புதுடெல்லி: மாணவர்கள் வாழ்க்கையில் சமநிலையை பேணவும், அனைத்து வகை வளர்ச்சியிலும் கவனம் செலுத்தவும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட தொழில்நுட்பத்தை பொறுப்புடன் பயன்படுத்தவும் பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தினார்.
பொதுத் தேர்வுகளை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்வது குறித்து ‘பரிக் ஷா பே சர்ச்சா’ (பிபிசி) என்ற தலைப்பில் மாணவர்களுடன் ஆண்டுதோறும் பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார். அந்த வகையில் குஜராத்தில் உள்ள தேவமோக்ரா, தமிழகத்தில் கோவை, சத்தீஸ்கரில் ராய்ப்பூர், அசாமில் குவாஹாட்டி மற்றும் டெல்லியில் வசிக்கும் மாணவர்களுடன் பிரதமர் மோடி நேற்று தனது இல்லத்தில் கலந்துரையாடினார்.
அப்போது பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: கல்வியை ஒரு சுமையாகக் கருதக்கூடாது. தேர்வுகள் ஒருபோதும் இறுதி இலக்காக இருக்கக்கூடாது. கல்வி என்பது நமது வளர்ச்சிக்கான ஒரு ஊடகம் மட்டுமே… மதிப்பெண்களில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, ஒவ்வொருவரும் வாழ்க்கையில் என்ன சாதிக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடமிருந்து முரண்பட்ட ஆலோசனைகள் வரலாம். கல்வி கற்பதில் ஒவ்வொரு மாணவருக்கும் தனித்துவமான பாணி உள்ளது. அந்த வழக்கத்தையே பின்பற்றுங்கள். அனுபவங்கள் மூலம் உங்களை படிப்படியாக மேம்படுத்திக் கொள்ளுங்கள்.
படிப்பு, தூக்கம், உணவு, பொழுதுபோக்கு ஆகியவற்றுக்கு இடையே சமநிலையை பேண வேண்டும். நீங்கள் ஒரு பக்கம் அதிகமாக சாய்ந்தால், நீங்கள் நிச்சயமாக வீழ்ச்சியடைவீர்கள். வாழ்க்கையில் எல்லாவற்றுக்கும் சமநிலை தேவை.
அனைத்து வகை வளர்ச்சியிலும் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும். விளையாட்டுத் திறன் உங்கள் ஆளுமை வளர்ச்சிக்கு உதவிபுரியும். அதேவேளையில் சூதாட்டம் தொடர்பாக நீங்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
பொதுத்தேர்வுகளுக்கு நீங்கள் முன்னுரிமை அளித்தால் அது போட்டித் தேர்வுகளுக்கு வலுவான அடித்தளத்தை ஏற்படுத்தும். உங்கள் பாடங்களை நீங்கள் முழுவதும் புரிந்து கொண்டால் போட்டித் தேர்வுகளுக்கு தனி முயற்சி தேவையில்லை.
தேர்வு முறைகளுக்கு மட்டும் தயாராவதை விட முழுமையான கற்றலுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். சகாக்களுக்கு கற்பித்தல் மூலமும், புத்திசாலித்தனமான வகுப்பு தோழர்களிடமிருந்து வழிகாட்டுதலைப் பெறுவதன் மூலமும் மாணவர்கள் ஒத்துழைப்புடன் கல்வி கற்க வேண்டும்.

தொழில்நுட்பத்தை பொழுதுபோக்குக்கான ஒரு கருவியாக கருதாமல், உண்மையான கற்றலுக்கான ஒரு கருவியாகப் பயன்படுத்த வேண்டும். செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட தொழில்நுட்பத்தை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
பிபிசி 2026 நிகழ்ச்சிக்கு 2025, டிசம்பர் 1 முதல் 2026 ஜனவரி 11 MyGovIndia இணையதளத்தில் 4.5 கோடிக்கும் அதிகமானோர் பதிவு செய்தனர். மேலும், ஜனவரி 12 முதல் ஜனவரி 23 வரை 2.26 கோடிக்கும் அதிகமானோர் பள்ளி அளவிலான பல்வேறு செயல்பாடுகளில் பங்கேற்றனர். இதன் மூலம் இந்த ஆண்டு மொத்த மாணவர் பங்கேற்பு 6.76 கோடியாக உயர்ந்தது.
