மும்பை: ஆடவருக்கான 10-வது ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியனான இந்தியா உள்ளிட்ட 20 அணிகள் கலந்து கொள்கின்றன. இவை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
‘ஏ’ பிரிவில் போட்டியை நடத்தும் இரு முறை சாம்பியனான இந்தியாவுடன் 2009-ம் ஆண்டு சாம்பியனான பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா, நெதர்லாந்து, நமீபியா அணிகள் இடம் பெற்றுள்ளன. ‘பி’ பிரிவில் 2021-ம் ஆண்டு சாம்பியனான ஆஸ்திரேலியா, 2014-ம் ஆண்டு சாம்பியனான இலங்கை ஆகிய அணிகளுடன் அயர்லாந்து, ஜிம்பாப்வே, ஓமன் அணிகள் உள்ளன.
‘சி’ பிரிவில் தலா இரு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள இங்கிலாந்து, மேற்கு இந்தியத் தீவுகள் அணியுடன் ஸ்காட்லாந்து, நேபாளம், இத்தாலி அணிகள் இடம் பெற்றுள்ளன. ‘டி’ பிரிவில் இதுவரை சாம்பியன் பட்டம் வெல்லாத நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், கனடா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகள் உள்ளன.

டி20 உலகக் கோப்பை தொடரின் ஆட்டங்கள் இந்தியாவில் உள்ள 5 நகரங்களிலும், இலங்கையில் உள்ள இரு நகரங்களிலும் நடைபெறுகின்றன. இந்தியாவில் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானம், கொல்கத்தா ஈடன் கார்டன், டெல்லி அருண் ஜேட்லி மைதானம், மும்பை வான்கடே மைதானம், சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானம் ஆகியவற்றில் போட்டிகள் நடத்தப்படுகிறது.
இலங்கையில் கொழும்பு நகரில் உள்ள ஆர்.பிரேமதாசா மைதானம், எஸ்எஸ்சி கிரிக்கெட் மைதானம் ஆகியவற்றிலும் கண்டியில் உள்ள பல்லேகலே மைதானத்திலும் போட்டிகள் நடைபெற உள்ளன. ஒரு மாத காலம் நடைபெறும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் மொத்தம் 55 ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
போட்டிகள் லீக், சூப்பர் 8 மற்றும் நாக் அவுட் சுற்றுகளாக நடைபெறுகின்றன. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் இடம் பெற்றுள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். இந்த வகையில் லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் 4 ஆட்டங்களில் விளையாடும். லீக் சுற்றின் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
இந்த வகையில் லீக் சுற்றில் இருந்து 8 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும். இந்த சுற்றில் 8 அணிகளும் 2 பிரிவுகளாக பிரிக்கப்படும். ஒரு பிரிவில் உள்ள அணி எதிர் பிரிவில் உள்ள 4 அணிகளுடன் பலப்பரீட்சை நடத்தும். இதில் புள்ளிகள் அடிப்படையில் இரு பிரிவிலும் தலா முதலிரண்டு இடங்களை பிடிக்கும் 2 அணிகள் இறுதி சுற்றுக்கு முன்னேறும்.
லீக் சுற்று இன்று தொடங்கி வரும் 20-ம் தேதி வரை நடைபெறுகிறது. லீக் சுற்றில் மொத்தம் 40 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதைத் தொடர்ந்து சூப்பர் 8 சுற்று 21-ம் தேதி தொடங்குகிறது. 12 ஆட்டங்களை கொண்ட இந்த சுற்று மார்ச் 1-ம் தேதி முடிவடைகிறது. அரை இறுதி ஆட்டங்கள் மார்ச் 4 மற்றும் 5-ம் தேதிகளில் நடைபெறுகின்றன. இறுதிப் போட்டி நடைபெறும் மைதானம் முடிவு செய்யப்படவில்லை.
இந்த போட்டி அகமதாபாத் அல்லது கொழும்பில் மார்ச் 8-ம் தேதி நடைபெறும். தொடக்க நாளான இன்று லீக் சுற்றில் 3 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. காலை 11 மணிக்கு கொழும்பில் உள்ள எஸ்எஸ்சி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் உள்ள பாகிஸ்தான் – நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.
பிற்பகல் 3 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ‘சி’ பிரிவில் உள்ள மேற்கு இந்தியத் தீவுகள், ஸ்காட்லாந்துடன் விளையாடுகிறது. இரவு 7 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி, அமெரிக்காவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
பிரம்மாண்ட தொடக்க விழா இந்தியா – அமெரிக்கா அணிகள் இடையிலான ஆட்டம் தொடங்குவதற்கு முன்னதாக வான்கடே மைதானத்தில் கண்கவர் தொடக்க விழா பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ளது. மாலை 6 மணிக்கு தொடங்கும் விழாவில் இசை மற்றும் பிரம்மாண்டமான நடன நிகழ்ச்சி நடைபெறுகிறது.
சித்தார் கலைஞர் ரிஷப் ஷர்மா, டிரம்ஸ் கலைஞர் சிவமணி ஆகியோரின் இசைக்கலவையுடன் நிகழ்ச்சி தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து ஜெட்பேக் கலைஞர் ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பையை அந்தரத்தில் பறந்தபடி மைதானத்துக்குள் கொண்டு வருவார்.

அப்போது ஐசிசி தலைவர் ஜெய் ஷா மற்றும் 2024-ம் ஆண்டு நடைபெற்ற டி 20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு பட்டம் வென்று கொடுத்த முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் டிராபியை வரவேற்று தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு நாட்டையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 20 குழந்தைகளுடன் இணைந்து, ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை 2026 போட்டியை முறைப்படி தொடங்கி வைப்பார்கள்.
இதன் பின்னர் பிரபல பாடகரான பாட்ஷாவின் இசை நிகழ்ச்சியும் நோரா ஃபதேஹியின் நடன நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. தொடக்க விழா நிகழ்ச்சிகள் டி 20 கிரிக்கெட்டின் வேகம் மற்றும் ஆற்றலைப் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இசை மற்றும் நடன நிகழ்ச்சியின் முடிவில் வாணவேடிக்கை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொடர் முழுவதும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
கூடுதல் நேரம்
டி20 உலகக் கோப்பை தொடரில் எந்த ஒரு ஆட்டமும் டையில் முடிவடைந்தால் வெற்றியை தீர்மானிக்க சூப்பர் ஓவர் நடத்தப்படும். சூப்பர் ஓவரிலும் ஆட்டம் டை ஆனால் முடிவு எட்டப்படும் வரை தொடர்ந்து சூப்பர் ஓவர் நடத்தப்படும். நாக்-அவுட் சுற்றில் அனைத்து போட்டிகளும் நிறைவடைவதை உறுதி செய்வதற்காக, கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
