விலகாத வெள்ளித் திரை – 6 | லதா சரவணன்

 விலகாத வெள்ளித் திரை – 6 | லதா சரவணன்

இத்தனை நாள் திரைப்படங்களில் பார்த்த அத்தனை பிம்பங்களும் கண்முன்னே நேரடியாக வெய்யில் நகரம் கதாநாயகிகளின் குளிர் விழியில் குளிர்ந்தது திரைக்கும் அவர்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தது கள் குடித்த நரிகளை போல் மைனர்கள் அனைவரும் மச்சி வீட்டையே சுற்றிக்கொண்டு இருக்க முதலியாருக்குத்தான சங்கடமாய் போய்விட்டது

“இதென்னடா வம்பாப்போச்சு எப்பப்பாரு வாசப்படியிலே காவக் காரனுங்க மாதிரி நிக்கறாங்க வந்திருக்கிற விருந்தாளிங்க என்ன நினைப்பாங்க ?” பக்கத்தில் இருந்த கண்ணனிடம் அலுத்துக் கொண்டார். “கண்ணா நீ போய் நம்ம தோட்டத்து வீட்டை ஒழிச்சி வை அப்பறம் அவங்களுக்கு சமைக்க உங்கம்மாவை கூட்டிட்டு வந்திடுப்பா, இங்க பக்கத்திலே இருக்கிற கடைக்காட்டுலே வாங்கி சாப்பிடக் கொடுக்க முடியுமா ? அதனாலதான் சொல்றேன் நம்ம வீட்டுலே பொம்பளைங்களே இல்லையே நானே உன் அம்மா கையால தானே சாப்பிடறேன்.!”

“அய்யா அதுக்கெல்லாம் நான் ஏற்பாடு பண்ணிட்டேன் நீங்க சொல்லணுமா…..!”

சொன்னாற்போலவே அத்தனை கலைஞர்களும் வந்துவிட அவர்களைப் பார்ப்பதற்காகவே காத்திருந்தனர் மக்கள் அவர்களைத்தான் சத்தம் போட்டு கொண்டு இருந்தார் முதலியார். “விடுங்கய்யா காத்தால படம் வெளிய வருதுன்னாலே நைட்டே கட்டு சோறு கட்டிட்டு போய் பாக்கிறவங்க நம்ம சனங்க அவங்களை யெல்லாம் நேரில பார்த்தா இனிப்பை மொய்கிறாப்பிலதான் மொய்ப்பாங்க விடுங்க?!”

“அப்படியில்லடா நம்மளை நம்பி பொம்மனாட்டிங்கல்ல எல்லாம் வந்து இருக்காங்க, பாதுகாப்பு கொடுக்கணுமே?!”

“அதெல்லாம் நான் பார்த்துக்கறேன் அய்யா நீங்க கவலைப்படாம நாளைக்கு விழாவில் சம்ன்னு வந்து தலைமை தாங்குவதற்கு தயாரா இருங்க மத்ததை நான் பார்த்துக்கறேன்.” கண்ணனின் தெம்பில் விழாவிற்கான ஏற்பாடுகளைக் கவனிக்கத் தொடங்கினார்.

பேச்சு பேச்சாக இருந்தாலும், வேலைகளின் ஊடாகவே தடாகத்தில் துள்ளும் மீன்களைப் போல அவளின் நீள்விழிகள் அவனை இம்சித்தது. சென்னையில் அவளை சந்தித்தை அசை போட்டுப் பார்த்தான்.

சென்னைப் பட்டணம் படு சுறுசுறுப்பாய் இயங்கிக் கொண்டு இருந்தது. கண்ணனின் கையில் இருந்த முகவரியை காட்டி பொட்டிக்கடை ஒன்றில் ஒரு பீடா மென்று கொண்டே வழியைத் தெரிந்து கொண்டான்.

“இன்னும் வளர்ச்சியடையாத பகுதி தம்பி பிராமினாளுங்கதான் அதிகமாக கிடப்பாங்க பாத்து போங்க மடி ஆச்சாரான்னு வாசப்படியிலே கூட நிக்க விடமாட்டாங்க என்று தலையில் அடித்துக் கொண்டார் பொட்டிக்கடை ஆசாமி.!” மயிலை அத்தனை வளர்ந்திருக்கவில்லை பிராமிணர்கள் அல்லாதவர்கள் உள்ளே நுழைய அனுமதியில்லை என்று போர்ட்டு தொங்கியது சில வீடுகளில் !

கண்ணன் தேடி வந்த வீடு செடி கொடிகளோடு தனித்து நின்றது “ராமதுரையா அந்த சினிமாகாரன் வீடுதானே அதோ பீச்சாங்கைப் பக்கம் தாண்டி இரண்டு தெரு போவணும் உட்காரு வாத்தியாரே நான் இழுத்துட்டுப் போறேன்” ரிக்ஷாகாரர் ஒருத்தர் சிநேகபாவம் காட்டிட கண்ணனுக்கும் கால் வலிக்கிற மாதிரியிருக்க சில்லரையிருக்கும் தைரியத்தில் ஏறி அமர்ந்து கொண்டான்.

கதவின் மேல் கைவைத்தவுடனேயே திறந்து கொண்டது.

“அம்மா !”என்று குரல் எழுப்பினான். வெளியே ஆடி அசைந்து வந்த பெண்மணிக்கு கிட்டதட்ட 50வயதைக் கடந்திருக்கும் “தம்பியாரு ?” கண்களை சுருக்கியபடி கேட்டாள்

“ராமதுரையைப் பார்க்கணும்….?!!”

சிறு முகச் சுருக்கலுக்கப் பிறகு, “வாங்க வாங்க அண்ணன் சொல்லிட்டுப் போச்சு இங்கன சோபாவுல உட்காருங்க.!” நுனி இருக்கையில் அமர்ந்த கண்ணன் சற்று முன்பு வரவேற்று அமரவைத்த அந்தம்மாள் எட்டு கோணலுக்கு நெளிந்து குழைந்து “சித்த இருங்கோ தம்பி” என்று சொல்லி பக்கத்து அறைக்குள் புகுந்து கொண்டாள். கொண்டு வந்த பணம் சரியாக இருக்கிறதா என்று ஒருமுறை சரிபார்த்துக் கொண்டான். வந்த வேலை முடிந்ததும் சென்னையில் புதியதாய் திறந்திருக்கும் அந்த சினிமா கொட்டகைக்கு போய் படம் பார்த்திடணும் கண்ணனின் நினைவுகள் சினிமாவைப் பற்றி சுற்றிச்சுற்றி வந்தது.

“இந்தா முதல்ல இந்த காப்பிதண்ணியே கொண்டு போய் அந்தத் தம்பிகிட்டே கொடு அதுதான் புது புரோடியூசரா இருக்குன்னு நினைக்கிறேன் காத்தாலே ஊருக்குப் பொண்டாட்டிய வழியனுப்ப போன ராமதுரை இப்படி ஒருத்தர் வருவாங்கன்னு சொல்லியனுப்பி இருக்கான். மசமசன்னு நிக்காம சீக்கிரம் தயாராகு!” அம்மாவின் துடிப்பில் அந்த 16வயது பருவமங்கை வேணிக்கு வேடிக்கையாகக் கூட இருந்தது. அம்மா இப்படி ஏன் அல்லாடுகிறாள். கெட்டழிந்த பிறகும் இன்னும் இந்த சினிமா ஆசை ஏன் அவளைவிட்டுப் போக மறுக்கிறது. யோசித்துக் கொண்டே இருக்கும் போது கையில் காப்பித் தம்ளரை திணித்துவிட்டு மாராப்பை தளர்த்தினாள்.

“என்னம்மா பண்றே ?”

“ஏண்டி இப்போ எதிலே பார்த்தாலும் கவர்ச்சியைத்தானே எதிர்பார்க்கிறாங்க. வந்திருக்கிறவனுக்கு மட்டும் உன்னைப் பிடிச்சிதுன்னு வைச்சிக்கோ நீதாண்டி நாளைக்கு பெரிய ஸ்டார் அந்த வசந்தகுமாரியெல்லாம் உம் முன்னாடி நிக்க கூட முடியாது. என்ன சொல்லியும் அம்மாவிடம் இருந்து தப்பிக்க முடியாது!” என்று நினைத்தபடியே காப்பித் தம்ளருடன் வராண்டாவிற்கு வர கூடவே வேணியின் அம்மாவும்,

“காப்பி எடுத்துக்கோங்க!” என்று இரண்டு முறை சொன்ன பிறகுதான் கண்ணன் சுயநிலையை அடைந்தான் அவன் கண்களில் இத்தனை அழகான பெண்ணா என்று இருந்தது, கண்கள் முகம் உதடு கூந்தலின் நீளம் உடையின் நெகிழ்ச்சியில் கூட ஒரு நேர்த்தி யாரிவள் முதன் முறையில் பார்க்கும் போதே இப்படி ஊடுருவுகிறாளே என்று !

பகுதி – 1 | பகுதி – 2 பகுதி – 3 | பகுதி – 4 | பகுதி – 5 | பகுதி – 6 | பகுதி – 7 | பகுதி – 8 | பகுதி – 9 | பகுதி – 10 |

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...