நீயெனதின்னுயிர் – 14 | ஷெண்பா

 நீயெனதின்னுயிர் – 14 | ஷெண்பா

‘வீட்டிலிருந்து கிளம்பும் போதே, சீக்கிரம் கிளம்பிடணும்னு சொல்லிட்டே இருந்தா. பேசிட்டு இருந்ததில் நேரம் போனதே தெரியலை… ரொம்ப நேரம் ஆகிடுச்சி; எங்கே முகத்தைத் தூக்கி வச்சிட்டு உட்கார்ந்திருக்காளோ?’ என்று மனத்திற்குள் புலம்பிக் கொண்டே வைஷாலியை தேடிக்கொண்டு வந்த தேவிகா, திகைத்து நின்றார்.

‘யார் இவன்? ரொம்ப நாளா பழகினது போல அவனோட பேசிட்டு இருக்கா!’ என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே, அவன் சொன்ன ஜோக்கிற்கு அடக்கமாட்டாமல் சிரித்த மகளை, ஆழ்ந்து பார்த்தார்.

“தேவிகா!” என்றபடி வந்த அவரது தோழி ஒருவர், வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த தேவிகாவின் பார்வையைத் தொடர்ந்து தன் பார்வையைச் செலுத்தினார். “ஹேய்! அது விக்ரம் தானே… உன் பொண்ணுக்கு, விக்ரமைத் தெரியுமா?” என்று ஆச்சரியத்துடன் கேட்டார் அவர்.

“ம்” என்று கேள்வியாகப் பார்த்த தேவிகாவின் சொல்லை, ‘ஆம்’ என்ற அர்த்தத்தில் எடுத்துக் கொண்டவர், விக்ரமின் அருமை பெருமைகளைப் பற்றிச் சொல்ல, அனைத்தையும் ஒருவிதப் பிரமிப்புடன் கேட்டுக்கொண்டார்.

வியப்பு மாறாமல், வைஷாலியின் பக்கமாகத் திரும்ப, அவள் தன் தந்தைக்கு விக்ரமை அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தாள்.

“சரி, நாங்க கிளம்பறோம். மம்தாவிடம் நாளைக்குப் ஃபோன் செய்றேன்னு சொல்லிடு பை” என்றவர் கணவரை நோக்கி நடந்தார் தேவிகா.

“என் மகளுக்கு ரொம்பப் பெரிய உதவியைச் செய்திருக்கீங்க மிஸ்டர்.விக்ரம். நன்றின்னு ஒரு வார்த்தையில் முடிச்சிட முடியாது” – நெகிழ்ச்சியுடன் சொன்னார் சங்கரன்.

“அது என்னோட கடமை அங்கிள்!” என்று இயல்பாகச் சொன்னவனை ஆச்சரியத்துடன் பார்த்தவள், தன் அன்னை நெருங்கி வருவதைக் கவனித்துவிட்டாள்.

“அப்பா! அம்மா வராங்க…” என்று எச்சரித்தவள், “விக்ரம் சார்! அம்மாவுக்கு இது எதுவும் தெரியாது. மாட்டி விட்டுடாதீங்க!” என்று பல்லிடுக்கில் பேசினாள். “இதோ, அம்மாவே வந்துட்டாங்க” என்றவள், அன்னையின் தோளைப் பற்றிக் கொண்டு, விக்ரமை அறிமுகப்படுத்தினாள்.

“வணக்கம் ஆன்ட்டி!” என்றவன், தேவிகாவின் காலைத் தொட்டு வணங்க, அதைச் சற்றும் எதிர் பார்க்காதவர், “நல்லாயிருங்க தம்பி” என்றவரது முகத்தில் புன்னகை விரிந்தது.

விக்ரமின் அந்த ஒரு செயலே, தேவிகாவின் மதிப்பில் அவனை உயர்த்தி வைக்கப் போதுமானதாக இருந்தது. கலகலப்பாகப் பழகும் அவனது சுபாவமும், நறுக்குத் தெறித்தாற் போன்ற பேச்சும், அவனது குணத்தை அவருக்குப் பறைசாற்றியது.

கிளம்பும் போது விக்ரமைக் கட்டாயம் வீட்டிற்கு வரவேண்டும் என்றதும், சற்றும் அலட்டிக் கொள்ளாமல், ‘நாளை மாலை வருகிறேன்’ என்று சொல்லிவிட்டான்.

“நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவேயில்லை. அடக்கம், பொறுமை, கொஞ்சம் கூட பந்தாவே இல்லாமல் என் காலைத் தொட்டுக் கும்பிட்டானே! என்ன அருமையா வளர்த்திருக்காங்க…” என்று ஸ்லாகித்துக் கொள்ள, தந்தையும், மகளும் ஒருவரையொருவர் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டனர்.

“அம்மா! கார்ல ஏறினதுல இருந்து இது எட்டாவது முறை…” என்று அவர் விக்ரம் புகழ் பாடுவதைக் குறிப்பிட்டுச் சிரித்தாள்.

“அதனால என்னடீ! விக்ரம் அதுக்குத் தகுதியானவன் தான். இதே அந்த அக்ஷய்… ஒரு வருஷமா எனக்கு அவனைத் தெரியும். இன்னைக்கு வரைக்கும் ‘ஹாய் ஆண்ட்டி’ன்னு வெள்ளைக்காரன் மாதிரி கையசைச்சிட்டு போவான்” என்ற அன்னையை வியப்புடன் பார்த்தாள் வைஷாலி.

“எப்படிம்மா இதெல்லாம்” என்றவள் கலகலவென நகைத்தாள். “இந்த பங்ஷனுக்கு வர்ற வரைக்கும், அவனை ஆஹா ஓஹோனு புகழ்ந்தீங்க… இப்போ இப்படிச் சொல்லிட்டீங்களே…?” என்று கிண்டலாகச் சொன்னாள்.

தன்னைக் குறை சொல்வது போன்ற பேச்சை சற்றும் விரும்பாத தேவிகா, “அது இருக்கட்டும்… உன் அப்பா எதுக்கு விக்ரமுக்கு அப்படி நன்றி சொன்னார்?” என்று கண்கள் இடுங்க கேட்டார்.

‘அச்சச்சோ மாட்டினோம்’ என்று நினைத்துக்கொண்ட வைஷாலி, “எப்போம்மா!” என்று ஒன்றும் தெரியாதது போலக் கேட்டாள்.

“ம்…! நீ அம்மாவுக்கு எதுவும் தெரியாது மாட்டிவிட்டுடாதீங்கன்னு விக்ரம்கிட்ட, பல்லிடுக்குல பேசினியே… அப்போ” என்றார் கேலியாக.

“அது வந்து தேவி…” என்று ஆரம்பித்த கணவரை, “நீங்க உங்க பொண்ணுக்கு சப்போர்ட் பண்ணாம காரை ஓட்டுங்க…” என்று அவரை அமைதிப்படுத்திவிட்டு மகள் பக்கமாக திரும்பினார்.

“உன்னைத் தானே கேக்கறேன் சொல்லு…” என்றார் அதட்டலாக.

‘தன் வாயைக் கொடுத்து இப்படி மாட்டிக்கு வோமா…! இனி தப்பிக்கவே முடியாது’ என்று நினைத்துக்கொண்டவள், மெல்ல அனைத்தையும் சொல்லி முடித்தாள்.

தேவிகாவின் கண்களில் கனல் பறந்தது. “உனக்கு இருக்கற நெஞ்சு தைரியம் இருக்கே… காலேஜுக்குப் போனோமா… படிச்சோமான்னு இல்லாம ரௌடி மாதிரி ஊர் வம்பை இழுத்துட்டு வர்றது. வெளியே அனுப்பலைன்னு முழம் நீளத்துக்கு மூஞ்சியைத் தூக்கி வச்சிட்டு உட்கார்ந்திருக்க தெரியுது இல்ல. இப்போ புரியுதா உன்னை எதுக்கு வெளியே அனுப்பலைன்னு. வந்த அன்னைக்கே கேட்டேன் நெத்தியிலே என்ன காயம்னு கதவுல இடிச்சிகிட்டேன்னு பொய் வேற…” என்று சரமாரியாக வசை மழை பொழிய, வைஷாலி ஐயோ பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

“தேவி! குழந்தையை ஏன் இப்படி படுத்தற… நம்ம வீட்டில் இருக்கும் வரைக்கும் தானே இப்படிச் சந்தோஷமா இருக்க முடியும்… கல்யாணமானா பொறுப்பு வந்திடும்மா” என்று மகளுக்குப் பரிந்துகொண்டு வந்தார்.

“நாங்கள்ளாம் இல்லையா? இப்படியா வளர்ந்தோம்! எல்லாம் அவளைச் சொல்லித் தப்பில்லை. உங்களைச் சொல்லணும்…” என்று ஒரே வரியில் கணவரின் வாயை அடைத்தார்.

“ஃபோன் பண்ணட்டும் உன் ஃப்ரெண்ட்ஸ்… இருக்கு ஒவ்வொருத்திக்கும். ஒருத்திகூட மூச்சே விடலை என்கிட்ட. இந்த ஜனனி பொண்ணு… அவளும் சொல்லல. அம்மா… அம்மான்னு குழைவா இல்ல இருக்கு அவளுக்கு…” என்று பாரபட்சம் இல்லாமல் அனைவருக்கும் தனது வசவை சரிசமமாகப் பகிர்ந்து வழங்கினார்.

‘வைஷாலிக்கு போதும்டா சாமி’ என்று இருந்தது. தனக்காக திட்டுவாங்கும் தோழிகள் மீது பரிதாபம் பொங்கியது. அதே நேரம் தனக்காக மாய்ந்து போகும் அன்னையின் பாசமும் அவளுக்குப் புரிந்தே இருந்தது. இந்தத் திட்டுக்காகவே இன்னும் குறும்பு செய்ய வேண்டும் என்றும் தோன்றியது.

(தொடரும்)

அத்தியாயம் – 1 | அத்தியாயம் – 2 | அத்தியாயம் – 3 | அத்தியாயம் – 4 | அத்தியாயம் – 5 | அத்தியாயம் – 6 | அத்தியாயம் – 7 | அத்தியாயம் – 8 | அத்தியாயம் – 9 | அத்தியாயம் – 10 | அத்தியாயம் – 11 |அத்தியாயம் – 12 |அத்தியாயம் – 13 |அத்தியாயம் – 14 |

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...