உனை நீங்கியே உயிர் கரைகிறேனே – 13 – சுதா ரவி
விடியலின் நேரம் நல்ல உறக்கத்தில் இருந்த மித்ராவின் கனவில் மீன்களாலும் நண்டுகளாலும் கடிக்கப்பட்ட உத்ராவின் முகம் வந்து வந்து போனது. அந்த கொடிய நினைவில் உருண்டு பிரண்டு படுக்க அப்போது உத்ராவின் குரல் காதுகளில் வந்து மோதியது” மித்து நான் ரொம்ப கஷ்டப்படுறேன் மித்து………என்னை காப்பாத்த மாட்டியா மித்து” என்று சொல்ல ஆ…ஆ……ஆ……என்று இரு கைகளையும் காதுகளையும் அடைத்துக் கொண்டு சத்தம் போட்டு அழ ஆரம்பித்தாள்.
அவளின் சத்தத்தில் பக்கத்தில் படுத்திருந்த ராஜி வாரி சுருட்டிக் கொண்டு எழுந்தவர் மகளின் செயலை கண்டு அதிர்ந்து அவளை தன் பக்கம் இழுத்து தோளோடு சேர்த்து அனைத்துக் கொண்டார். “ வேண்டாம் மித்து அழாதே…என்னடா இது மறுபடியும் அவளை பத்தின நினைவா…..அவ தான் நம்மளை விட்டு போயிட்டாளே. இருக்கிற நீயும் அவ நினைப்பிலேயே இருந்தா என்ன செய்யுறது. வேண்டாம் மித்து அழாதே”என்று சொல்லி அவள் முதுகை தடவிக் கொடுத்தார்.
அவரின் ஆதரவான சொல்லில் தோளில் இருந்த முகத்தை நிமிர்த்தி வேகமாக தலையை ஆட்டி”இல்லம்மா அக்கா நம்மை விட்டு போகலம்மா.அவ இருக்காமா என்னை வந்து கூப்பிடுராம்மா”என்று கதறினாள்.
மகள் சொன்னதை கேட்ட ராஜிக்கு மனம் வெதும்பி தவித்தது” அவ இல்லேன்னு என்னால கூட நினைக்க முடியலம்மா.ஆனா நாலு வருஷம் முன்னே நம்ம கண் முன்னாடி தானே அவ உடம்பை கொண்டு வந்து போட்டாங்க.அதை மறக்க முடியுமா சொல்லு. எப்படி இருந்த முகம் மீனும், நண்டும் கடிச்சு சிதைஞ்சு போய் வந்தாளே. அதை பார்த்திட்டே இன்னும் உயிரோட இருக்கேனே மித்ரா” என்று கதறி அழ ஆரம்பித்தார்.
இவர்களின் பேச்சுக் குரல் கேட்டு அங்கு வந்த மணி தாயும் மகளும் போனவளை நினைத்து கதறி அழுவதை பார்த்து சுவற்றோரம் சாய்ந்து அமர்ந்து விட்டார். எத்தனை வருடங்கள் ஆனாலென்ன பெற்று ஆசை ஆசையாய் பெயர் சூட்டி நெஞ்சில் தாங்கி வளர்த்த மகளின் மரணம் மறக்க கூடியதா? உத்ராவிற்கு பிறகு நான்கு வருடங்கள் வாழ்ந்து விட்டாலும் ஒவ்வொரு நாளின் முடிவிலும் அவர்களின் மனம் மகள் தங்களை விட்டு பிரிந்த அன்று நிகழ்ந்த நிகழ்வுகளை எண்ணியபடியே கழிந்தது.
மணிக்கோ தன்னால் தான் மகள் போய் விட்டாளோ என்று குற்ற உணர்வில் செருமி செருமி அழ ஆரம்பித்தார். அதுவரை தங்களின் சோகத்தில் இருந்த தாயும் மகளும் அவர் அழுவதை பார்த்து பதறி அவர் அருகில் சென்று அமர்ந்து கொண்டனர். மனைவியை பார்த்ததும்.”நீ சொன்ன மாதிரி அன்னைக்கு அவளை அனுப்பாம இருந்திருந்தா நம்ம பொண்ணு நம்ம கிட்ட இருந்திருப்பாளே.என்னால தான் அவ போய்ட்டா” என்று தலையில் அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தார்.
அவர் அப்படி அழுவதை பார்த்ததும் பாய்ந்து சென்று அவர் கைகளை பிடித்துக் கொண்ட மித்ரா” வேணாம் பா.அழாதீங்க பா”என்று சொல்லி அவளும் அழுதாள்.
“உங்களால இல்லைங்க, அவளுக்கு விதி முடிஞ்சு போச்சு.அன்னைக்கு யார் தடுத்து இருந்தாலும் அது நடந்து இருக்கும்.நீங்க காரணம் இல்ல”என்று கண்ணீர் மல்க அவரை சமாதானப்படுத்தினார்.
ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லிக் கொண்டாலும் அனைவருக்கும் துயரம் இதயத்தை ஊசியாய் குத்த உறக்கத்தை மறந்து அமர்ந்திருந்தனர். உடலளவில் தனி தனியே இருந்தாலும் அனைவரின் சிந்தனையும் உத்ரா என்கிற ஒரு புள்ளியை நோக்கியே பயணப்பட்டுக் கொண்டிருந்தது.அதிலும் அவளின் மரணம் நடக்க இருந்த ஒரு வாரம் முன்பு நடந்தவைகளை எண்ணியபடியே இருந்தனர்.
உத்ரா படித்த கல்லூரியில் சுற்றுலாவிற்கு பிச்சாவரம் அழைத்து செல்ல ஏற்பாடு ஆனது. வெளியூர் என்றால் அம்மா கண்டிப்பாக அனுப்ப மாட்டார் ஆனால் இது உள்ளுரிலேயே இருப்பதால் எப்படியாவது அம்மாவிடம் சம்மதம் வாங்கி விட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தாள் .அதிலும் காலையில் போய் விட்டு மாலையே வீடு திரும்பி விடலாம் என்பதால் அவளுக்கு மிகவும் ஆசையாய் இருந்தது. அவள் தோழிகளும் எப்படியாவது நீயும் வந்து விடு என்று தூண்டி விட்டார்கள். அதனால் வீட்டிற்கு வந்து அம்மாவிடம் முதலில் கேட்காமல் மணிகண்டனிடம் மெதுவாக சுற்றுலாவை பற்றி கூறினாள்.அதற்கு மணிகண்டனோ” அம்மா விடமாட்டா அம்மு. அவ ரொம்ப பயப்படுவா போக வேண்டாமே விட்டுடேன்” என்றார்.
“ப்ளீஸ் பா…..இது தான் முதலும் கடைசி முறையும் பா.இதுக்கப்புறம் எங்கே கூட்டிட்டு போனாலும் நான் கேட்க மாட்டேன் பா.நீங்க எப்படியாவது அம்மா கிட்ட பேசி அனுமதி வாங்கி தாங்கப்பா”என்று அப்பாவிடம் செல்லமாக கெஞ்சினாள்.
மகளின் கெஞ்சலை எந்த தந்தையால் மறுக்க முடியும்.மணியும் மகளிடம் ஒத்துக் கொண்டாலும் மனைவியிடம் பேச சற்று யோசனை செய்தார். பெண்களின் விஷயத்தில் ராஜி மிகவும் கண்டிப்பானவர். அதனால் எப்படி பேசுவது என்கிற நினைவிலேயே ஒரு நாள் முழுவதும் விட்டு விட்டார். ஆனால் உத்ராவோ அவரைப் படுத்தி எடுக்க அடுத்த நாள் தைரியமாக மனைவியிடம் பிச்சாவரம் பயணத்திற்கு அனுமதி கொடுக்கலாமா என்று கேட்டு விட்டார்.
அதை கேட்டு” எங்கே உங்க அருமை மக என் கிட்ட கேட்காம உங்க மூலியமா தூது விட்டு இருக்காளா?”என்றார் முறைப்புடன்.
“இல்ல ராஜி.அவ சின்ன பொண்ணு தானே அவளுக்கும் ஆசையா இருக்கும் இல்ல”என்று மகளுக்கு ஆதரவாக பேசினார் மணி.
“இங்கே பாருங்க பொண்ணுங்க விஷயத்தில் என் கிட்ட விட்டுடுங்க……..அவளுக்கு எப்படி சொல்லி புரிய வைக்கனுமோ நான் அப்படி சொல்லிக்கிறேன்.நீங்க தலையிடாதீன் இந்த விஷயத்தில்”என்று கறாராக கூறினார் ராஜி.
அவர் மேற்கொண்டு பேசும் முன் விஷயம் அத்துடன் முடிந்தது என்கிற பாணியில் ராஜி எழுந்து சென்று விட, கதவோரம் மறைந்து நின்ற மகளை பார்த்து இல்லை என்று தலை ஆட்டினார். முகத்தில் தெரிந்த ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு லேசாக புன்னகை சிந்தி விட்டு அங்கிருந்து ஓடி விட்டாள். மகளின் முகத்தில் சிறிது நேரத்திற்குள் வந்து போன சோர்வை கண்ட மணியின் மனதில் எப்படியாவது மனைவியிடம் பேசி சம்மதத்தை வாங்கி கொடுத்து விட வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. அம்முவிடம் சொல்லாமல் செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டே தன் வேலைகளை தொடர்ந்தார்.
அடுத்த வந்த ரெண்டு நாட்களும் உத்ரா தன் மனதில் வந்து அமர்ந்து கொண்டிருந்த சோர்வை வெளிக்காட்டாமல் நடமாடிக் கொண்டிருந்தாள். ஆனாலும் எப்பொழுதும் அவளிடம் குடிகொண்டிருக்கும் உற்சாகம் குறைந்தார் போல் தோன்றியது. மித்ராவும் வீட்டில் நடந்து கொண்டிருக்கும் பிரச்சனையினை புரிந்து கொண்டு பேசாமல் ஒதுங்கி இருந்தாள். ராஜியோ உத்ராவிடம் தனக்கு சம்மதம் இல்லை என்பதற்கான காரணத்தை புரிய வைத்து விடும் முயற்சியில் இருந்தார். அவளும் அவர் சொன்னதை கேட்டுக் கொண்டாலும் முழுதாக ஏற்றுக் கொண்ட மாதிரி தெரியவில்லை. சரி அவள் வயதுக்கு இப்படி தான் இருப்பார்கள் என்று தன்னை தானே சமாதானப்படுத்திக் கொண்டார் ராஜி.
அம்மா அனுமதி கொடுக்காதது மனதை பாதித்தாலும் அதை தன்னவனிடம் பகிர்ந்து கொண்டால் பாரம் குறையுமே என்று எண்ணி அவனை மனம் தேட ஆரம்பித்தது. அதனால் தினமும் ஒரு நாலு தடவையாவது மாடிக்கு சென்று பார்த்து அவன் வராத ஏமாற்றதுடன் திரும்பினாள். அவனுடன் பழக ஆரம்பித்த இந்த ஆறு மாதங்களில் அவர்கள் சந்திப்பது அவளின் வீட்டு மாடியில் தான்.அவள் அடிக்கடி மாடியிலேயே குடியிருப்பதை கண்ட ராஜி சந்தகத்துடன் பார்க்க ஆரம்பித்தார்.மனதிற்குள் ‘என்ன இவ அடிக்கடி மாடிக்கு போறா? ஒரு வேளை அக்கம்பக்கத்து வீடுகளில் யாராவது பசங்க கூட பேசுறாளோ?’என்று அவளை நோட்டமிட்டார்.அவளின் அதிர்ஷ்டமா, அவரின் துரதிர்ஷ்டமோ அவர் அவளை கண்காணிக்க சென்ற நாட்கள் எல்லாம் கார்த்தி அங்கு வரவில்லை.அதன் பின் அவள் மாடிக்கு செல்வதை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
இந்த ஒரு வாரமாக அவனை சந்திக்க முடியவில்லை. அதுவே அவள் மனதை சோர்வடைய செய்தது. ஒவ்வொரு நாளும் நடக்கும் நிகழ்வுகளை அவனுடன் பகிர்ந்து கொண்டால் அடுத்த நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருப்பது போன்று உணர்ந்தாள். இப்பொழுது அம்மாவின் கண்டிப்பும் அவன் வராததும் சேர்ந்து அவளின் சுறுசுறுப்பை குறைத்தது.
இப்படியே இரண்டு நாட்கள் ஓட மூன்றாவது நாள் இரவு மனைவியிடம் பேசிக் கொண்டிருந்த மணி” ரெண்டு நாளா அம்முவோட முகத்தை பார்த்தியா ராஜி”என்று மெல்ல பேச்சுக் கொடுத்தார்.
அவர் எதை பற்றி பேச வருகிறார் என்று புரிந்து கொண்டு படுக்கையை உதறி போட்டுக் கொண்டே” ஏன் புதுசா அவ முகத்துல என்ன இருக்கு…எப்பவும் போல தானே இருக்கா?”என்றார் ஒன்று அறியாத பாவனையில் ராஜி.
அவளின் பேச்சில் எரிச்சலான மணி” வேணும்னே பேசாதே ராஜி.அவ எப்பவும் இருக்கிற மாதிரியா இருக்கா.பாரு மான் மாதிரி துள்ளி குதிச்சுகிட்டு இருக்கிற பொண்ணு இப்போ அது பாட்டுக்கு நடக்கவே முடியாத மாதிரி நடந்து கிட்டு இருக்கு. இது கூட உனக்கு புரியாமையா இருக்கும். ஆனா புரியாத மாதிரி நடிக்கிற”என்றார்.
(தொடரும்)
அத்தியாயம் – 1 | அத்தியாயம் – 2 | அத்தியாயம் – 3 | அத்தியாயம் – 4 | அத்தியாயம் – 5 | அத்தியாயம் – 6 | அத்தியாயம் – 7 | அத்தியாயம் – 8 | அத்தியாயம் – 9 | அத்தியாயம் – 10 |அத்தியாயம் – 11 |அத்தியாயம் – 12 | அத்தியாயம் – 13 |