசம் நிறத்தில் ஒரு பளபளப்பைத் தந்திருந்தது.பதவி, அந்தஸ்து தந்த ஒரு மிடுக்கு, கம்பீரம், தான் என்ற ஒரு எடுப்பு மித்ராவை விட அழகாத் தெரிந்தாள்.
அம்பது பிளஸ் என்றாலும் தோற்றம் முப்பதுக்கு மேல் மதிக்க முடியவில்லை.அவளுடன் நடந்த மித்ரா ஓரக் கண்ணால் அவளை பிரமிப்புடன் பார்த்தபடிதான் நடந்தாள்.ஒரு சின்ன பொறாமை அவளைத் தாக்கியது. வசதி, அழகில் தன்னை விட உயர்ந்தவர்களை மித்ரா வெறுப்பாள்.ஆனால் வசுமதியின் நோய் பற்றி அறிந்திருந்ததால் இருக்கட்டும், கீமோ தர ஆரம்பித்த பிறகு, உன் மிடுக்கு, எங்கே போகிறது என்று பார்க்கலாம் என்று தனக்குள் கருவிக் கொண்டாள்.
ஏர்போர்ட் வாசலில் கம்பெனி கார் நின்றது.டிரைவர் பெட்டியை வாங்கி வைத்து விட்டு, கார்க் கதவைத் திறந்து விட்டான்.
“கமான், மித்ரா. நீ முன்புறம் ஏறிக்கோ”
“நோ மேம், நான் முன்னாடி என் நண்பன் கூடப் போகிறேன்.. உங்களுக்கு லஞ்ச் ஏற்பாடு செஞ்சிருக்கேன்.அது ஆச்சான்னு பாத்துட்டு, உங்களுக்கு கொஞ்சம் ப்ரூட்ஸ் வாங்கிட்டு வந்துடறேன்.
“ஓ.கே டன். டிரைவருக்கு வீடு தெரியும் இல்லையா?”
“தெரியும்க மேடம்.” டிரைவர் பவ்யமாக தலை அசைத்தார்.
“குட். மித்ரா எனக்கு நீ வரப்போ சில தமிழ் மேகசீன்கள் வாங்கிட்டு வாங்க.தமிழ் பத்திரிக்கைப் படித்து ரொம்ப நாள் ஆகிட்டுது.சில வார , மாத நாளிதழ்கள்.”
மித்ரா தலையாட்டியபடி ஓடிப் போய் ஒரு வாலிபனின் தோளைப் பற்றி அவன் பைக்கில் ஏறினாள். இள நீல நிறத்தில் சட்டை அணிந்திருந்த அவனின் பின்புறம் யாரையோ நினைவுறுத்தியது.யோசித்துப் பார்த்தாள். யாரென்று தெரியவில்லை.ப்ச் என்ற ஒரு அலட்சியத்துடன் போலாம் என்றாள்.
வீடு சென்னை புற நகர் பகுதியில் இருந்தது. அமைதியான இடம். சுற்றிலும் பசுமையான மரங்கள். உயர, உயர கட்டிடங்கள். மொத்தம் முன்னூறு வீடுகள் என்றார். டிரைவர். ஏ.பி,சி என்று பிளாக்குகள்.உங்களுக்கு ஏடூவில் அஞ்சாவது வீடு என்றார்.
வீட்டைத் திறந்து உள்ளே போனதும் முதலில் சிட் அவுட்தான் கண்ணில் பட்டது.கம்பிகேட் போட்ட அதைத் திறந்ததும் சில் என்று முகத்தில் அடித்தது காற்று.தூரத்தில் சமீபத்தில் பெய்த மழையில் நீர் நிரம்பி காட்சி அளித்த ஏரி என்று மனதைக் கவர்ந்தது.
டிரைவர் பெட்டிகளைக் கொண்டு வந்து உள்ளே வைத்தார்.
“வேற எதாச்சும் வேணுமா?’ டிரைவர்.
“நோ தேங்க்ஸ். எனக்கு மாலை ஒரு ஆறு மணி போல் வந்தாப் போதும்.”
“வண்டி இங்கதாம்மா அபார்ட்மென்ட்ல நிக்கும். இது உங்க தனிப்பட்ட உபயோகத்துக்கு. நான் என் டூ வீலர்ல போய் சாப்டுட்டு வந்துடறேன்” என்றார்.
இதுக்கு எதுக்கு வீட்டுக்குப் போகணும். எனக்கு வர சாப்பாடை ரெண்டுபேரும் சாப்பிடலாம் என்று அவரை வற்புறுத்தி இருக்க வைத்தாள்.வயதானவர். ஸந்தோஷத்துடன் தலை அசைத்தார்.
மித்ரா உடனே வந்து விட்டாள். பெரிய கேரியரில் உணவு. ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்.மித்ரா அருகில் இருந்து உபசரித்து உணவு பறிமாறினாள். அவளும், டிரைவரும் சாப்பிட்டு கேரியரை கழுவப் போட்டாள். மேடம் நீங்க எதுவும் செய்ய வேண்டாம். வேலைக்காரி மாலை அஞ்சு மணிக்கு வருவா. டேக் ரெஸ்ட்”
“ஜெட் லாக் போக ஒருமணி நேரம் தூங்கணும்”
“தாராளமா தூங்குங்க. நானும் ஷாப்பிங் போய்ட்டு வந்துடறேன்”
“ஷாப்பிங் யார் கூட?தட் யங் சேப்?”- கண் சிமிட்டினாள் வசுமதி.
“எஸ்” புன்னகைத்தாள் மித்ரா.” எம்.எஸ் இன் பிலானி. ஹைலி பிரில்லியண்ட். நேம் சந்தீப்.”
“வாவ்! எப்போ கலயாணம்?”
“கூடிய விரைவில். அவருக்கு அப்பா மட்டும்தான். அம்மா இல்ல. கூடப் பிறந்தவங்க யாரும் இல்லை.பிரச்சினை இல்லாத குடும்பம்.”
“குட், ஆனா ஆஃப்டர் மேரேஜ் நீ வேலையை விட்றக் கூடாது. உன் திறமைகளை நீ வெளிப்படுத்தியாகணும். குழந்தை ,குட்டின்னு உடனே கமிட்மெண்ட்ஸ் ஏத்துக்காத.அன்னைக்கு நான் எடுத்த முடிவுதான் இன்னைக்கு என்ன இத்தனை உசரம் கொண்டு வந்து சேர்த்திருக்கு. பாத்தியா எனக்கு எத்தனை வசதிகளை கம்பெனி செஞ்சு கொடுத்திருக்கு?இதுக்குக் காரணம் என் திறமை.”
“எஸ்” மேம். கரெக்ட் நான் வேலையை விட மாட்டேன்னு கண்டிப்பா சொல்லிட்டேன்,சந்தீப்பும் சரின்னு சொல்லிட்டாப்பல. நான் இழுத்த இழுப்புக்கு வருவான். ஹி லவ்ஸ் மீ வெரி டீப்லி.”மித்ராவின் குரலில் தெரித்த கர்வத்தை ரசித்தாள் வசுமதி.
“அழகுதான் முக்கியம் மித்ரா.அது அழிஞ்சா ஒரு பய உன்னைத் திரும்பிப் பார்க்க மாட்டான். அதை மெயின்டெய்ன் பண்ணிக்க.அது இருந்துட்டா என்ன வேணா சாதிக்கலாம்.” வசுமதியின் உபதேசம்.
“ஷ்யூர் மேம்”மித்ரா கட்டை விரலை உயர்த்தினாள்.
ஓ.கே நீ கிளம்பு. நான் தூங்கிட்டு ,மாலை குளிச்சுட்டு நாளை டாக்டரைப் பார்க்க எப்போ வரதுன்னு அப்பாயின்மெண்ட் வாங்கறேன். யூ மஸ்ட் பீ வித் மி. நான் இங்க வடபழனி முருகன் கோவிலுக்குப் போயிட்டு வரேன். அவன் என் இஷ்ட தெய்வம்,”
“சந்தீப்புக்கும் வடபழனி முருகன்தான் இஷ்ட தெய்வம். அவன் அப்பா முருகா, முருகான்னு உசிரை விடுவாராம்.”
“நான் உயிரை விடற கேஸ் கிடையாது. ஜஸ்ட் ஒரு நட்பு சந்திப்பு.”
நீ கிளம்பலாம் என்பது போல் வசுமதி எழுந்தாள்.
புரிந்து மித்ராவும் கிளம்பினாள்
வசுமதியிடம் தெரிந்த மிடுக்கு அவளுக்கு ஒரு பிரமிப்பைத் தந்தது.
பதவி,படிப்பு, மரியாதை,திறமை தந்த கம்பீரம். தன் அழகு குறித்த கர்வம் என்று ஒரு மயிலின் கர்வம், சிங்கத்தின் சிலிர்ப்பு.மிடுக்கு என்று மிளிர்ந்தாள்.அவளைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் இருந்தது.மனமில்லாமல் இறங்கி கீழே வந்தாள்.
அந்த வளாகம் பிரும்மாண்டமாக இருந்தது.சுற்றிலும் மரங்கள். குழந்தைகள் விளையாட கிரவுண்ட். நீச்சல் குளம் என்று.வசுவின் வீடே அவள் மனசுக்குள் இருந்தது.பளபளவென்று கிரானைட், அழகான வசதியான அறைகள்,கிச்சன், சிட் அவுட், பாஷ் தோற்றம்.பெரிய பணக்காரத் தோரணை தரும் வீடு. அங்கு எல்லாம் இலவசம். கம்பெனியே அதை ஏற்றுக் கொண்டிருந்த்து.
எத்தனை அதிர்ஷ்டம்?
அவள் கணவன், குழந்தைகள் எல்லாம் எங்கே.”
மனதிற்குள் எழுந்த கேள்வியை ஒதுக்கியபடி நடந்தாள்.
தன் வீட்டு சிட் அவுட்டில் நின்றபடி மித்ரா போவதைப் பார்த்தபடி நின்றாள் வசுமதி. அவளின் கண்ணில் தெரிந்த பேராசை வசுவை உறுத்தியது. இன்னதென்று தெரியாமல் அவளைப் பார்த்ததும் ஒரு வெறுப்பு.
பார்வையைத் திருப்பினாள். கிழே நீச்சல் குளத்தருகே நிறைய சிமென்ட் பெஞ்ச் போட்டிருந்தது.ஜோடி,ஜோடியாய் அமர்ந்திருந்தவர்களைப் பார்க்கையில் சிறிது ஏக்கமாக இருந்தது.
அவளும் இது போல் ஒருவர் தோளில் சாய்ந்திருந்தவள்தான்.அன்பையும், பிரியத்தையும் அருவியாய்க் கொட்டியவர். அவளின் எந்தச் செய்கையையும் தவறு என்று சொல்லியதில்லை.
இது உன் மனசுக்கு சந்தோஷத்தைத் தரும்னா செய் என்றுதான் சொன்னார்.
அதனால்தான் வயிற்றுக் குழந்தையைக் கலைக்கிறேன் என்ற போது கூட தடுக்கவில்லை.ஆனால் நாள் ஆகி விட்டதால் கலைக்க முடியவில்லை. அவளுக்கு அமெரிக்கா செல்லும் வாய்ப்பு வந்த நேரம்.சிறிது நாள் கழித்து வருவதாகச் சொல்ல ஆன்லைனில் வேலை பார்த்துத் தந்தாள்.
அவளின் அறிவு, திறமை பார்த்து குழந்தை பிறந்ததும் வா என்றது கம்பெனி. குழந்தையை கணவனிடம் ஒப்படைத்து விட்டுச் சென்றாள் வசுமதி,அப்படியே வாழ்க்கை ஓடி விட்டது. எல்லோரையும் பிரிந்து, நாடு, நாடாக அலைந்து வெறி பிடித்து வேலை செய்து திறமையை வெளிப்படுத்தியாகி விட்டது.விருதுகள் அளவற்றது. இனி என்ன?
நோய்…அதற்கு வைத்தியம்.மீண்டும் வேலை, வேலை,….இதன் அர்த்தம்தான் என்ன”?-மனசுக்குள் ஒரு வெறுப்பு தோன்றியது.
ஒரு வயதான பெண் தன் கணவனின் தோளில் தலை சாய்த்திருந்தாள். இது போல் தானும் தன் கண்வன் தோளில் சாய்ந்துதான் இருந்தாள். அதை உதறி விட்டுச் சென்றாள்.மீண்டும் கிடைக்குமா?
“சாய்னாத்”- உதடு முணுமுணுத்தது.
மித்ராவின் காதலன் சந்தீப்தான் தன் மகன் என்பது அவளுக்குத் தெரியவில்லை.
வாழ்க்கை ஒரு வட்டத்திற்குள் சுற்றிச் சுற்றி வருகிறது. அது யாரையும் பிரிந்து போக விடாது. பிரிந்தவர்களையும் இழுத்து வந்து விடும்.உண்மை அன்பு எனபது குருவி காலில் கட்டிய நூலைப் போல. உதறி விட்டுச் செல்ல முடியாது.
வசு மனசுக்குள் புதைந்து கிடந்த அன்பு மெல்ல,மெல்ல சாய் நாதனைச் சந்திக்கும் வாய்ப்புகளை உருவாக்கியது.
(தொடரும்)
| பகுதி – 1 | பகுதி – 2 | பகுதி – 3 | பகுதி – 4 | பகுதி – 5 | பகுதி – 6 | பகுதி – 7 | பகுதி – 8 | பகுதி – 9 | பகுதி – 10 |