தர்க்கசாஸ்திரம் ஜோதிடர் ஏற்படுத்திய திகில்! – 6 | ஆரூர் தமிழ்நாடன்
அத்தியாயம் – 6
பயணம்!
உணவு மேஜையில் சிற்றுண்டி வகையறாக்கள் ஆவி பறக்கக் காத்திருக்க… ’டிபன் ஆறிடும் வாங்க’ என கணவரையும் மகளையும் மாறி மாறி அழைத்துக்கொண்டிருந்தார் காவேரி.
மேஜை முன் அமர்ந்த அகிலாவிடம் ‘உங்க அப்பாவையும் கூப்பிடு’ என்றார்.
‘அம்மா அப்பாதான் உன் சாப்பாட்டைக் கண்டாலே பயப்படுறாங்களே. விட்ரும்மா’ என்றாள் அகிலா குறும்பாய்.
‘அவ்வளவு கொழுப்பா உனக்கு. பிள்ளைக்குப் பிடிக்குமேன்னு பால் கொழுக்கட்டை
வேற பண்ணி வச்சிருக்கேன். அது கிடையாது உனக்கு’ என்றார் காவேரி.
’சாரிம்மா. ப்ளீஸ். அதை முதல்ல எடு’ என்றாள் அகிலா. காவேரி கொஞ்சம் வீம்பு காட்டிவிட்டு அந்தக் கிண்ணத்தை கொண்டுவந்து வைக்க…
’ஆஹா கமகமக்குதும்மா’ என்று சிலாகித்தாள் அகிலா.
அப்போது சாப்பிட வந்து உட்கார்ந்த ஞானவேல் ‘காவேரி, இன்னைக்கு என்ன ஸ்பெஷலா பால் கொழுக்கட்டை பண்ணியிருக்கே’ என்று கேட்க..
‘உங்க மக ஊருக்குப் போறாள்ல அவளுக்காகத்தான் பண்ணினேன்’ என்றார் காவேரி.
அகிலாவோ, தனக்குப் பிடித்த பால் கொழுக்கட்டையை சுவைத்து சுவைத்து சாப்பிட்டுக்கொண்டிருந்தாள்.
‘ஏம்மா எத்தனை நாள் அந்த ஆசிரமத்தில் தங்கப்போறே? அங்க தங்குவதற்கான வசதிகள் எல்லாம் இருக்காமா?” என்று பரிவாகக் கேட்டார் ஞானவேல்.
‘இப்ப கிளப்பினா கோவைக்கு நைட் போயிடுவேம்ப்பா. அந்த அறிவானந்தரே ஆசிரமத்திலிருந்து காரை அனுப்பி வச்சிருக்கார். ஆசிரமத்தில் ஆண்களும் பெண்களும் தனித் தனியா தங்க வசதிகள் இருக்காம். இருந்தாலும் கோவையில் ஒரு நல்ல ஓட்டல்ல எனக்காக ரூம் புக் பண்ணிக்கொடுத்திருக்காங்க. அங்க தங்கிட்டு நாளை காலைதான் ஆசிரமத்துக்குப் போகனும். கோவையில் இருந்து 40 கிலோ மீட்டரில் அந்த ஆசிரமம் இருக்காம். எனக்கு அதிகபட்சம் மூன்று நாள் புராஜக்ட். போன மூன்று மணி நேரத்திலேயே அது முடிஞ்சாலும் ஆச்சரியப்படுறதுக்கில்லை.
ஆசிரமம் குறித்தும் நான் அங்கு உணர்ந்தவை குறித்தும் ஒரு மினி கட்டுரைத் தொடரை எழுத, நக்கீரன்ல ஒத்துக்கிட்டாங்க. மூன்று நாளும் நான் கோவையில்தான் தங்கப்போறேன். அம்மாவுக்கு இந்த வீட்டை விட்டுட்டு நகர்றதுன்னா பிடிக்காது உங்களுக்கு அம்மாவை விட்டுட்டு நகர்றதுன்னா பிடிக்காது. அதான் நான் மட்டும் தனியாவே போறேன்’ என்றாள் அகிலா.
‘ஏம்மா அங்க உனக்கு வேண்டிய வசதிகள் இல்லைன்னா, உனக்குப்பிடிச்ச இடத்தில் தங்கிக்க.. ஏன்னா நீ எதிர்த்துக் கேள்வி கேட்டதால் உன்னை சரியா கவனிக்காம இருந்துடப்போறாங்க’ என்றார் ஞானவேல். குரலில் லேசான கவலை தெரிந்தது.
’இல்லைப்பா, கூட்டத்தில் நான் எதிர்க்கேள்வி எழுப்பியதை நினைவு படுத்தி, நான் சந்திக்க வரலாமான்னு கேட்டு கடிதம் எழுதியிருந்தேன். உடனே அறிவானந்தாவின் செரட்டரிகள்ல ஒருத்தர், என் செல்போன்ல வந்து, எப்ப வர எனக்கு வசதிப்படும் என்பதையும் கேட்டுட்டு, என்னென்ன உணவு சாப்பிடுவேன்கிற மெனுவையும் குறிச்சிக்கிட்டு, நான் தங்க வசதியான ஓட்டல் எதுன்னும் என்னிடமே கேட்டு, நான் சொன்ன ஓட்டல்லயே எனக்கு ரூமையும் புக் பண்ணிட்டு, எனக்காக அங்கிருந்தே ஒரு காரையும் அனுபியிருக்காங்கன்னா, அவங்கமேல் சந்தேகப்பட வேண்டியதில்லைன்னு நினைக்கிறேன்ப்பா’ என்றாள் அகிலா.
‘நீ சொன்னா அது சரியாத்தான் இருக்கும்’ என்றார் ஞானவேல்.
‘எதுக்கு தேவையில்லாத பயணமும் ரிஸ்க்கும்னு மகளை அடக்கிவைக்கத் தெரியாத அப்பா நீங்க’என்றார் காவேரி. அவரது குரல், அது குறையா? பெருமிதமா? என கண்டுபிடிக்க முடியாத தொனியில் இருந்தது.
ஞானவேலோ ‘வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டிவைக்கும் விந்தை மனிதராக நான் தலைகுனிய விரும்பவில்லை’ என்று சிரிக்க…
அகிலாவும் காவேரியும் கூட வாய்விட்டு சிரித்தனர்.
அன்பு மகள் சப்புக்கொட்டிப் சாப்பிடுவதை காவேரி ரசிக்க, மகளை காவேரி ரசிப்பதை ஓரக்கண்ணால் ரசித்தார் ஞானவேல்.
கிளம்புவதற்கு முன் தமிழ்செல்வனைத் தொடர்புகொண்டாள் அகிலா. ‘நான் வரலைன்னு வருத்தப்படாதே. இங்கு எனக்குக் கொஞ்சம் வேலையிருக்கு. அங்க என்ன வேண்டுமானாலும். அல்லது என்னப் பிரச்சினைன்னாலும் உடனே என்னைத் தொடர்புகொள். கோவையில் எங்க சித்திப்பொண்ணு தென்றல் கூட இருக்கிறாள். இல்லை உடனே வான்னு நீ கூப்பிடு. ஓடிவந்துடறேன்’ என்றான் செல்வா.
அம்மாவையும் அப்பாவையும் சேர்த்தணைத்து முத்தமிட்டுவிட்டுக் கிளம்பினாள் அகிலா.
உடைகள், கேமரா, புத்தகங்கள், டைரி அடங்கிய கனத்த பையை எடுத்துச்சென்று காரில் வைத்தார் அப்பா ஞானவேல்.
கார், குபுக்கென்று கிளம்ப, அம்மா, அப்பாவைப் பிரியமாட்டாமல் தவித்த அகிலாவின் விழிகளில் நீர் ததும்பியது.
கைகாட்டிய அம்மா காவேரியின் கண்களில் நீர்மாலைகள் தோன்ற, அவரை தன் தோளில் சாய்த்துக்கொண்டு மகளுக்கு கையசைத்தார் ஞானவேல். காவேரியும் கையசைத்தார்.
கோவை ஓட்டலில் இரவு போய்த் தங்கும்வரை அகிலாவின் மனம் ஏனோ நிலைகொள்ளாமல் தவித்தது.
(தொடரும்)
அத்தியாயம் – 1 | அத்தியாயம் – 2 | அத்தியாயம் – 3 | அத்தியாயம் – 4 | அத்தியாயம் – 5 | அத்தியாயம் – 6 | அத்தியாயம் – 7 | அத்தியாயம் – 8 | அத்தியாயம் – 9 | அத்தியாயம் – 10 |