கேப்ஸ்யூல் நாவல் – கொலையுதிர் காலம் – சுஜாதா | பாலகணேஷ்
எல்லா எழுத்தாளர்களுக்கும் ‘மாஸ்டர் பீஸ்’ என்று ஒன்றிரண்டு கதைகள் இருக்கும். ஆல்ரவுண்டர் சுஜாதா விஷயத்தில் அவரது மாஸ்டர் பீஸ் எதுவென்று கேட்டால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதையைச் சொல்வார்கள். எல்லோரும் ரசிக்கும் கணேஷ்-வஸந்த் கேரக்டர்களை சுஜாதாவின் எழுத்தின் முழுவீச்சில் இந்த ‘கொலையதிர் காலம்’ நாவலில் ரசிக்கலாம். கணேஷின் புத்திசாலித் தனமும், வஸந்த்தின் குறும்புகளும் படிக்கும் அனைவரையும் கட்டிப் போட்டு விடும். விறுவிறுப்பான இந்த த்ரில்லர் இங்கே உங்களுக்காக:
கொலையுதிர் காலம் – சுஜாதா –
கணேஷும் வஸந்த்தும் தீபக் என்பவனி்ன் வேண்டுகோளின் படி லீனா என்கிற பெண்ணின் சொத்து விஷயத்தைக் கவனிப்பதற்காக அவள் சித்தப்பா குமார வியாசன் என்பவரை செங்கல்பட்டுக்கு அப்பாலுள்ள ஒரு கிராமத் திலுள்ள எஸ்டேட்டில் சந்திக்கிறார்கள். குமாரவியாசன், லீனாவின் மேல் ஆவி வருவதாகவும், அவள் சென்ற ஆண்டு ஒரு கொலை செய்து விட்டாள் என்றும், தான் அதை மறைத்து விட்டதாகவும் சொல்கிறார். அங்கே தங்கும் கணேஷும் வஸந்த்தும் மாடியறையில் பல வினோதக் குரல்களைக் கேட்கிறார்கள். மேலே சென்று பார்த்தால் பழைய சாமான்கள் போட்டிருக்கும் அறை அது. யாரும் அங்கு இல்லை. இரவில் சுனை அருகில் உள்ள மண்டபத்தில் சாம்பல் நிறத்தில் லீனாவை ஒத்த உருவமுடைய ஆவி உருவத்தையும் பார்க்கிறார்கள்.
வஸந்த் காலையில் வினோதக் குரல்கள் கேட்ட அறையிலிருந்து ‘சில வினோதங்கள்’ என்ற பழைய புத்தகத்தை எடுத்து வருகிறான். அதில் பிசாசு வருவதைப் பற்றியும், அது வியாசர்கள் பரம்பரையை சாபத்தின் காரணமாக அழித்து வருவதாக இருப்பதையும் காட்டுகிறான். அவன் சென்றதும் கணேஷ் அந்தப் புத்தகத்தை எடுக்க முற்பட, அது தானாக நகர்ந்து புத்தக அலமாரிக்குச் செல்ல, திடுக்கிடுகிறான் கணேஷ்.
அன்றிரவு குமாரவியாசனும் லீனாவும் உடன்வர, கணேஷும், வஸந்த்தும் மீண்டும் சுனை மண்ட பத்தில் பிசாசைப் பார்க்கிறார்கள். கணேஷ் துணிவாக அதன் மிக அருகில் சென்றுவிட, எதனாலோ தாக்கப்பட்டு வீழ்கிறான். சிகிச்சைக்குப் பின் கண் விழித்து, தன்னை ஆவி அடித்தது என்பதை நம்ப முடியவில்லை என்கிறான் கணேஷ். மறுதினம் மண்டபத்தருகில் ஒரு பிணம் கிடப்பதாக தோட்டக் காரன் வந்து அலறுகிறான். போலீஸ் வர, இன்ஸ்பெகட்ர் பிணத்தின் அருகில் லீனாவின் ஒரு காது ஸ்டட்டையும், உடைந்த வளையல்களையும் கண்டெடுக்கிறார். குமாரவியாசன் அது லீனா செய்த இரண்டாவது கொலை என கணேஷிடம் சொல்கிறார்.
வஸந்த் சில விவரங்கள் சேகரிக்க சென்னை செல்ல, தனியே இருக்கும் கணேஷ் இரவில் லீனாவின் குரல் கேட்டு எழ, ஒரு இருள் உருவத்தால் தாக்கப்படுகிறான். உடன் போன் செய்து வஸந்த்தை வரச் சொல்கிறான். காலை இன்ஸ்பெக்டர் வந்து மண்டபத்தில் கிடந்த பிணம் மார்ச்சுவரி போகும் வழியில் காணவில்லை யென்றும் அதை ஒரு பேய் உருவம் தூக்கிச் சென்றதை ஒருவன் பார்த்ததாகவும் கூறுகிறார்.
கணேஷ், குமாரவியாசனை சந்தேகித்து, லீனா + குமார வியாசனை போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் செல்வதாகவும், அவர் அறையில் ஆராயும் படியும் வஸந்த்திடம் சொல்கிறான். வஸந்த் அவர் அறையில் எலக்ட்ரீஷியன் வேலைக்கான விளம்பரத்தையும், குமாரவியாசன் அவனுக்கு வேலை கொடுத்த ஆர்டரையும் கண்டுபிடிக்கிறான். இறந்தது அந்த மெக்கானிக்காகத் தான் இருக்க வேண்டும் என முடிவெடுக்கிறார்கள். போலீஸ் சூப்பிரண்டன்ட் விசார ணைக்கு வர, அவருடன் அனைவரும் மண்டபத்தருகில் ஆவியைப் பார்க்கப் போகிறார்கள். கணேஷ் சைகை செய்ய, வஸந்த் நழுவி கு.வியாசனின் அறையில் மேலும் ஆராயச் செல்கிறான். ஆவியைக் கண்டு சூப்பிரண்டன்ட் உட்பட அனைவரும் மிரண்டு திரும்பிவர, ஆவி பேசிய வார்த்தைகளை தான் எப்போதோ பேசி, அதேபோல அழுதிருப்பதாக லீனா கணேஷிடம் சொல்கிறாள். அப்போது வஸந்த்தின் அலறல் குரல் கேட்டு சென்று பார்க்க, மிகமிக மோசமாகத் தாக்கப்பட்டு, ரத்தக் காயங்களுடன் கிடக்கிறான் வஸந்த்.
வஸந்த் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட, லீனாவின் உதவியுடன் குமாரவியாசனின் அறையை ஆராயும் கணேஷ், பாத்ரூமில் ஒரு புத்தக அலமாரியைக் கண்டுபிடிக்கிறான். ஆஸ்பத் திரிக்கு மீண்டும் வர, வஸந்த் பிசாசின் வசனங்கள் எழுதிய ஒரு பேப்பரை தான் வியாசன் பாத்ரூம் வாசலில் கண்டெடுத்தபோது தாக்கப்பட்டதாக கூறுகிறான். அப்போது அங்கு வரும் கு.வியாசன், கணேஷ்+லீனாவை ஒரு முக்கிய விஷயமாகப் பேச மாலை எஸ்டேட் வரும்படி கூறிச் செல்கிறார். மாலையில் செல்லும் கணேஷும் லீனாவும் தலையில் அடித்துக் கொல்லப்பட்ட வியாசனின் பிணத்தைத் தான் பார்க்கிறார்கள்.
போலீஸார் அங்கு முற்றுகையிட, கொலைக்குப் பயன் படுத்தப்பட்ட பிக் ஆக்ஸ் லீனாவின் பெட்டியில் அவள் புடவைக் கிடையிலிருந்து கிடக்கிறது. கணேஷிடம், ‘வெங்கடேஸ்வரனை 6’ என்று ஏதோ கடிதம் எழுதத் துவங்கும்போதுதான் வியாசன் அடிபட்டிருக்கிறார் என்று சொல்லி அந்தக் காகிதத்தைக் காட்டுகிறார் இன்ஸ். கணேஷும் வஸ்ந்த்தும் சென்னை திரும்ப, வஸந்த் துப்பறிந்து வெங்கடேஸ்வரனைக் கண்டு பிடிக்கிறான். லீனாவின் பண்ணை வீட்டை மும்பை பார்ட்டிக்கு லீசுக்குவிட தன்னிடம் குமாரவியாசன் ஒரு லட்சம் அட்வான்ஸ் பெற்றிருப்பதாக சொல்கிறார். லீனா போன் செய்ய, தீபக் வந்து அவளை அழைத்துச் செல்கிறான்.
வஸந்த் நடப்பவையெல்லாம் அமானுடத்தின் செயல் என்ற கட்சியில் ஆதாரம் தேட, கணேஷ் அந்தச் சம்பவங்களின் விஞ்ஞான சாத்தியங்களை ஆராய முற்படுகிறான். ஹோலோகிராம் என்ற லேஸர் பிம்பத்தின் மூலம் இப்படி காட்சிகளை அமைப்பது சாத்தியம் என்று படிக்கும் கணேஷ், அதில் கில்லயாடியான புரொபசர் ராமபத்ரன் என்பவரை சந்தித்துப் பேச அவர் அசையும் உருவங்கள் சாத்தியமில்லை என்று கூறிவிடுகிறார். கணேஷ் தங்கள் அறைக்கு வர, வஸந்த் வந்திருக்கவில்லை. ஃபேனைப் போட, மேலிருந்து ஒரு வெட்டுண்ட கை விழுகிறது. அதை போலீஸ் உதவியுடன் லாபுக்கு அனுப்புகிறான். தீபக்கும் லீனாவும் வந்து தாங்கள் திருமணம் செய்து கொள்ளப் போவதாகச் சொல்லிச் செல்கின்றனர்.
நடந்த ஒவ்வொரு சம்பவத்துக்கும் ஆவி ரீதியாக வஸந்த் விளக்கங்கள் தர, அகண்ட சொத்தினை மோட்டிவ்வாக வைத்து நடப்பவை அனைத்தும் விஞ்ஞான ரீதியாக சாத்தியமே என்று விளக்குகிறான் கணேஷ். வஸந்த் வியந்து போக, லீனாவின் அகண்ட சொத்துக்கு அவளையும், வியாசனையும் அழித்தால் பயனடையக் கூடிய மூன்றாவது வாரிசு யாராவது இருக்க வேண்டுமென்கிறான் கணேஷ்.
வேறொரு விஞ்ஞானக் கட்டுரையில் நகரும் ஹோலோகிராம் பிம்பங்கள் சாத்தியம் என்று படிக்கும் கணேஷ், அது சம்பந்தமாக ஒரு புத்தகம் வாங்கி வர வஸந்தை அனுப்புகிறான். கமிஷனர் ராஜேந்திரன் போன் செய்து, அந்த வெட்டுண்ட கை ஒரு மெடிக்கல் காலேஜ் அனாடமி லாபிலிருந்து கண்ணியமாக உடையணிந்த ஒருவனால் வாங்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்த விட்டதைச் சொல்கிறார். அப்போது வஸந்த் பதட்டமாக ஓடிவந்து, கணேஷ் வாங்கிவரச் சொன்ன புத்தகத்தில் கட்டுரை எழுதியவர்களின் வாழ்க்கைக் குறிப்பு இருப்பதாகவும், புரொஃபசர் ராமபத்ரனின் முழுப்பெயர் ராமபத்ர வியாசன் என்றும் சொல்கிறான்.
அவர்தான் மூன்றாவது வாரிசு என்பது புரிந்துவிட, அவர் முகவரியைக் கண்டுபிடித்த கணேஷும் வஸ்ந்த்தும் அவர் வீட்டில் ஆராய, தேனிலவுக்கு ஊட்டிக்குச் சென்றிருக்கும் தீபக்-லீனாவைத் தொடர்ந்து அவர் சென்றிருப்பதை அறிகிறார்கள். உடன் தங்கள் காரில் ஊட்டிக்கு விரைந்து சுற்றித் தேட, ஏரியில் தீபக் மட்டும் நிற்கிறான். புரொஃபசர், லீனாவுடன் போட்டிங் சென்றிருப்பதாக சொல்கிறான். மற்றொரு படகில் சென்று அந்தப் படகு மட்டும் அனாதையாகக் கிடப்பதையும் கரையோரம் ஒரு தனி வீட்டில் லீனா இருப்பதையும் கண்டுபிடிக்கிறார்கள். நடு ஏரியில் ரமபத்ரன் தன்னைப் பிடித்துக் கொண்டதில் படகு கவிழ்ந்துவிட, நீரில் இருவரும் விழுந்ததாகவும், நீச்சல் தெரியாத அவர் இறுகப் பற்றிக் கொள்ள, உதறிவிட்டு தான் நீந்தி தப்பி விட்டதாகவும் லீனா கூறுகிறாள். போலீஸில் ரிப்போர்ட் செய்துவிட்டு அவர்கள் திரும்புகின்றனர்.
நடந்தவை அனைத்தும் விஞ்ஞான ரீதியாகவே நடந்தன என கணேஷ் சொல்ல, பைசாசம் செய்தது என்று வஸந்த் வாதிட, அந்தக் கேள்விக்கான விடையை வாசகர்களிடமே விட்டுவிட்டு நாவல் நிறைகிறது.